ஓபிஎஸ் கதை !




இரண்டு டீக்கடைக்காரர்கள் இல்லாமல் இன்றைய இந்திய வரலாறு இல்லை!ஓருவர் இந்தியப் பிரதமர் மோடி. மற்றவர் தமிழக  முதல்வராகப் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம்! எம்ஜிஆர், என்டிஆர் வரிசையில் ஓபிஎஸ் என்ற மூன்றெழுத்தும் அதிகம்  உச்சரிக்கப்பட்டாலும் எதிர்க்கட்சிகளால் இவர் யுபிஎஸ் என்றே விமர்சிக்கப்படுகிறார்! எப்படி மின்சாரம் இல்லாதபோது யுபிஎஸ்  தற்காலிகமாக கம்ப்யூட்டர்களை இயக்கப் பயன்படுகிறதோ அப்படி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் இவர் என்பது இதற்குப் பொருள்.1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அப்பா பெயர், ஓட்டக்காரத்தேவர்.  அம்மா பழனியம்மாள். இவரையும் சேர்த்து மொத்தம் ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.
 
ஓட்டக்காரத்தேவருக்கு வட்டிக்கு பணம் கொடுப்பதுதான் தொழில். தனது குலதெய்வமான பேச்சியம்மனை நினைவில் வைத்து  ஓபிஎஸ்சுக்கு ‘பேச்சிமுத்து’ என்றே ஓட்டக்காரத்தேவர் பெயரிட்டார். பின்னர், அப்பெயர் பன்னீர்செல்வம் ஆக மாறியது.  பள்ளிப்படிப்பை  பெரியகுளத்திலும், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பிஏ வரலாறும் பன்னீர் படித்தார். வட்டித்தொழில், பெரியகுளம்  அருகே கள்ளிப்பட்டியில் சிறிதளவில் வயல், தோட்டம் தவிர சொல்லிக்கொள்ளும் வகையில் இவர் குடும்பத்துக்கு வசதிகள் இல்லை.  அதாவது 1980களுக்கு முன்!கல்லூரியில் படிக்கும்போதே அப்பாவுக்குத் துணையாக ஃபைனான்ஸ் கொடுத்து வாங்கும் வேலையில் ஓபிஎஸ்  ஈடுபட்டார். முதலில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டிக்கு கொடுத்து வாங்கிய இவரது குடும்பம், அடுத்து லாரிகளுக்கு ஃபைனான்ஸ்  கொடுக்கும் தொழிலிலும் கால் பதித்தது.
 
பிஏ முடித்ததும் பிழைப்புக்காக ஓ.பன்னீர்செல்வம் பால் பண்ணை நடத்தினார். பின்னர், தனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்  கடை ஆரம்பித்தார். இந்தக்கடையே இவருக்கு வாழ்வாதாரமாக இருந்தது. இதற்குள் இவருக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமானது. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும், ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற  மகன்களும் உள்ளனர். தனது 31வது வயதில்  ஓபிஎஸ் அரசியலில் அடியெடுத்து வைத்தார். 1982ல் நகர எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் ஆனார். 1987ல் எம்ஜிஆர்  இறந்தபிறகு, ஜெயலலிதா, ஜானகி என அதிமுக இரண்டானது. ஜானகி அணியில் புகழோடு இருந்த கம்பம் செல்வேந்திரன் புண்ணியத்தில்  பெரியகுளம் ஜானகி அணிக்கு ஓபிஎஸ் நகரச் செயலாளரானார். ஜெயலலிதாவிடம் நின்றது போலவே கேள்விக்குறி போஸில்தான் கம்பம்  செல்வேந்திரன் முன்பும் நிற்பாராம்!

1989ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கட்சியான ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக  ஓபிஎஸ் பணிபுரிந்தார். 1991ல் அதிமுக ஒருங்கிணைந்தது. இதையடுத்து முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின்  இயக்குனரானார். அங்குதான் முதன்முதலில் அதிகாரத்தை சுவைத்தார் ஓபிஎஸ்.1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்காலகட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகரச் செயலாளராக இருந்த ஓபிஎஸ்சுக்கு பெரிய
குளம் நகர்மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் கிடைக்கவே தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இவர் பெரியகுளம்  நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, தமிழக முதல்வராக இருந்த கலைஞர் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தைப் பிரித்து தேனியைத்  தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார்.

1999ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக அறிவித்துக் கொண்ட டிடிவி தினகரன் பெரியகுளம்  தொகுதியில் போட்டியிட்டார். தேனியில் தேர்தல் அலுவலகம் வைத்திருந்த டிடிவி தினகரன், எம்பியான பிறகு ஆண்டுக்கு ஒரு  தொகுதியில் குடியிருப்பது என முடிவெடுத்தார். இதனையடுத்து 2000ம் ஆண்டில் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜாவுக்குச்  சொந்த மான வீட்டுக்குக் குடியேறினார். இதுவே ஓபிஎஸ்சின் வளர்ச்சிக்குத் துணையாக அமைந்தது. ஆம். டிடிவியுடன் நெருக்கம்  அதிகரித்தது. 2001ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவும் இதுவே  காரணமாக அமைந்தது. தினகரனுக்கு முன் ஓபிஎஸ் உட்காரக் கூட மாட்டாராம். அதே குனிவு, பணிவு!

சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் தினகரன் - சசிகலாவின் ஆசியால் வருவாய்த்துறை  அமைச்சராக 2001ம் ஆண்டு மே 19 முதல்  2002ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வரை பதவி வகித்தார். அமைச்சரானபிறகும் சசிகலா குடும்பத்தாருடன் பணிவாகவே இருந்தார். இந்தப்  பணிவு சசி குடும்பத்தினரைக் கவர்ந்தது!விளைவு, 2001ம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்தபோது சசிகலாவால்  முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். ஜெயலலிதா விடுதலையானதும் 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல்வர் பதவியில்  இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சராக 2002 மார்ச் 2 முதல் 2006 மே வரை பதவி வகித்தார். இதற்கிடையில் 2004ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் டிடிவி தினகரனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஆரூண்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே பெரியகுளத்தைவிட்டு மன்னார்குடிக்கு டிடிவி திரும்பினார்.

அதுவரை பெரியகுளத்தில் அமைதியாக இருந்த ஓபிஎஸ்சின் ரத்த சொந்தங்களும் வாரிசுகளும் இதன்பிறகு அரசியல் கான்ட்ராக்ட்களில்  தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியதாகச் சொல்கிறார்கள்.என்றாலும் ஜெயலலிதாவின் குட் புக்கில் தொடர்ந்து இடம்பிடிக்க ஓபிஎஸ்  தவறவேயில்லை. அதனாலேயே பதவிகளும் இவரைத் தேடி வந்தன. அதாவது பதவியைக் குறிவைத்து தன் ‘பணிவு’ நாடகத்தை  நடத்தினார்.எந்த டிடிவி தினகரனால் அதிமுக தலைமையிடம் அடையாளம் காட்டப்பட்டாரோ அதே டிடிவி தினகரன் வகித்த அதிமுக  பொருளாளர் பதவி இவரைத் தேடி வந்தது!மொத்தமாக அதிமுகவில் ஓபிஎஸ் வகித்த பதவிகளைப் பார்த்தால் எந்தளவுக்கு இவர் ஜம்ப்  ஆகியிருக்கிறார் என்பது புரியும்.1996ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர் மன்றத் தலைவராக தேர்வு  செய்யப்பட்டு 2001ம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார். 2001ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில்  போட்டியிட்டு எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். கையோடு அமைச்சரானார்.

2006ம் ஆண்டு தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக எம்எல்ஏ ஆனார். தமிழக சட்டமன்ற  எதிர்க்கட்சித் தலைவராகவும் எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் பணியாற்றினார். 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர்  தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், அவை முன்னவர் என்று பணியாற்றினார்.  2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வருமானத்தை மீறி சொத்துக் குவித்த ஊழல் வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்  ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தவுடன் அவர் முதல்வர் பதவி பறிபோனது.  இதனைத் தொடர்ந்து 28ம் தேதி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில்  ஒருமனதாக சட்டமன்ற கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வானார்.

இதற்குள் 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும்,  மகன்கள் மூலம் உள்நாடு, வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்கள், முதலீடுகளைச் செய்துள்ளதாகவும் புகார்கள் கிளம்பியதால்  ஓ.பன்னீர்செல்வத்தை வீட்டுச் சிறையில் ஜெயலலிதா வைத்ததாகவும், சொத்துக்களைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  பேச்சுகள் எழுந்தன.  பின்னர் மேலிடத்துடன் சமரசமாகி 2016 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். ஜெயலலிதா மறைந்ததும்  முதல்வரானார். கட்சியைக் கைப்பற்ற சசிகலாவை எதிர்த்து ‘தர்மயுத்தம்’ நடத்திப் பார்த்தார். போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின்  ஆதரவு கிடைக்கவில்லை. பின்னர் தமிழக முதல்வராக உயர்ந்த எடப்பாடி பழனிச்சாமியுடன் சமரசமாகி, துணை முதல்வராக இப்போது  பதவி வகித்து வருகிறார்.

என்றாலும் எப்போது வேண்டுமானாலும் தன் பதவியைப் பறிக்க ஓபிஎஸ் முயற்சிப்பார் என்றே இவரைப் பற்றி நன்கு அறிந்த எடப்பாடி  பழனிச்சாமி நினைக்கிறார். அதற்கேற்பவே ஓபிஎஸ் காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனை  மெய்ப்பிப்பதுபோல், ‘தன்னை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்...’ என டிடிவி தினகரன் சமீபத்தில் அறிவித்திருப்பது தமிழக  அரசியலில் பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது.அடுக்கடுக்கான ஊழல் புகார்கள், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறார் என்ற  தகவல்... ஆகியவை எல்லாம் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமேல் இப்போது தொங்கும் கத்திகள்.அடுத்து என்ன நடக்கும்..? டீ குடித்தபடி  மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!                                     

-தேனிக்காரன்