கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் - 11



பித்ரு சாபம் நீக்கும் விஜயராகவன்

‘‘ஹா... ராமா... ராமா...’’ சத்தமாகக் கூட இல்லை... தீனமாகத்தான் இக்குரல் ஒலித்தது. உடனே ராமன் அங்கு ஓடோடி வந்தான். அழைத்தவரின் நிலையைக் கண்டதும் ராமன் பதறினான். ‘‘ஜடாயு... உங்களுக்கா இந்நிலை..? தந்தையை இழந்த பிறகு தங்களை அல்லவா தந்தையின் இடத்தில் வைத்திருந்தேன்? முதலில் ராஜ்யத்தை இழந்தேன். பிறகு சீதையை. இப்போது உங்களையும் இழக்கப் போகிறேனா..? என்னை மட்டும் ஏன் இப்படித் துன்பங்கள் தொடருகின்றன..?’’

சராசரி மனிதர்களைப் போலவே ராமனும் அழுது, குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவின் உடலைத் தன் மடியில் கிடத்திக் கொண்டான். ராமனின் கை பட்டவுடன் ஜடாயுவின் வலி பறந்துவிட்டது. முகத்திலும் தெளிவு பூத்தது.  ‘‘ராமா! உன் மனைவி சீதையைக் கவர்ந்து சென்றது இராவணன்தான்.

அதை என் இரு கண்களாலும் பார்த்தேன். என்னால் முடிந்தவரை பிராட்டியைக் காக்க அவனோடு போரிட்டேன். ஆனால், ஒரு பயனும் இல்லை. என்னை மன்னித்துவிடு. என்னை இந்த முதுமை மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அவன் பத்து சிரசையும் தரையில் உருட்டியிருப்பேன்...’’ தன் இயலாமையை ராமனிடம் பகிர்ந்து கொண்டார் ஜடாயு.

‘‘சீதையைக் காக்க இன்னுயிரையும் துச்சம் என நினைத்து போராடிய உமக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்...’’ ராமன் நெகிழ்ந்தான்.‘‘ராமா! நீ நினைத்தால் இந்த உலகத்தில் யாரும் பெறாத பாக்கியத்தை எனக்கு கைமாறாகத் தரலாம். எனக்காக அதைத் தருவாயா?’’
‘‘நானா..? ராஜ்ஜியம் துறந்து, மனைவியையும் தொலைத்து, ஆண்டியாக நிற்கும் என்னால் பெரியதாக தங்களுக்கு எதைக் கொடுக்க இயலும்..?’’

‘‘ராமா! திருமகள் மணாளனான உன்னை தரித்திரம் துரத்துகிறது என்று நீ ஆடிய நாடகம் எல்லாம் போதும்! உன் நாடகத்தை இந்த வையகம் நம்பலாம். நான் நம்பமட்டேன்! நீயே ஆதிமூலன், நீயே பரம்பொருள் என்பதை நான் அறிய மாட்டேன் என்று நினைத்தாயோ? இறக்கும் தருவாயில் இருக்கும் என்னை மேலும் சோதிக்காமல் தேவி பூமாதேவி சகிதமாக காட்சி கொடு! அந்த அற்புத திருக்கோலம் கண்டு கொண்டே என் ஜீவன் உன்னுடன் கலக்கட்டும்...’’

ஜடாயு இப்படிக் கேட்டதுமே மறுக்காமல் சங்கு சக்கர கதா தாரியாக, திருமகள், நிலமகள் சமேதனாக ராமர் சேவை சாதித்தார். அந்த அற்புத திருக்கோலத்தைக் கண்டுகொண்டே முக்தி அடைந்தார் ஜடாயு. ஜடாயுவை தந்தை என்று கூறிவிட்டான் ராமன். எனில் அவரது ஈமச் சடங்குகளை அவன்தானே செய்ய வேண்டும்? ஆனால், அதிலும் ஒரு சிக்கல். மனைவி இல்லாமல் ஈமச் சடங்கு செய்ய முடியாது. சீதையோ இப்போது உடன் இல்லை.

எனவே நாராயண ரூபத்திலேயே சடங்குகளைச் செய்ய ராமன் தீர்மானித்தான். ஆனால், சுற்றிலும் எங்குமே தூய்மையான இடம் தென்படவில்லை. ஆகவே தன் மடியிலேயே ஜடாயுவை வைத்து அந்திமக் காரியங்களைச் செய்ய முடிவெடுத்தான்.  சடங்குகளைச் செய்ய நீர் வேண்டுமே? அதற்காக தன் வில்லால் பூமியை ஒரு தட்டு தட்டினான். உடன் ஒரு தடாகம் உருவானது.  நாராயணன் ரூபத்தில் இருந்த ராமன்,   அந்த தடாக நீரைக் கொண்டு தன் மடியிலேயே ஜடாயுவுக்கு அந்திமக் கிரியை செய்தான்.

சடங்குகள் செய்யும் வேளையில் வந்த ஹோமப் புகையின் காரணமாக அருகில் இருந்த திருமகளின் கண்கள் கரித்தன. ஆகவே, அவள் மாலவனின் வலது புறத்திலிருந்து இடது புறத்துக்கு மாறி அமர்ந்தாள். ஜடாயுவுக்கு அமோகமாக அந்திமக் கிரியை நடந்தேறியது...
‘‘இப்பிடி தன் பக்தனுக்காக, பந்த பாசம் எதுவும் இல்லாத கடவுள் இறங்கி வந்து அந்திமக் காரியங்கள் செஞ்சார்! அப்படி அவர் செய்த கோலத்துலயே இப்பவும் பெருமாளை திருப்புட்குழில தரிசனம் பண்ணலாம். ராமரே இங்க ஈமச்சடங்குகளைச் செய்ததால இந்தக் கோயில் முன்னோர்கள் செய்த தோஷங்களைப் போக்கும் பித்ரு தோஷம் நீங்கும் தலமாகவும் இருக்கு...’’

தழுதழுத்தபடி சொன்ன நாகராஜன், ‘‘யாருமே செய்யாத தியாகத்த ஜடாயு செய்திருக்கார். தன் உடல், பொருள் ஆவி அத்தனையும் ராமனுக்கேன்னு வாழ்ந்து அவர் திருவடியை அடைந்தார். அதனாலயே இந்தக் கோயில்ல ஜடாயுவுக்குதான் முதல் மரியாதை...’’ என்றார். இதைக் கேட்ட லதாவுக்கு கண் கலங்கியது. ‘‘எவ்வளவு விஷயங்கள் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு மாமா! எங்க கோயில் பூசாரி ஏன் உங்களைப் பார்க்கச் சொன்னார்னு இப்ப புரியுது...’’ ‘‘லதா மாமி சொல்றது சரிதான் தாத்தா...’’ நெகிழ்ந்த கண்ணன் பரவசத்துடன் சொன்னான். ‘‘ஒரு பக்தனுக்காக ராமரே அந்திமச் சடங்கை செய்திருக்கார்னா... எப்பேர்ப்பட்ட விஷயம்!’’

‘‘இதுக்கே இப்படினா இன்னும் ஒரு தச்சருக்கு அந்த சுவாமியும் தாயாரும் செய்த அனுக்கிரகத்தைக் கேட்டா என்ன சொல்லுவ..?’’ கண்சிமிட்டிய ஆனந்தவல்லி, தன் கணவர் நாகராஜனைப் பார்த்து ‘‘அதையும் சொல்லிடுங்க...’’ என்றாள். நாகராஜன் ஆரம்பித்தார்.திருப்புட்குழி ஆலயத்தில் அன்று பிரம்மோற்சவம். கடுகைப் போட்டால் எடுக்க முடியாத அளவிற்கு கூட்டம். எங்கும் கோவிந்தா! விஜய ராகவா! என்ற இனிமையான பக்தி கோஷம். விஜயராகவன் பல விதமான வாகனங்களில் பவனி வந்து கொண்டிருந்தான்.

கூட்டத்தில் இருந்த தச்சர் ஒருவர் ராகவன் பவனி வரும் அற்புதக் காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்தார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நெற்றியில் மின்னிய திருநாமம் அவரது விஷ்ணு பக்தியை எடுத்துரைத்தது. குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நிமலனை நன்கு தரிசித்துக் கொண்டார் அவர். அப்போதுதான் அவரது கண்களுக்கு பெருமானின் திருமேனியை வாகனத்தோடு இறுக்கிப் பிணைத்த தடிக்
கயிறு தெரிந்தது.‘‘இதென்ன... திருமகள் சதா பேணிக் காக்கும் திருமேனி ஆயிற்றே... அந்தத் திரு மேனியையா இறுக்கமாக தடிக்கயிறால் பிணைப்பது..? பெருமானுக்கு எப்படி எல்லாம் வலிக்கிறதோ? மருந்து தடவக்கூட ஆள் இல்லையே...’’ துடித்தார் அந்த தச்சர்.

அந்தக் கயிற்றைப் பார்க்கப் பார்க்க அவருக்கு பற்றிக்கொண்டு வந்தது. கோபம் கவலையாக மாறியது. அந்தக் கவலை ஆவேசமாக உருவெடுத்தது. உடனே வீட்டுக்கு ஓடி வந்தார். ‘‘ஏதோ ஒரு பாவி செய்யத் தெரியாமல் குதிரை வாகனம் செய்து விட்டான். அதில் அந்த பரமனைப் பிணைக்க இந்த மனமில்லாதவர்கள் தடிக்கயிறைப் பயன்படுத்துகின்றனர். என்ன ஒரு அபத்தம்! என் அப்பனின் உடல் வலியை யாரும் நினைக்கவில்லை. ஆனால், நான் அப்படி இல்லை. உடன் ஒரு மரக் குதிரை வாகனம் செய்வேன்...’’

வெறி பிடித்தவர் போல் உண்ணாமல் உறங்காமல் ஓயாமல் உழைத்து ஒரு மரக்குதிரையை வடிவமைத்தார் அந்தத் தச்சர். பார்க்க அச்சு அசல் நிஜக் குதிரை போலவே அந்த வாகனம் இருந்தது. நகரும்போதோ, தானே கால்களை அசைத்து ஒரு நிஜக் குதிரை கண்ணெதிரே ஓடுவது போல் காட்சி தந்தது.

தச்சர் அந்த வாகனத்தை உடன் ஆலயத்துக்கு எடுத்துச் சென்றார். ஆலய அதிகாரிகள் அதைக் கண்டு பிரமித்தனர். பட்டர்களை அழைத்து ‘‘இதோ... இந்த இடத்தில் பரமனின் திருமேனியை வைத்தாலே போதும். கயிறுகட்டி பிணைக்கத் தேவையில்லை. எப்படி ஒரு தாய் தன் குழந்தையை கெட்டியாகப் பிடித்துக்கொள்வாளோ அதுபோல இது தானாகவே பரமனை பிடித்துக்கொள்ளும்! அதற்கு வேண்டிய இயந்திரத்தை இதனுள் வைத்துள்ளேன். இனி என் இறைவனைக் கயிறு கட்டி கொடுமைப் படுத்தாதீர்கள்...’’ என்றார் தச்சர்.

இதைக் கேட்ட அனைவரும் சட்டென்று அந்த தச்சரின் காலில் விழுந்தனர். ஒன்றும் புரியாமல் தச்சர் விழித்தார். அதைக் கண்டு கூட்டத்தில் இருந்த ஒரு பட்டர் பேச ஆரம்பித்தார்.‘‘வேதம், உபநிஷதம், புராணம், திவ்யப் பிரபந்தம்... இவை அனைத்தும் கற்றபின்பும் எங்களிடம் இல்லாத பக்தி தங்களிடம் உள்ளது! தங்களைப் போன்ற பக்தர்களுடன் வாழும் அனைவரையும் நல்ல நிலைக்கு பெருமான் உயர்த்துவார்... எங்களை ஆசீர்வதியுங்கள்...’’ ‘‘அபசாரம்... அபசாரம்... நீங்கள் கற்றவர்கள். என் கால்களில் விழக்கூடது...’’ பதறினார் தச்சர்.  

‘‘வரும் பிரம்மோற்சவத்தில் இந்த வாகனத்தில் சுவாமி பவனி வருவார். அதை நாம் அனைவரும் கண்குளிர சேவித்து மகிழலாம்..’’ என்று கோயில் அதிகாரி அறிவித்தார்.அவர் சொன்ன அந்த நந்நாளும் வந்தது. விஜயராகவன் அந்த குதிரை வாகனத்தில் ஏறி எழில் கொஞ்ச பவனி வந்தான். அதை அனைவரோடும் சேர்ந்து அந்த நாட்டு மன்னன் கண்டான்.

அவன் மனதில் பக்தி பெருக்கெடுக்கவில்லை. மாறாக, தனக்கும் இதுபோன்ற ஒரு குதிரை பொம்மை வேண்டும் என்ற ஆசைதான் வந்தது.திருவிழா முடிந்ததும் அந்த தச்சரை அழைத்து வர ஆணையிட்டான். அந்த பக்திமானும் வந்து, அரசனை வணங்கி கை கட்டி வாய் பொத்தி நின்றார்.

‘‘தச்சரே! இந்தாரும்... இதில் பல ஆயிரம் பொற்காசுகள் இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டு எனக்கும் ஒரு குதிரை வாகனம் செய்து கொடும்!’’
தச்சர் தயங்கி நின்றார்.

அதைக் கண்ட மன்னன், ‘‘மேலும் பொற்காசுகள் வேண்டுமென்றால் கேட்டு பெற்றுக்கொள்ளும். வேலை வெகு நேர்த்தியாக இருக்க வேண்டும். புரிகிறதா?’’ என்றான்.‘‘என் கலைகள் அனைத்தையும் அந்த விஜயராகவனுக்கு சமர்ப்பித்துவிட்டேன். இனி மனிதர்களுக்கென்று உழைக்க மாட்டேன். மன்னியுங்கள் மன்னா...’’ சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார் தச்சர்.

மன்னன் அதிர்ந்தான்.  

(கஷ்டங்கள் தீரும்...)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்