தாலாட்டுக்கு ஒரு ஆல்பம்!
மியூசிக்லி, டப்ஸ் மாஷ்... என ஹைடெக் காலத்தில் தாலாட்டுப் பாட எந்தத் தாய்மார்களுக்கு நேரம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்? இருக்கிறது பாஸ்! திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கட் ராமன் - கஸ்தூரி தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியபோது தாலாட்டு ஆல்பம் வெளியிட்டு அசத்தியுள்ளனர்! மொத்தம் ஐந்து பாடல்கள். அனைத்தையும் அவர்களே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளனர். ‘‘எங்க குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா? வியன்! அப்படீன்னா தூய தமிழ்ல வியந்து பார்க்கக்கூடிய பெருமை மிக்கவன்னு அர்த்தம்!’’ என்று சொல்லும் வெங்கட்ராமனுக்கு ஆல்பம் வெளியிடும் ஐடியா வந்ததற்குக் காரணம் அவர் நண்பர்.
 ‘‘அந்த நண்பர் வீட்டுக்குப் போயிருந்தப்ப அங்கிருந்த ஒரு அம்மா தன் குழந்தைக்கு இரண்டே இரண்டு வரியை தாலாட்டா திரும்பத் திரும்ப பாடிட்டு இருந்தாங்க. வேற தாலாட்டு அவங்களுக்குத் தெரியாததுதான் இதுக்குக் காரணம். அப்பதான் ஆல்பம் ஐடியா வந்தது. நம்ம தமிழ் கலாசாரத்துல பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்கு சம்பிரதாயத்துலயும் பாடலுக்கு முக்கிய இடமுண்டு. ஆனா, கடந்த 30 வருடங்களா யாரும் நிகழ்ச்சிகள்ல பாடறதில்ல. பதிலா தனி கச்சேரி டீமை புக் பண்ணிடறோம். சாமான்ய மக்கள் அன்றாடம் பாடறதையே கிட்டத்தட்ட மறந்துட்டாங்க.
 இந்த நிலைலதான் ஏன் நாம நம்ம குழந்தைக்காக ஒரு பாடலை எழுதி பாடக் கூடாதுனு என் மனைவிகிட்ட கேட்டேன். அவங்களுக்கு ஒரே சந்தோஷம். உடனே ஒரு பாட்டை எழுதி பாடிக் காட்டினாங்க. அப்ப அவங்க 4 மாத கர்ப்பம். அந்த ஒரு பாட்டு அப்புறம் ரெண்டாகி, மூணாச்சு. ஆர்வம் தாங்காம நானும் ஒரு பாட்டு எழுதினேன். ஆக மொத்தம் 4 பாட்டாச்சு!’’ என்கிறார் வெங்கட்ராமன். ‘‘இந்த மாதிரி பாடல்கள்ல மாரல் வேல்யூஸ் ரொம்ப முக்கியம்.
 அறியாத வயசுல இதை குழந்தைங்க கேட்க ஆரம்பிக்கறாங்க. அவங்க மனசுல இந்த வேல்யூஸ் ஆழமா பதிஞ்சு பின்னாடி அவங்க ஆளுமையை செழுமைப்படுத்தும். இதை எல்லாம் மனசுல வைச்சுதான் இந்த ஆல்பத்தை ரிலீஸ் பண்ணியிருக்கோம். இசை பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாது. இசைப்படிப்பு படிக்கிற என் தம்பி ஜோஷ்வா, ஃப்ரடி உதவியால நாங்க இசையமைச்சோம். எங்க பிள்ளையோட பெயர் சூட்டும் விழாவுல இதை வெளியிட்டோம். வெளியிட்டதும் வந்தவங்களுக்கு இந்த ஆல்பத்தை கொடுத்ததும் வியன்தான்!’’ என்கிறார் கஸ்தூரி.
- திலீபன் புகழ்
|