தங்கமகள்



இன்று இந்தியா முழுவதும் பிரியமாக உச்சரிக்கும் ஒரே பெயர் ஹிமா தாஸ்!பின்லாந்தில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இந்தத் தங்க மகள்.ஆம்; சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஹிமா தாஸ்தான்!அசாமில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஹிமாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. தந்தை ஒரு விவசாயி. சிறு வயதில் கால்பந்தின் மீதான தீராத காதலால் எப்போதும் ஆண்

களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஹிமா, நிபோன் தாஸ் என்ற பயிற்சியாளரின் கண்ணில் பட்டார்.அவர்தான் ஹிமாவிற்குள் இருந்த தடகள வீராங்கனையை வெளியே கொண்டு வந்தவர். பயிற்சி எடுக்கவும், வெளியே சென்று போட்டியில் பங்கேற்கவும் எந்தவித வசதியும் இல்லாத ஹிமாவுக்கு உதவியது இந்திய தடகள சம்மேளனமோ, அரசோ அல்ல; நிபோன் தாஸ்தான்!ஆரம்ப நாட்களில் வயல் வெளியில் பயிற்சியை மேற்கொண்ட ஹிமா, எப்போதும் மெதுவாக ஓடத் தொடங்கி, எல்லைக் கோட்டை நெருங்கும்போதுதான் வேகமெடுக்க ஆரம்பிப்பார். இந்தப் போட்டியில் கூட முதல் 35 விநாடிகள் வரை நான்காவது இடத்தில் இருந்த ஹிமா, கடைசி 15 விநாடிகளில் அசுர வேகமெடுத்து முதல் இடத்தைத் தட்டிச் சென்றார்!

விளையாட்டைப் பற்றிய எந்தவிதமான அக்கறையும், ஒத்துழைப்பும் இல்லாத ஒரு தேசத்தில் பிறந்து வளர்ந்த ஹிமா நிகழ்த்திக் காட்டியிருக்கும் சாதனை சாதாரணமானது அல்ல. அதுவும் ஒரு பெண் விளையாட்டில் சாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.கடைக்கோடியில் பிறந்த இந்தியாவின் மகள் தன் உழைப்பினால் இந்தப் பெருமையை நமக்குச் சேர்த்திருப்பது நமக்கான கவுரவம். பதக்கம் பெறும்போது ஹிமா தாஸின் மௌனம் செறிந்த கண்ணீர் இந்தியர்  ஒவ்வொருவரையும் மனம் உருகச் செய்தது. இத்தகைய வீராங்கனைகளைக் கண்டுபிடிக்கிற பெருமையையும், வளர்த்தெடுக்கிற உரிமையையும் இனிமேலாவது அரசு மேற்கொள்ள வேண்டும்       

- த.சக்திவேல்