பாஸ்கர் ஒரு ராஸ்கல்



குழந்தைகளே தன் பெற்றோர்களுக்கு ஜோடி சேர்த்து புது வாழ்க்கைக்கு தயார்படுத்தும் கதை. மனைவியை இழந்த வசதியான அரவிந்தசாமி. அடிதடியிலே கவனம். அதனால் அவரது மகன் ராகவ் தந்தையை வெறுக்கிறான். ஆனால், அவனது வகுப்புத் தோழி நைனிகா, அதையே ரசிக்கிறாள். தனியாக வாழும் அமலாபாலுக்கு அரவிந்தசாமியையே துணை சேர்க்க, குழந்தைகள் திட்டம் தீட்ட, இருவரும் இணைந்தார்களா... என்பதே இயக்குனர் சித்திக்கின் அனுபவ கைவண்ணம்.

அரவிந்தசாமி அடாவடியான ஆசாமியாக (!) உருமாறி, பாசத்தில் உணர்வுகளைக் காட்ட முற்படுகிறார். அழகிய புன்னகையும், நைனிகா மேல் அன்புமாக திளைக்கிறார் அமலா பால். அடிதடியில் முன்னேறும் அரவிந்தசாமி, காதல் என வரும்போது காட்டும் அப்பாவித்தனம் கவர்கிறது. பாசமும், நேசமும் கொண்ட குழந்தை உலகம் நிறைந்த கதையில், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷனைத் தவிர்த்திருக்கலாம்.

ரமேஷ் கண்ணாவின் உரையாடலில் ஆங்காங்கே வேடிக்கை, உருக்கம், நெகிழ்வு. பின்னணியில் அசத்துகிறார் அமரேஷ். சூரி, ரோபோ சங்கர் கூட்டணியில் சிரிக்க வைக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் ஆரம்பித்து கிடைத்த கேப்பில் எல்லாம் சுற்றிச் சுழன்றிருக்கிறது உலகநாதனின் கேமரா. பார்த்த மாதிரியும் பார்க்கும்படியும் இருக்கிறது.        

- குங்குமம் விமர்சனக்குழு