நோட்டா




அரசியல் சதுரங்கத்தில் திடீரென ராஜாவாக நுழைந்து விஜய் தேவரகொண்டா ஆடுவதே ‘நோட்டா’.ஆந்திராவின் காதல் நாயகன் விஜய்  தமிழில் அறிமுகமாகும் படம் என்பதாலேயே கூடுதல் கவனம். முழுமையான அரசியல் சினிமாவை தமிழ் சினிமா கண்டு நாளாயிற்று  என்ற அடிப்படையிலேயே வரவேற்பு பெறுகிறது.முதலமைச்சர் நாசரின் மேல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து, வழக்கு கோர்ட்டிற்கு வந்து  தீர்ப்புக்கு காத்திருக்கிறது. நிச்சயம் தண்டனை உண்டு என்ற நிலையில் மகன் விஜய்யை அறிவுரை சொல்லி முதல்வர் ஆக்குகிறார்.  வேண்டா வெறுப்பாக வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்கிறார்.

நாசர் கைதினால் ஏற்பட்ட போராட்டத்தில், குழந்தையோடு பஸ் தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. சட்டையை உலுக்கி அந்தத் தாய்  கேட்கிற கேள்வியில் பதவியின் பொறுப்பை உணரும் விஜய் தேவரகொண்டா பொங்கி எழுகிறார். புது சரித்திரம் படைக்கிறார்.அரசியலின் சரியான நாடி பிடித்து கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் கருதி களம் இறங்கியிருக்கிறார் டைரக்டர் ஆனந்த் ஷங்கர்.  அரசியலின் பால படங்கள், ‘ஏழு கடல்... ஏழு மலை’ பிரயத்தனங்கள், முதல்வருக்கு ஆருடம் சொல்லும் சாமியார், குனிந்த தலை  நிமிராமல் வணங்கும் அமைச்சர் பட்டாளம் என அடுத்தடுத்து அரசியல் கரை புரள்கிறது.

ஹீரோயிசத்தில் மக்கள் நாயகனாக இறங்கி அடித்திருக்கிறார் விஜய். குழந்தை தீயில் பலியான இடத்திற்கே நேரடியாகச் சென்று  மக்களைச் சந்திக்கும் காட்சியின்போது கொப்பளிக்கும் கோபம் அவருக்கு அதிகம் கைகொடுக்கிறது. ஆரம்பக் காட்சியில் பிறந்தநாளை  குடித்துக் கொண்டாடி அடுத்த நாளே அவர் முதல்வராகும் காட்சி சரியான திருப்பம். சாணக்கியத்தனம் டிமாண்ட் செய்யும் வகையில்  அருமையாக கை கூடுகிறது கதை அமைப்பு. கலர்ஃபுல் காதல் ஹீரோவை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு சற்றே ஏமாற்றம். ஆனாலும்  அடுத்தடுத்து விஜய் வருகிற காட்சிகள் ‘பவர் ப்ளே’ பட்டாசு.

பட்டர் மில்க் தேவதை மெஹ்ரீன், சஞ்சனா நடராஜன் என இரண்டு ஹீரோயின்களுக்கும் இன்னும் இடம் தந்திருக்கலாம். கொஞ்சம்  ‘பசுமை’யைச் சேர்த்திருந்தால், கூடுதல் அரசியல் சமனாகியிருக்கும். கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என இருவருமே வந்து  விட்டுப் போகிறார்கள். இப்படியான கேரக்டர்களில் நாசர், சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னரே தங்கள் பெஸ்ட் முத்திரையைப்  பதித்துவிட்டதாலோ என்னவோ, ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்கிற உணர்வு ஏற்படுகிறது.இது சாம் சி.எஸ்ஸின் காலம். பின்னணியில்  எகிறி அடிக்கும் அவர், பாடல்களில் சோபிக்கவில்லை. சந்தானகிருஷ்ணன் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவில் அரசியல் சதுரங்கம் களை  கட்டுகிறது. ப்ளேபாய், நல்ல அரசியல்வாதியாக மாறும் இடங்கள் கனமானவை. செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் பாதுகாப்பதாக  சரித்திரத்தை மாற்றி எழுதலாமா டைரக்டர் சார்?   

-குங்குமம் விமர்சனக்குழு