COFFEE TABLE



- குங்குமம் டீம்

விவசாயிகளின் நிலை

விவசாயிகள் வேறு தொழிலை நாடிச் செல்வது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 1991 முதல் 2011 வரை சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். கடந்த 20 வருடங்களில் சுமார் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். ஆனால், இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட அரசு மறுத்து வருகிறது என்கிறது ஓர் ஆய்வு.

விவசாயத்தை விட்டு வெளியேறுபவர்கள் குறைந்த சம்பளத்தில் சமையல் மற்றும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இன்னும் சில வருடங்களில் இந்த நிலை இன்னும் மோசமடையும் என்கிறது அந்த ஆய்வு. ‘‘விவசாயிகளுக்குத் தேவையான உதவியைச் செய்து தருவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய தொழிலைச் செய்ய திட்டம் தீட்டுவதுதான் அரசின் தலையாய கடமை’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

டாப்ஸியின் சமூக சேவை

பாலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் டாப்ஸி, ‘பிங்க்’ படத்திற்குப் பிறகு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இப்போது பொறுப்பு இன்னும் கூடி இருக்கிறது. மும்பை ஐஐடி உதவியுடன் சானிட்டரி கல்விக்கு ஆதரவாக களம் இறங்கி, கிராமப்புற பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களும் விநியோகம் செய்து வருகிறார். டாப்ஸியின் இந்த சானிட்டரி ஹெல்த் அக்கறையை ஆச்சரியமுடன் பார்க்கிறது பாலிவுட்.

மூன்றாம் பாலின கீதம்
இதோ வந்துவிட்டது உலகின் முதல் மூன்றாம் பாலின கீதம். ‘வானம் தாண்டி எல்லை...’ என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் திருநங்கைகளின் வாழ்வை, அவர்களின் அருமை பெருமைகளைச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது. புன்னகை ததும்ப உற்சாகத்துடன் உலாவருகின்ற திருநங்கைகள் பாடல் வரிகளுக்கு ஏற்ப நடித்து அசத்தியிருக்கிறார்கள். லிவிங் ஸ்மைல் வித்யா, கல்கி... போன்ற ஆளுமைகளும் பாடலில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அர்த்தச் செறிவுடன் கூடிய பாடல் வரிகளை வடிவரசு எழுத, ஷ்ரவன் இசையமைக்க, துருவன் ராஜபாண்டியும், ப்ரியா பாபுவும் இணைந்து இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளனர். பலரின் பாராட்டையும் பெற்றிருக்கும் இந்தப் பாடலைக் கேட்டபிறகு மூன்றாம் பாலினத்தவர் மீதான நம் பார்வையே மாறியிருக்கும். அதுவே இதன் சிறப்பு.

இயர் ஹெட்போன்
ஹெட்போன் உலகின் முடிசூடா மன்னன் ஒன்மோர் நிறுவனம். சமீபத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமான இயர் ஹெட்போனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு வருட வாரண்டியுடன் பிளாக், கோல்டு, ரோஸ் என்று மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. ஸ்மார்ட் போன், ஐபேட், ஐபாட், ஐபோன்... என்று அனைத்திலும் இதை கனெக்ட் செய்துகொண்டு ஜாலியாக பாடல்களை கேட்கலாம். மட்டுமல்ல, நமக்கு வருகிற போன் கால்களுக்கு பதில் சொல்ல, நிராகரிக்க, பேசி முடிந்தவுடன் கட் செய்ய... என தனித்தனியாக மூன்று பட்டன்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இருந்து அமேசான் இணையதளத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,499.

பிகினி மோகம்
தினமும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து வந்தால்தான் உடலை கட்டுக்கோப்பாகவும், பிகினி  உடைகளுக்கு  ஏற்ப உடலை அழகாகவும் வைத்துக் கொள்ளமுடியும் என மெட்ரோ சிட்டி பெண்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். அதற்கேற்றாற்போல் அவர்களுக்கென வலைத்தளங்களில் புதுப்புது எக்ஸர்சைஸ் ஐடியாக்களை அள்ளி வீசும் வீடியோக்களும் வரத்துவங்கிவிட்டன.

ஆனால், எந்தவித உபகரணமும் இல்லாமல், தினமும் வெறும் தரையில் ஏழு நிமிடங்கள் ஒர்க் அவுட் செய்து வந்தாலே போதும், தொப்பை இல்லாத அட்டகாசமான உடலழகைப் பெறலாம் என்கிறது ஒரு வீடியோ. ஃபேஸ்புக்கின் ‘you’re gorgeous’ என்ற பக்கத்தில் ‘an atomic workout for your abs’ என்ற தலைப்பில் இடம்பெற்ற அந்த வீடியோவை ‘bright side’ பக்கத்தில் பதிவிட்டதும் 41 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.