இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



பா.ராகவன் - 29

சென்ற வாரம் சில கேள்விகளையும் அதன் பதில்களையும் கண்டோமல்லவா? அதன் தொடர்ச்சி இது. ஒரு வரிச் சுருக்கமாக பேலியோ மனத்தில் பதிவதற்கு இது உதவும் என்று நினைக்கிறேன்.

வேர்க்கடலை சாப்பிடக்கூடாதா? அது என்ன பாவம் செய்தது?
வேர்க்கடலை கொட்டையினம் அல்ல. அது லெக்யூம் வகையைச் சேர்ந்தது. பேலியோவில் லெக்யூம் கிடையாது. ஆட்டோ இம்யூன் வியாதிகளைத் தூண்டுவதில் அதற்கு முக்கியப் பங்கு உண்டு. தவிர, ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை எல்லாம் இலவச இணைப்பாகச் சேரும். எப்போதாவது ஒருமுறை ஆசைக்குச் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. ஆனால், தினமும் வேர்க்கடலை என்பது விபரீதத்தில் கொண்டு விடும். குறிப்பாக Hscrp, தைராய்ட் பிரச்னை உள்ளவர்கள் அதை மறந்துவிடுவதே நல்லது.

ஓ, சரி. ஆனால், முளை கட்டிய பயிறு வகைகள், சுண்டல் எல்லாம் ஏன் பேலியோவில் இல்லை?
இதெல்லாம் நல்லது என்றல்லவா சொல்லுவார்கள்? அவற்றில் கார்போஹைடிரேட் அதிகம். ஒரு பக்கம் உயர் கொழுப்புணவாக எடுத்துக் கொண்டு மறுபுறம் உயர் மாவுச் சத்து உணவையும் சேர்த்து உண்பது விபரீதத்தில் கொண்டு விடும். அதனால்தான் கூடாது. நீங்கள் கொழுப்பை முற்றிலும் நிறுத்திவிட்டு வெறும் சாலட், முளை கட்டிய பயிறு என்று உண்டால் பிரச்னையே இல்லை. ஆனால், அத்தகைய டயட்டை மூன்று நான்கு வாரங்களுக்குமேல் தொடர முடியாது. தொடரவும் கூடாது.

சரியாப் போச்சு. பேலியோவை மிகச் சரியாகக் கடைப்பிடிக்கும் சிலருக்கே டிரைகிளிசிரைட் கண்டபடி ஏறுவதாகச் சொல்கிறார்களே?
சேமிப்புக் கொழுப்பு கரையும்போது டிரைகிளிசிரைடாக மாறியே வெளியேறுகிறது. அது ஒரு தாற்காலிக நிலையே. கவலை வேண்டாம்.

ஹோட்டலில் சாப்பிட நேரும்போது என்னதான் பேலியோ உணவாகத் தேடி உண்டாலும் எண்ணெய் சேர்மானம் இருக்குமே? அது ஆபத்து அல்லவா? என்ன செய்யலாம்?
கஷ்டம்தான். கூடியவரை எண்ணெய்ச் சேர்ப்பு அதிகமில்லாத உணவு வகையாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. பனீர் டிக்கா நல்ல சாய்ஸ். எண்ணெய் போடாமல், சும்மா க்ரில் செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்கலாம். பாலக் பனீர் வசதி. பனீர் ஃப்ரை, பனீர் புர்ஜி என்று போகும்போது எண்ணெய் நிச்சயம் இருக்கும். பனீர் டிக்கா மசாலா என்ற பெயரில் சில உணவகங்களில் பனீருக்கு எண்ணெய்க் குளியலே நிகழ்த்தித் தருவார்கள். அதெல்லாம் முற்றிலும் ஆபத்து. எண்ணெய் தவிர்ப்பது எல்லாவற்றுக்குமே நல்லது.

பூண்டை ஏன் பச்சையாக உண்ண வேண்டும்? சமைத்தால் என்ன தப்பு?
பூண்டு ஓர் உணவுப் பொருளல்ல. அது ஒரு மருந்து. பூண்டில் உள்ள Allicin நமது உடலுக்கு மிகவும் நல்லது. இது வெங்காயத்திலும் உண்டு. காரம், நெடி இரண்டுக்கும் இதுவே காரணம். இது சமைத்தால் போய்விடும். அதனால்தான் பச்சையாக உண்ண வேண்டும் என்பது.

சைவர்களுக்கு இங்கே கிடைக்கக்கூடிய காய்கறிகளே குறைவு. அதிலும் பீன்ஸ், அவரை போன்றவற்றைக் கூடாது என்கிறீர்களே? பீன்ஸ் சாப்பிட்டால் எடைக் குறைப்பு நின்றுவிடுமா?
எடைக் குறைப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இந்த ரகக் காய்கறிகள் டாக்சின்ஸ் என்பதால் மட்டுமே இவை தடுக்கப்பட்டுள்ளன (பைட்டிக் ஆசிட், லெக்டின் பிரச்னை). பீன்ஸ் ரகங்கள் சிலருக்கு சரும அலர்ஜி மற்றும் குடல் சார்ந்த பிரச்னைகளைத் தோற்றுவிக்கக்கூடியவை. அப்படி எதுவும் எனக்குக் கிடையாது என்பீரானால் அவ்வப்போது பீன்ஸ் சாப்பிடுவதில் தவறில்லை. பீன்ஸில் உள்ளது மிகக் குறைந்த (3.5) அளவு கார்ப் மட்டுமே.

கிழங்கு இனம் ஏதும் பேலியோவில் கிடையாது என்றால் வெங்காயம், பூண்டு மட்டும் ஏன்?
எடைக்குறைப்பு நிலையில் கிழங்குகள் வேண்டாம் என்று சொல்லப்படுகின்றன. மெயிண்டனன்ஸ் டயட்டில் கொஞ்சம் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை. இந்த மெயிண்டனன்ஸ் டயட் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன். ஆனால், கிழங்காகவே இருந்தாலும் வெங்காயமும் பூண்டும் உணவுப் பொருள்களல்ல. மருந்து. அதனால்தான் அவற்றைப் பச்சையாக உண்ண வேண்டும் என்று சொல்லுவது. இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களின் உள்காயங்களை இவை ஆற்றக்கூடியவை. இதனால்தான் பசு மஞ்சள் எடுக்கும்போது இவற்றைச் சேர்க்கச் சொல்வது.

சீட்டிங் ஏன் தவறு?
எந்த மனிதனும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. அறியாமையால் செய்யப்படும் தவறை எடுத்துச் சொல்லித் திருத்துவது எளிது. பேலியோவுக்கு வருவதற்கு முன் நாம் ஒரு வித உணவை உண்டுகொண்டிருந்தோம். அது கார்போஹைடிரேட் அதிகமுள்ள உணவு. இதயப் பிரச்னைகளுக்கு, ரத்த சர்க்கரை அளவுப் பிரச்னைகளுக்கு, அதிக எடைக்கு அதுவே காரணம் என்பதால், அந்த உணவை நிறுத்திவிட்டு, கொழுப்புணவுக்கு மாறினோம். கார்போஹைடிரேட் எப்படி ஒரு எரிபொருளோ, அதேபோல் கொழுப்பு ஓர் எரிபொருள். அது டீசல் என்றால் இது பெட்ரோல். இரண்டையும் கலந்து வண்டி ஓட்ட முடியுமா? ஓட்டியே தீருவேன் என்றால் வண்டிதான் கெடும். அதனால்தான் கூடாது என்று சொல்லப்படுகிறது.

சீட்டிங் தவறு என்று தெரிகிறது. ஆனால் இனிப்பு வகைகளையோ, பிடித்த பலகாரங்களையோ பார்க்கும்போது ஒரு விள்ளல் சாப்பிட்டுவிடத் தோன்றுகிறதே? கொஞ்சம் சாப்பிட்டால் கூடவா தவறு?
இதில் தவறு சரி என்று ஏதுமில்லை. நமக்கு என்ன வேண்டும் என்று முதலில் முடிவு செய்யுங்கள். எடைக் குறைப்பு அல்லது நீரிழிவில் இருந்து விடுதலை என்பது உங்கள் இலக்காக இருந்தால் கார்போஹைடிரேட்டைத் தவிர்த்தே தீரவேண்டும். அல்லது 40 கிராம் என்கிற கணக்குக்குள் கொண்டு வரவேண்டும். பலகாரத்தைப் பார்த்தாலே உண்ணவேண்டும் போலிருப்பதன் காரணம், கொழுப்பு உங்கள் உடலுக்கு இன்னும் பழகாதிருப்பது. அல்லது அது பழகவிடாமல் நீங்கள் அடிக்கடி கார்ப் உணவுகளை எடுத்துக்கொண்டிருப்பது. கொழுப்பு பழகிவிட்ட ஒருவருக்கு க்ரேவிங் இருக்காது. அப்படி இருக்கிறது என்றால் நீங்கள் இன்னும் பேலியோவுக்குள் வரவில்லை என்றே பொருள்.

பேலியோவில் முடி கொட்டுகிறதே?
பேலியோ என்றில்லை. எந்த எடைக் குறைப்பு டயட்டிலும் முடி கொட்டுவது கொஞ்சம் இருக்கும். எடைக் குறைப்பு நிற்கும்போது முடி கொட்டுவதும் நின்றுவிடும். பயோடின் போன்ற சப்ளிமென்டுகள் மூலம் இதைக் குறைக்கலாம். தகுந்த மருத்துவ அறிவுரையுடன் மேற்கொள்ள வேண்டும்.

உடல் நலம் குன்றியிருக்கும்போது, மருத்துவமனையில் இருக்கும்போது என்ன செய்வது? அப்போதும் பேலியோவைத் தொடரலாமா?
தாராளமாகத் தொடரலாம். விட்டமின் சி நிறைய உள்ள உணவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

கார்ப் ஷாக் என்பது என்ன? அது அறிவியல்பூர்வமானதா?
நூறு கிலோவுக்குமேல் எடை உள்ளவர்கள், எடைக் குறைப்பு முயற்சியாக பேலியோ பழகும்போது இதனைச் செய்வது வழக்கம். உடல் இயந்திரம் கொழுப்புணவுக்குப் பழகிவிட்ட நிலையில், திடீரென்று ஒருநாள் கொழுப்பே இல்லாமல் முற்றிலும் மாவுச் சத்து மிக்க உணவையே (வழக்கமான சாதம், சாம்பார், ரசம் உணவு) எடுத்துவிட்டு, மறுநாள் முதல் சட்டென்று 24 மணி நேரம், 48 மணி நேரம் வாரியர் விரதம் இருப்பார்கள்.

இந்த விரத காலத்தில், முதல் நாள் உண்ட கார்ப் உணவு சீக்கிரம் செரித்து, வயிறு பசியில் துடிக்கும். ஏனெனில், கார்ப் உணவின் இயல்பே நான்கு மணி நேரத்தில் பசிக்கச் செய்வது. கொழுப்புணவு பசியைக் கொடுக்காது. அப்படிப் பசிக்கிற போதும் ஏதும் உண்ணாமல் வெறும் தண்ணீரைக் குடித்துக்கொண்டிருந்தால், உடலானது ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை எரித்து சக்தியை அளிக்கும். சேமிப்புக் கொழுப்பு கரைவதால் எடைக் குறைப்பு நிகழும். இதையே கார்ப் ஷாக் என்பார்கள்.

இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாமா?
சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இதனைக் கண்டிப்பாக மேற்கொள்ளக் கூடாது. இளைஞர்கள் செய்யலாம். இது ஓர் உத்திதானே தவிர, அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதல்ல. வெஜ் பேலியோவில் கார்ப் ஷாக் அதிகப் பலன் தருவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவம் (நான் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். பெரிய எடை இழப்பு இல்லை).

(தொடரும்)