கல்யாணம் பண்ணிக்கிட்டால் எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கணுமா? - கேட்கிறார் மோகன் பாபுவின் மகள் லக்ஷ்மி மஞ்சு



‘‘எனக்கு சினிமாதான் சார் லைஃப்! சினிமா பண்ண வேணாம், பார்க்க வேணாம், விடிய விடிய சினிமா பத்திப் பேசிட்டு இருந்தாலே பெரிய சந்தோஷம்னு  நினைக்கிறவ நான். சினிமாவுக்காக ஓடுறதிலே இருக்கிற சந்தோஷமே தனி. இத்தனை கோடி மக்களை இம்ப்ரஸ் பண்ணி மீடியாவில் இருக்கிறது சிறப்பல்லவா!அப்பா மோகன்பாபு தெலுங்கில் பெரிய நடிகர். அதெல்லாம் அவருக்கு. எனக்கு என்ன அடையாளம்? அதுக்கு கொஞ்சம் விஷயங்கள் செய்யணும்னு  ஆசைப்பட்டேன்.

அப்பா அழகா அனுமதிச்சார். ரொம்ப பிடிச்சு வைச்சு பாடம் எடுக்காமல் ‘உனக்குத் தெரியும்... உன்னால் முடியும்...’னு அனுப்பி வைச்சார். பெரிய நடிகர்  ஃபேமிலியிலிருந்து சினிமாவுக்கு வந்த முதல் பெண் நான். நடிகையாக நல்ல சில விஷயங்கள் கிடைச்சிருக்கு. இப்ப ஜோதிகா கூட நடிக்கிற ‘காற்றின்  மொழி’யும் அப்படிப்பட்டதுதான்...’’ அருமையாகப் பேசுகிறார் லக்ஷ்மி மஞ்சு. தெலுங்கின் பெரிய புரடியூசர், நடிகை என ஜொலிப்பவர். ஷூட்டிங், மீட்டிங்,  களைப்பு என்று அனைத்தையும் மீறி மினுமினுக்கிறது கண்கள். முகம் பார்த்து அலாதியான கனிவோடு பேசத் தொடங்குகிறார்.

தமிழில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?

நல்ல படமாக செய்யலாம்னு காத்திருந்ததுதான் காரணம். இந்தப் படம் செய்தே ஆகணும்னு நினைக்கிற மாதிரி எதுவும் வரலை. நான் கதையை நம்புவேன்.  நமக்கு ஸ்கோப் இருக்குமான்னு சிந்திப்பேன். இயக்குநர், தயாரிப்பாளர் பார்த்துதான் ஒரு படம் செய்ய முடியும். இந்த ராதாமோகன் சார் யூனிட் அவ்வளவு  நேர்த்தி. வீட்ல சந்தோஷமாக இருந்து வேலை செய்கிறது மாதிரி இருக்கு. கூலாக வைச்சிருக்கார். திடீரென்று தனஞ்செயன் சார்கிட்டே இருந்து போன். ‘நேகா  தூபியா ரோல் உங்களுக்கு. செய்றீங்களா...’னு கேட்டார். எங்களின் சந்திப்பு நடக்க, இதோ இப்ப ஷூட்டிங்ல இருக்கேன்.

எப்படியிருக்கார் ஜோதிகா?

உண்மையைச் சொல்லவா... எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்! நிச்சயம் கொஞ்சம் பந்தாவாக இருப்பார்னு நினைச்சேன். அப்படி இல்லவே இல்லை. நல்ல மனுஷி.  அவ்வளவு சாந்தம். அவங்க கூட இருக்கிற நேரமெல்லாம் சுவாரஸ்யமா இருக்கும். ‘இந்த ஷூட்டிங்தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்த இடம்’னு  சொல்வேன். அவர் நடிக்கிறதைப் பார்த்துக்கிட்டு இருக்கிறது ரொம்ப நல்லாயிருக்கும்.  ஜோதிகா ஸ்பெஷல் என்னன்னா ரொம்ப ஃப்ளெக்ஸிபிள். அவரை வைச்சு  ஒரு கிரியேட்டர் விளையாட முடியும். இதில் அப்படிச் செய்திருக்கார். நான் அவர்கூட இந்தப் படத்தில் ஒரு பகுதியா இருக்கேன் என்பதே எனக்கான நிறைவுதான்.  நல்ல படம்தான் முக்கியம். மோகன்பாபு பொண்ணா இருந்துகிட்டு இன்னும் என்ன செய்தால் பெயரெடுக்கலாம்னு பார்க்கணும். எனக்கு முன்னாடி எத்தனை பேர்  இருக்காங்கன்னு நான் பார்க்கறதில்லை. பத்துப்பேர் கூட இருக்கட்டுமே... அதுக்கென்ன இப்போ... ஐ லவ் சினிமா!

அப்பா ரொம்ப கண்டிப்புக்காரர் ஆச்சே?

அப்படியும் ஒரு சமயம் இருந்திருக்கார். நான் செல்லப்பொண்ணு. என்கிட்டே மட்டும் அது நடக்காது. அவருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் யாராவது தப்பு பண்ணிட்டால்  பயங்கர கோபம் வந்திடும். அதனால் அவர் இருக்கிற இடம் அவ்வளவு அமைதியாக இருக்கும். அப்பா இப்ப ரொம்ப கனிந்துவிட்டார். பேரன், பேத்தியெல்லாம் பார்த்துட்டு அமைதி வந்துருச்சு. இன்னும் சொன்னா, பிரியத்தோட இன்னொரு முகம்தானே கோபம்.

உங்களுக்கு தமிழ் தயக்கம் இல்லாமே வருதே!

15 வருடங்களுக்கு முன்னாடி வரை இங்கேதானே இருந்தோம். தமிழ் விட்டுப் போகுமா! பாண்டி பஜார், மயிலாப்பூர், மெரினா, அடையாறு பக்கமாகப் போனால்  அப்பா என்னைக் கூட்டிட்டு திரிஞ்ச அத்தனை ஞாபகமும் கூட வருதே! இப்பக்கூட நேரம் கிடைச்சால் ஊரைச் சுத்தலாம்னு சொந்தக்காரையே எடுத்திட்டு  வந்திருக்கேன். கொஞ்சம் அவுட்டிங் போகணும்.

ரஜினியும், உங்க அப்பாவும் படா தோஸ்த் ஆச்சே!

சும்மாவா! பாண்டிபஜார்ல ஒன் பை டூ டீ குடிச்சிட்டு காலில் செருப்புகூட இல்லாமல் இரண்டு பேரும் திரிஞ்சிருக்காங்க. அதுமாதிரி நட்பெல்லாமா இப்ப இருக்கு!  அப்படி ஒரு ஃப்ரெண்ட்ஷிப். முயற்சி பண்ணிப் பார்த்தால் கூட இப்ப முடியாது. அதுக்கு இரண்டு பக்க மனசும் பிரியமாவும் உண்மையாவும் இருக்கணும். இரண்டு  பேரும் அவங்க புகழ், வளர்ச்சி, அடையாளம் எல்லாம் மறந்திட்டு, நண்பர்களாகவே இருக்கிறதைப் பார்க்க ரொம்ப நல்லா இருக்கும். நாங்க அவங்க அமைதியை  அப்படியே அனுமதிப்போம்.

பத்து வருஷம் கழிச்சு இந்த லக்ஷ்மி மஞ்சுவை எப்படி ஞாபகம் வைச்சுக்கணும்?

‘அவள் நினைச்சதை செய்தாள்’னு சொல்லணும். நான் யாருங்கறதுதான் எனக்கு முக்கியம். சுயமரியாதை, கவுரவம் இதெல்லாம் பொண்ணுக்கு ரொம்பவும்  அவசியம். ஆண் மாதிரி யோசித்து, பெண் மாதிரி செயல்படும்போதுதான் குழப்பமே. கல்யாணம் பண்ணிக்கிட்டால் பொண்ணுக்கு எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு  எல்லாம் கிடையாது. பொண்ணுக்கு ஐடென்டிடி வேணும். நமக்கென்று சில பிடிப்புகள் இருக்கணும். நமக்கு புத்தகம் படிக்கிறது பிடிக்கும்னா கடைசி வரைக்கும்  அந்தப் பழக்கத்தை விடக்கூடாது. கல்யாணம் ஆயிட்டா குண்டாயிடணுமா?

கல்யாணம் பண்ணிக்கிட்டால் எல்லாத்தையும் விட்டுக்கொடுக்கணுமா?

இப்ப பாருங்க, ஜோதிகா நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறாங்க. நயன்தாரா செலக்ட் பண்ற படங்களும் அவ்வளவு நல்லாயிருக்கு. நான் என்  விருப்பத்துக்குத் தொடர்ந்து இயங்கிட்டிருக்கேன். அதுவும் எனக்கான மகிழ்ச்சி.உடம்பை நேர்த்தியாக பராமரிக்கிறீங்க...வாழ்க்கை ரொம்ப சின்னது. நாலு மாதத்துக்கு  முன்னால் என் நண்பர் ஒருத்தரை 33 வயசில் ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். இன்னிக்கான பொழுதை கடைசி நாள் மாதிரி சந்தோஷமாக வைச்சுக்கணும்.  இவ்வளவு சின்ன வயதில் இறப்பு, அப்பாவோட ஏற்ற இறக்கம், அப்ப இருந்த நிலைமை, நல்லது கெட்டது... எல்லாத்தையும் அருகிலிருந்து பார்த்துட்டேன். நம்ம  கான்செப்ட் இதுதான்: இன்றைய நாள் இனியது!      l

- நா.கதிர்வேலன்