தடைப்பட்ட திருவிழாவை நடத்தறது தான் கதை!



சண்டக்கோழி 2 முதல் 96 பட பிரச்னை வரை மனம் திறக்கிறார் விஷால்

‘இரும்புத்திரை’ மகா வெற்றிக்குப் பிறகு ‘சண்டக்கோழி 2’ எதிர்பார்ப்பு ஜுரம் கோலிவுட்டை கொதிக்க வைக்க, படு பிஸியாக இருந்தார்  விஷால். இன்னும் பக்குவமாக, இளமையாக, சிரிக்க மறக்காத உதடுகளோடு... இந்தப் பேட்டியில் பார்த்தது படு இயல்பான விஷால்.‘‘நிஜமா சந்தோஷமா இருக்கோம். 13 வருஷங்கள் கழிச்சு நானும் லிங்குசாமியும் சேரும்போது அதற்கான அருமை தெரியணும்.  ‘சண்டக்கோழி’யை விட சிறந்த கதையாகவும் இருக்கணும். சில சமயம் கதை பொருந்திவராது. சூழ்நிலை சரியா இருக்காது. இப்பதான்  எல்லாம் கூடிவந்து என் 25வது படமாக வர காத்திருக்கு. என் படங்களில் ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’க்கு மனதில் கூடுதல்  இடம் இருக்கு. ‘சண்டக்கோழி 2’ படத்தில் நிறைய நிகழ்கிறது. நாங்க எல்லோரும் உண்மையாக உழைச்சிருக்கிற இடங்கள் அவ்வளவு  அழகா வந்திருக்கு...’’ புன்னகைக்கிறார் விஷால்.

‘சண்டக்கோழி’ ஒரு பெர்ஃபெக்ட் பிக்சர்னு பெயர் வாங்கிய படம்...


இவ்வளவு நாள் ஆச்சு! ஆனாலும் ஷூட்டிங் வந்து ராஜ்கிரண் சாரைப் பார்த்ததும் அப்பான்னு தோணிடும். தாயா புள்ளையாக பழகிட்டுத்  திரிவோம். அப்படியொரு மாயத்தை லிங்கு உருவாக்கி வைச்சிருந்தார். எங்க எல்லோருக்கும் தன்னெழுச்சியாக ஓர் அன்பு தோணும். எங்க  ளுக்கு பார்ட்-3, பார்ட்-4னு போகக்கூட ஆசையாக இருக்கு. என்னை விடுங்க, லிங்குசாமிக்கே இது அருமையான படம். ஒரு திருவிழா  நடக்கணும். பல காரணங்களால் திருவிழா நடப்பதற்கான சூழ்நிலைகள் அமையலை. ராஜ்கிரண் அதற்கான காரியங்களை முன்னெடுக்கிறார்.  அந்த ஏழு நாள் திருவிழாக் காலத்தில் நடக்கிறதுதான் கதை. உறவுகளை இன்னும் விட்டுக்கொடுக்காத நம் சமூகத்தோட கதைதான். அப்பா அம்மாவுக்கே எஸ்.எம்.எஸ் வாழ்த்துதான் சொல்றோம். இதில் இருக்கிற அடர்த்தியான அன்பை நீங்க மறக்க முடியாது. டிவியில்  ‘சண்டக்கோழி’யை 150 தடவை போட்டிருப்பாங்க. 13 வருஷங்கள் கழிச்சு இந்தக் குடும்பம் எப்படித்தான் இருக்கும்னு பார்க்க விரும்பும்  மக்களுக்கும் இது நல்ல பதிவா இருக்கும்.

உங்களுக்கு கீர்த்தி சுரேஷ் நல்லா பொருந்தியிருந்தாங்க...


கீர்த்தியோட எனக்கு இது முதல் படம். நல்ல ஃப்ரெண்ட் ஆயிட்டோம். ஏதாவது ரிகர்சல்னு கையைப் பிடிச்சுக்கிட்டு ஆடினால்கூட தப்பாக  எடுத்துக்காத நல்ல மனசு. சில டான்ஸ் மூவ்மெண்டில் அவங்க கஷ்டப்பட்டாலும், என் ஸ்டெப் சரியாக வராமல் போனாலும், ரெண்டு  பேரும் அதைப் பத்தி கவலையே பட மாட்டோம். ஒருத்தருக்கொருத்தர் நல்லா உதவிக்குவோம். ஒரு படத்தில் லவ் ட்ராக் சரியாக  அமைஞ்சிட்டால் பாதி வேலை குறைஞ்சிடும். கீர்த்தி இதில் ஹீரோவோட வேலையெல்லாம் பார்த்திருக்காங்க. நீளமான ஒரு BGM-இல்  ஒரு டான்ஸ் ஆடியிருக்காங்க. அவங்களோட வால் சேட்டையெல்லாம் படத்தில் அருமையா வந்திருக்கு. க்ளைமேக்ஸில் வரலட்சுமி ஒரு  15 நிமிஷங்கள் கலக்கி எடுத்திருக்காங்க. அதை என்னால் இப்ப சொல்ல முடியாது. படம் முடிச்சு வரும்போது அவங்க நடிச்சதின் ஞாபகம்  நம் மனசில நிக்கும்.

தங்கச்சி உங்க உயிராச்சே...


இங்கேதானே இருக்காங்க. நான் நினைச்சாலே என் கண் முன்னாடி வந்து  நிக்கும். என்னடா, இன்னிக்கு தங்கச்சி இன்னும் பேசக்  காணாமேன்னு நினைச்சாலே... எப்படித்தான்னு தெரியலை, அலைபேசிக்கு அழைப்பு வந்திடும். இன்னிக்கும் எங்க தங்கச்சி அறையை  திறந்து பார்த்திட்டுதான் நானும், என் நாய்க்குட்டியும் தூங்கப் போவோம். நல்ல இடம். நல்ல சம்பந்தம். தங்கச்சியைத் தாங்கி சந்தோஷமா  வச்சுக்கிறாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம். இப்பவும் அவங்க வீட்டுப்பக்கம் ஷூட்டிங் இருந்திட்டால் அங்கே போய் சாப்பிட்டு  தூங்கிடுவேன். ரொம்பவும் நினைப்பு வந்திடுச்சின்னா தங்கச்சி ரூமுக்கே போய் தூங்கிடுவேன். இப்படி சின்னப் பிள்ளையா இருக்கியே  தம்பின்னு அம்மா சொல்வாங்க. அது அப்படித்தான்.

அரசியலில் ஏதாவது நடந்தால் கோபப்படுறீங்களே! பிரச்னைதானே!


என்ன பண்ணப் போறாங்க? நான் ஒரு வாக்காளர். என் தொகுதிக்கு வந்து பணிவாக ஓட்டு கேட்கிற மாதிரி, நான் கேள்வி கேட்கும்போது  பணிவாக பதில் சொல்லணும். எங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவங்களுக்கு இருக்கு. நாமளே பயந்தால் இங்கே இன்னும்  ஊழல் நடக்கும். அராஜகம் நிகழும். தட்டிக் கேட்கிறதில் தப்பே இல்லை. அப்படிக் கேட்கும்போது பிறகு நடக்கிற விளைவுகளைப் பத்தி  எனக்கு கவலையே இல்லை. அப்படிக் கேட்கலைன்னா எனக்குத் தூக்கம் வராது. சினிமாவிலே கூட ஒரு கொடுமை நடந்தால், ஒண்ணும்  செய்யாமல் ஹீரோ மரம் மாதிரி நிக்கிறானேன்னு சொல்றாங்க. அப்படிச் சொல்லலைன்னா எனக்கு எரிச்சல் வந்திடும்.

நிஜ வாழ்க்கையில் இன்னும் நிஜமா இருக்க ஆசைப்படுவேன். இருக்கிற எரிச்சலை சொல்லிட்டால் மனசுக்கு நல்லது. உடம்புக்கே நல்லது.  கடைசி காலத்தில் நாலு கேள்வி நறுக்குன்னு கேட்காமல் விட்டுட்டோமேன்னு மனசு கிடந்து தவிக்கும். எனக்கு நினைச்சதை சரின்னா  சொல்லிடணும்.போன தடவை ஸ்டிரைக் நடக்கும்போது எல்லோரும் பல மணி நேரம் உட்கார்ந்து பேசி, அதை ஒரு முடிவுக்கு கொண்டு  வந்தோம். ஆறு மாதங்களாச்சு. அது சம்பந்தமாக ஓர் அரசாணை இன்னும் வரலை. இந்த சினிமாவால அவ்வளவு லாபம் கிடைக்குது.  ஆனால், எங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுது. ஓர் அரசாணை வெளியிட இந்த அரசுக்கு நேரம் இல்லை. இதன் மூலம் மிகப்பெரிய  துரோகம் செய்துகிட்டு இருக்கு இந்த அரசு. நாலு பேருக்கு தெரிஞ்ச எங்களுக்கே இந்தக் கதின்னா சாதாரண மக்கள், விவசாயிகள் பாடு  என்ன ஆகும்! பாவம் மக்கள்.

‘96’ ரிலீஸ் பிரச்னையில் உங்க பெயர் வந்தது...

நான் யாருக்கும் துரோகம் செய்ததில்லை. அதற்கான மன அமைப்பே என்னிடம் கிடையாது. நந்தகோபால் என்கிற தயாரிப்பாளர் எனக்கு  கொடுக்க வேண்டிய பணம். அது என் சம்பளப் பணமும் இல்லை. அவர் வைத்த கடனை ‘துப்பறிவாளன்’ ரிலீஸின்போது நான் கட்ட  வேண்டியதாயிற்று. அவரோட கடனுக்கு நான் மாதாமாதம் வட்டி கட்டிக்கிட்டு இருக்கேன். அவருடைய படம் ரிலீஸ் ஆகும்போது  கொடுக்கிறேன்னு வாக்குறுதி கொடுத்திட்டு ரிலீஸின் போது கையைத் தூக்கிட்டு விஜய்சேதுபதி தலையில் கட்டிட்டார். விஜய்சேதுபதி என்  கடனை அடைக்க 1½ கோடி கொடுக்கும்போது, எனக்கு ஒரு நாள் தூக்கமே வரலை. எனக்கு சேதுபதி ஃப்ரெண்ட்ஷிப் முக்கியம். அதை இந்த  கோடியில் வேல்யூ பண்ண முடியாது. அதற்காக இந்த நட்பை இழக்க முடியாது. நான் வேணாம்னு சொல்லி, பணத்தைத் திருப்பிக்  கொடுத்திட்டேன். இனி நந்தகோபால்கிட்டேதான் வாங்கிக்கணும். l

-நா.கதிர்வேலன்