குடி, குடியைக் கெடுக்கிறது!நியூஸ் வியூஸ்

உலகிலேயே விலை மதிப்பில்லாததாக சொல்லப்படுவது தாய்ப்பாசம். மனிதப் பண்புகளிலேயே மிகவும் உயர்வானதாக தாய்மைதான் போற்றப்படுகிறது. ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ என்பதுதான் தமிழர் பண்பாடு.இந்திய மரபில் பெண் என்றாலே அவள் தாய்தான். மகளைக்கூட ‘தாயே’ என்று அழைப்பதுதான் நம் வழக்கம்.

தாய் என்றாலே கருணை. தாய் என்றாலே சக்தி. தாய்தான் முதல் தெய்வம்.அப்படிப்பட்ட தெய்வங்களே தங்கள் பிள்ளைகளை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லக்கூடிய சூழல் வருமென்று யாராவது சில ஆண்டுகளுக்கு முன்பாக நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே, தச்சன்விளை பள்ளம்தட்டு என்கிற கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரை அவரது தாய் கிருஷ்ணவேணி கொன்றிருக்கிறார்.காரணம்?

குடிவெறி.கூலித்தொழிலாளியான முத்துக்குமார் தினமும் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு, வேலைக்கு சரிவர செல்லாமல் குடும்பத்தினரிடம் பிரச்னை செய்து வந்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சண்டை போட்ட தாயையும், உறவினர்களையும் வன்முறையால் எதிர்கொண்டிருக்கிறார். மனம் வெறுத்துப் போன கிருஷ்ணவேணி, தான் பெற்ற மகனையே உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்க, படுகாயமடைந்த முத்துக்குமார் உயிரிழந்திருக்கிறார்.

பெற்ற மகனையே கொன்ற தாய் என்கிற ஊர்ப்பேச்சை சுமந்து மன உளைச்சலால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணவேணி.ஒரு தாயையே கொலைகாரியாக ஆக்கியிருக்கிறது. ஒரு குடும்பத்தையே சிதைத்திருக்கிறது குடி. உயர்ந்த வாழ்வியல் கலாசாரத்துக்காக பார் புகழ்ந்த தமிழ்நாடு, இன்று barகளால் இழிவான நிலையை எட்டியிருக்கிறது.

குடி என்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்த பிரச்னையாகவே அரை நூற்றாண்டுக் காலம் முன்பு வரை இருந்தது. பின்னர் உடல்நலம் தொடர்பான பிரச்னையாக பல தாய்மார்களின் தாலியறுத்தது. இன்றோ, ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்னையாக மாறியிருக்கிறது.இதற்கெல்லாம் யார் யார் காரணம் என்றெல்லாம் லாவணி பாடுவதற்கான காலம் கடந்து விட்டது.

‘குடி, குடியைக் கெடுக்கும்’ என்று பிரசாரம் செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அரசாங்கமே மது விற்கிறது. 2017 - 18ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.26,794 கோடியென்று அரசு அறிவித்திருக்கிறது. அதாவது ஓராண்டுக்கு இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மது குடிக்கிறார்கள் தமிழர்கள். இந்த சமூகம் எப்படி உருப்படும்? பெற்ற மகன்களை தாய்மாரே அடித்துக் கொல்லக்கூடிய கொடுமைதானே ஏற்படும்?
தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேருக்கு மதுப்பழக்கம் இருக்கிறது என்கிறார்கள்.

அதாவது எட்டில் ஒருவர் மதுப்பழக்கம் கொண்டவர் என்றால், தமிழ்க்குடி எத்தகைய குடிவெறிக் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.தீர்வாக பூரண மதுவிலக்கை பலரும் பரிந்துரைக்கிறார்கள்.

சமூகவியல் ஆய்வாளர்கள், இது சாத்திய மில்லை என்று சான்றுகளோடு வாதாடுகிறார்கள்.அதிலும் ஒரு கோடிப் பேரை, திடீரென நாளையிலிருந்து மது குடிக்கக்கூடாது என்று கட்டளையிட்டால் பல்லாயிரக்கணக்கானோர் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளாகக்கூடும். அதனால் இதுவரை நாம் எதிர்கொள்ளாத வேறு வேறு ஆபத்தான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

தமிழ்நாட்டுக்கு மதுவிலக்கு புதிதல்ல. 1931லேயே சேலத்தில் பூரண மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1948ல் சென்னை மாகாணம் முழுக்கவே மதுவிலக்கு அமலுக்கு கொண்டுவரப்பட் டது. சுதந்திரம் அடைந்து, நம் நாட்டின் அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, ‘பூரண மதுவிலக்கு’ என்பதை சட்ட மாகவே ஆக்கவேண்டும் என்று காந்திய சிந்தனையாளர்கள் வற்புறுத்தினார்கள். மதுவிலக்கை அரசின் கொள்கையாக (அரசியல் சட்டப்பிரிவு 47) டாக்டர் அம்பேத்கர் நிர்ணயித்திருக்கிறாரே தவிர, அதை அரசுகள் நிறைவேற்றக்கூடிய உரிமையாக வரையறுக்கவில்லை.

ஏனெனில், ‘பூரண மதுவிலக்கு’ குறித்த மாறுபட்ட கருத்துகள் அம்பேத்கருக்கு இருந்தது. அதற்குரிய நியாயமான வாதங்களையும் அவர் எடுத்து வைத்திருக்கிறார்.7-10-1951ல் அகில இந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே கூட, “மதுவிலக்கு, தடுக்க நினைத்த கேடுகளைவிட, அதனால் விளைந்த கேடுகளே அதிகம். சாராயம் காய்ச்சுதல் ஒரு குடிசைத் தொழிலாகி விட்டது.

 முன்பு ஆண்கள் மட்டுமே மது அருந்தினர். தற்போது பெண்களும் குழந்தைகளும்கூட மது அருந்துகின்றனர். ஏனெனில், அது அவர்கள் கண் முன்பு வீடுகளில் தயாரிக்கப்படுகிறது. அடித்தட்டு மக்களிடையே பண்பாட்டுச் சீரழிவையும், கூடுதலான குற்றச் செயல்களையும் இது ஏற்படுத்தி யுள்ளது” என்று அந்நாளைய நிலைமையை எடுத்துக் கூறியிருக்கிறார்.

பூரண மதுவிலக்கு என்பது கள்ளச்சாராயத்துக்கு வழிவகுக்கும். அதன் மேல்விளைவாக கூலிப்படை கொலைவெறியாட்டம், கொள்ளைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் என்பது சமூகவியலாளர்களின் எச்சரிக்கையாகவும் இருக்கிறது. மேலும், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் காவல்துறையினரை அது தொடர்பான பணிகளின் காரணமாக மற்ற வழக்கமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளிலிருந்து முற்றிலுமாக முடக்கிவிடும் என்பதெல்லாம் நடைமுறைச் சிக்கல்கள்.

எனினும், இன்றைய தமிழகத்தில் தாயே மகனைக் கொல்லக்கூடிய சூழலுக்கு தள்ளியிருக்கும் சமயத்தில் டாக்டர் அம்பேத்கரே உயிரோடு இருந்திருந்தாலும்கூட படிப்படியான மதுவிலக்கையாவது கோரி போராட்டம் நடத்தியிருப்பார் என்பதே ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மை.

தமிழக அரசின் வரி வருவாயில் ஏறத்தாழ 30 சதவிகிதம் மது விற்பனையில் கிடைக்கக்கூடிய அளவுக்கு மது இல்லாவிட்டால் அரசே தள்ளாடிவிடும் என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

படிப்படியான மதுவிலக்கு, மதுவுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம் என்றெல்லாம் தேன் தடவிய வாக்குறுதிகள் மூலமாகத் தான் இப்போதைய ஆட்சியாளர்கள் கடந்த தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.தலைக்கு மேல் மதுவெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. தடுக்க வேண்டியது அரசின் கடமை. ஒரே நாளில் எல்லாவற்றையும் சீர் செய்ய வேண்டாம். மது விற்பனையை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தக்கூடிய முயற்சிகளை படிப்படியாகவாவது செய்யலாமே?செய்வார்களா?

யுவகிருஷ்ணா