புத்தன் ஆவது சுலபம்!
பகவான்-44
Yes. It was too late. 1989 ஏப்ரல் 10ம் தேதி.புத்தா ஹாலில் பகவான் உரையாற்றிக் கொண்டிருந்தார்.பேசிக்கொண்டிருந்தபோதே அவருக்கு வியர்த்துக் கொட்டியது. இடை இடையே சில்லென்று தண்ணீர் குடித்துவிட்டு உரையைத் தொடர்ந்தார்.

அவரது கைகள் நடுங்குவதை அருகில் இருந்தோர் கவனித்தனர்.உதவியாளர்கள் சிலர் அருகில் வந்து, “முடியாவிட்டால் ஓய்வெடுங்கள் பகவான்...” என்றனர்.அவர்களை பார்வையாலேயே விலகச் சொல்லிவிட்டு ஓஷோ உறுதியான குரலில் முழங்கினார்.“புத்தன் ஆவது சுலபம். நீங்கள் நினைத்தால் ஒவ்வொருவருமே புத்தனாகலாம்.
 ஞானி ஆகலாம்!”சொன்னவர் அப்படியே தடுமாறினார். எழுந்து நிற்க முயற்சித்து கீழே விழுந்தார்.கூடியிருந்த பக்தர்கள் பதற்றமடைந்தனர். கைத்தாங்கலாக ஓஷோவை அவரது உதவியாளர்கள் தாங்கிக்கொண்டு, அங்கிருந்து வெளியேறினார்கள். ஹாலை விட்டு வெளியேறும்போது மக்களை நோக்கி கைகூப்பியபடியே அவர் வெளியேறினார்.
பகவான், பக்தர்களுக்குக் கொடுத்த கடைசி பொது தரிசனம் அதுதான்.அதன் பிறகு அவரை சில விஐபிகள் மட்டுமே காணமுடிந்தது.பகவானுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யவும், சிகிச்சைகள் செய்யவும் ஏதுவாக அவருக்கு நவீனமான படுக்கையறை ஒன்றை உருவாக்கி இருந்தனர்.ஏனோ அவருக்கு அந்த படுக்கையறை பிடிக்கவில்லை. தன்னை பழைய அறைக்கே மாற்றிவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
எனினும் புதிய படுக்கையறையை வீணாக்காமல் மிஸ்டிக் ரோஸ் தியான வகுப்பு நடத்தும் அறையாக மாற்றச் சொல்லி யோசனையும் சொன்னார். அங்கே ஒருமுறை பகவான் உடல் நலிவுற்ற நிலையிலும் தியானத்தில் இருந்தார்.
அப்போது நண்பரான ஒரு பத்திரிகையாளர், பகவானைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.”ஓஷோ, இந்த அறை ரொம்ப வசதியாக இருக்கிறது. இதையே நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். தேவையே இல்லாமல் தியானகூடமாக மாற்றி விட்டீர்கள்...” என்று கேஷுவலாகத்தான் அந்தப் பேச்சில் குறிப்பிட்டார்.புன்னகையோடு, “ஆறு மாதத்துக்குப் பின் நிரந்தரமாக நான் இங்கேதான் இருக்கப் போகிறேன்!” என்றார். அந்தப் பத்திரிகையாளருக்கு அப்போது புரியவில்லை.பின்னாளில் அங்குதான் பகவானுக்கு சமாதி எடுக்கப்பட்டது.
ஓஷோவின் உரைகளை பெருமளவில் நூல்களாக ஆக்கிய டாக்டர் வசந்த் ஜோஷியை அவர் சந்திக்க விரும்பினார். ஓஷோவின் வரலாற்றை எழுதிய ஜோஷி, இந்தியிலிருந்த நிறைய நூல்களை ஆங்கிலத்துக்கும் மொழிமாற்றி உலகெங்கும் கொண்டு சென்றவர். ஓஷோவின் காலத்துக்குப் பிறகு அர்ஜெண்டினாவின் ரியோடிஜெனிரோ நகரில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில், ‘குப்பையிலிருந்து ஜென் தோட்டத்துக்கு’ என்கிற புகழ்பெற்ற ஓஷோ நிறுவன திட்டத்தை முன்வைத்துப் பேசியவரும் இதே வசந்த் ஜோஷிதான்.
1989, ஜூன் மாதம் 25ஆம் தேதி. பகவானை சந்தித்தார் ஜோஷி.படுக்கையில் படுத்திருந்த நிலையிலேயே பேசினார் பகவான்.அவரது உடல் மெலிந்திருந்தது. கண்களில் மட்டும் ஒளி கூடியிருந்தது.”புதிய மனிதன், புதிய உலகம் என்று கனவு கண்டிருந்தேன். ‘அவர்கள்’ எனது கனவை முற்றிலுமாக ஒழித்துவிட்டார்கள் ஜோஷி.
இனி அது நனவாக வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்...”“அவர்கள் என்றால் அமெரிக்கர்களா?”“அமெரிக்கர்களும்தான். ஆனால், அவர்கள் மட்டுமல்ல…”“நீங்கள் விரைவில் உடல்நலம் பெறுவீர்கள். உங்கள் கனவு நிறைவேறும்...” தழுதழுத்த குரலில் ஜோஷி சொன்னார். ”நான் நலம் பெறுவேன் என்கிற நம்பிக்கையை இழந்துவிட்டேன். வலியை உணர்கிறேன். என் எலும்புகள் நொறுங்குவதைப்போன்ற வலி. இப்போதும் கூட நெருப்புக் குண்டத்தில் போட்டு என்னை வாட்டுவதைப் போல எரிச்சல்…”தன் உடல் உபாதைகளை மெல்லிய குரலில் பகவான் விவரித்துக் கொண்டிருந்தார்.ஜோஷியின் கண்களில் இருந்து நீர் அருவியாகக் கொட்டிக் கொண்டிருந்தது.
”நீங்கள் சில மாதங்கள் இங்கே இருக்க வேண்டும். உங்களுக்கு சில கடமைகள் இருக்கின்றன...” என்று வேண்டுகோள் விடுத்தார் பகவான். ஜோஷியின் சந்நியாசப் பெயர் ஸ்வாமி சத்ய வேதாந்தா. ஓஷோ சர்வதேச தியானப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அவர்தான். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் புரொபஸராக அப்போதே லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
பகவானின் வேண்டுகோளுக்கு ஏற்ப புனா ஆசிரமத்திலேயே தங்க முடிவெடுத்தார்.இந்த காலக்கட்டத்தில்தான் தன்னை இனி ‘ஓஷோ’ என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று கட்டளை இட்டார் பகவான். அதற்கு முன்பாக அவரை ‘பகவான்’ என்றுதான் பெரும்பாலானோர் அழைப்பார்கள். ‘ ரஜனீஷ்’ என்று தன்னை இனி யாரும் குறிப்பிடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
Oceanic என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு வரையறையற்ற தன்மை என்கிற அர்த்தம் உண்டு. Ocean (பெருங்கடல்) என்கிற சொல்லில் இருந்து உருவான சொல் இது. தன்னை வரம்புகளற்றவராக கருதிய பகவான், ‘ஓஷோ’ என்கிற பெயரை மிகவும் விரும்பியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆசீர்வதிக்கப்பட்டவர் என்கிற பொருளும் இப்பெயருக்கு உண்டாம்.இந்தக் காலக்கட்டத்தில் வெள்ளை நிற ஆடைகளைத் தவிர்த்து வேறெந்த ஆடையையும் அணிய ஓஷோ மறுத்தார்.
ஆசிரமத்தின் செயல்பாடுகளில் தன்னால் உடல்நலிவு காரணமாகக் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அவர் வற்புறுத்திக் கொண்டிருந்தார். குறிப்பாக கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற வேண்டும் என்று விரும்பினார்.1989, அக்டோபர் மாதம். தன்னுடைய சீடர்களை அழைத்து, இசையை அலறவிட்டு நடனமாடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவர்கள் நடனமாடுவதை வீல்சேரில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார்.
கைதட்டி உற்சாகப்படுத்தினார். உற்சாகத்தின் உச்சகட்டத்தில் சீடர்கள் ‘ஓஷோ, ஓஷோ’ என்று கோஷமிட்டுக்கொண்டே ஆடிக்கொண்டிருந்தார்கள். ‘ஓஷோ’ என்பது பெயரல்ல. பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒலியென்று அவர்கள் நம்பினார்கள்.அந்த ஆண்டு இறுதியில் ஓஷோவின் நடமாட்டம் குறைந்துகொண்டே வந்தது.1990 ஜனவரியில் புத்தா ஹால் தியான வகுப்புகளுக்கு அவர் தினமும் வரமாட்டார் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஓஷோவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று இந்த அறிவிப்பைக் கேட்டு சீடர்கள் அழுதனர். தகவல் ஓஷோவுக்குக் கிடைத்தவுடன் அவரே நேரில் வந்து சீடர்களை சமாதானப்படுத்தினார்.
”தியானத்தை நான் எந்த அளவுக்கு மதிக்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். தியான வகுப்புக்கு வரமுடியாத அளவுக்கு உடல் உபாதைகளால் அவதியுறுகிறேன். என் அவலத்தைக் கண்டு உங்களாலும் தியானத்தில் முழுமையாக ஈடுபட முடியாதோ என்கிற எண்ணத்தில்தான் இம்முடிவை எடுத்திருக்கிறேன்…”“ஆனால் ஓஷோ, உங்களைக் காணாமல் எங்களால் எப்படி இருக்க முடியும்?” என்று சீடர்கள் ஒருசேர கேட்டார்கள். அவர்களது அன்பில் கரைந்து உருகினார் ஓஷோ.
மறுநாள் புத்தா ஹாலில் நடந்த தியான வகுப்புக்கு வழக்கம்போல வந்து அவர் அமர்ந்தார்.ஆனாலும், அவரால் அங்கே கால்மணி நேரம் கூட அமரமுடியவில்லை.“எல்லோரும் தியானத்தைத் தொடருங்கள். இசை ஒலிக்கட்டும்...” என்று கூறி கைகூப்பிவிட்டு அவர் அறைக்குச் சென்று விட்டார். அன்று மாலை நடந்த கூட்டத்துக்கும் அவர் வரவில்லை.
”பகவான், தான் இருக்கும் அறையிலேயே தியானம் செய்கிறார்...” என்று சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டது.கனவிலும் நினைத்திராத மிகப்பெரிய துயரம் ஒன்றை எதிர்கொள்ளப் போகிறோம் என்று உணர்ந்து சீடர்கள் கலங்கிப் போய் நின்றார்கள்.
(தரிசனம் தருவார்)
யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்
|