மூடப்படும் சத்துணவு மையங்கள்… கேள்விக் குறியாகும் ஏழைகளின் கல்வி!



இளங்கோ கிருஷ்ணன்

தமிழகம் முழுதும் உள்ள எட்டாயிரம் சத்துணவு மையங்களை மூடப்போவதாகக் கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்துள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில்  கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு இதற்குச் சொல்லும் காரணங்களில் பிரதானமானது நிதிப் பற்றாக்குறை மற்றும் தொடர்ந்து தனியார் கல்வி  நிறுவனங்களை நோக்கி மாணவர்கள் செல்வதால் சத்துணவு மையங்களில் பயனாளிகள் குறைந்து வருகிறார்கள் என்பதுதான். சத்துணவுத் திட்டம், உலக  சமூகத்துக்கு இந்திய அரசு, குறிப்பாக தமிழக அரசு வழங்கிய கொடை என்றால் அது மிகையில்லை. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிக் கட்சி ஆட்சியில்  இருந்தபோது சென்னை மாநகராட்சி அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த மதிய உணவுத் திட்டத்தை பிற்பாடு தமிழ்நாட்டின் முதலமைச்சரான காமராஜர்  மாநிலம் முழுதும் பரவலாக்கினார். மிகுந்த மானுட நேயமும் தொலை நோக்கும் நீண்டகால அளவில் நல் விளைவுகளையும் உருவாக்கிய மகத்தான திட்டம்  இது.

கல்வியில் பின் தங்கிய மாநிலமாக நாம் இருந்த காலகட்டத்தில் அதற்கான காரணங்கள் என்னென்ன என்று ஒவ்வொன்றாகக் களைய முற்பட்டபோதுதான் இந்த  மதிய உணவுத் திட்டத்தின் தேவை உணரப்பட்டது. ‘பசியோடு இருக்கும் குழந்தை எப்படிச் சிந்திக்கும்’ என்ற பெரும் கருணையான கேள்வியில் பிறந்த திட்டம்.பிற்பாடு, எம்ஜிஆர் ஆட்சியில் அமர்ந்தபோது இந்தத் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை விரிவாக்கி ‘சத்துணவுத் திட்டம்’ என்ற பெயரும் சூட்டினார். எம்ஜிஆருக்கு  மங்காப் புகழைத் தந்த திட்டமாக சத்துணவுத் திட்டம் இன்றும் ஒளிர்கிறது. கலைஞர் ஆட்சியில் சத்துணவுத் திட்டத்தில் வாரம் ஒரு முறை முட்டை தருவது  என்று முடிவானது. அடுத்து வந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் இந்த முட்டையின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. இப்படி, ஒவ்வொரு முன்னாள் முதல்வர்களும்,  தங்கள் ஆட்சிக் காலத்தில் பசிப்பிணி போக்கும் திட்டம் என்பதால், சத்துணவுத் திட்டத்தை தாயுள்ளத்தோடே அணுகி வந்திருக்கிறார்கள்.

அந்தத் திட்டத்துக்குத்தான் இன்று மூடுவிழா காண தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் பதினேழாயிரம் சத்துணவு மையங்கள்  திறக்கப்பட்டன. இதன் மூலம் அக்காலத்தில் அறுபது லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்தார்கள். அவர்களில் பலர் இன்று மாவட்ட ஆட்சியர்கள்  முதல் மருத்துவர்கள் வரை உயர்வான நிலையை அடைந்து சமூகத்துக்குத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி தமிழகம் முழுதும்  43,205 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் சுமார் ஐம்பத்தோரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். சத்துணவு  மையங்கள் அதிகரித்திருக்கின்றனதான். ஆனால், பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகின்றன. அதனால்தான் மூட வேண்டியதாக இருக்கிறது  என்கிறது அரசு தரப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயம்தானே என்று தோன்றும்.

ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் குறைந்ததுக்கு அரசின் கல்விக் கொள்கையும் நடவடிக்கைகளுமே பிரதான காரணம். மக்களின் வாழ்க்கைத் தரம்  உயர்ந்ததால் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள் என்று ஒருவர் நினைத்தால் அது உண்மை இல்லை என்பதே பதில். ஒவ்வொரு சத்துணவு மையத்திலும்  ஓர் அமைப்பாளர், ஓர் உதவியாளர் எனப் பணியில் இருப்பார்கள். இந்த சத்துணவுப் பணியாளர்களுக்கான காலியிடங்களை அரசு நிரப்புவதே இல்லை. மறுபுறம்  ஆறு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காகவும் கல்விக்காகவும் எம்ஜிஆர் கொண்டுவந்த அங்கன்வாடிப் பணியாளர்களுக்கான  காலியிடங்களையும் நிரப்பாமலே வைத்திருக்கிறார்கள். அங்கன்வாடியில் போதிய பணியாளர்கள் இல்லை என்பதாலேயே தொடக்கக் கல்வி முதலே தனியார்  பள்ளியை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் பெரும்பாலான ஏழைப் பெற்றோர்கள்.

இதனால்தான் சத்துணவுத் திட்டத்தின் பயனாளர்கள் குறைகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள். சத்துணவுத் திட்டம்  அமுல்படுத்தப்பட்டபோதும் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில்தான் இருந்தது. 1983ல் தமிழக அரசின் மொத்த வரி வருமானம் வெறும் 844 கோடி ரூபாய்  மட்டுமே. ஆனால், அன்றே சத்துணவுக்கு என 144 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. நிதி நெருக்கடி தாங்காமல் இந்தத் திட்டத்தையே கைவிடலாம் என்று  அதிகாரிகள் சொன்னபோது, ‘கையேந்தியாவது நம் குழந்தைகளுக்கு அன்னமிட வேண்டும்’ என்றார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர்.டாஸ்மாக் என்ற தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிபக் கழகத்தைத் தொடங்கி, மது விற்பனை  வருவாய் மூலம் இந்த நிதி நெருக்கடியை எதிர்கொண்டார். இன்று, மூலைக்கு மூலை  டாஸ்மாக்கைத் திறந்துவரும் தமிழக அரசு, இந்தத் திட்டத்துக்கு நிதி இல்லை; ஆள் பற்றாக்குறை என்று சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது.  

எம்ஜிஆருக்குப் பிறகு வந்த கலைஞர், ஒவ்வொருமுறையும் சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்தினார். வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டைகள் வழங்கவும்,  முட்டையை விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் மற்றும் சத்து மாவு வழங்கவும் உத்தரவிட்டார். சத்துணவு உண்ணும் மக்கள் மட்டுமல்ல, சத்துணவுத்  திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுமே கூட ஒருவகையில் விளிம்பு நிலையினர்தான் என்பது இத்திட்டத்தின் இன்னொரு சிறப்பு. இந்தத் திட்டம்  அறிவிக்கப்பட்டபோது, மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், கணவனை இழந்தோர், கைவிடப்பட்டோர் போன்றவர்களே அதிகமாகப் பணியில்  அமர்த்தப்பட்டனர். கணிசமாகத் தாழ்த்தப்பட்ட மக்களும் சத்துணவு ஊழியர்களாகினர். அமைதியாக சமையல் வழி ஒரு சமத்துவப் புரட்சி நடந்து கொண்டிருந்தது.

தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தால் விளைந்த நீண்ட கால பயன்களைப் பார்த்து இந்தியாவின் பிற மாநிலங்களும் அதைப் பின்பற்ற முயன்றன. யுனெஸ்கோ  போன்ற சர்வதேச அமைப்புகள் உலகுக்கே வழிகாட்டும் முன்னோடித் திட்டம் என்று இதைப் புகழ்ந்தும் உள்ளன. ஆனால், சமீபமாக அங்கன்வாடி ஊழியர்களும்,  சத்துணவு ஊழியர்களும் அரசுகளால் கண்டுகொள்ளப்படவே இல்லை. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அவர்களின் கோரிக்கைகளை செவி  சாய்க்கவில்லை. இப்படியான சூழலில்தான் எட்டாயிரம் சத்துணவு மையங்கள் மூடப்படவுள்ளன. இருபத்தைந்து பயனர்களுக்கு மேல் உள்ள மையங்கள்  மூடப்படாது என்று அரசு தெரிவிக்கிறது. அப்படியானால், இருபது பயனர்கள் இருக்கும் சத்துணவு மையங்கள் மூடப்பட்டால் அக்குழந்தைகள் மதிய உணவுக்கு  எங்கே போவார்கள்? பக்கத்தில் உள்ள மையங்களில் சமைத்து அதைத் தேவைப்படும் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வோம் என்கிறார்கள். இதில் நடைமுறைச்  சிக்கல்கள் ஏற்படாதா?

மறுவருடம் சத்துணவு உண்ணும் குழந்தைகளை சத்துணவு மையம் உள்ள பள்ளிகளிலேயே சேரச் சொல்லி நெருக்கடி தரமாட்டார்களா? அப்படியானால்  அருகாமைப் பள்ளி என்ற கருத்தை அரசு எப்படி நோக்கு கிறது. ஏற்கெனவே, வறுமை உள்ளிட்ட பல காரணங்களால் இடை நிற்றல், வருகைப் பதிவுக் குறைவு  என்றிருக்கும் பள்ளிகளில் சத்துணவும் நிறுத்தப்பட்டால் தேர்ச்சி விகிதம் என்னவாகும்? இப்படியான கேள்விகளுக்கு பதிலே இல்லை.கல்வி தொடர்ந்து  தனியார்மயமாகி வரும் சூழலில் வறியவர்கள் கல்வி கற்பதே கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. இதில், இப்படியான மானுட நேயம் மிகுந்த  திட்டங்களையும் லாப நட்டக் கணக்குப் பார்த்து நிறுத்தினால், ஏழைக்கு கல்வி இன்னும் எட்டாத உயரத்துக்கே போகும்.