ஓவியத்தால் ஓர் உணர்வுப்பாலம்



திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் தோழிகள்

- ப்ரியா

சமூகத்தில் ஒதுக்குதலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருந்த திருநங்கைகள் இப்போதுதான் மெல்ல தங்களுக்கான சுயமரியாதையையும் மதிப்பையும் பெற்றுவருகிறார்கள். சமூகம் திருநங்கைகளைப் பார்க்கும் பார்வை இன்னமும் பெரிதாக மாறிவிடவில்லை என்றாலும் ஓரளவு விழிப்புணர்வு வந்துள்ளது என்னவோ உண்மை. ஆனால், திருநங்கைகளுக்காகப் பரிதாபப்பட்டால் மட்டும் போதுமா? வெறும் அனுதாபம் அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாது. அவர்களுக்குத் தேவையானதை ஆக்க பூர்வமாகச் செய்தால்தான் அவர்கள் வாழ்வு நிஜமாகவே மலரும் என்று சொல்கிறார்கள் பெங்களூரைச் சேர்ந்த தோழிகளான பூர்ணிமாவும் சாதனாவும்.

இதற்காக திருநங்கைகளையும் பிற ஓவியர்களையும் இணைத்து ஓவியம் வரையச் செய்வதன் மூலம் ஒருவரோடு ஒருவர் உரையாடுவதற்கும் பகிர்வதற்குமான வாய்ப்பை உருவாக்கித் தருகிறார்கள். மழை நின்ற மாலைப்பொழுது ஒன்றில் இந்த மானுடத் தோழிகளைச் சந்தித்தோம். உற்சாகமாய் பேசத்தொடங்குகிறார் பூர்ணிமா. ‘‘பிறந்தது தமிழ்நாட்டில். வளர்ந்தது பெங்களூரில். சின்ன வயதில் இருந்தே கலைகள் மேல் தனி ஆர்வம். குறிப்பாக, ஓவியம் வரைவதில். அதனால் பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் படித்தேன்.

பிறகு பள்ளி மற்றும் கல்லூரியில் பயிற்சியாளராக வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு அந்த வேலையின் மேல் ஈடுபாடு இல்லாமல் போனது. ராஜினாமா செய்துவிட்டு, ஃப்ரீலான்ஸாக என் கலைப் பயணத்தைத் தொடர்ந்தேன். அந்த சமயத்தில்தான் லண்டனைச் சேர்ந்த ஓர் ஆவணப் பட இயக்குநரின் அறிமுகம் கிடைத்தது. திருநங்கைகள் குறித்து அவர் ஆவணப்படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார். உதவி இயக்குநராக என்னை வேலை பார்க்கச் சொன்னார். எனக்கும் அதில் விருப்பம் இருந்தது. திருநங்கைகள் பற்றித் தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்தேன்.

மூன்றரை வருடங்கள் அந்த ஆவணப்படத்தில்தான் கழிந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் அவர்களுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் ஒவ்வோர் உணர்வையும் புரிந்துகொள்ள முடிந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணிக் கதை. எல்லாமே துயரம் நிரம்பியவை. கேட்டாலே மனம் பதைக்கும். அப்படிப்பட்ட மோசமான அனுபவங்களைக் கடந்தும் அவர்கள் தன்னம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்த போது வியப்பாக இருந்தது. இவர்களைப் பற்றி இந்த சமூகம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்...’’ என்று சொல்லும் பூர்ணிமா, இதனைத் தொடர்ந்தே தன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

‘‘என்னதான் ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுத்தாலும் அவர்களுக்குப் பெரிய பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை. எல்லாரும் படத்தைப் பாராட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்களோடு பழகி, பேசி, உரையாடினால்தான் அவர்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று கருதினேன். என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் கூட்டாக ஓவியம் வரைய வைப்பது என்ற முடிவை எடுத்தேன். திருநங்கைகளும் மற்றவர்களும் இணைந்து ஓவியம் வரைவது போன்ற குழுச் செயல்பாட்டில் ஈடுபடும்போது அவர்களின் மன ஓட்டங்கள், ஆசைகள், தேவைகளை நாம் நேரடியாகக் கண்டுணர முடியும்.

இந்த எண்ணத்தை என் தோழிகள் சிலரிடம் சொன்னபோது முதலில் தயங்கினார்கள். பிறகு அவர்களும் ஆர்வமாகப் பங்கேற்க முன்வந்தார்கள். பெங்களூரில் உள்ள சில திருநங்கைகளிடம் இந்தத் திட்டத்தைப் பற்றிச் சொன்னபோது அவர்களும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்...’’ என பூர்ணிமா நிறுத்த, தொடர்ந்தார் சாதனா. அனிமேஷன் மற்றும் டிஸைனிங் வேலையை ஃப்ரீலேன்ஸாக செய்து வருபவர் இவர். ‘‘முகம் தெரியாத கலைஞர்கள் பலரையும் ஒன்றாக இணைக்கச் செய்யும் நிகழ்ச்சி ஒன்றில்தான் பூர்ணிமாவை முதன் முதலாகச் சந்தித்தேன். திருநங்கைகளுடனான ஓவியம் வரையும் திட்டம் பற்றி முதலில் அவர் சொன்ன போது எனக்கு பயமாகவும் தயக்கமாகவும்தான் இருந்தது.

அதையும் மீறி, அவசியம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பணி என்று தோன்றியதால், மனத்தடைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தத் திட்டத்திற்கான லோகோவை வடிவமைத்துக் கொடுத்தேன். நான் மும்பைவாசி என்பதால் அவ்வப்போதுதான் பெங்களூர் வருவேன். இது வரை சென்னை, மும்பை, பெங்களூரூ, பூனா, ஜெய்ப்பூர், கொழும்பு எனப் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள திருநங்கைகள் மற்றுமுள்ளோருடனும் இணைந்து சுவரை வண்ணங்களால் அலங்கரித்துள்ளோம். ஒவ்வொரு சித்திரமும் ஒரு கதை சொல்லும். அவர்கள் மனதில் ஒளிந்து கிடக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும்...’’ என்ற சாதனாவைத் தொடர்ந்த பூர்ணிமா, சித்திரம் குறித்து விவரித்தார்.

‘‘எல்லாருக்கும் சித்திரம் வரையத் தெரியாது என்பதால் என்ன வரையப் போகிறோமோ அதற்கான அவுட்லைனைக் கொடுத்து விடுவேன். பிறகு திருநங்கைகளுடன் எல்லோரும் இணைந்து வண்ணங்களைத் தீட்ட வேண்டும். இந்த ஓவியங்கள் முழுமையாகத் திருநங்கைகள் சார்ந்துதான் இருக்கும். அவர்களின் உருவம், அவர்களின் உணர்வுகள், கலாசாரம் போன்றவற்றைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இந்தச் சித்திரங்களை திருநங்கைகள் வசிக்கும் இடங்களில் உள்ள சுவர்களில்தான் வரைகிறோம்.

இவற்றைப் பார்க்கும்போது நாம் தனிப்பட்டவர்கள் அல்ல, மற்றவர்களைப் போல் இயல்பானவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகும். சென்னையில் சுனாமி காலனியில் நிறைய திருநங்கைகள் வசித்து வருகிறார்கள். அந்தக் குடியிருப்பின் சுவர் ஒன்றில் பெரிய சித்திரம் வரைந்தோம். அதில் ‘மனிதம் மலரட்டும்’ என்ற வாக்கியத்தை எழுதினோம். எந்த ஓர் இடத்தில் வரையும் முன்பும் அந்தப் பகுதிக்குச் சென்று சுமார் ஒரு மாத காலமாவது ஆய்வு செய்வேன். அங்குள்ளவர்களின் வாழ்க்கைத் தரம், மனநிலை, பிரச்னைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முயல்வேன்.

அப்போதுதான் அந்த நிகழ்ச்சியை உணர்வுபூர்வமான பங்கேற்பு உள்ளதாக நடத்த முடியும். சுவரில் சித்திரம் வரைய முறையாக அனுமதி பெற வேண்டும். பிறகு, இந்த நிகழ்வு குறித்து அங்குள்ள மக்கள் அறியும் வகையில் சிறுசிறு விளம்பரங்கள் செய்வோம். இந்த வருடத்துக்குள் லக்னோ, கேரளா, ஹைதராபாத், டில்லி மற்றும் கொல்கத்தாவில் இந்த நிகழ்ச்சியை நடத்தும் திட்டம் உள்ளது. தென்னிந்தியாவில் இவர்களுக்கு வேறு முகம்; வடநாட்டில் இவர்களுக்கு வேறு முகம். வடநாட்டில் பயணிக்கும்போது இவர்களின் கலாசாரம், மற்றும் வாழ்க்கைமுறையின் இன்னொரு பக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். வாய்ப்பும் ஆர்வமும் உள்ள யாரும் எங்களுடன் இணைந்துகொள்ளலாம்...’’ என்று பூர்ணிமா புன்னகைக்க, சாதனா அதை எதிரொலித்தார்.