புரியாத புதிர்



- குங்குமம் விமர்சனக்குழு

விளையாட்டு வினையானால், நட்பு உருக்குலைந்து மனம் இறுகினால், அந்தரங்கம் பகிரங்கமானால் நிகழ்வதே ‘புரியாத புதிர்’. தனிப்பட்ட அந்தரங்கமும், நட்பும் புரிந்து கொள்ளப்படுகிற விதத்தையும், அதுவே தடுமாறினால் பலரின் வாழ்க்கையைக் கலைத்துப் போடும் விதத்தையும் பேசுகிறது இந்தப் படம். வேடிக்கையாக தோழி மஹிமாவை காயத்ரி படம் பிடிக்க, அது விஜய் சேதுபதியின் நண்பர்களால் எல்லோருக்கும் கசிய, அங்கே நிகழ்கிறது தோழியின் தற்கொலை.



அலறுகிறார்கள் நண்பர்கள். துடிக்கிறார்கள் விஜய் சேதுபதியும், காயத்ரியும். பின் அவரும், காயத்ரியும் காதலில் இணைய காயத்ரியின் அந்தரங்கமான படங்கள் அலைபேசியில் வருகிறது. தினசரி வாழ்க்கை உருக்குலைய, அடுத்து அவர்களின் காதல் என்னவானது என்பதே புரியாத புதிர். கையில் வைத்திருக்கும் குட்டிச்சாத்தானின் விபரீத விளையாட்டுகளை வெளியே கொண்டு வரப் பார்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. அந்தரங்கம் வெளியாவதின் மன நெருக்கடியைக் கொண்டு வந்த விதத்தில் கணிக்க முடியாத திரைக்கதையில் விளையாடி இருக்கிறார் இயக்குநர்.

மனதில் கனன்று கொண்டிருக்கிற கோபத்தையும், காயத்ரியின் மேல் வைத்த காதலையும் கண்களிலும், பாவங்களிலும், அக்கறையிலும் சொல்லி அடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.  காயத்ரியின் பழைய கதையை படிக்கப்படிக்க வேதனையும், அதிர்ச்சியும் கூடிக்குறைய உணர்ச்சிப் பிரவாகம் எடுக்கிறது அவரின் முகம். ஆரம்பத்தில் காதல் வயப்படும் இடத்திலிருந்து ஆரம்பிக்கிற அவரின் இயல்பு நடிப்பு, கடைசி வரைக்கும் அமைந்திருப்பது அழகு. காதலியிடம் முடியைக் கோதிக் கொண்டு, சைடு பார்வையில் கனிந்து தனது ஒவ்வொரு செய்கைக்கும் ரியாக்‌ஷன் எதிர்பார்க்கும் காதலை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஸ்கிரீனில் கொண்டு வந்திருக்கிறார்.

அடக்கமும், நெகிழ்வும், பதட்டமுமாக வசீகரிக்கிறார் காயத்ரி. வேடிக்கையாக செய்த வீடியோ கொண்டு வந்த விபரீதத்திற்குப் பிறகு தனி வடிவம் எடுக்கிறது அவர் நடிப்பு. இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதில் ஆரம்பித்து, டிரையல் ரூமில் காயத்ரி உடை மாற்றுவதை யாரோ சேதுபதியின் போனிற்கு படம் எடுத்து அனுப்புவது வரை எக்கச்சக்க சஸ்பென்சில் பதட்டம் கூட்டுகிறது. கொஞ்ச நேரமே வந்தாலும் மஹிமா க்யூட்! ‘‘சுவாரஸ்யமா வாழ்றது வாழ்க்க இல்லடா, நிம்மதியா வாழணும்,

இந்த உலகமே அடுத்தவன் பெட்ரூமை எட்டிப் பார்க்கிறதுலதான் குறியா இருக்கு. தனக்கு நடக்கிற வரைக்கும் எந்த இழப்போட வலியும் நமக்குப் புரிகிறதில்லை. நமக்கு தெரிஞ்சவங்களுக்கு நடக்கும் போதுதான் நம்ம மனசு பதறுது...’’ என அடுத்தடுத்து வரும் வசனங்களில் யதார்த்த கவன ஈர்ப்பு செய்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. படத்தின் விறுவிறுப்புக்கு அதிகமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். படத்தின் ஓட்டத்திற்கு பெரிதாக உதவவில்லை என்றாலும், சாம்.சி.எஸ்ஸின் பாடல்கள் நறுவிசு. தொழில்நுட்பத்தின் விபரீதப்போக்கை ஒரு காதல் கதையில் நுழைத்து சொன்ன அக்கறையில் ‘புரியாத புதி’ரை வரவேற்கலாம்.