ரத்த மகுடம்-30



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சிவகாமி செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த கரிகாலனுக்குள் எண்ணற்ற வினாக்கள் வலையாக விரிந்தன. சிக்காக முடிச்சிட்டன. சாளுக்கிய மன்னர் தன்னிடம் தனிமையில் பேசியது அந்த பாலகனுக்கு எப்படித் தெரியும்..? கடிகையில் தன்னிடம் எதையும் விசாரிக்காதவன் சிவகாமியிடம் எப்படி நடந்தது நடந்தபடி அனைத்தையும் கூறினான்..? வெறும் பால் வடியும் முகத்துடன் இருப்பதாலேயே அவன் சொல்வதை எல்லாம் இவள் நம்புகிறாளா... அல்லது இவளுக்கும் அந்த பாலகனுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா..?

அந்த பாலகன் யார்..? உண்மையில் இந்த சிவகாமி யார்..? எந்தளவுக்கு இவளை நம்பலாம் அல்லது சந்தேகிக்கலாம்..?

பலத்த சிந்தனையுடன் அவளைப் பின்தொடர்ந்தான். மூடியிருந்த மாளிகையின் கதவை நெருங்கிய சிவகாமி சட்டென்று திரும்பினாள்.அவளைப் பின்தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறி வந்த கரிகாலன் அவளுக்கு அடுத்த படியில் நின்றபடி என்னவென்ற கேள்வியுடன் அவளை ஏறிட்டான்.அவன் கருவிழிகளை உற்றுப் பார்த்தவள் என்ன ஏது என்று அவன் சுதாரிப்பதற்குள் அவன் கேசத்தைக் கொத்தாகப் பிடித்து அவன் உதட்டில் முத்தமிட்டாள்!

கண்கள் விரிய அவள் நயனங்களை ஆராய்ந்தான். பரஸ்பர உமிழ்நீர் பரிமாற்றத்தில் கணங்கள் கடந்தன.தன்னிலையை மறந்து அவனும் இயங்கத் தொடங்கியபோது நாணிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல் விலகினாள். ‘‘சிவகாமி...’’ முணுமுணுத்தபடி அவளை மீண்டும் தன்மீது சாய்க்க முற்பட்டான்.‘‘என்னை நம்புங்கள்! என்னை மட்டுமே நம்புங்கள்..!’’ சலனமின்றி அவனிடம் சொல்லிவிட்டு மாளிகையின் கதவைத் தட்டினாள்.
ஒருமுறைதான். மறுமுறை தட்ட கையை ஓங்குவதற்குள் பட்டென கதவு திறந்தது.

திறந்தது காவலாளி அல்ல! சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர்!‘‘வா கரிகாலா...’’ அழைத்தபடி வெளியில் வந்தவர் சுற்றிலும் பார்த்தார். அவர் கண்களில் திருப்தி வழிந்தது. ‘‘துரத்தி வந்த காவலர்களை, கடிகை மாணவர்களை நன்றாகவே போக்குக் காட்டி அலையவிட்டிருக்கிறாய்...

ஒருவரும் இந்த மாளிகைப் பக்கம் வரவில்லையே...’’ புன்னகைத்தபடி மாளிகைக்குள் நுழைந்தார்.அவரைத் தொடர்ந்து சிவகாமியும் வலது காலை எடுத்து வைத்தாள். தனக்குப் பின்னால் எந்த அரவமும் கேட்காததால் முகத்தைத் திருப்பிப் பார்த்தாள்.ஆடாமல் அசையாமல் கரிகாலன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.

‘‘அவனை அழைத்துக்கொண்டு வா...’’ திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு ஸ்ரீராமபுண்ய வல்லபர் மாளிகைக்குள் சென்றார்.சிவகாமி தலையசைத்துவிட்டு அவனை நோக்கி வந்தாள். அவள் நடையில் தெரிந்த துள்ளலை கரிகாலன் கவனித்தான். ‘சிவகாமியை நம்பாதே...’, ‘சிவகாமியை நம்பாதே...’ என அவன் செவிக்குள் கடம்ப இளவரசரில் தொடங்கி பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் ஒன்றுவிட்ட சகோதரரான ஹிரண்ய வர்மர் வரை பலரும் ஓலமிட்டார்கள்.

இமைக்காமல், வருபவளை எதிர்கொண்டான்.‘‘ஏன் நின்றுவிட்டீர்கள்... வாருங்கள்...’’ கொஞ்சலுடன் அழைத்தாள்.‘‘எங்கு..?’’ நிதானமாக கரிகாலன் கேட்டான்.‘‘இதென்ன கேள்வி..? மாளிகைக்குள்தான்...’’ புன்னகைத்தவளின் பார்வை கணத்துக்கும் குறைவான நேரத்தில் அவன் இடுப்பில் இருந்த சுவடிக் கட்டுகளின் பக்கம் சென்று மீண்டது.

கரிகாலன் அதை உள்வாங்கினான். தனக்குப் பின்னால் எழுந்த சலசலப்பையும்தான். திரும்பிப் பார்க்காமலேயே என்ன நடக்கிறது என்பது புரிந்தது. அவை சிவகாமியின் கருவிழிகளுக்குள் பிரதிபலிக்கவும் செய்தது! உருவிய வாட்களுடன் வீரர்கள் ஒவ்வொருவராக படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தார்கள்!‘‘விருந்தினர்களை வரவேற்கும் முறையா இது... வாட்களை கீழே இறக்குங்கள்! நீங்கள் வருவதைப் பார்த்தால் இவரை சிறை செய்ய முற்படுவதுபோல் தெரிகிறது!’’ கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான்.

‘‘எதற்காக சிரிக்கிறீர்கள்..?’’
‘‘நேரடியாக என்னிடமே சொல்லியிருக்கலாம். அவர்களை முன்வைத்து குறிப்பால் உணர்த்த வேண்டிய அவசியமில்லை..! இதுவரை பதுங்கி இருந்தவர்கள் இனி தைரியமாக மாளிகையைச் சுற்றி காவல் இருக்கட்டும். வா... நாம் உள்ளே செல்லலாம். சாளுக்கிய போர் அமைச்சர் நமக்காக... இல்லை... எனக்காகக் காத்திருக்கிறார்..!’’அலட்சியமாக சொற்களை உதிர்த்துவிட்டு கம்பீரமாக மாளிகைக்குள் நுழைந்தான்.

திரும்பிப் பார்க்காமல் தன்னை நோக்கி வந்த வீரர்களின் எண்ணிக்கையை அவன் கணக்கிட்டதும், ஸ்ரீராமபுண்ய வல்லபரைச் சந்திக்க தயக்கமின்றி செல்வதையும் பார்த்தவளுக்குள் இனம் புரியாத உணர்வுகள் பொங்கி வழிந்தன. அவன் திறமையை நன்றாகவே அறிவாள். கண்களுக்கு நேராக அவற்றைப் பார்க்கவும் செய்திருக்கிறாள். பத்து வீரர்களல்ல... சில நூறு பேர் வந்தாலும் அவனால் சமாளிக்க முடியும். அசுவம் போன்றவன். திமிறியும் எழுவான். பாயவும் செய்வான். கூட்டத்தை சிதறடிக்கவும் செய்வான். குழையவும்...

சுண்டிவிட்டது போல் உடல் அதிர்ந்தது. நடப்பதை வைத்து தன்னைக் குறித்து கரிகாலன் எவ்வகையான மதிப்பீடுகளைக் கொண்டிருப்பான்..? நினைக்கும்போதே உடலின் ஒவ்வொரு அணுக்களும் நடுங்கின.   ‘‘அவரவர் பணியை அவரவர் மேற்கொள்ளுங்கள்...’’ என வீரர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு வேகமாகக் கரிகாலனை நெருங்கி அவன் கைகளைப் பற்றினாள்.  ‘‘என்ன சிவகாமி..?’’ கேட்டவன் மெல்ல திரும்பினான். தன்னைப் பிடித்திருந்த அவள் விரல்களை விடுவித்து தன் கரங்களில் ஏந்தினான். உயர்த்தி உள்ளங்கையின் பின்பக்கம் முத்தமிட்டான்.சிவகாமியின் உடல் சிலிர்த்தது. அப்பாடா... தன்னை அவன் தவறாக எண்ணவில்லை...

பூத்த எண்ணம் படர்வதற்குள் அவளது இடுப்பில் கைவைத்து இழுத்தான். மலர்ந்த மையலுடன் அவனை அண்ணாந்து பார்த்தாள். வழியும் காதலுடன் அதை எதிர்கொண்டான். விரல்களை அலையவிட்டான். கோலமிட்டான். அவள் நாபிக்குள் தன் விரலை நுழைத்து சுழற்றினான்.

நாடி நரம்புகளில் ஊடுருவிய அதிர்வை சிவகாமி மென்று விழுங்கினாள். ‘‘என்னை...’’ வார்த்தைகள் தடைப்பட்டன. யாழின் நரம்புகள் போல் உதடுகள் துடித்தன.

‘‘உன்னை..? ஏன் நிறுத்திவிட்டாய்..? ஓ... இப்படிக் கேட்டால் பேச்சு தடைப்படுமல்லவா..? உனக்குப் பிடித்தபடியே உரையாடுவோம்...’’ சொன்னவன் அவளை அப்படியே தூக்கினான். ஒரு சுற்று சுற்றிவிட்டு தன் முன்பாக அந்தரத்தில் நிறுத்தி, அவளது பின்னெழுச்சியை அழுத்தியபடி தன் மார்பின் மீது அவளைச் சாய்த்தான். ‘‘என்ன இது... விடுங்கள்...’’திமிறியவளின் அதரங்களை தன் உதடுகளால் அழுத்தமாக ஒற்றினான்.

அவன் கேசங்களைக் கொத்தாகப் பிடித்து தன்னை விடுவித்துக் கொள்ள சிவகாமி முயன்றாள்.அதற்கு இடம்கொடுக்காமல் அதரங்களில் இருந்து தன் உதட்டை விடுவித்தவன் அவளது கச்சையில் தன் முகத்தைப் புதைத்து இப்படியும் அப்படியுமாகத் திருப்பினான். மூன்றாம் பிறை மறைந்து ஐந்தாம் பிறை வெளிப்பட்டது. மூர்க்கத்துடன் அப்பிறைக்குள் தன் நாசியை நுழைத்தான். அடிவயிற்றிலிருந்து சுவாசித்தான்!

உடலில் இருந்து எழுந்த பேரலையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள். ‘‘இப்படி உரையாடத்தானே உனக்குப் பிடிக்கும்! இப்படித்தானே இத்தனை நாட்களாக சுற்றுப்புறங்களை மறந்து என்னுடன் பேசியிருக்கிறாய்..? இப்போது மட்டும் என்ன... ம்...’’
கேட்டவன் தன் பற்களால் அவள் கச்சையை இழுக்க முற்பட்டான்.

சிவகாமி வெலவெலத்துப் போனாள். இதற்கு முன் அவள் காணாத கரிகாலன். பதற்றத்துடன் வளைந்து நெளிந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் தரையில் இறங்கி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கச்சையை ஒழுங்குபடுத்திவிட்டு அவனை ஏறிட்டாள். பொசுங்கினாள்.

கரிகாலனின் கண்களில் காதலில்லை. காமம் இல்லை. வெறுமை மட்டுமே தீப்பிழம்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது.தன் கேசங்களைக் கோதியபடி புருவத்தை உயர்த்தினான். ‘‘உன்னைப் பூரணமாக நம்ப வேண்டும்! இதைத்தான் சொல்ல முற்பட்டாய். நல்லது. புரிந்துகொண்டேன்...’’ தளர்ந்த தன் இடுப்பின் முடிச்சை இழுத்துக் கட்டினான். சுவடிக் கட்டுகளைப் பத்திரப்படுத்தினான்.

‘‘எங்கிருக்கிறார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்..? இது பல்லவ நாட்டின் பெரு வணிகரின் மாளிகை என்பதால் அவரது அந்தரங்க அறை எனக்குத் தெரியும். மேலேதானே..?’’ கேட்டவன் தன் முன்னால் பத்தடிக்கு மேல் தென்பட்ட படிக்கட்டில் ஏறத் தொடங்கினான். கருவிழிகள் கண்ணீரில் மிதக்க, செல்பவனையே இமைக்காமல் பார்த்த சிவகாமி தன் உதட்டைக் கடித்தபடி அவனைப் பின்தொடர்ந்தாள். 

இருபத்தைந்து படிக்கட்டுகளுக்குப் பின் வலம் இடமாக இருபக்கமும் மேல்நோக்கி பாதைகள் பிரிந்தன. இடப்பக்கமாக படிகளில் ஏறிய கரிகாலன் மாடத்தை அடைந்தான். சிற்ப வெளிப்பாடுடன் கூடிய நீளமான பாதை. அக்கம்பக்கத்து அறைகள் உட்பக்கம் தாழிடப்பட்டிருந்தன. எங்கும் நிற்காமல், எந்தக் கதவையும் தட்டாமல் நேராக நடந்தான்.

சற்று இடைவெளிவிட்டு வந்த சிவகாமிக்கு, அணு அணுவாக இந்த மாளிகையை அவன் அறிந்திருக்கிறான் என்பது புரிந்தது. அழைத்துச் செல்லாமலேயே சந்திக்கும் இடம் தெரிந்திருக்கிறது. இதில் வியப்பதற்கு ஏதுமில்லை. அவன் பல்லவ மண்ணின் மைந்தன். காஞ்சியின் தவப்புதல்வன். அறியாமல் இருந்தால்தான் அது செய்தி.

இவ்வளவு விழிப்புடன் நுணுக்கமாக நடந்துகொள்பவன் தன்னைப் பற்றியும் புரிந்துகொண்டிருக்க வேண்டுமே... ஆனால், சில கணங்களுக்கு முன் கீழ்த்தளத்தில் அவன் நடந்துகொண்ட விதம் அப்படியில்லையே... உடலைக் காட்டி மயக்குபவளாக அல்லவா தன்னைக் கருதியிருக்கிறான்... அப்படிப்பட்டவள் தானில்லையே...

வெடிக்கும் நிலையில் இருந்த உணர்வுகளை அரும்பாடுபட்டு புதைத்துவிட்டு அவனிடம் பேசுவதற்காக தன் நடையைத் துரிதப்படுத்தினாள். நெருங்கவும் செய்தாள்.ஆனால், அவள் வாய் திறப்பதற்குள் அந்த மாளிகையின் அந்தரங்க அறைக் கதவைத் தன் ஆள்காட்டி விரலை மடித்து தட்டினான்.‘‘கதவு திறந்துதான் இருக்கிறது...’’உள்ளிருந்து ஒலித்த குரலை கரிகாலன் மட்டுமல்ல...

அவனைத் தொடர்ந்து வந்த சிவகாமியும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அக்குரல் ஸ்ரீராமபுண்ய வல்லபருடையது அல்ல! குரலுக்கு உரியவரை கரிகாலன் நன்றாகவே அறிவான்!துடிக்கும் இதயத்துடன் கதவைத் திறந்தான். தென்பட்ட காட்சி கரிகாலனையும் சிவகாமியையும் ஒருசேர அதிர வைத்தது!

(தொடரும்)

கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்