ஸ்நேக் வாக்!



செங்கல்லைப் போன்ற செல்போனை இப்போது பயன்படுத்துவது போன்றதுதான் ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்ற சொல்வழக்கும்!  அந்தளவுக்கு தேய் வழக்காக இது மாறினாலும் இன்னமும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.

அப்படியிருக்க இருளர் சமூக மக்கள் மட்டும் எப்படி தைரியமாக பாம்புகளைப் பிடிக்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கான பதிலை அளிக்கும் விதமாகத்தான் சென்னை முதலைப் பண்ணையில் ஒரு ட்ரிப்பை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  அங்கு சென்று குறிப்பிட்ட ஒரு தொகையைக் கட்டினால் போதும், நம்மை ஜம்மென்று அழைத்துச் செல்கிறார்கள்.இதைத்தான் ஸ்நேக் வாக்  என்கிறார்கள்! தண்ணீர்ப் பாம்பு, சாரைப் பாம்பு முதல் ஆபத்தான நாகம், கண்ணாடிவிரியன், கட்டுவிரியன் என நேரில் பிடித்துக் காட்டு  கிறார்கள்.அப்படித்தான் லோக்கல் கைட் ஆகாஷ், பாம்பு பிடிப்பதில் தேர்ந்த காளி, அலமேலு, செல்லப்பன் சகிதம் ஒரு ட்ரிப் அடித்தோம்.  ‘‘நான் சொல்ற இடத்துல நில்லுங்க. நான் சொல்றதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க... இல்லைன்னா ஆபத்து...’’ என எடுத்ததுமே கிலியை  ஏற்படுத்திய காளி, முப்பது வருடங்களாக பாம்பு பிடித்து வருகிறார்.

‘‘இதுதான் எங்க பூர்வீகத் தொழில். அப்பா, நான்... எல்லாருமே இதைத்தான் செய்யறோம். மியூசியம், ஆராய்ச்சி, கவர்மெண்ட் பண்ணைனு  எல்லாத்துக்காகவும் பாம்பு பிடிப்போம். வீடுகள்ல அல்லது தெருக்கள்ல பாம்பு இருந்தாலும் எங்களைக் கூப்பிடுவாங்க. அதை துன்புறுத்தாம  பிடிப்போம். விஷமுள்ள பாம்புன்னா அதை அரசு சார்ந்த மியூசியத்துகிட்ட பாதுகாப்பா ஒப்படைச்சுடுவோம். சாதாரண தண்ணி இல்ல சாரப்  பாம்புனா பிடிச்சு காட்டுக்குள்ள விட்டுடுவோம். பாம்பு இருக்கற இடம்தான் எங்களுக்கு வீடு. ஒரு பகுதில அதிகமா பாம்புகள் இருக்குன்னா  நிச்சயம் அங்க எங்க ஆட்களும் இருப்பாங்க. இதோ இப்ப பொண்ணுங்களும் பாம்பு பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க...’’ சொல்லிக்கொண்டே  பதுங்கிய காளி, ‘‘எல்லாரும் இங்க வாங்க...’’ என்றழைத்து படக்கென ஒரு குட்டி ‘கீல்பேக்’கை (கண்டங்கண்டை நீர்க்கோலி) தன்னுடன்  வந்த பாம்பு பிடிக்கும் பெண்ணான அலமேலுவிடம் கொடுத்தார்.

இதற்குள் இன்னொரு பாம்பு புதரிலிருந்து வெளிப்பட்டு புஸ்ஸ்ஸ்ஸ் என்றது! ‘‘இது ஆபத்தான பாம்பு. விளையாட முயற்சி செய்யாதீங்க...’’  என்றபடி அதை லாவகமாக நமக்குப் பிடித்துக் காண்பித்தவர், பிறகு அதை பக்குவமாக மீண்டும் செடிகளுக்குள் விட்டார். ‘‘இப்பத்தான்  எங்க மக்கள் கொஞ்சம் கொஞ்சமா மேல வர ஆரம்பிச்சிருக்காங்க. நான் தினமும் முதலைப் பண்ணைக்கு வேலைக்குப் போயிடுவேன்.  அங்க இருக்கிற பாம்புகளை கவனிக்கறதுதான் என் வேலை. எங்களுக்கு லைசன்ஸ் உண்டு. யார் வேணும்னாலும் பாம்பு பிடிக்க முடியாது.  ஃபாரஸ்ட் ஆபீசருங்க வந்து நாங்க எப்படி பாம்பை பிடிக்கிறோம்... பாம்பை எப்படி கையாள்கிறோம்னு பார்த்துட்டுதான் லைசன்ஸ்  கொடுப்பாங்க. எங்க மேல எதுனா குற்றம் வந்துடுச்சுன்னா அப்புறம் ஆயுசுக்கும் நாங்க பாம்பு பிடிக்க முடியாது. லைசன்ஸை  பிடுங்கிடுவாங்க...’’என்ற காளி, பாம்பு பிடிக்கும் கம்பியை முன்னால் நீட்டியபடியே ‘உஷ்...’ என சைகை செய்துவிட்டு மவுனமாக  முன்னேறினார். சில நிமிடங்களில் ஒரு கண்ணாடி விரியனைப் பிடித்துக் காண்பித்தார்.

‘‘என் செல்லக் குட்டி எப்படி இருக்கானு பாருங்க! ஜாக்கிரதையா தள்ளி நில்லுங்க. ஓரடி எம்பி ஒரு போடு போட்டாள்னா மூணு மணி  நேரத்துக்குள்ள சிகிச்சை அளிச்சுக் காப்பாத்தணும்! இல்லைனா கொத்து வாங்கின ஆள் காலி! ஒன்றரை அடிக்கு தாவி அடிப்பா! இவ  பொண்ணு. கண்ணாடி மாதிரி எப்படி மின்னுறா பாருங்க!’’ என்ற காளியிடம் பாம்புக் கடிக்கு என்ன வைத்தியம்..? கொத்தின இடத்துக்கு  மேலும் கீழும் கட்டுப் போட்டு திரைப்படங்களில் உறிஞ்சுகிறார்களே... அப்படிச் செய்யலாமா... என்று கேட்டோம்.‘‘நல்லா கேட்டீங்க  போங்க! அப்படி செஞ்சா போய்ச் சேர்ந்துடுவீங்க! விஷம் உங்க உடம்புல ஏறிடும். முதல்ல கடிச்ச இடத்தை துருப்பிடிக்காத கத்தி வைச்சு  கீறணும். அப்புறம்...? வேற வழியே இல்ல... ஆஸ்பத்திரிக்குதான் தூக்கிட்டுப் போகணும். எல்லா கவர்மெண்ட் ஆஸ்பத்திரிலயும் பாம்புக்  கடிக்கு மருந்து இருக்கு!

எங்களுக்கு சில மூலிகை வைத்தியம் தெரியும். ஆனா, அதெல்லாம் உங்க உடம்புக்கு ஒத்துக்காது...’’ என்ற காளி, விஷமுள்ள பாம்புகள்  எவை என்பதை நாமே கண்டுபிடிக்கலாம் என்கிறார். ‘‘பாம்போட அடிப்பக்கத்துல கட்டம் கட்டமா சேர்ந்தா அது விஷமில்லாத பாம்பு. வரி  வரியா... வளையம் வளையமா இருந்தா... அது விஷமுள்ள பாம்பு. ஆனா, விஷமிருந்தாலும் இல்லைன்னாலும் பாம்புகள் கிட்ட மட்டும்  ஜாக்கிரதையா இருக்கணும். அதை நாம பயமுறுத்தாம இருந்தாலே போதும். அதுங்களே சமத்தா போயிடும்...’’ சொல்லிக்  கொண்டேடக்கென ஒரு கொம்பேறிமூக்கன் குட்டியைக் கைகளில் கொண்டு வந்தார். ஆங்காங்கே நீல நீறம். நீல நிற நாக்கு. கைகளில்  கொஞ்ச நேரம் கூட அமைதியாக இல்லாமல் துறுதுறுவென இருந்தது. ‘‘இது மரக்கொம்புகள்லதான் இருக்கும். அதனாலதான் இதுக்குப்  பேரு கொம்பேறி மூக்கன்...’’ என்ற காளி, இப்போது தன் சமூக மக்கள் படிப்பு, வேலை என முன்னேறுவதை நினைத்துப்  பெருமைப்படுகிறார்.

-ஷாலினி நியூட்டன்
படங்கள் : வி.எஸ்.ஹரிஹரன்