காட் ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 26

ஒட்டுமொத்த கொலம்பிய கார்டெல்களின் காட்ஃபாதராக இந்த சூழலில்தான் முடிசூட்டிக் கொண்டார் பாப்லோ எஸ்கோபார். தொழிலில் போட்டியாக இருந்த கார்டெல்களும் இவரைச் சார்ந்தே இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்கள். யார் என்ன பிசினஸ் செய்யவேண்டும், எவ்வளவு லாபம் ஈட்ட வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கக்கூடிய மோனோபாலியாக போதை உலகின் பேரரசன் ஆனார் எஸ்கோபார். யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் எஸ்கோபாரின் ஆட்கள்தான் ஸ்பாட்டுக்கு வந்து நின்றார்கள். அமெரிக்காவில் ஓரளவுக்கு துவண்டு போயிருந்த பிசினஸ், மீண்டும் முஸெல்லா போன்றவர்களின் பார்ட்னர்ஷிப்பால் தழைத்தோங்கத் தொடங்கியது.

சந்தை விநியோகத்தில் ஆற்றலையும், காலத்தையும் செலவழிக்க வேண்டிய தேவை குறைந்ததால், தயாரிப்பில் ஜரூராக ஈடுபட்டனர் போதை தயாரிப்பாளர்கள். இதன் பலன் எஸ்கோபார் போன்றவர்களுக்கு மட்டுமின்றி, அத்தனை கார்டெல்களுக்கும் அவரவருக்கு உரிய பங்கு நியாயமான அளவில் கிடைத்தது. சரக்கை ஏற்றினோமா, அதற்கு கொடுக்கப்பட்ட காசை எண்ணினோமா என்று சும்மா இருந்துவிடவில்லை எஸ்கோபார். போதை ஏற்றுமதி டெக்னாலஜியை மேலும் நவீனகரமான முறையில் நடத்த நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஆராய்ச்சியில் கிடைத்த புதிய வழிமுறைகளை மற்ற கார்டெல்களுக்கும் பகிர்ந்து கொண்டார்.

அரசாங்கங்களின் கண்களில் எப்படியெல்லாம் மண்ணைத் தூவமுடியுமென்று அமெரிக்காவில் இருந்து அவருக்கு அட்வைஸ் இப்போது தாராளமாகக் கிடைத்தது. இந்த ஆலோசகர்களுக்கு லட்சக்கணக்கில் சன்மானம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் போதையின் வடிவமே மாறத் தொடங்கியது. கொலம்பிய காடுகளில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையங்களில் இரவும் பகலுமாக பல்லாயிரக்கணக்கான கெமிக்கல் என்ஜினியர்கள் இதற்காக பணியாற்றத் தொடங்கினார்கள். என்ஜினியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது, வேறு நாடுகளில் இருந்தவர்களுக்கு கொழுத்த சம்பளம் கொடுத்து ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் போடப்பட்டது.

இவ்வாறாக குடிசைத்தொழில் கணக்காக இருந்த போதை பிசினஸ், எஸ்கோபாரின் திறமையான நிர்வாகத்தால் பக்கா கார்ப்பரேட் பிசினஸாக மாறியது. அப்போது உலகமெங்கும் பிரபலமாக இருந்த கோலா பானத்தின் வடிவில் கோகெயினை மாற்றும் முயற்சியில் பாப்லோ வெற்றி பெற்றார். கப்பல்களிலும், விமானங்களிலும் அனுப்பப்படும் சரக்கு கோலாவாகத்தான் இருக்கும். அதை வெளிநாடுகளில் இறக்குமதி செய்பவர்கள், அங்கிருக்கும் லேப்களில் பவுடராக பண்பு மாற்றம் செய்து கொள்ள முடியும். இதற்கான தொழில்நுட்பம் உலகளாவிய போதை மாஃபியாக்களுக்கு பாப்லோவால் இலவசமாகவே வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் எலெக்ட்ரானிக்ஸ் புரட்சி ஏற்பட்டிருந்தது. எனவே, தங்களிடமிருந்த பழைய டிவி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை எடைக்கு போட்டுவிட்டு புதுசு புதுசாக ஜப்பானிய தயாரிப்புகளை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த பழைய டிவி, ஃப்ரிட்ஜையெல்லாம் குத்துமதிப்பாக ஒரு தொகை போட்டு பனாமா நாட்டில் வைத்திருந்த ஒரு டம்மி கம்பெனி வாயிலாக பாப்லோ இறக்குமதி செய்து கொண்டிருந்தார். அவற்றுக்கு பாலிஷ் போட்டு புதுசு மாதிரி பிராண்ட் பெயர் ஒட்டி தயார் செய்துவிடுவார். டிவிக்குள் எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் ஒன்றுமே இருக்காது. அசலாக புது டிவி மாதிரியே இருக்கும்.

அதற்குள்ளாக சுமார் 40 கிலோ கோகெயினை அடைத்து ஷிப்பிங் செய்து அனுப்பிவிடுவார். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் கஸ்டம்ஸுக்கு ‘சம்திங்’ கொடுத்து இதுமாதிரி டன் கணக்கில் சரக்குகளை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தார். பாப்லோவின் கெமிக்கல் என்ஜினியர்கள் செய்த மகத்தான சாதனை என்பது பிளாஸ்டிக் ஷீட் வடிவில் கோகெயினை உருமாற்றம் செய்ததுதான். பார்ப்பதற்கு பிவிசி பைப் போலவோ, நீளமான பிளாஸ்டிக் அட்டை போலவோதான் இருக்கும். பிளாஸ்டிக் ஏற்றுமதியாக இதை அமெரிக்காவுக்கு அனுப்பி, அங்கிருக்கும் லேப்களில் காய்ச்சி உருக்கி வடிகட்டி பவுடராக மாற்றிக் கொள்ளலாம்.

இதைப் போலவே சிலைகளின் உருவிலும் போதையைக் கடத்தி எல்லா அரசாங்கங்களின் கண்களிலும் மண்ணைத் தூவினார் பாப்லோ. சோதனை செய்யும் அதிகாரிகளை ஏமாற்றினாலும் சில சமயங்களில் மோப்ப நாய்களிடம் சரக்குகள் மாட்டிக் கொண்டன. நாய்கள் மோப்பம் பிடிக்காதவாறு வாசனைத் திரவியங்களைக் கலந்து அந்தப் பிரச்னையையும் வெற்றிகரமாக முறியடித்தார்கள். இதற்காக சரக்குகளுக்கு தரப் பரிசோதனை செய்யும் ஓர் அதிகாரியை பாப்லோ ஸ்பெஷலாக நியமித்தார். மர்க்குவேஸா என்ற பெயர்கொண்ட அந்த அதிகாரியும் ஒரு நாய்தான். அமெரிக்க ராணுவத்தில் மோப்ப நாய்களுக்கு அதிகாரி அந்தஸ்து வழங்கப்படும் பாணியை இந்த விஷயத்தில் கடைப்பிடித்தார்.

சிலையாகவோ, பிவிசி பைப்பாகவோ உருமாற்றப்பட்ட போதை சரக்கை மர்க்குவேஸா மோப்பம் பிடிக்கும். அதனால் கண்டுபிடிக்க முடிந்துவிட்டால், அந்த யூனிட் சரக்கு ஷிப்பிங் செய்யப்படாமல் அப்படியே நிறுத்தப்படும். மர்க்குவேஸால் மோப்பம் பிடிக்க முடியாத சரக்குகள் மட்டும் ‘QC OK’ செய்யப்படும். இந்த டெக்னிக் பக்காவாக ஒர்க்கவுட் ஆக, மர்க்குவேஸாவுக்கு துணையாக ஏராளமான நாய்கள் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டன. எனினும், இந்த மாதிரி உருமாற்றும் டெக்னிக்குகளில் கணிசமான அளவு கோகெயின் சேதாரம் அடைந்தது. உதாரணத்துக்கு 100 கிராம் கோகெயினை ஒரு சிறிய சிலை வடிவில் அமெரிக்காவுக்கு அனுப்பினால், அங்கிருக்கும் லேப்களில் இதை மீண்டும் போதைப் பொருளாக மாற்றும்போது 70 கிராம்தான் மிஞ்சும்.

மேலும் ஒரு ஷிப்மென்டுக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் கிலோ வரைதான் அனுப்ப முடிந்தது. கொலம்பிய கார்டெல்களுக்கு குவிந்த ஆர்டர்களில் நான்கில் ஒரு பங்கு தேவையை மட்டும்தான் இவர்களால் நிறைவு செய்ய முடிந்தது. பாப்லோவின் மெதிலின் கார்டெல்லைப் பொறுத்தவரை ஒரு மாதத்துக்கு 20 ஆயிரம் கிலோ வரை தயாரிக்க முடியும் என்கிற கட்டமைப்பு இருந்தது. இதை மேலும் விரிவாக்கம் செய்து தயாரிப்பு அளவை ஐந்து மடங்கு உயர்த்த திட்டமிட்டார் பாப்லோ. அவ்வாறு தயாரித்தாலும் அதை ஷிப்மென்ட் செய்வதில் பிரச்னை இருந்தது.

அப்போதுதான் ஓர் அட்டகாசமான கண்டுபிடிப்போடு பாப்லோவிடம் வந்தார் ஐரோப்பிய கெமிஸ்ட் ஒருவர். அதாவது மின்சார டிரான்ஸ் ஃபார்மருக்குள் மருந்தை வைத்து கடத்துவது. பெரிய இண்டஸ்ட்ரியல் டிரான்ஸ்ஃபார்மர்களை வாங்கி, அதற்குள் இருக்கும் எலெக்ட்ரிக்கல் சமாச்சாரங்களை அகற்றிவிட்டு அப்படியே கோகெயினை பவுடர் வடிவில் ஏற்றுவது. மோப்ப நாய்களிடமிருந்து தப்பிக்க கோகெயின் சிறப்பான பிளாஸ்டிக் பேக்கிங்கில் உள்ளே வைக்கப்படும். அமெரிக்காவில் இருக்கும் முஸெல்லா போன்றோரின் ஒப்புக்குச் சப்பாணி நிறுவனங்கள், கொலம்பியாவில் இருக்கும் பாப்லோவின் ஏதோ ஒரு லுலுவாயி ஃபேக்டரிக்கு இத்தனை எண்ணிக்கையில் எங்களுக்கு இவ்வளவு நாளைக்கு இண்டஸ்ட்ரியல் டிரான்ஸ்ஃபார்மர் வேண்டும் என்று சீரியஸாகவே ஆர்டர் கொடுக்கும்.

இவர்களும் அனுப்புவார்கள். அங்கே சரக்கை மட்டும் எடுத்துக்கொண்டு, நீங்கள் அனுப்பிய டிரான்ஸ்ஃபார்மர் சரியில்லை என்று திருப்பி அனுப்புவார்கள். இவர்கள் மறுபடியும் சரக்கை ஏற்றி, டிரான்ஸ்ஃபார்மரைப் பழுது பார்த்துவிட்டோம் என்று சொல்லி அனுப்புவார்கள். ஒரு டிரான்ஸ்ஃபார்மருக்கு சுமார் நாலாயிரம் கிலோ கோகெயின் என்கிற அடிப்படையில் ஒரு கப்பலுக்கு பத்து டிரான்ஸ்ஃபார்மர் கணக்கில் முன்பைவிட அதிக சரக்கை இந்த முறையில் கடத்த முடிந்தது.  தங்களுடைய சொந்த சரக்கை மட்டுமின்றி, மற்ற கார்டெல்களுக்கும் பாப்லோ இந்த முறையில் கூரியர் சர்வீஸ் வசதி செய்து கொடுத்து கமிஷன் வாங்கிக் கொண்டார்.

எவ்வளவு பெரிய காட்ஃபாதராக உயர்ந்தாலும் கடைசிவரை சில்லறை கமிஷன் வேலைகளையும் அவர் செய்துகொண்டே இருந்தார் என்பதுதான் அவரது சிறப்பு. ஒரே ஒரு முறை ஏற்பட்ட பிரச்னையில் அற்புதமான இந்த லாஜிஸ்டிக்ஸ் முறையை எஸ்கோபார் கைவிட வேண்டி வந்தது. மொத்த சரக்கையும் ஏற்றிக் கொண்டு கடலில் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோது வெனிசூலா அரசின் கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடுக்கடலில் வழக்கமான சோதனைக்கு அந்த கப்பலை நிறுத்தினார்கள்.

கப்பலில் இருந்த கேப்டன், மாலுமி உட்பட அத்தனை பேரும் ‘டைட் போதை’யில் இருந்து தொலைத்தார்கள். போதையில் முன்னுக்குப் பின்னாக அவர்கள் உளறிக் கொட்ட, இந்த டிரான்ஸ்ஃபார்மர் போதை கடத்தல் ஃப்ராடு வெளிச்சத்துக்கு வந்தது. அவர்கள் யதேச்சையாக நடந்த சோதனையில்தான் மாட்டினார்கள் என்று போதை உலகமே கருதினாலும்கூட, எஸ்கோபாருக்கு மட்டும் யாரோ உள்கை தம்மை போட்டுக் கொடுப்பதாக உள்ளுக்குள் பல்பு எரிந்தது.

(மிரட்டுவோம்)

ஓவியம் : அரஸ்