இவரது வாழ்க்கைதான் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ஒன்லைன்!



மயிலாப்பூரின் சிதம்பரசாமி இரண்டாவது தெரு. பரபரப்பான ரேஷன் கடையை அடுத்து இருக்கும் ஜான்சனின் மிருதங்கக் கடை, இப்போது பேசும் பொருளாகியிருக்கிறது. காரணம், ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘சர்வம் தாளமயம்’ படம் கருக்கொண்டது இங்கேதான்! மிருதங்கம் உருவாகி, சரிசெய்யப்பட்டு இசை பெருகி வழியும் கடையில் உட்கார்ந்திருக்கும் ஜான்சன் ஒரு கிறிஸ்துவர். பிற்படுத்தப்பட்ட சமூகம் என்றாலும், நெற்றியில் துலங்கும் திருநீறும் குங்குமத்தீற்றலும் துல்லிய அழகில் மிளிர்கின்றன.

மிருதங்கத்தின் கருப்பு உள்வட்டத்தில் விரல்கள் தடம் பதிக்க, உடனடியாகப் பிறக்கிறது உயரிய சங்கீதம். வெற்றிலைச் சாறு வாயில் கசிய சதுரங்கமாடுகின்றன ஜான்சனின் வார்த்தைகள்.‘‘இசைதான் கடவுளின் மொழின்னு சொல்வாங்க. ஒவ்வொரு மனசும், உணர முடியாத ஒரு ரகசியம். அதை இசைங்கிற சாவியால் திறப்பவன்தான் கடவுள். நல்ல இசை கேட்டால் மனசுல சந்தோஷமும், மனநிறைவும் அடுத்தடுத்து நெருக்கமா இருக்கும். மொழியே தெரியாமல்கூட எதிராளியை இசையால கரைய வைச்சிடலாம்.

மியூசிக் தெரிஞ்சவங்களை, அறிஞ்சவங்களை கடவுளுக்குப் பக்கத்துல இருக்கிறவங்கன்னு சொல்வாங்க. நாமெல்லாம் கருவி சார். இசை எல்லாம் அவனுடையதுங்க...’’ எதிரே இருக்கும் கோபுரத்தை நோக்கி கைகூப்பி கும்பிட்டு கண்மூடி ஒரு நிமிடம் தியானிக்கிறார்.‘‘இப்படி இந்த மிருதங்கம் தயாரிக்கிறதும், சரிபண்ணிக் கொடுக்கிறதும் ஐந்தாவது தலைமுறை. ஆரம்பத்தில் அப்பா கிட்டே உதவியாக இருந்தேன். அவர் கத்துக்கொடுக்கிற விதமெல்லாம் கடினமாகவே இருக்கும். அவங்க முப்பாட்டன் வழிமுறையும் அப்படித்தான்.

மிருதங்கம் தயாரிக்கிறதும், அதை பயன்படுத்தும் வித்வான்களை மனம் குளிரவைக்கிறதும் பெரிய வேலை. இதில் ஸ்ருதி சுத்தம், ஆழம், எளிமை இருக்கிற மாதிரி அமையணும். தப்பாக இருந்தால், அவங்களுக்கு ஏதோ ஒண்ணு குறையும். சுத்தமாக அமைஞ்சிட்டா, அவங்க சொன்னபடியெல்லாம் மிருதங்கம் நல்லாப் பேசும். சொல் பேசுற மாதிரி நின்னு பேசும். நினைக்கிறதை வாசிக்கலாம்.

நான் தினமும் தொழிலை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி திவ்யமாக கோயிலுக்குப் போய் சாமி தரிசனம் பண்ணிட்டுத்தான் ஆரம்பிப்பேன். என்னோட கடவுளுக்குப் பெயர் கிடையாது. அம்மனாக இருந்தாலும், சிவனாக வீற்றிருந்தாலும், பிள்ளையாராக உட்கார்ந்திருந்தாலும், ஏசுவாக எழுந்து நின்னாலும் எனக்கு ஒண்ணுதான்.

மிருதங்கத்தில் சிலருக்கு சத்தம் நிறைய வேணும். இன்னும் பலருக்கு அப்படியே தாலாட்டி மீட்டிக் கொடுக்கணும். சிலருக்கு சத்தம் எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் இன்னும்னு கேட்பாங்க. பாடகர்கள் குரலை தன் வசப்படுத்தும்போது தாளத்தை இவங்க கட்டுப்பாட்டில் வைச்சுக்கணும். சராசரி வேகம், கூடுதல் வேகம்னு இதுல பல வாணவேடிக்கையெல்லாம் இருக்கு.

நான் உமையாள்புரம் சிவராமன், தஞ்சை டி.கே.மூர்த்தி, கே.வி.பிரசாத், அஸ்வின், ஈரோடு நாகராஜ், திருவனந்தபுரம் ஹரிஹரன், மதுரை சுந்தர், அக்‌ஷயராம், கோமதி சங்கர், சுனில் மாதிரியான பெரிய வித்தைக்காரர்களுக்கு மிருதங்க வேலை செய்து கொடுத்திருக்கேன்.

இப்படி இருக்கும்போதுதான் ஒருநாள் உமையாள்புரம் சிவராமன் அய்யா இங்கே வந்தார். என் பக்கத்தில் உதவியாக ஏழு வயது மகன் அருண் குமரேஷ் உட்கார்ந்திட்டு இருந்தான். வந்தவர் மிருதங்கத்தை சரி பண்ணிட்டு போயிருக்கணும். எல்லோரும் அப்படித்தான் போவாங்க. ஆனால், அவர் என் பையனை பார்த்தார். விசாரிச்சிட்டு, ‘இவனுக்கு நான் மிருதங்கம் கத்துத்தாரேன்’னு சொல்லிட்டு, ‘வீட்டுக்குப்போய் நல்ல நேரம் பார்த்துச்சொல்றேன், அனுப்பி வைச்சிடு’ன்னு சொன்னார்.

அதேமாதிரி நேரம் பார்த்து, என் பையனுக்கு பாடம் ஆரம்பிச்சார். அவர்கிட்ட சிஷ்யனா சேர யார் யாேரா காத்து நிற்கிறாங்க. வரிசை கட்டி இருக்கிற இடத்தில் அவரே விஸ்வரூபமாக எங்களுக்குக் காட்சி அளித்தார்!இப்ப எந்நேரமும் அரங்கேற்றத்திற்கு நாள் குறிச்சிடலாம்னு ஆசீர்வதித்து இருக்கார். இதையெல்லாம் தெரிஞ்ச இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு இதில் ஒரு கதை இருக்கிறது தெரிஞ்சிருக்கு. இந்த இடத்திலேயே வந்து படம் பிடிச்சார். எங்களைத் திருவையாறு அழைச்சிட்டுப்போய் சில காட்சிகள் ஷூட் பண்ணினார்.

திடீரென்று பிரபலம் ஆகிட்ட மாதிரி இருக்கு. இப்பெல்லாம் கூடிக்கூடி கடையை கைகாட்டிப் பேசுறாங்க. சினேகிதமா புன்னகைகள் நிறைய  கிளம்பி வருது. எங்கள் குடும்பம்னு ஆரம்பிச்சு கதை செய்திருந்தாலும் இது முழுக்க முழுக்க எங்க கதையில்லை. சினிமாவாக அதை அவங்க ஆக்கியிருக்கலாம்.

ஆனால், ஜி.வி.பிரகாஷ், ராஜீவ்மேனன் எல்லாம் மரியாதையான மனிதர்கள். வர்றவங்க, போறவங்க எல்லாம் நாங்க கதைக்காக தொகையெல்லாம் வாங்கியிருக்கலாம்னு நினைச்சிட்டு இருக்காங்க. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

திடீரென்று எங்க வீட்டு வாடகையும், கடை வாடகையும் உயர்த்திட்டாங்க. அப்பதான் இது தெரிஞ்சது. நாம கவனம் பெறும்போது ஒவ்வொரு விதமா இப்படி ஆகும்போல. சரி, பரவாயில்லை. அவங்க அன்புக்கு முன்னாடியெல்லாம் இது ஒரு விஷயமே இல்லை!

நாம் இருக்கிறவரைக்கும் இந்தக் கலையை பிறருக்குக் கொடுத்திட்டு போகணும். மகன் அருண் குமரேஷ் மிருதங்கத்திலிருந்தும் நாதம் துல்லியமாக வந்து மக்களை ஆச்சர்யப்படுத்தணும். ‘சுத்தமான திறமைக்கு மக்கள்கிட்டே என்னைக்கும் மதிப்பிருக்கு’ என்பதுதான் இத்தனை நாள் அனுபவத்துல நான் அறிஞ்ச ஒரே உண்மை. வாத்தியாருக்கு பையன் நல்லபடியாக நியாயம் செய்யணும்...’’ ஜான்சனின் வார்த்தைகள் தளும்புகின்றன.
அந்தநேரம் பார்த்து அவரது உணர்வுகள் தையல் பிரிந்துகொண்டதுகூட அழகுதான்!

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்