சீமராஜாஅள்ளி அணைப்பான்... எதிரிகளை துள்ளி அடிப்பான்!



கோடம்பாக்கத்தின் ‘மாஸ்’ ஹீரோ சிவகார்த்திகேயன்தான். எல்லோரையும் மிரட்டிய வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்து செம ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். பெரியவர்களிலிருந்து குழந்தைகள் வரை மேனரிசத்தில் அள்ளுகிறது சிவாவின் ஆளுமை! சம்பளம், புகழ், உயரம் என எல்லாவற்றிலும் ஏறுமுகம். பீக் ஹவர்ஸ் டிராஃபிக் மாதிரி இருக்கிறது சிவாவின் கால்ஷீட் டைரி.

‘‘உண்மையில் பயமாயிருக்கு. ‘சீமராஜா’ நல்ல எதிர்பார்ப்பில் இருக்கு. இந்த இடத்தைக் கொடுத்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். ரொம்பவும் யதார்த்தமாக, ‘கருவிலே திருவுடையான்’னு சொல்வாங்களே, அப்படி எதுவும் இல்லாமல் வந்தவன்தான். எனக்கு கிடைத்திருக்கிற இடம் பெரிசு.

ஒவ்வொரு படம் செய்யும்போதும் நடிப்பில் அடுத்த கட்டத்திற்குப் போகணும்னு நினைப்பேன். அப்படி திட்டமிடும்போது என் வியாபாரமும் பெருகுவதற்குக் காரணம் தமிழ் மக்கள்தான். அடுத்தடுத்த படங்களில் என்னை கொஞ்சம் மெருகேற்றியே வந்திருக்கிறேன்.

வேற யாரும் சொல்றதுக்கு முன்னாடி, நானே என் குறைகளைச் சரிபண்ணிக்கிறேன். விமர்சனங்களை வரவேற்கிறேன். ஒரு ஸ்டெப் கூட போடத் தெரியலைன்னு சொன்னவங்க, ‘யோவ், சூப்பர்யா’னு சொன்னாங்க. சமயங்களில் எனக்குக் கிடைச்ச அங்கீகாரத்தை நினைச்சால் கண் கலங்கிடும். பெற்றோரோ, மக்கள் வச்சிருக்கிற பிரியமோதான் அதற்கு ஆதாரமாக இருந்திருக்கணும்...’’ புன்னகைக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘சீமராஜா’ பெரிய ரேஞ்சில் வந்திருக்கிறதை ‘டிரைலர்’ சொல்லுது...

முன்னாடியெல்லாம் முழுக்க காமெடிதான் செய்திருக்கேன். இதில் எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கோம். காமெடியோட காதல், எமோஷன், டான்ஸ், பாட்டு, அதிரடின்னு படம் பறக்கும். மாஸ் என்டர்டெயினர். படத்தில் ராஜ வம்சத்தில் கடைசியாக இருக்கிற ராஜா நான்தான்.

குதிரை வண்டியில் தினம் பவனி வருவது, யாருக்கும் பயப்படாமல் இருக்கிறது, கேட்டவங்களுக்கு எல்லாம் அள்ளியள்ளித் தருகிற இடத்தில் வர்றேன்.
நான் செய்கிற எல்லா வேலைக்கும் கூடவேயிருக்கிற சூரி அண்ணாதான் கணக்குப்பிள்ளை. ‘சீமராஜா’ எல்லோரையும் அள்ளி அணைப்பான்.

எதிரிகளைத் துள்ளி அடிப்பான். எப்பவும் மல்லுக்கு நிற்கிற கோஷ்டியை எப்படி எதிர்த்து நின்னு ஜெயிக்கிறோம்னு போகும் கதை. பிரமாண்டமா கலர்ஃபுல்லா வந்திருக்கு. எல்லாருக்கும் போய்ச் சேர வேண்டிய விஷயம் ஒண்ணை பொன்ராம் வைச்சிருக்கார்.சமந்தா - சிவா ஜோடி கெமிஸ்ட்ரி பர்சன்டேஜ் எகிறியிருக்கு...

ஏன்னா, நாங்க ஃப்ரெஷ் ஜோடி. பொன்ராம் கதை சொல்லும்போது சத்யராஜ் இப்படிப் பேசுவார், ராஜ்கிரண் இப்படிச் செய்வார்னுதான் சொல்லிட்டுப் போவார். ஹீரோயின்னு வரும்போது ‘ஹீரோயின்’னு மட்டும்தான் சொல்வார். இந்தத் தடவை ‘சமந்தா வரும்போது...’ என்றுதான் ஆரம்பித்தார்.

படத்தில் அவங்களுக்கு பக்குவமான ரோல். கதை ஓட்டத்தின் சில முக்கிய இடங்கள் அவங்க கைவசம். இரண்டு பேரும் சளைக்காமல், விட்டுத்தராமல் நடிச்சிருக்கோம். அவங்க இதில் டீச்சர் வேறே. சிலம்பம் தெரியும். கதையில் அவங்களுக்கு பெரிய ஸ்கோப் இருக்கு. இதெல்லாம் தெரிஞ்சு அவங்க  பிரியமாக ஓகே சொன்ன படம் இது.

முதல் நாள் ஷூட்டிங் வரும்போதே, டயலாக் ஷீட் இருக்கும். அதற்கும் மேலே இடம், பொருள், ஏவல் பார்த்து அப்பப்போ சரக்குகள் பல சேரும்னு சொல்லிட்டோம். எல்லாத்தையும் அருமையாக புரிஞ்சுக்குவாங்க.

ஷூட் முடிந்ததும், பக்கத்திலேயே கிரிக்கெட் விளையாடுவோம். எங்க ரூல்ஸை வெளியே சொன்னால் ‘இது கிரிக்கெட்டா பிரதர்’னு கேட்பீங்க. கிரவுண்டுக்கு வெளியே பந்து போயிட்டாலே அவுட்னு ஆரம்பிச்சு வினோதமா ரூல்ஸ் இருக்கு! கடைசியா அவங்க எங்க ரூல்ஸ் படிதான் கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தாங்க. துளிகூட ஈகோ இல்லாதவங்க.

உங்க பொண்ணு பாட்டுப் பாடி வைரலாக போய் நிக்குது...எப்போதும் அவங்களுக்கு பாடல்கள் பிடிக்கும். எனக்கு எதிர்காலத்தில் ஆராதனா பாடகியாக வரணும்னு பெரு விருப்பம் உண்டு. ஆனால், சின்னப் பொண்ணாக இருந்தாலும் அவங்க சுதந்திரத்திற்கு நான் அனுமதி கொடுப்பேன். பாடலைக் கொடுத்ததும் ஒரு நாள் பாடி திரிஞ்சுகிட்டு எப்போ ரிக்கார்டிங் போகலாம் என்ற அளவிற்கு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

அவங்க பாடினது பெரிய விஷயமில்லை. ஒரு சின்ன முயற்சியை இவ்வளவு தூரம் தூக்கி நிறுத்திய மக்கள் மனசு இருக்கே... நன்றி.

இப்ப  ஒரே நேரத்தில் இரண்டு படம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க...முன்னாடி ஒரு சமயம் ஒரு படத்துல அதிக கவனம் செலுத்தலாம்னு நினைச்சேன். இப்ப செய்ற இரண்டு படங்களுக்கு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். ராஜேஷ் படம் பக்கா காமெடி. ரெண்டு, மூணு தடவை அவர்கிட்டே படம் செய்யப் போய் தவறிடுச்சு.

அவரை பல தடவை சந்திச்சிருக்கேன். பொதுவா மனிதர்களைப் பார்க்கும்போது ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பாங்க. ஆனால், அவரைப் பார்த்தா ஒரே பக்குவத்தில, பார்க்கவே சந்தோஷமாக இருக்கும். காமெடியில் அவரை அடிச்சிக்க முடியாத
படிக்கு இதில் விஷயங்கள் நடந்துகிட்டு இருக்கு.

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் முற்றிலும் வேறுமாதிரி. தென்னிந்தியாவிலேயே இதற்கு உதாரணமாகச் சொல்லக்கூட வேறு படம் இல்லை. ரவிக்குமார் இதற்கு சேர்த்த உழைப்பைப் பார்த்திட்டு அசந்துபோய் ரஹ்மான் கால்ஷீட் கொடுத்தார். ஒரு காட்சியைப் படம் பிடிக்க சமீபத்தில் இரண்டு மணி நேரம் ஆச்சு. அவர் ரொம்ப கிளாரிட்டி. அந்தப் படம் குழந்தைகளையும் அதிகமாக போய்ச் சேரும்.

‘சீமராஜா’விலும் யுகபாரதி, இமான், பாலசுப்ரமணியெம் கூட்டணி...எங்க நாலு பேருக்குள்ளே ஒரு ஒட்டுதல் இருக்கும். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வெற்றியடையும்போது இவங்க யார்கிட்டே கேட்டாலும் தன்னைத் தவிர மத்தவங்களுக்குத்தான் புகழ் சேர்ப்பாங்க.

நடந்தது என்ன? பாலசுப்ரமணியெம் அழகா படம் பிடிக்காட்டி, யுகபாரதி அற்புதமான வரிகள் சேர்த்து கொடுக்காவிட்டால், இமான் பளிச்சின்னு ஒரு ட்யூன் அமைக்காவிட்டால், நான் பொருத்தமாக நடிக்காவிட்டால் வெற்றிக்கு சாத்தியம் ஏது? ‘சீமராஜா’ பெரிய படமா வந்திருக்கு. பொன்ராம் சிரிச்சுக்கிட்டே தட்டிக்கொடுத்து எங்களை அருமையா கொண்டு வந்து சேர்த்திருக்கார். படம் கொடுக்கிற நம்பிக்கையில்தான் இப்படி பேச முடிகிறது.
எட்டுவழிச்சாலை, மக்களின் பிரச்னையைப் பற்றி நினைப்பீர்களா?

மக்களின் வாழ்க்கையே இங்கே இப்ப போராட்டமாகத்தானே இருக்கு? சின்ன பெண் குழந்தைகள் கூட எங்கேயும் பத்திரமாக இருக்க முடியலை. பெண்களுக்கு மட்டும் எச்சரிக்கைகளை நாம சளைக்காமல் கொடுத்துக்கிட்டே இருக்கோம்.

ஆனால், முக்கியமா ஆண் பிள்ளைகளுக்கு பெண்களிடம் எப்படி பழகணும் என்கிற குறைந்தபட்ச நாகரிகத்தை அவசியம் சொல்லிக் கொடுக்கணும். சின்ன பெண் குழந்தைகளுக்கு நேரிடுகிற கஷ்டத்தை என்னால தாங்கிக்க முடியலை. இதைத்தடுக்க உருப்படியான விவாதங்கள் மூலம் கண்டிப்பான சட்டங்களை முன் வைக்கணும். இதற்கு ஆவன செய்வதே முக்கியமான காரியம்.