காற்றின் வேகத்தில் ஒரு பயணம்!



வந்தாச்சு ஹைப்பர்லூப் டெக்னாலஜி!

- ச.அன்பரசு

நடையாய் நடந்து பூமியைச் சுற்றிக்கொண்டிருந்த மனிதனின் பயணம் வாகனங்களைக் கண்டுபிடித்ததும் வேகம் எடுத்தது. நாகரிகம் வளர வளர பேருந்து, ரயில் முதல் விமானம் வரை உருவாக்கி நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதோ இப்போது இந்த மானுடப் பயணத்தில் இன்னொரு சாதனை, ஹைப்பர்லூப் டெக்னாலஜி. இனி எதிர்காலத்தில் டெல்லியில் இருந்து மும்பைக்குச் செல்ல வெறும் ஒரு மணி நேரம்தான். ஒரு சில மணி நேரத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் சென்று விடலாம்.

எலன் மஸ்க் என்பவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகில் உள்ள அனைத்து என்ஜினியர்களையும் ஹைப்பர்லூப் டிசைனில் பங்கேற்க 2015ம் ஆண்டு அழைத்தது. இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே டீம் பெங்களூரின் வொர்க் பென்ச்சர்ஸ் என்ற ஹைப்பர்லூப் இந்தியா மட்டுமே. ஹைப்பர்லூப் என்ற கான்செப்டை 1904ம் ஆண்டு உலகுக்கு முதன்முதலாக தன் எழுத்தின் வழியாக அறிமுகப்படுத்தியவர் ராபர்ட் கோடார்ட்.

பின்னர் இது தொடர்பான ஆராய்ச்சி விஷயங்களை 2013ம் ஆண்டு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு இந்தத் திட்டத்தில் பங்கேற்க பொறியியலாளர்களையும் தொழிலதிபர்களையும் அழைத்தார் ஸ்பேஸ் எக்ஸின் தலைவர் எலன் மஸ்க். இதற்குப் பின்புதான் உலகம் எங்கும் ஹைப்பர்லூப் ஜுரம் தீயாய் பற்றிக்கொண்டது. இந்தியாவின் நிதி ஆயோக்கின் திட்டங்களில்கூட ஹைப்பர்லூப் பிளான் உண்டு.

ஹைப்பர்லூப் என்ற போக்குவரத்து பற்றிய எந்த முன் மாதிரியும் இல்லாமல் ஆராய்ச்சி செய்து, பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் குழு ஒரு மாடலை வடிவமைத்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. வொர்க் பென்ச் நிறுவனத்தின் இயக்குநர் அனுபமா கௌடாவின் வழிகாட்டுதலில் உருவான இந்த மாடலுக்கு ‘ஆர்காபாட்’ என்று பெயர். திமிங்கலம் போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ஆர்காபாட், மணிக்கு 483 கி.மீ வேகத்தில் சீறிச்செல்லும். அதாவது, ஒலியின் வேகத்தில் கிட்டத்தட்ட பாதி.

கலிஃபோர்னியாவில் உள்ள ஹாதோர்ன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கி.மீ நீளம் உள்ள ட்ராக்கில் ‘ஹைப்பர்லூப்’ மாடல்களை விரைவில் பரிசோதிக்கப் போகிறார்கள். ஜப்பான் கேயோ பல்கலையின் ‘கேயோ ஆல்பா’, மேரிலாண்ட் பல்கலையின் UMD லூப், ஸ்விட்சர்லாந்து ஸூரிச் பல்கலையின் ஸ்விஸ்லூப் உட்பட 24 குழுக்கள் இதில் பங்கேற்க உள்ளன.

‘‘ஹைப்பர்லூப் மாடலைப் பொறுத்தவரை இது சரி, இது தவறு என்று இப்போதைக்கு எதையும் கூற முடியாது...’’ என்கிறார் வொர்க்பென்ச் குழுவின் பொறியாளர் குழுத் தலைவரான சைபேஷ் கர். இவர் பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர். தனது கோடை விடுமுறையில் ஆர்காபாட் டிசைன் டீமில் இணைந்துள்ளார்.

90 லட்சம் ரூபாய் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் ஆர்காபாட் திட்டத்திற்கான தொகை முழுதும் Crowd funding முறையில் மக்களிடம் இருந்தே திரட்டப்பட்டிருக்கிறது. இதனோடு, அமெரிக்காவின் ஹைப்பர்லூப் ஒன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்பும் கிடைத்துள்ளது திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளது. ‘‘உலக அரங்கில் நம் நாட்டை பெருமைப்படுத்தும் லட்சியத்திற்காக இரவும் பகலுமாக வேலை செய்யும் இந்த இளைஞர்களிடம் நாம் கற்கவேண்டியது ஏராளம்...’’ என்று நெகிழ்கிறார் ரிப்பிள் டெக்னாலஜி இயக்குநர் ஹரிஷ் பழனி.

சுமார் 25 லட்சம் மதிப்புள்ள வேலைகளை விலையின்றி ஹைப்பர்லூப் இந்தியா புராஜெக்டுக்காக இவர் செய்து தந்துள்ளார். மிராக்கிள் எலக்ட்ரானிக்ஸின் ஜிதேந்திர தேவ்தா இந்தக் குழுவின் டெக்னிக்கல் வழிகாட்டி. ஹைப்பர்லூப் மாடலுக்கான ஸ்பான்சர்ஷிப் தேடும்போது நிறைய ஏமாற்றங்களே தொடக்கத்தில் கிடைத்திருக்கின்றன. ‘‘ஏனெனில் அப்போது எங்களிடம் தியரியாக ஐடியா ரெடி.

ஆனால், ஸ்பான்சர்ஷிப் ஆட்களுக்குக் காட்ட எந்த மாடலும் இல்லை. எனவே, மாடலை சிரமப்பட்டு தயாரிக்கத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகே ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது...’’ என்கிறார் ராஜஸ்தானின் பிட்ஸ் பிலானி பல்கலை மாணவரான பிரித்வி சங்கர். உலகம் முழுதும் பெறப்பட்ட 120 விண்ணப்பங்களில் இருந்து ஹைப்பர்லூப் இந்தியா செலக்ட் ஆனது இந்தியராக நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.

அமெரிக்காவின் கிழக்குக் கடற்புறத்தில் ஹைப்பர் லூப் அமைப்பதற்கான அனுமதியை அரசிடம் சாமர்த்தியமாக முன்னமே பெற்று விட்டார் எலன் மஸ்க். இதில் தேர்வாகும் சூப்பர் டிஸைனுக்கு என்ன பரிசு என்று ஸ்பேஸ்எக்ஸ் இன்னமும் அறிவிக்கவில்லை. வெற்றி பெறும் சாம்பியன் குழுவுக்கு எதிர்காலத்தில் ஹைப்பர்லூப் டிஸைனில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். எது எப்படியோ, மக்களுக்கு ஒரு புதிய வாகனப் போக்குவரத்து விரைவில் கிடைக்கப்போகிறது என்பது மட்டும் உறுதி.

ஹைப்பர–லூப்!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கம்பெனி தலைவர் எலன் மஸ்க் 2013ல் அறிவித்த சூப்பர்ஃபாஸ்ட் டிரெயின் பிளான் இது. காற்று பிளஸ் காந்தம் மூலம் பூமிக்கு கீழே இயங்கும் போக்குவரத்து. ஷெர்வின் ஷேவரின் ஹைப்பர்லூப் ஒன், டிர்க் அல்பார்னின் ஹைப்பர் லூப் ட்ரான்ஸ்போர்டேஷன் டெக்னாலஜிஸ் ஆகிய இரு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஹைப்பர் லூப் ஆய்வில் புகழ்பெற்றவை.

1799ம் ஆண்டில் ஜார்ஜ் மெதுர்ஸ்ட் என்பவர் காற்று மூலம் சரக்குகளைக் கொண்டு செல்லலாம் என்று முயற்சித்தது இன்றைய ஹைப்பர்லூப் மாடலின் முன்னோடி முயற்சி. எலன்மஸ்கின் கான்செப்டில் ஹைப்பர்லூப்பின் முன்புறம் காற்றாடியும், நடுவில் பயணிகளின் சீட்டும், பின்புறம் பேட்டரி யும் இருக்கும்.

பேட்டரியால் ஹைப்பர் லூப் ஓடத் தொடங்கி, புரொபெல்லர் மூலம் காற்றையும், ட்யூபில் உள்ள காந்தம் மூலம் வலிமையான மின்காந்த சக்தியையும் பெற்று உராய்வு குறைத்து உச்சவேகம் தொடுவதே இதன் ஃபார்முலா. கடந்த மே 12ல் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம், அமெரிக்காவின் நெவாடாவில் தேவ்லூப் ட்ராக்கில் 5.3 நிமிடங்களில் 112 கி.மீ வேகத்தை எட்டிப் பிடித்து முதல் வெற்றியை ருசித்துள்ளது.

ஹை ஸ்பீட் ஹைப்பர்லூப்!


கான்கார்டு விமானம் - 1354 Mph
ஹைப்பர் லூப் - 760 Mph
போயிங் 737 - 485 Mph
புல்லட் ரயில் - 275 Mph
யூரோஸ்டார் - 186 Mph