ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்



கே.என்.சிவராமன் 22

ஓவியம்: ஸ்யாம்


கரிகாலனின் பிடிவாதத்தை மற்றவர்களை விட நன்கு அறிந்திருந்த காபாலிகன் அதற்கு மேல் ஏதும் பேசவில்லை. தன்னை பொதுச்  சத்திரத்தில் விட்டுப் போக வேண்டாமென்றும், உடன் அழைத்துச் செல்லும்படியும் சொல்ல சிவகாமி நினைத்தாள். ஏனோ நாணம் தடுத்தது.  சொற்களை மென்று விழுங்கிவிட்டாள். மவுனம் சாதித்தாள்.கரிகாலன் யாருடனும் பேச்சுக் கொடுக்காமல் தன்னிஷ்டப்படி வண்டியைச்  செலுத்தினான்.இரும்புக் கொல்லர் பட்டறைகள் இருக்கும் குறுகிய வீதி ஒன்றில் வண்டியைத் திருப்பி இரண்டொரு பட்டறைகளைத் தாண்டி  ஆயுதக் கொட்டடிக்கு அருகில் இருக்கும் ஒரு பட்டறை முன்பாக வண்டியை நிறுத்தினான். ‘‘சாளுக்கியர்களை ஏமாற்ற பொதி வண்டியில்  நீங்கள் சவுக்கை கொண்டு வந்தது நல்லதாகப் போயிற்று!’’ காபாலிகனிடம் முணுமுணுத்துவிட்டு பட்டறைக்கு வெளியில்  நின்றிருந்தவர்களை அழைத்தான்.

‘‘போர்க் கோடாரிகளுக்குச் சவுக்குப் பிடிகள் அரசர் உத்தரவுப்படி வந்திருக்கின்றன. இறக்கிப் போடுங்கள். ஆயுதக் கொட்டடிக்கு அப்பாலுள்ள  சத்திரத்துக்கு இந்தப் பெண்ணை அழைத்துச் செல்லுங்கள். மன்னர் உத்தரவு!’’ வணிகனுக்குரிய தோரணையுடன் மடமடவென்று  கட்டளையிட்ட கரிகாலன், திரும்பி காபாலிகனை நோக்கினான்.‘‘அதுதான் நீங்கள் கேட்டுக்கொண்டபடி வண்டியில் ஏற்றி அழைத்து  வந்துவிட்டேனே! எதற்காக இங்கே நிற்கிறீர்கள்? நகரத்துக்குள் சென்று உங்கள் ஆட்களுடன் இணைந்து கொள்ளுங்கள்! சாளுக்கிய மன்னர்  மத அடையாளங்களுக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் பல்லவ மன்னர் போலவே விதிக்கவில்லை. எனவே யாரும் உங்களைத் தொந்தரவு  செய்ய மாட்டார்கள்!’’சவுக்குக் கட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கேட்கும் விதமாக சற்றே இரைந்த கரிகாலன், ஜாடையால்  காபாலி கனைச் செல்லும்படி கட்டளையிட்டான். தன்னை எதற்காக கரிகாலன் அனுப்புகிறான்... தானில்லாமல் எப்படி புலவர் தண்டியைச்  சந்திக்கப் போகிறான்..? காபாலிகனுக்கு ஒன்றும் புரியவில்லை. திருதிருவென விழித்தான்.

‘‘எதற்கு விழிக்கிறாய்..? ஓ... பொற்காசுகள் வேண்டுமா..?’’ என்றபடி அவனை நெருங்கி தன் இடுப்பு முடிச்சிலிருந்து சில காசுகளை அள்ளி  கரிகாலன் கொடுத்தான்.அதில் இரண்டு காசுகள் தவறி கீழே விழுந்தன. ‘‘ஒழுங்காக பிடித்துக் கொள்ள மாட்டீரா..?’’ கரிகாலன் எரிந்து  விழுந்தான்.கணத்துக்கும் குறைவான நேரம் தன் பார்வையால் அவனை அளந்த காபாலிகன் குனிந்து, விழுந்திருந்த பொற்காசுகளை  எடுத்தான். கரிகாலனிடம் கொடுத்தான்.அதைப் பெற்றுக் கொள்ளும் பாவனையில் காபாலிகனின் செவியில் கரிகாலன் கிசுகிசுத்தான்.  ‘‘காபாலிகர்கள் வசிக்கும் இடத்துக்குச் செல்லுங்கள். பிறகு உங்களை அங்கே சந்திக்கிறேன்!’’தலையசைத்த காபாலிகன், நிமிர்ந்தான்.  ‘‘உன் பொற்காசுகள் யாருக்கு வேண்டும்!’’ என்றபடி கரிகாலன் கொடுத்த காசுகளை அவன் முகத்திலேயே விட்டெறிந்தான். ‘‘என்ன  சொன்னாய்... பல்லவ மன்னன் போலவே சாளுக்கிய மன்னனும் மத அடையாளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லையா..? ஆம்,  விதிக்கவில்லை. பல்லவ மன்னன் போலவே பார்ப்பனர்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக சாளுக்கியனும் இருக்கிறான்! பார்ப்பனர்கள்  கையில் அதிகாரத்தைக் கொடுக்கிறான். இதற்கான பலனை இந்த நாடு ஒருநாள் அனுபவிக்கத்தான் போகிறது!’’ கர்ஜித்தபடி தன் போக்கில்  நடந்து  சென்றான்.

வண்டியிலிருந்து சவுக்கை இறக்கிக் கொண்டிருந்தவர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். ‘‘என்ன திமிர்...’’, ‘‘பிடித்து நாலு அடி  அடிக்க வேண்டும்...’’, ‘‘வேண்டாம், மன்னர் கோபித்துக் கொள்வார்...’’, ‘‘இந்த காபாலிகர்களே இப்படித்தான்...’’ தங்களுக்குள்  பேசிக்கொண்டார்கள்.இதைக் கேட்டு கரிகாலன் மனதுக்குள் புன்னகைத்தான். யாருக்கும் எந்த சந்தேகமும் எழாதபடி காபாலிகன் திறமையாக  நடிக்கிறான்! நல்ல ஒற்றன்!‘‘பெண்ணே இங்கு வா...’’ சிவகாமியை அழைத்த கரிகாலன், அவளுக்கு மட்டும் புரியும்படி; உணரும்படி தன்  பார்வையால் அவளை அணைத்தான்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக சிவகாமியின் கன்னங்கள் சிவந்தன.‘‘இந்த இரும்புக்  கொல்லர்களைத் துணை கொண்டு சென்று சத்திரத்தில் தங்கு...’’ சத்தமாகச் சொன்ன கரிகாலன், ‘‘விரைவில் உன்னை அங்கு  சந்திக்கிறேன்...’’ என முணுமுணுத்துவிட்டு, ‘‘சவுக்கை இறக்கிவிட்டீர்களா? நல்லது...’’ என்றபடி வண்டியில் ஏறி அமர்ந்து மீண்டும்  காளைகளை முடுக்கினான்.

மீண்டும் வண்டி வந்தது அந்தக் குறுகிய வீதியிலிருந்து தெற்குப் பெருவீதிக்கு! வண்டியைச் செலுத்திய கரிகாலன், மேலை ராஜவீதியில்  இருந்த சிவகாஞ்சியை நோக்கி காளைகளைப் பறக்கவிட்டான்.ஆனால், மேலை ராஜவீதியை அடைவதற்கு முன்பாக இருந்த பக்கப் பாதை  ஒன்றில் வண்டியை நிறுத்தி இறங்கினான்.சுற்றிலும் பார்த்தான். வீரர்கள் நடமாட்டம் தொலைவில் தெரிந்தது. திருப்தியுடன் காளைகளைத்  தடவிக் கொடுத்து அவற்றின் நெற்றியில் முத்தமிட்டு செவியில் எதையோ ஓதினான்.மணிகள் ஓசையெழுப்ப கழுத்தை அசைத்த அந்தக்  காளைகள், அதன் பிறகு சற்றும் தாமதிக்கவில்லை. வண்டியில் யாரும் இல்லாமலேயே பறந்தன!புன்னகையுடன் அதைப் பார்த்த  கரிகாலன், பல்லவ நாட்டுக்கு விசுவாசமான வணிகர்களின் வீடு முன்னால் இந்த வண்டி நின்றுவிடும். காளைகளிடம் அப்படி நின்று  ஒதுங்கும்படித்தான் சொல்லியிருக்கிறோம். எங்கே சாளுக்கியர்களுக்கு சந்தேகம் வந்து வண்டியை சோதனையிடுவார்களோ என இனி  யோசிக்க வேண்டியதில்லை!

திருப்தியுடன், தன் முகம் தெரியாதிருப்பதற்காகத் தலை முண்டாசை அரை முகம் வரை மறையும்படியாக இறக்கிவிட்டு ராஜ வீதிக்குள்  நுழைந்தான். இரண்டாம் ஜாமம் முற்றிக் கொண்டிருந்ததால் மக்கள் நடமாட்டம் ராஜ வீதியில் அதிகமில்லை. வீரர்கள் நடமாட்டம் மட்டுமே,  அதுவும் நெருக்கமாகவோ கும்பலாகவோ இல்லாமல், ஆங்காங்கே தென்பட்டனர்.என்றாலும் வீதியின் நடுவில் கரிகாலன் நடக்கவில்லை.  எச்சரிக்கையுடன் பெரு மாளிகைகளை ஒட்டி விழுந்திருந்த நிழல்களில் ஒதுங்கி ஒதுங்கி யார் கண்ணிலும் அதிகமாகப் படாமல் ஓரளவு  மறைந்து மறைந்து நடந்தான். அடர் வனத்தின் வெளியே தன்னிடம் காபாலிகன் கொடுத்த ஓலையில் இருந்த வாசகங்கள் திரும்பத்  திரும்ப அவன் மனதில் நிழலாடின. பலவித வினாக்களைத் தொடுத்தன. பல்லவர்களின் எதிர்காலம் குறித்த அச்சமும் அவன் உள்ளத்தில்  உதித்தன.விடைகள் ஏதும் கிடைக்காமல், பதில் சொல்லக் கூடியவரான புலவர் தண்டியை எப்படிச் சந்திப்பது என்று யோசித்தபடியே நடந்த  கரிகாலனை சட்டென்று ஒரு கரம் இழுத்தது.

உள்ளுக்குள் சுதாரித்தபடி என்ன ஏது என்று கவனிக்கத் தொடங்கினான். கரிய வானிலே கறுப்புக் கம்பளியில் வாரி இறைக்கப்பட்ட  பல்லாயிரம் வைரங்களைப் போல ஜாஜ்வல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த நட்சத்திரக் கூட்டங்கள் நகைத்து அறிவுறுத்திய  உண்மையால் ஒரு கணம் அறிவைக் கோபத்துக்கு அடகு வைத்த கரிகாலன், கத்தியின் முனையொன்று தன் கழுத்தில் லேசாகத் தடவத்  தொடங்கியதும் கோபத்தைச் சரேலென்று உதறிவிட்டு கண நேரத்தில் உணர்ச்சிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.கத்தி  கழுத்தில் முதலில் லேசாகத் தடவியபோதோ, ‘சிறிதும் அசையாதே...’ என்று எச்சரிக்கைக்கு அறிகுறியாக அதன் நுனி கழுத்தின்  இடதுபுறத்தில் சற்று அழுத்தியபோதோ எத்தகைய பதற்றத்துக்கும் இடம் கொடுக்காத கரிகாலன், தன் கண்களை இடதுபுறமாகச் சாய்த்து,  கத்தி அழுத்தி நின்ற இடத்தையும், அதைப் பிடித்து நின்ற கையையும் கவனித்து, கத்திக்கு உடையவன் யாரென்பதைத் தீர்மானித்துக்  கொண்டான்.

காரிருளில் பளபளவென ஒளி வீசிய அந்த உடைவாளின் அமைப்பையும், அதைப் பிடித்து நின்ற கைவிரல்களுக்கிடையே தெரிந்த பிடியின்  வேலைப்பாட்டையும் கடைக்கண்ணால் கவனித்து, கத்தி யைப் பிடித்து நிற்பவன் ஒரு சாளுக்கிய வீரன் என்பதை அறிந்து கொண்டான்.  பகிரங்கமாக, ‘யார் நீ... இந்த நேரத்தில் ராஜ வீதியில் உனக்கு என்ன வேலை..? யாரைச் சந்திக்க இப்படி நிழல்களில் நடந்து  கொண்டிருக்கிறாய்..?’ என்றெல்லாம் விசாரிக்காமல் கழுத்தில் கத்தி வைத்து ‘சிறிதும் அசையாதே...’ என செவியில் முணுமுணுக்க என்ன  காரணம்? எனில், இந்த நேரத்தில் இங்கு, தான் வருவோம் என்று ஊகித்து காத்திருக்கிறார்களா..? ஆம் எனில், தான் வருவது எப்படித்  தெரியும்..? ஒருவேளை காபாலிகனாவது அல்லது சிவகாமியாவது எதிரிகளிடம் சிக்கிவிட்டார்களா..? அப்படியே சிக்கினாலும் அவர்கள்  வாயே திறக்கமாட்டார்களே..? ஒருவேளை வேறு யாரையாவது எதிர்பார்த்து தவறுதலாக தன் கழுத்தில் கத்தி வைத்து விட்டார்களோ..?  அப்படித்தான் இருக்க வேண்டும்...

‘‘யார் நீ..? எதற்காக என் கழுத்தில் கத்தியை வைக்கிறாய்..? இந்த விஷயம் மட்டும் சாளுக்கிய மன்னருக்குத் தெரிந்தால் உன் கதி என்ன  ஆகும் தெரியுமா..?’’ செயற்கையாக படபடப்பை வரவழைத்துக் கொண்டு கரிகாலன் பயப்படுவதுபோல் நடித்தான்.‘‘என்ன ஆகும்..?’’ கத்தி  வைத்திருந்த சாளுக்கிய வீரன் கேட்டான்.‘‘சிறைக்குச் செல்வாய் வீரனே... ஒருவேளை மரண தண்டனையும் உனக்கு விதிக்கப்படலாம்!’’‘‘அப்படியா..? ஏன்..?’’‘‘ஏனா... இதென்ன இப்படிக் கேட்கிறாய்..? ‘பல்லவ குடிகளுக்கும் வணிகர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை...  அவர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளைத் தொடரலாம்...’ என்று சாளுக்கிய மன்னர் அறிவித்திருக்கிறார் அல்லவா..?’’‘‘ஆமாம்  அதற்கென்ன..?’’ நிதானமாகக் கேட்டான் அந்த சாளுக்கிய வீரன்.‘‘அதற்கென்னவா... நான் வணிகன் வீரனே! என் கழுத்தில் கத்தியை  வைப்பது குற்றம்!’’‘‘ஒரு குற்றமும் இல்லை...’’‘‘இல்லையா..?’’‘‘இல்லை! ஏனெனில் வணிகனின் கழுத்தில் நான் கத்தியை  வைக்கவில்லை! மறைந்து வாழும் பல்லவ இளவரசன் ராஜசிம்மனின் அருமை நண்பனான கரிகாலனின் கழுத்தில்தான் கத்தி  வைத்திருக்கிறேன்!’’ என்றபடி அந்த சாளுக்கிய வீரன் சிரித்தான்.

அதுதான் அவன் செய்த தவறு. பேச்சுக் கொடுத்தபடி சாளுக்கிய வீரனின் மனப்போக்கை அறிய முற்பட்ட கரிகாலன், எப்போது சாளுக்கிய  மன்னரின் அறிவிப்பைக் குறித்து, தான் கோடிட்டுக் காட்டிய பிறகும் கத்தியை எடுக்கவில்லையோ... அப்பொழுதே தான் யார் என்பதை  உணர்ந்துவிட்டார்கள் என்பதை ஊகித்துவிட்டான்.எனவே, சாளுக்கிய வீரன் சிரிக்கத் தொடங்கியதும், கழுத்தில் ஊன்றப்பட்ட கத்தியின் வலு  குறையத் தொடங்கியதும், சட்டென்று விலகினான். தன் முஷ்டியை இறுக்கி அந்த சாளுக்கிய வீரனின் முகத்தில் ஓங்கி ஒரு  குத்துவிட்டான்!‘‘அம்மா...’’ என்று அலறியபடி அந்த வீரன் கீழே விழவும் ஐந்தாறு வீரர்கள் மறைவிலிருந்து வெளிப்பட்டு கரிகாலனைச்  சூழ்ந்து நிற்கவும் சரியாக இருந்தது.அதன்பிறகு கரிகாலன் அங்கில்லை. மாறாக புரவி ஒன்றுதான் அந்த இடத்தில் இருந்தது!

ஆம். குதிரையாக மாறி தன் கால்களாலும் தலையின் பிடரியாலும் சுற்றி இருந்த வீரர்களைப் பந்தாடினான். காற்றைக் கிழித்தான்.  வீரர்களின் உடலைச் சிதைத்தான். அவர்கள் கரங்களில் இருந்த வாட்களைப் பறக்கவிட்டான்.இமைக்கும் பொழுதுக்குள் வீரர்களை எல்லாம்  செயலிழக்கச் செய்த கரிகாலன், வீரர்கள் கூடுவதற்குள் விலகிவிட வேண்டுமென்று முடிவெடுத்து அருகில் இருந்த மாளிகைக்குள் நுழைய  முற்பட்டான். கதவின் மீது அவன் கை வைத்ததுமே அது திறந்துகொண்டது. கரிகாலன் ஓரடி எடுத்து வைத்ததும் கதவு பட்டென்று  சாத்தப்பட்டது. தலையிலும் பலமான அடியொன்று இடிபோல விழுந்தது.கரிகாலன் ஒருமுறை தள்ளாடினான். அடுத்த கணம் அவன்  கால்கள் சுரணையற்றுப் போயின; கண்கள் சுழன்றன. பிரக்ஞை பறந்தோடிவிட்டது.

(தொடரும்)