குழந்தை நட்சத்திரம் to டப்பிங் ரைட்டர்!



சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான ‘டெட் பூல் - 2’ தமிழ் டப்பிங்கிலும் வெற்றி பெற்றிருக்கிறது. காரணம், அதன் காமெடி கலகலக்கும் அதிரி புதிரி வசனங்கள்! ‘ஆதார் கார்ட் லிங்க் பண்ணுங்க...’, ‘கமல் டிவிட் மாதிரி...’, ‘மக்கள் நீதி மய்யம்’, ‘கபாலி’, ‘விவேகம்’, ‘தெறி’... என சொல்லுக்குச் சொல் மரண மாஸ்! இப்படி தமிழ் டப்பிங் வசனத்தில் கலக்கியிருப்பவர் தீபிகா ராவ்!  ‘‘எங்கள மாதிரி டயலாக் ரைட்டர்களுக்கு ‘டெட்பூல்’ மாதிரி படங்கள் அல்வா மாதிரி. கிரியேட்டிவ்ல இஷ்டத்துக்கு புகுந்து ஆடலாம்.

அவ்வளவு ஸ்கோப் அதுல இருக்கு...’’ உற்சாகமாகப் பேசுகிறார் தீபிகா ராவ்.‘‘ஸ்கூல் படிக்கும்போதே சினிமால நடிக்க வந்துட்டேன். குழந்தை நட்சத்திரமா சரத்குமார் சாரோட ‘தோஸ்த்’ உட்பட நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். அதேமாதிரி ஸ்கூல் யூனிஃபார்ம் விளம்பரங்கள்லயும் கலக்கியிருக்கேன்! படிச்சது, வளர்ந்தது சென்னைலதான். லயோலால விஸ்காம் படிச்சேன். இப்ப எழுத்து வேலையோட எம்பிஏ படிச்சுட்டு இருக்கேன்.

அப்பா, எம்.எஸ்.ராவ், ரெயில்வேல அதிகாரியா இருந்தவர். அம்மா, மைதிலி கிரண், ஜெமினி டிவில நியூஸ் ரீடரா தன் கரியரை தொடங்கினவங்க. அப்புறம் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு தெலுங்கு டப்பிங் ரைட்டரா ஆனாங்க. ‘டெட்பூல்’, ‘டெட்பூல் 2’ தெலுங்கு டப்பிங்குக்கு அம்மாதான் எழுதியிருக்காங்க.  சொந்தமா ‘ரா ட்ராக்ஸ்’ டப்பிங் ஸ்டூடியோ வைச்சிருக்கோம். அம்மாவைப் பார்த்துதான் இந்தத் துறைக்கு வந்தேன். 2015ல வெளிவந்த ‘ஜுராஸிக் வேர்ல்டு’ ஹாலிவுட் படத்துக்குதான் முதல் முதல்ல தமிழ்ல டப்பிங் வசனம் எழுதினேன்.

அப்புறம் ‘எம்.எஸ்.தோனி’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ இந்திப் படங்களுக்கு தமிழ்ல எழுதினேன்..’’ என்றவர் ‘சந்தனக்காடு’ டிவி சீரியலில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்திருக்கிறார்.‘‘பொதுவா டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதறப்ப நாலஞ்சு ஸ்கிரிப்ட் எழுதின பிறகே ஃபைனலாகும். ‘எம்.எஸ்.தோனி’ மாதிரி படங்களுக்கு இஷ்டத்துக்கு எழுதிட முடியாது. படத்தோட உயிரோட்டத்தை அது பாதிக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளணும்.

டப்பிங் எழுதறதோட என் பணி முடிஞ்சுடாது. ஒவ்வொரு கேரக்டருக்கும் டப்பிங் டைரக்‌ஷனும் பண்றேன். சரியான ஏற்ற இறக்கங்களோட டப் செய்யணும். அப்பதான் பர்ஃபெக்‌ஷன் கிடைக்கும். இந்திப் படங்களுக்கான தமிழ் டப் பெரும்பாலும் மும்பைல நடக்கும். ரிலீஸ் வரை அவங்க கரெக்‌ஷன் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. திரைக்குப் பின்னால் திறமையை நிரூபிக்கிற இந்த வேலை பிடிச்சிருக்கு.

பா.விஜய் சார், மதன் கார்க்கி சார்னு இந்தத் துறைல சாதிச்சவங்க என் ஒர்க்கை பாராட்டறப்ப மகிழ்ச்சியா இருக்கு...’’ நெகிழும் தீபிகா டப்பிங் ஆர்ட்டிஸ்டும் கூட. ‘‘‘எம்.எஸ்.தோனி’ல சாக்‌ஷிக்கும், ‘பத்மாவதி’ல அதிதி ராவுக்கும் டப்பிங் பேசியிருக்கேன். சஞ்சிதா ஷெட்டிக்கும் ரெண்டு படங்கள் பேசினேன். இப்ப ‘மிஷன் இம்பாசிபிள்’, ‘ஜுராஸிக் வேர்ல்ட்’ படங்களுக்கும் எழுதிட்டிருக்கேன்..!’’ என்று சொல்லும் தீபிகா, ‘காலா’வில் நானா படேகரின் போர்ஷன்களுக்கு எழுதியிருக்கிறாராம்!      

- மை.பாரதிராஜா