திருவிளையாடல்
 தொடர்வண்டியில் ஏறிய சில வினாடிகளுக்குள் விதியின் முன் தண்டனிடாத சீர்குலைந்த வாழ்வொன்று ‘ஆலயமணியின் ஓசையை நான்கேட்டே’னென நம்பிக்கையாய் பாடி கிண்ணத்தைக் குலுக்குகிறது.
சில இரக்கங்கள் அதில் விழுகின்றன.
சில அலைபேசி குனியல்கள் தலையுயர்த்தி மீண்டும் தாழ்கின்றன.
‘நிலவும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்...’ கடைசி வரியை மட்டும் அழுத்தி அழுத்தி மூன்று முறை பாடுகிறாள்.
வண்டியின் வேகக்குலுக்கல் சுதியைக் கலைக்கிறது.
எவ்வளவு கூட்டத்திலும், அசூயை கொள்பவர்கள் மத்தியிலும் கைக்குச்சியால் துழாவி இயல்பாய் நடக்க முடிகிறது அவளால். நிறுத்தங்களின் பொழுது மனக்கணக்கில் சமன் செய்து நிற்கிறாள்.
கனவான் ஒருவர் நூறு ரூபாய் போட்டார். தடவிப்பார்த்ததும் பிரகாசத்தோடு வந்த திசையறியாது ஒரு கும்பிடுபோட்டாள்.
இன்றைய விளையாட்டை இத்துடன் முடித்துக்கொண்ட கடவுள் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி நடந்தார்.
ரவிசுப்பிரமணியன்
|