தனுஷின் மச்சான்!



மழலைத் தமிழில் நமீதா உச்சரித்த ‘மச்சானு’க்குப் பிறகு இளைஞர்களை அதிகம் கவர்ந்தது இந்த சரண்தான்! ‘வட சென்னை’ படத்தில் தனுஷின் மச்சானாக வந்து அதகளம் செய்தவர். குறிப்பாக பெண் கேட்டு தனுஷ் செல்லும்போது தன் தந்தையிடம் சரண் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் வெடிக்கிறது தவுசண்ட் வாலா!‘‘சென்னைதான் பூர்வீகம். பக்கா பெரம்பூர் பையன். சினிமாவுக்கும் எங்களுக்கும் துளிக்கூட சம்பந்தமில்ல. அப்பா பாஸ்கர், லெதர் தொழில் செய்யறார். அம்மா கற்பகம், வீட்டை கவனிச்சுக்கறாங்க. நான் ஒரே பையன். 'இப்ப காலேஜ் படிக்கறேன். ஸ்கூல் டேஸ்ல இருந்தே நடிக்கறேன்.

‘கடல்’ படத்துல சின்ன வயசு கவுதம் கார்த்திக்காவும், ‘ஜில்லா’வுல சின்ன வயசு விஜய் ஆகவும் நடிச்சிருக்கேன்! ஆனா, அடையாளம் காட்டினது ‘வட சென்னை’தான்...’’ என்று சொல்லும் சரணின் பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.‘‘சொந்தக்காரங்க கூட அதிக நெருக்கமில்ல. ஸ்கூல்ல லீவ் விட்டா அப்பாவும் நானும் படத்துக்குப் போவோம். சினிமா பத்தி அப்பா நிறைய சொல்வார். நடிகனாகணும்னு அப்பா விரும்பினார். அதுக்காக முயற்சியும் செஞ்சார். வாய்ப்பு அமையலை. அதனால என்னை நடிகனாக்கணும்னு ஆசைப்பட்டார்!

நான் ஸ்கூல் போனதும் என் போட்டோவை எடுத்துட்டு ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமா போய் எனக்காக வாய்ப்பு கேட்பார்! ஏவி.எம் நிறுவனம் தயாரிச்ச ‘முதல் இடம்’ல அறிமுகமானேன். அப்புறம் பத்தாவது படிக்கிறப்ப கே.பாலசந்தர் சார் எடுத்த 'அமுதா ஓர் ஆச்சரியக்குறி’ டிவி சீரியல்ல ரெண்டு வருடங்கள் ரேணுகா மேடத்துக்கு பையனா நடிச்சேன்!’’ என்ற சரண், ‘கடல்’ பட ஆடிஷனில் தேர்வாகி இளம் வயது கவுதம் கார்த்திக்காக நடித்திருக்கிறார்.‘‘மணிரத்னம் சார் ரொம்ப அன்பா பழகினார். ஒரு மாச நடிப்புல அவர்கிட்டேந்து நான் கத்துகிட்டது நிறைய. அதனாலயே என்னை மணிரத்னம் ஸ்டூடண்டுனு பெருமையா சொல்லிக்கறேன்!

என் ஸ்கின் டோன் கொஞ்சம் கறுப்பா தெரியணும்னு தினமும் சில மணி நேரங்கள் வெயில்ல நின்னு பட்டம் விடச் சொல்வார். நான் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு ரொம்ப மெனக்கெட்டு பார்த்துக்கிட்டார். நான் பட்டம் விடுவதற்காகவே விதவிதமா பட்டங்கள் வாங்கிக் கொடுத்தார். அவரே உட்கார்ந்து பட்டம் செஞ்சும் கொடுப்பார்! கடல்ல நீச்சல் அடிக்கிற மாதிரி காட்சிகள் இருந்தது. இதுக்காக என்னை ஸ்விம்மிங் க்ளாஸுக்கும் அனுப்பி வைச்சார்...’’ பெருமையாகச் சொல்லும் சரண், நடிப்பு குறித்து யாரிடமும் எதுவும் கற்கவில்லையாம்.

‘‘ஸ்கூல் டேஸ்ல ஸ்டேஜ் ஃபியர் இருந்தது. ஸ்கூல் நாடகங்கள்ல நடிச்சதில்ல! ஆனா, படத்துல நடிச்சப்ப கேமரா பயம் வரலை!’’ என கூச்சத்துடன் சொல்லும் சரண், ‘ஜில்லா’வில் மோகன்லாலுடன் நடித்ததை மறக்கவே முடியாது என்கிறார். தன் மகனைப் போல் தன்னை கவனித்துக் கொண்டதையும், காட்சிக்காக தன்னை மடியில் படுக்க வைத்து உறங்க வைத்ததையும் சொல்லிச் சொல்லி சிலிர்க்கிறார். போலவே ‘வட சென்னை’ வாய்ப்பையும் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறார். வெற்றிமாறன் சார் 'வடசென்னை’ படம் எடுக்கிறார்னு கேள்விப்பட்டதுல இருந்தே பரபரப்பாகிட்டேன்.

எப்படியாவது அவர் டைரக்ஷன்ல ஒரு காட்சிலயாவது நடிச்சிடணும்னு முடிவோடு இருந்தேன். ஆனா, நான் வெள்ளையா இருந்தேன். இதனாலயே வாய்ப்பு மறுக்கப்படலாம்னு தோணிச்சு. ஆனாலும் முயற்சி செஞ்சு பார்க்கலாம்னு போனேன். ஏன்னா, ‘பொல்லாதவன்’ பத்தி அப்பாகிட்ட நிறைய டிஸ்கஸ் செய்திருக்கேன். அது என் ஃபேவரட் படம். முதல் நாள் அவர் ஆபீஸ் உள்ளயே போக முடியலை. ரெண்டாவது நாள் எப்படியோ உள்ள நுழைஞ்சிட்டேன். ஆனா, சரியா அப்ப வெற்றி சார் வெளிய கிளம்பிப் போயிட்டார். பார்க்கவே முடியலை. சரி... அவ்வளவு தான்னு மனசைத் தேத்திட்டு என் வேலையைப் பார்க்கப் போயிட்டேன்.

ஆறுமாசம் கழிச்சு வெற்றி சார் ஆபீஸ்ல இருந்து ஆடிஷன்ல கலந்துக்கச் சொல்லி போன் வந்தது! உற்சாகத்தோடு போய் சென்னை ஸ்லாங்குல பேசி நடிச்சுக் காட்டினேன். ‘கடல்’, ‘ஜில்லா’வுல நடிச்சதைப் பத்தி சொன்னேன். ‘நீதானா அது...’னு வெற்றி சார் என்னைத் தட்டிக் கொடுத்து ஓகே பண்ணினார்...’’ கண் சிமிட்டும் சரண், ‘வட சென்னை’யில் நடிக்கத் தொடங்கிய முதல் வாரம் முழுக்க ‘தனுஷ் மாமா’வைப் பார்த்துப் பேசவே முடியவில்லை என்கிறார். ‘‘அதுக்கு அப்புறம்தான் எங்க இரண்டு பேருக்குமான சீன்ஸ் எடுக்க ஆரம்பிச்சாங்க. அப்ப நாங்க ரொம்ப நெருக்கமாகிட்டோம்.

‘டேய் கண்ணா’னு எப்பவும் என்னை கேரக்டர் பெயர் சொல்லித்தான் தனுஷ் சார் பாசமா கூப்பிடுவார். என்னைப்பத்தி எல்லாமும் அவருக்குத் தெரியும். ‘அடுத்த படம் செலக்ட் பண்றப்ப கேர்ஃபுல்லா இரு’னு சொல்லியிருக்கார். படத்துல எங்கப்பாவை நான் அடிக்கிற சீன்ல உண்மைலயே அடிச்சுட்டேன்! ஷாட் ஓகே ஆனதுமே அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன். ‘வடசென்னை’ல எனக்கு பிடிச்ச சீன், தீனா அண்ணனைக் கொலை பண்ற போர்ஷன்...’’ என்ற சரண், ‘சகா’ படத்தில் இப்போது லீட் ரோல் செய்திருக்கிறார். ‘‘‘கடல்’ல என் நடிப்பைப் பார்த்துட்டுதான் முருகேஷ் சார் 'சகா’ல நடிக்கக் கூப்பிட்டார். மூணு சாங், நாலு ஃபைட், காதல் சீன்ஸ்னு படத்துல நிறைய இருக்கு. ரிலீசுக்காக எல்லாரும் காத்திருக்கோம்...’’ சொல்லும்போதே சரண் குரலில் உற்சாகம் வழிகிறது.

- திலீபன் புகழ்
படஙகள் : ஆ.வின்சென்ட் பால்