மதுரை வரலாற்றைப் பேசும் பசுமை நடை...



மதுரையின் வரலாற்று இடங்கள் பற்றி யாராவது கேட்டால், மீனாட்சியம்மன் கோயிலும், திருமலை நாயக்கர் மஹாலும்தான் பதில்களாக இருக்கும். ஆனால், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் நெடிய வரலாறு கொண்ட தொன்மையான ஒரு நகரத்திற்கு நிறைய அடையாளங்கள் இருப்பதை நடை பயணங்களின் மூலம் அறிய வைத்திருக்கிறது மதுரையைச் சேர்ந்த, ‘பசுமை நடை’ அமைப்பு! ஒன்றல்ல. இரண்டல்ல. நூறாவது நடையைத் தொட்டிருக்கிறது இந்த அமைப்பு!

மாதம் ஒன்றெனப் பயணிக்கும் நடையில் மக்களையும் பங்கெடுக்கச் செய்து மதுரையையும், அதைச் சுற்றியுள்ள வரலாற்று இடங்களையும் காட்டி, அதன் நீண்ட வரலாற்றைப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.பிப்ரவரி 10ம் தேதி நூறாவது நடையை, ‘தொல்லியல் திருவிழா’வாகக் கொண்டாடவிருக்கும் நிலையில், அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான அ.முத்துகிருஷ்ணனைச் சந்தித்தோம்.

‘‘நிச்சயம் இதை சாதனைனுதான் சொல்வேன். ஏன்னா, கடந்த ஒன்பது வருஷங்களா ‘பசுமை நடை’ தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு, சூழலியல்னு பல தளங்கள்ல பரவலான கவனத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கு. காடு, மேடு, கிராமங்கள், குகைகள், படுகைகள், ஆறுகள்னு மதுரையின் வரலாற்று நிலப்பரப்பெங்கும் தமிழர்களை அழைச்சிட்டு போயிருக்கு. 
ஆரம்பத்துல எனக்கும் வாசிப்பின் வழியாதான் இந்நகரின் வரலாறு தெரியும். ஆனா, அதை மக்களுடன் இணைந்தும், அறிஞர்களின் கருத்துகளுடனும் நேரில் பார்க்கக் கூடிய வாய்ப்பு இந்த நடையிலதான் கிடைச்சது. படிப்பதைவிட நேரடி அனுபவம் உண்மையை அப்படியே காட்டக்கூடியது. மனசுக்கும் நிறைவா இருக்கக் கூடியது. அதனால, இப்படியொரு விஷயத்தை முன்னெடுத்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...’’ என நெகிழ்ந்த அ.முத்துகிருஷ்ணனிடம் எப்படி ஆரம்பித்தது இந்த நடை என்றோம்.

‘‘2010ம் வருஷம் மதுரை அருகேயுள்ள யானைமலையை சிற்ப நகரா மாற்றும் முயற்சிகள் நடந்துச்சு. அதை எதிர்த்து அந்த மலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்திட்டு இருந்தாங்க. இந்த யானைமலையின் சிறப்பு  பற்றி ஊடகங்கள்ல பேசினாங்க. அப்பதான் நாங்க நண்பர்கள் எல்லோருமா சேர்ந்து ஒரு குழுவா இந்த மலையைப் போய் பார்க்குறதுனு முடிவெடுத்துப் போனோம். பேராசிரியர் சுந்தர் காளியும் எங்களுடன் வந்து மலையின் சிறப்பை எடுத்துரைத்தார்.

இப்படியொரு  தொன்மையான பகுதியைப் பார்த்ததை நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் உற்சாகமா பேசிக்கிட்டோம். தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்கள்ல இதை செயல்படுத்தலாமேனு தோணுச்சு. அதுதான் பசுமை நடைக்கான விதை! பிறகு, இந்நடை ஓர் இயக்கமாவே மாறிடுச்சு. ஆரம்பத்துல பத்து பேர், இருபது பேர்னு வந்து இப்ப அறுநூறு எழுநூறு பேர் வரை விரிஞ்சிருக்கு...’’ என்றவர், தொடர்ந்தார்.

‘‘யானைமலைக்குப் பிறகு, அரிட்டாப்பட்டி, கீழக்குயில்குடி, கீழவளவு, திருவாதவூர், திருப்பரங்குன்றம், வரிச்சியூர், மேட்டுப்பட்டினு நிறைய இடங்களுக்குப் போனோம். இப்ப தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கமும் எங்களுடன் இணைஞ்சார். முதல் சுற்றில் சமணர் குகைகளையும், பாண்டியர் கால குடவரைக் கோயில்களையும் பார்த்தோம். வெறுமனே பார்க்கறது மட்டுமில்லாம அதைப் பற்றிய எல்லா வரலாற்றுத் தகவல்களையும் இந்தத் தொல்லியல் அறிஞர்கள் நேரடியா விளக்குவதுதான் எங்கள் நடையின் சிறப்பு.

அது எல்லோருக்கும் நிறைவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கு. என்னைப் பொறுத்தவரையில், மதுரைக்கு இருக்கிற அடையாளம்னு பார்த்தா நீங்க எந்தத் திசையிலிருந்து வந்தாலும் உங்களை மலைகள் வரவேற்கும்! ஒவ்வொரு ஊருக்கும் ஓர் அழகியல் இருக்கு. அப்படி மதுரைக்கு மலைகள்.

சங்க காலத்தில் இந்த மலைகளில் சமணத்துறவிகள் தங்கிச் சமயப்பணி ஆற்றுவதற்காகப் பல கற்படுக்கைகளைப் பாண்டிய மன்னர்களும், வணிகர்களும் செய்து கொடுத்துள்ளனர். இதெல்லாம் தெரிஞ்சப்ப ஆச்சரியமானோம். நாங்கள் மட்டுமல்ல, அந்தந்த கிராம மக்களுமே தங்கள் கிராமத்துக்கு இவ்வளவு பெருமைகள் இருக்குறதை நினைச்சு பெருமிதமானாங்க.

பிறகு, இருபத்தைந்தாவது நடையை எட்டியதும் அதை ‘விருட்சத் திருவிழா’வாகக் கொண்டாடினோம். அடுத்து, நாற்பதாவது நடையை ‘பாறைத் திருவிழா’வாகவும், ஐம்பதாவது நடையை ‘இன்னீர்மன்றல்’ என்னும் விழாவாகவும் எடுத்தோம். கூடவே, நாங்க போன இடங்களை எல்லாம் தொகுத்து ‘மதுர வரலாறு’னு ஒரு நூலும் கொண்டு வந்தோம். இதனால, இப்ப இந்த மலைகளெல்லாம் மக்கள் புழங்குற இடமா மாறியிருக்கு!’’ எனப் பெருமிதம் கொள்ளும் முத்துகிருஷ்ணன் இன்னும் மதுரையில் போகாத இடங்கள் நிறைய இருப்பதாகச் சொல்கிறார்.

‘‘நாங்க ஒரு ஐம்பது சதவீத இடங்கள்தான் பார்த்திருப்போம்னு நினைக்கிறேன். இன்னும் நிறைய இடங்கள் போக வேண்டியிருக்கு. வெயில் காலங்கள்ல மலைப் பகுதிகளுக்குப் போக முடியாது. அந்நேரங்கள்ல பழைய கோட்டையின் எஞ்சிய பகுதி, தெப்பக்குளம், தேனூர் மண்டபம், ராமாயணம் சாவடி மாதிரியான உள்இடங்களுக்குப் போயிட்டு வருவோம். சில பகுதிகளுக்கு ரெண்டாவது தடவை கூட விசிட் அடிச்சது உண்டு.

ஆனா, எத்தனை முறை போனாலும் புது அனுபவம்தான். அந்தளவுக்கு விஷயங்கள் இருக்கு. பொதுவா, எங்க நடை காலை 6 மணிக்கு தொடங்கி ஒன்பதரை மணிக்கெல்லாம் முடிஞ்சிடும்.நான் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. என்னோட இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்காங்க. அவங்க இல்லைன்னா இந்தளவுக்கு இந்த நடையும், இயக்கமும் சாத்தியமாகி இருக்காது. நான் இல்லாதபோதும் அவங்க நடை நடத்தியிருக்காங்க!

இந்த நடைக்கு நாங்க யார்கிட்டயும் எந்தப் பணமும் வாங்குறதில்ல. ஏன்னா, பணம் வாங்கினா ஆண்கள் மட்டும்தான் இந்த நடைக்கு வந்திருப்பாங்க. தங்கள் வீட்டுப் பெண்களையோ, குழந்தைகளையோ அழைச்சிட்டு வந்திருக்கமாட்டாங்க. அதுக்காகவே இப்படி செய்தோம்.

இதுக்கு நல்ல பலனும் கிடைச்சது. இப்ப பெண்களும், குழந்தைகளும் அதிகளவு கலந்துக்கறாங்க. உள்ளூரிலிருந்து மட்டுமல்ல, சென்னை, பண்ருட்டி, திருநெல்வேலினு தமிழகம் முழுவதிலும் இருந்தும், பக்கத்து மாநிலமான பெங்களூர், பாண்டிச்சேரியிலிருந்தும் கூட நிறைய ஆர்வலர்கள் வர்றாங்க. தவிர, பள்ளிக் குழந்தைளையும் அழைச்சிட்டுப் போறோம்.

இந்த நடைக்கு நீதிபதிகள், பேராசிரியர்களுடன் ஆட்டோ டிரைவர், இளநீர் வியாபாரினு பல எளிய மனிதர்களும் வந்து கலந்துக்கறது கூடுதல் மகிழ்ச்சியைத் தருது. குறிப்பா, எங்கள் பசுமை நடை சாதி, மதங்களைக் கடந்து மக்களை இணைச்சிருக்குன்னு நினைக்
கிறேன்...’’ என்கிறவர், இதேபோல அந்தந்த ஊர்களில் நடை இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்கிறார்.

‘‘மதுரைனு இல்ல. எல்லா ஊர்களிலும் இப்படியான நடையை நடத்த முடியும். நிச்சயம் நடத்தணும். ஏன்னா, உலக வரலாற்றை, தேசிய வரலாற்றை எல்லாம் படிக்கிறோம். ஆனா, நம்மூர் வரலாற்றை தெரிஞ்சிக்க மறுக்கிறோம்.

சுற்றுலா இடங்களைப் பார்த்து ஏங்குறோமே தவிர, உள்ளூர்ல இருக்குற அழகான இடங்கள ரசிக்க மாட்டேங்கிறோம். நாங்க இப்ப ஓரளவு உள்ளூர் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கோம். இதுமாதிரி வேற ஊர்கள்லயும் செய்யலாம். அப்படி யாராவது அவங்க ஊர்ல தொடங்கணும்னு ஆசைப்பட்டா அதற்கான எல்லா பயிற்சியும் அளிக்க பசுமை நடை தயாராக இருக்கு...’’ என்கிறார் அ.முத்துகிருஷ்ணன்!

பேராச்சி கண்ணன்