குழந்தை என்னும் மேஜிக் வார்த்தை!



நியூஸ்

சென்னை வடபழனியில் கோயில் குருக்கள் ஒருவரின் இளம் மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  நகைக்காகவும், பணத்துக்காகவும் செய்யப்பட்ட படுகொலை என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.ஆனால், க்ரைம் நாவல்களின் திருப்பம் போல்  போலீஸ் விசாரணையில் கணவனே மனைவியை கொலை செய்தது அம்பலமானது. இரு குடும்பங்களின் எதிர்ப்பை சமாளித்து கரம் பிடித்த  காதலியை, கணவனே கொலை செய்ய என்ன காரணம்? போலீஸில் அந்த கணவன் கொடுத்த வாக்குமூலத்தில் அதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

“எங்களுக்கு இடையில் தாம்பத்ய உறவு முறையாக நடக்கவில்லை. என் மனைவி தாம்பத்யத்துக்கு அழைத்தாலும் அதை தவிர்க்க நான் பல  காரணங்களை கூறினேன். இதனால் ஆத்திரம்அடைந்தவர் என்னை அடிக்கடி ‘ஆண்மை இல்லாதவன்’ என்று ஒருமையில் கேவலமாகப் பேசினார்...”  என்று சொல்லியிருக்கிறார். ஆக, காதல் கிளிகள் மகிழ்ச்சி யாக வாழ்வதற்கு தடையாக அமைந்த விஷயம் குழந்தையின்மை. திருமணமாகி ஐந்து  ஆண்டுகளாகியும் புத்திர பாக்கியம் அவர்களுக்கு அமையவில்லை. மருத்துவரை அணுகியபோது, கணவரிடம் சில குறைபாடுகள் இருப்பதாக  கண்டறியப்பட்டது.

இந்த அழுத்தம் கொடுத்த குற்ற உணர்ச்சியின் காரணமாக குருக்களுக்கும், அவரது மனைவிக்கும் தாம்பத்ய விலக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘ஆண்மை’  என்பதை குழந்தை பெறுவதற்கான தகுதியாக மட்டுமே சமூகம் கருதுவதுதான் இதற்குக் காரணம். ‘குழந்தையின்மை’ அல்லது ‘தாமதமாக கருவுறுதல்’  ஆகியவை இக்கால இளைய சமூகத்தினர் பலரும் எதிர்கொள்ளும் பெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. எனவேதான் தனியார்  தொலைக்காட்சிகளில் பெரும் பணம் செலவு செய்து இரவுவேளைகளில் ‘ஸ்லாட்’ வாங்கி குழந்தை பாக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளை சித்த /  ஆயுர்வேத மருத்துவர்கள் நடத்துகிறார்கள்.

அந்நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தையில்லா தம்பதி யினர் லட்சங்களைக் கொட்டி சிகிச்சைக்கு செல்கின்றனர். ‘குழந்தையின்மை’ பிரச்னை பெரும்  வணிகமாக நவீன தமிழ் சமூகத்தில் மாறியிருக்கிறது. நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள், மனிதனின் சகல பிரச்னைகளுக்கும் ஏதோ தீர்வோ அல்லது  தீர்வுக்கு நெருக்கமான நிவாரணமோ ஏற்படுத்தியிருக்கக்கூடிய வேளையில் வடபழனி கொலை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதற்கு முறையான  வழிகாட்டுதல் இல்லாததே காரணம். திருமணமாகி மூன்றாம் மாதமே பெண்ணிடம் “எத்தனை மாசம்?” என்று கேட்கும் போக்கு மறைய வேண்டும்.

தான், கர்ப்பமுற்றிருப்பதாக ஒரு பெண் தகவல் சொல்லாமலேயே, அது குறித்து பேசுவது அவள் மீது செலுத்தப்படும் மனரீதியான அடக்குமுறை  என்பதை உணர வேண்டும். திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் வாழ்நாள் முழுக்க சேர்ந்து வாழ்வதற்குரிய ஓர் ஏற்பாடு. குழந்தை பெறுவது  என்பது அந்த ஏற்பாட்டில் ஓர் அங்கம்தானே தவிர, திருமணம் என்பதே குழந்தை பெறுவதற்கான சடங்கு அல்ல. ஆண்களுக்கு: குழந்தையின்மை  என்கிற பிரச்னை உங்கள் ஆண்மைக்கு விடப்படும் சவால் அல்ல.

இந்தப் பிரச்னைக்கு வெவ்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கலாம். முறையான சிகிச்சை உரிய நிவாரணத்தைத் தரலாம். சிகிச்சைக்கு உடன்பட  உங்களுக்கு தயக்கமோ, நாணமோ தேவையில்லை. பெண்களுக்கு: “இன்னுமா தலை முழுகிட்டிருக்கே?” என்று கேட்பவர்களை அலட்சியப்  படுத்துங்கள். முடிந்தால், “அது என் இஷ்டம்” என்று விட்டேத்தியாக சொல்லி அவர்களது வாயை அடையுங்கள். முறையான மருத்துவ  சிகிச்சைகளுக்கு நீங்களும், உங்கள் கணவரும் ஒத்துழைத்தால் மட்டுமே உங்கள் பிரச்னை தீரும்.

ஆண், பெண் இருவருக்கும்: இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் இயல்பாகக் கருத் தரிக்க முடியாமல் போனால் செயற்கை முறை கருத்தரித்தல்  உள்ளிட்ட எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன. அவ்வளவு ஏன்... கைவிடப்பட்ட ஒரு குழந்தையைத் தத்தெடுத்தும் வளர்க்கலாம். வாழ்நாள் முழுக்க  குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையை வாழ்ந்து முடித்த முன்னோர்கள் நமக்கு ஏராளம். விதிக்கப்பட்ட  வாழ்க்கையை, நாலு பேர் பாராட்டும் வகையில் அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்து காட்டுவதே நாம் பிறந்ததற்கு நியாயம் பாராட்டும் செயல்பாடு.

யுவகிருஷ்ணா