ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 25

பல்லவர்களின் பல்கலைக் கழகமான காஞ்சியின் கடிகா என்ற கடிகை பஞ்ச உஷத் காலத்தில் விழித்துவிட்டதன் விளைவாக வேத கோஷங்கள் வானைப் பிளந்து கொண்டிருந்தன. சுமார் கால் காத அகலமும் நீளமும் கொண்ட கடிகையின் பெரும் பிரதேசத்தில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்காகத் தனித் தனியாக நிர்மாணிக்கப்பட்ட பெரும் ஸ்தூபிகள் கொண்ட மண்டபங்கள் கூடிய வரையில் தூர தூரமாகவே அமைக்கப்பட்டிருந்தாலும் அந்த நான்கு வேத அத்யயன சீடர்களின் குழாம் எழுப்பிய வேத கோஷங்களில் ஏதோ ஓர் ஒற்றுமை ஏற்பட்டு விண்ணை ஊடுருவிச் சென்ற ஒரு ஒலி பிரணவமாகவே சப்தித்து,

‘ஓங்காரப் பிரணவோ வேதா’ - ஓங்காரத்திலிருந்து வேதங்கள் பிறந்தன என்ற தத்துவத்துக்குச் சான்று கூறியது. வேதாத்யயனங்களுக்கு மட்டுமின்றி, பல்லவர்களின் தமிழ்ப் பற்றின் விளைவாக அதுவரை தோன்றிய தமிழ் மறைகளுக்கான மண்டபங்களில் இருந்தும் தீஞ்சுவைத் தமிழ் மதுர ஓசை கிளம்பி இன்னிசைக்கும் தீந்தமிழுக்கும் மாறுபாடு அதிகமில்லை என்பதை நிரூபித்ததால், கடிகை முழுதும் வேத நாதமும் தமிழ் இன்பமும் பரவி சொர்க்கபோகத்துக்கு மேலான பேரின்பத்தைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்த கடிகையின் நடுவிலிருந்த சர்வ தீர்த்தம் என்ற அலைமோதும் பெருங்குளம் ஒன்று அங்கு பயிலும் மாணவர் ஸ்நான பானாதிகளுக்கும் நித்தியக்கடன்களுக்கும் பயன்பட்டு வந்தாலும்,

சூரிய கிரணங்களில் அதன் அலைகள் மின்னியது, வேத ஒலிகளுக்கு ஒளியும் உண்டு என்பதை நிரூபித்து ஆண்டவன் ஒளிமயம் ஒலிமயம் அனைத்தும்தான் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. கடிகையின் நாற்பெரு வாயில்களில் கிழக்குப் புற வாயிலில் மட்டுமே வித்யார்த்திகளும், மன்னனும், மகாகவிகளும் நுழைய அனுமதியிருந்ததால் அதைக் காவல் புரிந்து நின்ற புரவி வீரர்கள் கையில் வேல்களையும் வாட்களையும் தாங்கி நின்றனர். பெரு வணிகன் வேடத்துடனேயே பல்லக்கில் அமர்ந்தபடி கரிகாலன் கடிகையின் இன்னொரு வாயில் வழியே நுழைந்தான்.

பல்லக்கை ஏற்பாடு செய்து கொடுத்ததும் சாளுக்கிய மன்னர்தான். சந்தேகத்தின் சாயை பூரணமாக அவனுள் படர்ந்திருந்தது. பல்லவ இளவரசர் ராஜசிம்மரின் நெருக்கமான தோழனாக, தான் இருப்பதை அறிந்திருந்தும் தன்னை அவர் சிறை செய்யவில்லை. போலவே தன்னை கடிகைக்கு வரச் சொல்லி எழுதப்பட்ட ஓலையை முழுமையாகப் படித்த பின்னும் தன்னை அங்கு செல்ல பணித்திருக்கிறார். அதுவும் வீரர்கள் யாருக்கும் எந்த ஐயமும் ஏற்படா வண்ணம் காஞ்சியின் பெரு வணிகர்கள் பயன்படுத்தும் சிவிகையைக் கொடுத்து.

முத்திரை குத்தப்படவில்லை என்றாலும் ஓலையில் வாசகங்களை எழுதியவர் புலவர் தண்டிதான் என்பது தனக்குத் தெரிந்தது போலவே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தனும் அறிவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அப்படியிருந்தும் தன்னை கடிகைக்கு அனுப்பியிருக்கிறார். ஏன்..? ஒருவேளை கடிகைக்கு தன்னை வரச் சொன்னவர் புலவர் தண்டியாக இல்லாமல் வேறு யாராவதாகவும் இருக்கலாம்... நடைபெறவிருக்கும் சாளுக்கியர்களுக்கு எதிரான போர் குறித்து பேசப்படலாம்... திட்டங்கள் தீட்டப்படலாம்... என்பதை அறிந்தும் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றியிருக்கும் சாளுக்கிய மன்னர் அமைதியாக இருக்கிறார்.

சொல்லப் போனால் கடிகைக்குள் நடைபெறவிருக்கும் ரகசிய சந்திப்பு - அந்தரங்க உரையாடலுக்கு அவரே வழிவகையும் செய்கிறார். ஏன்..? குறிப்பாக தன் படைகளை ஊடுருவி திசை திருப்பும் அளவுக்கு வல்லமை படைத்த தனது முத்திரை மோதிரத்தை எதற்காக பல்லவ இளவலின் நண்பனும் தனது எதிரியுமான தன்னிடம் பாதுகாப்புக்காக கொடுக்க வேண்டும்..? மன்னர் விக்கிரமாதித்தரின் எண்ண ஓட்டம்தான் என்ன..? சிந்தனையுடன் கடிகைக்குள் நுழைந்த கரிகாலனுக்கு ஒன்று மட்டும் பளிச்சென்று புரிந்தது. சாளுக்கிய மன்னர் தன் மீதும் தன் படைகள் மீதும் அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

பல்லவர்கள் என்ன திட்டம் தீட்டினாலும் தன்னை வெற்றி கொள்ள முடியாது என்பதை தன்னை சிறை செய்யாமல் கடிகைக்கு அனுப்பியதன் வழியாக உணர்த்துகிறார். நிச்சயம் இது இறுமாப்பல்ல. தன் பலம் உணர்ந்த மாவீரனின் அடையாளம்; செய்கை. இப்படிப்பட்ட மன்னன் தலைமையிலான வீரர்களை வீழ்த்த வேண்டுமென்றால் போர் முறையை மாற்ற வேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியாக வேண்டும். முன்பாக நாக மன்னர் ஹிரண்ய வர்மர் ரகசியமாக சேகரித்து வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து பல்லவப் படைகளிடம் விநியோகிக்க வேண்டும்.

பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் திட்டம் என்ன என்பதை அறிய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், மறைந்திருக்கும் பல்லவ இளவரசரான ராஜசிம்மனை அழைத்து வர வேண்டும். இறுதியாக... கரிகாலன் பெருமூச்சுவிட்டான். இதற்குமேல் சிந்திக்கவும் அவனுக்கு அச்சமாக இருந்தது. சிவகாமி... சிவகாமி... முணுமுணுத்தான். அவளது பூர்வீகம் என்ன..? என்ன சபதம் செய்திருக்கிறாள்..? எதிரிகள் அனைவரும் அவளைப்பற்றி அறிந்திருக்கிறார்கள். அப்படியிருக்க பல்லவ மன்னரும் பல்லவ இளவரசரும் மட்டும் என்ன காரணத்துக்காக அவளை முழுமையாக நம்புகிறார்கள்...

தங்கள் மகளாக, சகோதரியாக பாவிக்கிறார்கள்..? சிறந்த ராஜதந்திரியும் பல்லவர்களுக்காக தன் உடல் பொருள் ஆன்மா என சகலத்தையும் அர்ப்பணித்திருக்கும் புலவர் தண்டியும் அல்லவா அவளை நம்புகிறார்..? எனில் யார் கூற்று சரி..? சிவகாமியை நம்பலாமா வேண்டாமா..? பலத்த யோசனையுடன் பயணித்த கரிகாலனின் சிந்தனை சிவிகை நின்றதும் அறுபட்டது. இதற்கு மேல் மன்னர் மற்றும் தலைமை ஆசான்களைத் தவிர வேறு யாருடைய வாகனமும் கடிகைக்குள் செல்லாது. செல்லவும் கூடாது. பல்லவர்களின் முறையை சாளுக்கியர்களும் கடைப்பிடிக்கிறார்கள்!

இதன்மூலமாக தன்னால், தனது படையால் பல்லவ மக்களுக்கும் கடிகையில் படிக்கும் பல தேச மாணவர்களுக்கும் எந்த இடையூறும் ஆபத்தும் இல்லை என்பதை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் குறிப்பால் உணர்த்துகிறார். மெல்ல மெல்ல மக்களிடம் நன்மதிப்பைப் பெறுகிறார். இதை அப்படியே வளரவிடுவது பல்லவர்களுக்கே ஆபத்தாக முடியும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக செய்ய வேண்டியதை செய்து முடிக்க வேண்டும். முடிவுடன் கண்களில் கூர்மை பெருக்கெடுத்து ஓட பல்லக்கில் இருந்து கரிகாலன் இறங்கினான்.

இதற்காகவே காத்திருந்தது போல் அவனுக்கு தலைவணங்கி விடைபெற்றுக் கொண்டு வந்த வழியே பல்லக்கை சுமந்தவர்கள் திரும்பிச் சென்றார்கள். நிதானமாக கடிகையைச் சுற்றிலும் தன் பார்வையை கரிகாலன் செலுத்தினான். நேரம் போதிய அளவு ஏறிவிட்டதன் விளைவாக ஆங்காங்கு வேத பாடங்களை முடித்துக்கொண்டு வேறு வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பல நாட்டு இளவரசர்களும் அமைச்சர்களின் புதல்வர்களும் அங்கிருந்தார்கள். அவர்களில் சிலருக்கு கரிகாலனைத் தெரியும். நின்று சிரித்துப் பேசும் அளவுக்கு பரிச்சயம் உண்டு.

ஆனால், அன்று மாறுவேடத்தில் அவன் இருந்ததால் ஒருவரும் அவனை நெருங்கி வரவில்லை; உரையாடவும் முற்படவில்லை. கடிகைக்கு வழக்கமாக பொருள் கொண்டு வரும் செல்வந்தர் போலவே அவனையும் கருதினார்கள். இவை சாதகமா பாதகமா என்று போகப் போகத்தான் தெரியும். முடிவுடன் கடிகைக்குள் நடக்கத் தொடங்கினான். பனை ஓலைகள் பொதி வண்டிகளில் இருந்து இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கடிகை மாணவர்களுக்கான எழுதுபொருள்! சீதாளப் பனை என்னும் கூந்தல் பனை; நாட்டுப் பனை; லோந்தர் பனை ஆகியவையே இறக்கப்பட்டன.

இதில் சீதாளப் பனைக்கு கூந்தல் பனை, தாளிப் பனை, தாள பத்ர, குடைப்பனை எனப் பலபெயருண்டு. தொடக்க காலம் முதலே இவ்வகை பனை மரத்தின் ஓலைகள்தான் எழுதுவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. தமிழக ஆற்றங்கரைகளிலும், வயல் வெளிகளிலும் அதிகமாக வளரக்கூடிய பனைமரம் இது என்பதால் பாலாற்றங்கரையிலிருந்து கடிகைக்குக் கொண்டுவர சுலபமாக இருக்கிறது. இந்த சீதாளப் பனை மரங்கள் 50 - 60 அடி உயரம் வளரும். இதன் ஓலைகள் நன்கு வளைந்து கொடுக்கும். 3 - 4 அடி நீளமும் 8 - 10 செ.மீ. அகலமும் கொண்டது. நாட்டுப்பனை ஓலையை விட இது மெல்லியது.

எனவே, இதில் எழுதப்படும் எழுத்துக்கள் தெளிவாக இருப்பதில்லை. எனவே, ஆரம்பநிலை மாணவர்கள் இந்த ஓலையையே எழுதுவதற்கும் மனப்பாடம் செய்ய படி எடுக்கவும் பயன்படுத்துவார்கள். வளமான பகுதிகளில் மட்டுமல்ல... வறண்ட பகுதிகள், மேட்டுப்பாங்கான பகுதிகள், மணற்பாங்கான பகுதிகள் என சகல இடங்களிலும் நாட்டுப்பனை வளரும். 2 - 3 அடி நீளமும் 4 - 6 செ.மீ., அகலமும் கொண்ட இந்த ஓலைகள் தடிமனாக இருக்கும். நன்கு வளைந்து கொடுக்கும் தன்மை இதற்கு உண்டு. கூந்தல் பனை ஓலைகளைப் போன்று நீள அகலமும், நாட்டுப் பனை ஓலைகளைப் போன்று தடிமனும் கொண்டது லோந்தர் பனை.

இந்த ஓலைகளின் மேல் எழுத்தாணி கொண்டோ அல்லது அரக்கு பூசி தூரிகையினால் எழுதவோ செய்வார்கள். இந்த மூன்றில் எந்த வகை பனைமர ஓலை என்றாலும் சரி... எல்லாவற்றிலும் இரு பகுதிகள் உண்டு. மேற்பகுதியும் அடிப்பகுதி யும் மிருதுவாக இருக்கும். இவற்றை இணைக்கும் இடைப்பகுதி மெல்லிய நரம்புகளால் ஆனது. இந்த நரம்புகள் ஒன்றோடென்று பின்னியது போல் காட்சியளிக்கும். இந்த நரம்புப் பின்னல்களுக்கு இடையில் உள்ள பச்சையம், மெல்லிய இழையால் சமமாக இருக்குமாறு மூடப்பட்டுள்ளன. எனவே பனையோலை தயாரிப்பதற்கு என்று ஒரு முறை உண்டு.

அதன்படிதான் கடிகைக்கான ஓலைகள் தயாரிக்கப்படுகின்றன. பனைமரங்களின் அடி ஓலை முதிர்ச்சியடைந்து நார்கள் வளையும் தன்மை குறைவாகவும்; குருத்து ஓலைகளின் நார்கள் உறுதித்தன்மை குறைவாகவும் இருக்கும். எனவே, ஆறு மாதங்கள் வளர்ந்த ஓலைகளே எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும். ஓலைகளை நிழலில் காயவைத்த பின் நீண்ட தலையோலைகளின் குறுகிய அடி நுனிகளையும் ஓலைகளின் நரம்புகளையும் நீக்கிவிட்டு ஒரே அளவாக ஓலைகள் வெட்டப்படும். அப்படி வெட்டப்படும் பகுதி நோக்கிச் சென்ற கரிகாலனை பால் வடியும் முகம் கொண்ட ஒரு பாலகன் வரவேற்றான்.

‘‘நேற்றிலிருந்து உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்... வாருங்கள்...’’ பதிலே சொல்லாமல் கரிகாலன் சிலையாக நின்றான். ஏனெனில் அந்தப் பாலகனுக்குப் பின்னால் இருந்த சுவரில் புதியதாக வரையப்பட்டிருந்த ஒரு பெண்ணின் உருவம் அவனை இப்படியோ அப்படியோ அசையவிடாமல் கட்டிப் போட்டது. அதே உருவத்தைத்தான் சில நாழிகைகளுக்கு முன், சாளுக்கிய மன்னரைச் சந்திப்பதற்கு முன், திரைச்சீலையில் ஓவியமாகக் கண்டான். ஓவியத்தில் இருந்த அந்தப் பெண்... சிவகாமி!

(தொடரும்)  

- கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்