கடைக்குட்டி சிங்கம்




குடும்ப ஒற்றுமைக்கு எந்த கவுரவமும் பார்க்காமல் உழைக்கிற தம்பியே இந்த ‘கடைக்குட்டி சிங்கம்’.கிராமத்தின் பெரிய மனிதர் சத்யராஜுக்கு இரண்டு மனைவி கள். ஐந்து மகள்கள். இறுதிக்காலத்தில் தன்னைக் காப்பாற்றவும், ஓர் ஆண் வாரிசுக்காகவும் அடுத்த கல்யாணத்துக்கும் தயாராகிறார். இந்த வேளையில் முதல் மனைவிக்கு பிறக்கும் மகனே கடைக்குட்டி சிங்கமான கார்த்தி. அக்காள் மகள்கள் பிரியா பவானி சங்கரும், அர்த்தனாவும் மாமாவின்  மீது காதல் கொள்ள, கார்த்தியோ சாயிஷா மேல் பிரியம் வைக்க... நொறுங்குகிறது குடும்ப ஒற்றுமை. பிறகு குடும்பம் ஒரு குடையின்கீழ் வந்ததா? கார்த்தி அதை எப்படி சாதித்தார் என்பதே திரைக்கதை.ஏற்கனவே நாம் பார்த்த கதைகளின் தொகுப்புதான் என்றாலும் அதை பிசிறு தட்டாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். உறவுகளின் வலைப்பின்னலை ஒவ்வொரு குணாதிசயங்களுக்கும் ஏற்ற மாதிரி வடிவமைத்திருப்பது பெரும் வேலை.

அதை ஜஸ்ட் லைக் தட் என பின்னியிருக்கிறார் இயக்குநர். கிராமியத்தின் அனுபவ நுணுக்கத்தை சரியான கலவையில் படம் நெடுகிலும் அடுக்கியதே அவரின் சிறந்த வேலைப்பாடு.ஹீரோயிசம், பஞ்ச் எதுவும் இல்லாமல் ஒரு கிராமத்து இளைஞனாக புழங்கியிருக்கிறார் கார்த்தி. அக்காள்களின் மீது வைத்துள்ள பாசம், அவர்களின் குணத்துக்கு ஏற்றபடி அனுசரித்து நடக்கும் பாங்கு, அம்மாக்கள், அக்கா மகள்கள், மாமன் என கொஞ்சிக்கொள்ளும் இயல்பு... எல்லாவற்றிலும் கார்த்தி மேஜிக்.ஊருக்கும், வீட்டுக்கும் தலைமையாய் இருக்கும் சத்யராஜ் இந்தப் படத்தின் தனித்துவ அடையாளம். நடுவில் விட்டுப்போன இடத்தை பிடித்திருக்கிறார் சூரி.  மாமனுடன் நண்பனாக சுற்றித் திரியும் சூரியின் அருகாமை கலகலப்பு. கல்லூரி மேடையில் விவசாயி கார்த்தி பேசும்போது சூரி அடிக்கிற அரசியல் பஞ்ச்... தில்... தூள்!

பொன்வண்ணனின் பொன் மகளாக சாயிஷா. செலவழிக்கிற ஒவ்வொரு காசுக்கும் கணக்கு பார்த்து கார்த்தியையும் காதல் கணக்கில் வைக்கிறார். அந்த பளீர்  வெள்ளை நிறம் கிராமத்துக்குப் பொருந்தாவிட்டாலும் கொஞ்சம் ஈர்க்கிறார்.அக்கா மகள்களாக பாசம் கொட்டி பிரியா பவானி ஷங்கரும், அர்த்தனாவும் அதகளம் செய்கிறார்கள். மச்சான்களாக மாரிமுத்து, இளவரசு, சரவணன், ஸ்ரீமன் துணைப்பாத்திரங்களில் பக்க பலம். பானுப்ரியா, விஜி சந்திரசேகர், மௌனிகாவின் அனுபவம் பேசுகிறது.இமானின் ‘வா ஜிக்கி...’ பாடலுக்கு தலை வணங்கலாம். பின்னணி இசை ஃப்ரெஷ். கிராமத்தின் தலைக்கட்டு குடும்பத்திற்கு மிகவும் அன்னியோன்யமாக இருக்கிறது வேல்ராஜின் கேமரா.விவசாயிகளின் நியாயம் பேசுவது வாள்வீச்சு. விவசாயத்தை விட்டு விலகி வந்தவர்களுக்கு இது கத்திக்குத்து. அவ்வப்போது சீரியல் தன்மைக்கு படம் போயிருப்பதை திசைதிருப்பியிருக்கலாம். சாயிஷா மீதான காதலில் அவ்வளவு நெருக்கமில்லை.மண்ணும், மனசுமான கதையில் நெஞ்சில் நிறைகிறான் இந்த ‘கடைக்குட்டி சிங்கம்’.        

-குங்குமம் விமர்சனக்குழு