ஜிமிக்கி கம்மல்



- ஷாலினி நியூட்டன்

‘என்டெ அம்மேடெ ஜிமிக்கி கம்மல்...
என்டப்பன் கட்டொண்டு போயே
என்டப்பன்டெ ப்ராண்டி குப்பி...
என்டம்மா குடிச்சு தீர்த்தே...’

அதாவது ‘என் அம்மாவின் ஜிமிக்கி கம்மலை என் அப்பன் கழட்டிக்கொண்டு போனான்; என் அப்பாவின் பிராந்தி குப்பியை என் அம்மா குடித்துத் தீர்த்தாள்..!’ இப்படி ஒரு பாட்டு... என்ன ஒரு கருத்தாழம் மிக்க வரிகள்! இந்தப் பாட்டுக்குத்தான் மொத்த கேரளமும் பைத்தியம் பிடித்ததுபோல் ஆடிக்கொண்டிருக்கிறது.

நண்டு சிண்டில் தொடங்கி தொண்டு கிழம் வரை, பாட்டிகள், அம்மாக்கள், பேத்திகள், தாத்தாக்கள், அப்பாக்கள், மகன்கள் என மொத்த குடும்பமும் கூத்தடிக்கிறது. கல்லூரிகளில் கூட்டமாய் விதவிதமான கெட்டப்பில் ஆடி யூடியூப்பிலும், வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதற்கு #jimikkikammal_challenge என்ற ஹேஷ்டேக் வேறு... என்னதான் நடக்குது சேட்டன்கள் நாட்டில்?  

ஓணம், கேரளத்தின் கொண்டாட்டமான பண்டிகை. மாவலியின் தலையில் கால் வைத்து அவன் கர்வமடக்கிய வாமன அவதாரத்தின் மகிமையையும், மன்னன் மாவலியின் பெருமையையும் பேசும் விதைப்பு காலத்தின் உற்சாக உற்சவம். பூக்கோலமும் மாக்கோலமும் இட்டு; புத்தாடை தரித்து ஆட்டமும் பாட்டமுமாய் ஓணத்தை வரவேற்பார்கள் மலையாளிகள். அப்படி இந்த வருட ஓணத்தின் கொண்டாட்டத்தில்தான் இந்த ஜிமிக்கி கம்மல் சேர்ந்துகொண்டது.

வெளிப்பாடிண்டே புஸ்தகம்
இந்த வருடம் ஓணத்துக்கு வெளிவந்த சினிமாக்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ என்ற படமும் ஒன்று. லாலேட்டன் எனக் கொண்டாடப்படும் மோகன்லால் படம் ரிலீஸ் ஆவதே மலையாளிகளைப் பொறுத்தவரை ஒரு ஓணம்தான்.

இதில் ‘ஓணமும்’ சேர்ந்துகொண்டால் கூத்துக்கும் பாட்டுக்கும் கேட்க வேண்டுமா என்ன? லால் ஜோஸ் இயக்கி மோகன்லால், அனூப் மேனன், பிரியங்கா நாயர் நடித்துள்ள படம் இது. இந்தப் படத்தில்தான் ஜிமிக்கி கம்மல் பாடல் இடம்பெற்றுள்ளது. ‘ஓம் ஷாந்தி ஒஷானா’, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’, ‘ஜியோகோபிண்டே ஸ்வர்கராஜ்யம்’ போன்ற ஹிட் படங்களின் பாடல்களை உருவாக்கிய ஷான் ரஹ்மான்தான் இந்தப் படத்துக்கும் இசை.

அனில் பணச்சூரன் எழுதிய இப்பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் ரஞ்சித் உன்னி பாடியுள்ளனர். படம் எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை என்கிறார்கள். கல்லூரிக் கால ஜாலி பாடலாக வரும் இந்தப் பாடல் காட்சிப் படுத்தப்பட்ட விதம்கூட சுமாராகத்தான் இருக்கிறது.

பிறகு எப்படித்தான் டிரெண்ட் ஆச்சு? ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’ மாணவிகளும், ஆசிரியைகளும் சுமார் 40 பேர் இணைந்து ஓணத்தைக் கொண்டாடும் விதமாக இந்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டு அதை யூ டியூப்பில் பதிவேற்றினார்கள். அவ்வளவுதான். இணையமே பற்றிக்கொண்டது.

இந்த வீடியோவை இதுவரை 40 லட்சம் பேருக்கும் மேல் பார்த்துள்ளார்கள். இதைத் தவிர லட்சக்கணக்கான ஷேர்கள் வேறு. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என சோஷியல் மீடியா முழுதும் பரவிக்கொண்டிருக்கிறது இந்த மாணவிகளின் நடனம். விளைவு... இப்போது, கேரளத்தைக் கடந்து மொத்த தேசமும் ‘ஜிமிக்கி கம்மல்... ஜிமிக்கி கம்மல்...’ என்று ஆடிக்கொண்டிருக்கிறது.

ஷெரில் எனும் தேவதை
இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் மாணவிகள் ஆடிய இந்த நடனத்தின் ஹைலைட் ஷெரில்தான். லீட் டான்ஸராக அந்த வீடியோவில் ஷெரில் ஆடிய ஆட்டத்துக்கு இன்று மொத்த நாடும் மெர்சலாகிக் கிடக்கிறது. ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ஷெரில். எர்ணாகுளம் புனித தெரசா கல்லூரியில் எம்.காம் படித்தவர்.

இப்போது இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸில் நடன ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த ஒரே ஒரு வீடியோ இவருக்கு உலகப் புகழைத் தேடிக்கொடுத்துள்ளது. இவரை ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் ஓவர்நைட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் ஃபாலோ செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஷெரில் ஆர்மி, ஷெரில் ஃபேன்ஸ் கிளப் என்று ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் வெறித்தனம் காட்டும் நெட்டிசன்களைக் கண்டு ஷெரிலே சற்று மிரண்டுதான் போயிருக்கிறார்.

ஷெரிலுடன் அனா ஜார்ஜ் என்பவரும் இணைந்து இந்த நடனத்தை வடிவமைத்துள்ளனர். ‘‘ஓணம் பண்டிகைக்குச் சிறப்பாக எங்கள் கலாசாரத்தை வெளிப்படுத்த ஒரு வீடியோ உருவாக்க நினைத்தோம். இந்த ஜிமிக்கி கம்மல் பாடல் நடனம் அப்படி உருவானதுதான். ஆனால், இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை... உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. குறிப்பாக, தமிழர்களுக்கு. அவர்கள்தான் இதை தேசம் கடந்து சர்வதேச அளவுக்கு எடுத்துச் சென்றார்கள்...’’ என்று நெகிழ்ந்துள்ளார் ஷெரில்.
இப்போது ஷெரிலுக்கு பல சினிமா வாய்ப்புகளும் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளன!

ஜிமிக்கி கம்மல் சிண்ட்ரோம்
இந்த வீடியோ ஹிட்டானதைத் தொடர்ந்து கேரளத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இந்தப் படத்தின் பாடலுக்குக் குழு நடனமாடி பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால், இந்தப் பாடலை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ்கள், ட்ரோல்கள், பகடிகள் என கலகலத்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதில் சிலர் அளவுக்கு மீறிச் சென்று தமிழ்நாட்டுப் பெண்களையும் கேரளத்துப் பெண்களையும் ஒப்பிட்டு கிண்டலாக சில மீம்ஸ்களை உலவ விட்டிருக்கிறார்கள். இது நம்மூர் பெண்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இதற்கிடையில் உற்சாக மிகுதியில் யாரோ ஒருவர் ஜிமிக்கி கம்மல் பாடலை அமெரிக்காவின் புகழ்பெற்ற காமெடி நடிகரும் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான ஜிம்மி கிம்மலிடம் கூற... தன் பெயரின் உச்சரிப்புக்கும் இந்தப் பாடலின் தொடக்க வரிகளுக்கும் உள்ள எதேச்சையான தொடர்பை எண்ணி மகிழ்ந்த அவர், ‘நான் இந்தப் பாடலை நேசிக்கிறேன்’ என்று ட்வீட்ட... ஹாலிவுட்டிலும் டிரெண்ட் அடிக்கத் தொடங்கியுள்ளது இந்தப் பாடல். எப்படியோ, இந்தப் பாடலால் கம்மல் முதல் கிம்மல் வரை ஆல் ஹேப்பி!