புதுசு கண்ணா புதுசு!டிஜிட்டல் நிறுவனங்கள் ஆக்ரோஷமாக சந்தையில் இறங்கி, நாள்தோறும் புதுப்புது மாடல்களில் மலிவான விலைகளில் ஸ்மார்ட்போன்களை இறக்கி பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ‘ஆப்பிள்’ நிறுவனமோ நின்று, நிதானமாக களத்தில் இறங்கி ஒவ்வொரு மேட்ச்சிலும் தவறாமல் செஞ்சுரி அடித்துக் கொண்டிருக்கிறது! இதுவரை 120 கோடிக்கும் மேல் ஐபோன்கள் விற்பனையாகியிருந்தாலும் அதற்கான மவுசு இன்னும் குறையவில்லை. இதற்கு கடந்த வாரம் அறிமுகமான ‘Xs’, ‘Xs Max’ ‘XR’ என்ற புதிய மாடல்களே சாட்சி!

Xs

கண்களைப் பாதிக்காத 5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா கஸ்டம் OLED டிஸ்பிளே, 2436 X 1125 பிக்ஸல் ரெசல்யூசன், மில்லியன் கணக்கான வண்ணங்களைத் துல்லியமாகப் பிரித்துக்காட்டும் ஹெச்டிஆர் டெக்னாலஜி, புகைப்படம், வீடியோவிற்கு ஏற்ப ஆட்டோமேட்டிக்காக திரையை மாற்றிக்கொள்ளும் வைடு கலர் மேனேஜ்மென்ட், உள்ளதை உள்ளபடியே காட்டும் ட்ரூ டோன், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல்-கிரேடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் வடிவமைக்கப்பட்ட ஃப்ரேம்கள், தண்ணீர் மட்டுமல்ல, காபி, டீ, சோடா, தூசு என்று எதுவுமே உள்ளே புகாத பாதுகாப்பு,

இரண்டு சிம் வசதி, 64/256/512 ஜிபி என மெகா ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம், மின்னல் வேகத்தில் ஆப்களை இயக்கக்கூடிய A12 பயோனிக் சிப்செட், ஸ்லோ மோஷன் சப்போர்ட்டுடன் 4K வீடியோ ரெக்கார்டிங், ஆட்டோ இமேஜ் வசதியுடன் 12 எம்பியில் இரண்டு பின்புற கேமராக்கள், 1080p ஹெச்.டி வீடியோ ரெக்கார்டிங்குடன் 7 எம்பி செல்ஃபி கேமரா, இவற்றுடன் உங்களின் முகமே போனுக்குள் நுழைவதற்கான பாஸ்வேர்டு... என கண்களைப் பறிக்கிறது இந்த புது ஐபோன். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 20 மணி நேரம் தொடர்ந்து பேசலாம், 60 மணி நேரம் பாடல்களைக் கேட்கலாம்! விலை ரூ.99,900 - ரூ.1,34,900.

Xs Max

இதுவரை வெளியான ஐபோன்களில் பெரியதும், விலை உயர்ந்ததும் இதுவே. ‘Xs’ மாடலில் உள்ள அதே டெக்னாலஜி, ஸ்டோரேஜ், கேமரா வசதியுடன் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா கஸ்டம் OLED டிஸ்பிளே, 1242 X 2688 பிக்ஸல் ரெசல்யூசன், ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 13 மணி நேரம் இன்டர்நெட்டில் புகுந்து விளையாடலாம், 15 மணி நேரம் வீடியோக்களைப் பார்க்கலாம், ஆப்ஸை வாய்ஸ் மெசேஜ் கொடுத்து திறக்கும் வசதி, சில்வர், ஸ்பேஸ் க்ரே, கோல்டு என மூன்று வண்ணங்களில் அள்ளுகிற இந்த ஐபோனின் விலை ரூ.1,09,900 - ரூ.1,44,900.

XR

புதிதாக களமிறக்கப்பட்டதில் மலிவானதும், அதிகளவில் ப்ரீ ஆர்டர் செய்யப்பட்டதும் இதுவே. கண்வலி ஏற்படுத்தாத 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா LCD மல்டி-டச் டிஸ்பிளே, ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர் மற்றும் 6 எலிமன்ட்ஸ் லென்ஸ் பொருத்தப்பட்ட 12 எம்பி பின்புற கேமரா, சினிமாட்டிக் வீடியோ ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய 7 எம்பி செல்ஃபி கேமரா, ஃபேஸ் டைம் ஆடியோ, வாய்ஸை உபயோகித்து மெசேஜ் அனுப்பும் வசதி, தொடர்ந்து 65 மணி நேரம் பாடல்களை கேட்கும் அளவுக்கு பேட்டரி திறன், 64/128/256 ஜிபி ஸ்டோரேஜ்! அக்டோபர் இறுதியில் கடையில் கிடைக்கும் இதன் விலை ரூ.76,900 - ரூ.91,900.                   


- த.சக்திவேல்