தல புராணம்- முதல் சட்டமன்றம்



இன்றைய தமிழக சட்டமன்றம் உருவாக்கப்பட்டு 98 வருடங்கள் ஆகின்றன. ஆனால், அதன் வரலாறு 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வடிவம் கொண்டுவிட்டது.1773ம் வருடம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி இந்தியாவில் கவர்னர்ஸ் ஜெனரல் என்ற பதவி உருவாக்கப்பட்டது.

அதாவது மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா என்றிருந்த மாகாணங்களுக்கான கவர்னர்களுக்கு ஒரு தலைமை கவர்னர் பதவி ஏற்படுத்தப்பட்டது. அதேநேரத்தில் மாகாணங்களின் கவர்னர்களுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரமும் வழங்கப்பட்டது. பிறகு, 1833ல் கொண்டு கொண்டு வரப்பட்ட சாசன சட்டப்படி (The Charter of Act 1833) ஏற்கனவே இருந்த தலைமை கவர்னர் பதவி கவர்னர் ஜெனரல் ஆஃப் இந்தியா என மாற்றப்பட்டது.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக லார்டு வில்லியம் பென்டிங்க் பொறுப்பேற்றார். இதிலிருந்து இந்தியாவின் அரசு என்ற நிர்வாக முறையும் ஆரம்பமானது. தவிர, இந்தச் சட்டமே சட்டமன்றத் தொடக்கத்திற்கும் வித்திட்டது. ஏனெனில், முதல்முறையாக சட்டம் இயற்றுவதற்கு என்றே கவர்னர் ஜெனரலின் நிர்வாக சபையில் நான்காவதாக சட்ட அறிஞர் ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அந்தச் சட்ட உறுப்பினராக நியமனமானவர் ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்திய மெக்காலே ஆவார். ஆனால், இந்தச் சாசனச் சட்டம் மாகாண கவர்னரின் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பறித்தது. அத்துடன், அனைத்து அதிகாரத்தையும் மத்தியிலிருந்த கவர்னர் ஜெனரலின் நிர்வாக சபைக்கு அளித்தது.

தொடர்ந்து, 1853ல் ஒரு சாசனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி வங்காள தலைமை நீதிபதி, உச்சநீதி மன்ற நீதிபதி ஒருவர் ஆகியோருடன் அந்தந்த மாகாணங்களிலிருந்து ஒரு பிரதிநிதியும் சேர்த்துக் கொள்ளப்பட்டு கவர்னர் ஜெனரலின் நிர்வாக சபை விரிவாக்கப்பட்டது.
மொத்தம் 12 உறுப்பினர்கள் இந்தச் சபையில் இருந்தனர். இந்தக் கவுன்சிலே இந்தியாவில் முதல் சட்டமன்றத்தை உருவாக்க வழிவகுத்தது.

இந்நிலையில், 1857ல் ஏற்பட்ட சிப்பாய் கலகத்திற்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்திய அரசாங்கத்தை விக்டோரியா மகாராணியின் நேரடி ஆட்சியின் கீழ் இங்கிலாந்து பாராளுமன்றம் எடுத்துக் கொண்டது. பின்னர், 1861ம் வருடம் இந்திய கவுன்சில் சட்டம் இயற்றப்பட்டது. அதாவது, இந்திய சட்டமன்றங்கள் சட்டம். இதுவே, சட்டமன்றங்களின் வளர்ச்சிக்கு திருப்புமுனை ஆகும்.

இதன்படி, சட்டம் இயற்றும் அதிகாரம் மீண்டும் மாகாணங்களுக்கு அளிக்கப்பட்டது. சட்டங்களையும், ஒழுங்குவிதிகளையும் மட்டும் இயற்ற தலைமை வழக்கறிஞர் மற்றும் நான்கு முதல் எட்டு வரையிலான கூடுதல் உறுப்பினர்களை கவர்னர் தன் நிர்வாக சபையில் சேர்த்துக்கொள்ள வழிவகை செய்தது.
இந்த உறுப்பினர்கள் இரண்டாண்டு காலம் பதவி வகிப்பர் என்றும், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை இயற்ற நடைபெறும் கூட்டங்களில் மட்டுமே இவர்கள் கலந்து கொண்டு வாக்களிக்க முடியும் என்றும் இச்சட்டம் வரையறுத்தது.

‘‘சட்டம் இயற்றும்போது அரசுக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு மட்டுமே இந்த நிர்வாக சபை இருந்தது என்றாலும் பெரும்பாலான யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் இந்தச் சபைக்கு மதிப்பு கூடியது. இப்படி இயற்றப்படும் மாகாண சட்டங்களுக்கு கவர்னர் ஜெனரலின் ஒப்புதல் அவசியமானது’’ என்கிறது 1997ல் வெளியிடப்பட்ட ‘தமிழ்நாடு சட்டமன்ற பவள விழா மற்றும் சட்டமன்றப் பேரவை வைர விழா’ மலர்.
இப்படியாக, இந்தச் சபைக்கு முதன்முதலில் நியமிக்கப்பட்ட இந்திய உறுப்பினர் வி.சடகோப்பாச்சார்லு ஆவார்.

இச்சட்டத்தின்கீழ் இங்கே அமைந்த மன்றத்திற்கு, ‘மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்’ எனப் பெயரிடப்பட வேண்டுமென முயற்சிகள் மேற்
ெகாள்ளப்பட்டன. ஆனால் இது, ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை கவர்னரின் கவுன்சில்’ என்றே அழைக்கப்படும் என இந்திய அரசு முடிவெடுத்தது.
பிறகு, 1892ம் வருடம் இந்திய சட்டமன்றங்களின் சட்டம் பல்வேறு சீர்திருத்தங்களுடன் இயற்றப்பட்டது. இதற்கான கோரிக்கைகள் 1885ம் வருடத்திலிருந்தே வலுப்பெற்றன.

நாட்டின் நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்களிக்க வேண்டுமென்றும், சட்டம் இயற்றும் சபையில் பிரதிநிதித்துவக் கொள்கைப்படி தேர்தல் நடத்தி இடங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.  இதனாலேயே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி சட்டம் இயற்றும் கவர்னரின் நிர்வாக சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை இருபதாக உயர்த்தப்பட்டது.  

இதில், அரசு அதிகாரிகள் ஒன்பது பேர் அளவுக்கு இடம்பெறவும், அரசு சார்பற்றவர்கள் மீதமுள்ள இடங்களுக்குப் பொறுப்பேற்கவும் இச்சட்டம் வகை செய்தது. இதில் அரசு சார்பில்லா உறுப்பினர்கள் பல்கலைக்கழகங்கள், நகராட்சிகள், மாவட்ட வாரியங்கள் மற்றும் இதர சங்கங்களின் பரிந்துரையின்பேரில் நியமிக்கப்பட்டனர்.

‘‘இந்தச் சட்டம் முந்தைய சட்டத்தைவிட மேம்பட்டதாயிருந்தது. ஏனெனில், பிரதிநிதித்துவக் கொள்கையை மறைமுகமாகப் புகுத்தியதோடு, அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையை விவாதிக்கவும், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பொதுப் பிரச்னைகள் பற்றி வினாக்கள் எழுப்பி அரசிடம் பதில் பெறவும் இது வழிகோலியது.

இதன்படி அமைந்த மன்றத்தின் முதல் கூட்டம்  17-1-1893 அன்று மாலை 3 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள மண்டபத்தில் கூடியது. இந்தச் சட்டமன்றத்தின் முதலாவது வினாவை திரு.வி.பாஷ்யம் அய்யங்கார் என்னும் உறுப்பினரின் சார்பில் திரு.சி.சங்கரன் நாயர் எழுப்பினார். இந்த மன்றம் முதன்முதலாக 1893-94ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 2-5-1893 அன்று விவாதித்தது. விவாதத்தில் இரண்டு உறுப்பினர்கள் பங்குகொண்டனர். வாக்களிக்கும் உரிமை அப்போது இல்லை.

இச்சட்டம் அமலில் இருந்த காலத்தில் திருவாளர்கள் வி.பாஷ்யம் அய்யங்கார், சி.சங்கரன் நாயர், ஏ.டி.அருண்டேல், சி.ஜம்புலிங்க முதலியார், சி.விஜயராகவாச்சாரியார், ஐ.ரத்தினசபாபதிப் பிள்ளை, பி.எஸ்.சிவசாமி அய்யர், பொப்பிலி ராஜா, முகமது உசேன் அலிகான் பகதூர் ஆகிய அறிஞர்கள் அரசு சார்பற்ற உறுப்பினர்களாக இடம்பெற்று மன்ற விவாதங்களுக்குச் சுவை கூட்டினர்’’ என்கிறது 2010ல் வெளியிடப்பட்ட, ‘புதிய சட்டப் பேரவை தலைமைச் செயலக வளாகம் திறப்பு விழா சிறப்பு மலர்.’

இதன்பிறகு, 1909ம் வருடம் இந்திய அரசுச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் இந்திய வைஸ்ராயாக இருந்த மின்டோ பிரபுவும், இந்தியச் செயலராக இருந்த ஜான் மார்லேவும் இணைந்து கொண்டுவந்த சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்டது.  இந்திய மக்களுக்கு ஆட்சியில் அதிக பங்கு வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் காரணமாக இச்சட்டம்விதிக்கப்பட்டது. இதன்படி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை இருபதில் இருந்து 50 ஆக அதிகரிக்கப்பட்டது.

இப்போது கவர்னரின் நிர்வாக சபையிலிருந்த எட்டு உறுப்பினர்களைத் தவிர, மீதி 42 பேரில் 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டும், 21 பேர் நியமனம் மூலமும் சபைக்குக் கொண்டு வரப்பட்டனர். மக்களே அனைத்து உறுப்பினர்களையும் பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்களாக இவை அமையாவிட்டாலும் குறுகிய அளவில் மறைமுகத் தேர்தல்களை இச்சட்டம் அமலாக்கியது.

இந்நிலையில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து சட்டமன்றத்திற்கென புதிய கட்டடம் புனித ஜார்ஜ் கோட்டையில் 1910ம் வருடம் கட்டப்பட்டது. 1758ல் பிரஞ்சுக்காரர்கள் கோட்டையை முற்றுகையிட்ட போது எடுத்துச் சென்ற கரும்படிகத் தூண்களை 1761ல் பாண்டிச்சேரியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியபோது திரும்ப எடுத்து வந்தனர். இதிலுள்ள இருபது தூண்கள் புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டன.  

நிறைவாக, 1919ம் வருடம் இந்திய மக்களுக்கு ஒரு பொறுப்பான ஆட்சி அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும் ஆட்சியில் இந்தியர்களுக்கு அதிகளவு பங்கு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையாலும் ‘இந்திய அரசுச் சட்டம்’ இயற்றப்பட்டது.இச்சட்டம் இந்தியச் செயலராக  இருந்த மான்டேகுவும் இந்திய வைஸ்ராயாக இருந்த செம்ஸ்ஃபோர்டும் கொண்டு வந்த சீர்திருத்தங்களின்படி இயற்றப்பட்டது.

 வரி அல்லது தீர்வை செலுத்துவோருக்கு மட்டும் வாக்குரிமை இருந்தது என்றாலும் இந்தியாவில் முதன்முதலில் பெருமளவில் தேர்தல்கள் நடைபெற இச்சட்டமே வகை செய்தது.  இதுவரை கவர்னரின் நிர்வாக சபையின் கீழ் இருந்த சட்டமன்றம் இப்போது தனித்து இயங்கும் ஓர் அமைப்பாக மாறியது. சட்டமன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் அதிகளவில் இடம்பெற்றனர். இதுவே தனித்து இயங்கும் சட்டமன்றத்தின் தொடக்கம் எனலாம்.
இந்தச் சட்டத்தின்படி மத்தியில் மாகாணங்களவை, சட்டமன்றம் என இரு அமைப்புகள்அமைந்தன. மட்டுமல்ல, சட்டமன்றங்களில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது.

அதாவது, அரசே தன்னுடைய இலாகாக்களை ஒதுக்கப்பட்ட துறைகள்(Reserved subjects) என்றும், மாற்றப்பட்ட துறைகள் (Transferred subjects) என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தது. காவல், பாசனம், நிலவருவாய் போன்ற முக்கிய துறைகள் ஆளுநரின் நிர்வாக சபை உறுப்பினர்களின் பொறுப்பில் வைக்கப்பட்டன. இதுவே ஒதுக்கப்பட்ட துறை. கலால், பொது சுகாதாரம், உள்ளாட்சி போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இது மாற்றப்பட்ட துறை எனப்பட்டது.  

இந்த இரண்டு பிரிவுகளுக்கும் கவர்னரே அதிகாரம் மிக்கவராக விளங்கினார். இப்படியாக உருவான சட்டமன்றத்தின் பதவிக்காலம் மூன்றாண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 132. இதில் 98 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். 34 பேர் கவர்னரால் நியமிக்கப்பட்டவர்கள்.

முதல் தேர்தல் 1920ம் வருடம் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், மொத்தமுள்ள 98 இடங்களில் 63 இடங்களைக் கைப்பற்றி நீதிக்கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.   பிறகு, ‘மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்’ 1921ம் வருடம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக சர்.பி.ராஜகோபால ஆச்சாரியார், ஆளுநரால் நியமிக்கப்பட்டார். திவான் பகதூர் பி.கேசவப் பிள்ளை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளுடன் உருவான இந்த முதல் சட்டமன்றம் 1921ம் வருடம் ஜனவரி 12ம் தேதி கன்னாட் பிரபுவால் ெதாடங்கி வைக்கப்பட்டது. அப்போது கவர்னராக லார்டு வெலிங்டன் இருந்தார். மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக ஏ.சுப்பராயலு ரெட்டியார் பொறுப்பேற்றார்.

அவருடன் பனகல் ராஜா உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், கூர்ம வெங்கடரெட்டி நாயுடு வளர்ச்சித் துறை அமைச்சராகவும், ஒரிசாவைச் சேர்ந்த ஏ.பி.பட்ரோ பொதுப்பணி மற்றும் கல்வித் துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். சி.பி.ராமசாமி ஐயர் சட்ட உறுப்பினராகவும், ஏ.ஆர்.நாப் உள்துறை உறுப்பினராகவும், சர்.எம்.ஹபிபுல்லா வருவாய் உறுப்பினராகவும், சர்.சார்லஸ் தாடண்டர் நிதி உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டனர்.

சட்டமன்றத் தலைவரின் இருக்கை… சட்டமன்றப் பேரவை உருவாக்கம்… சுதந்திரத்திற்குப் பிறகான முதல் பேரவை… எல்லாம் அடுத்த வாரம் பார்ப்போம்.                      

பேராச்சி கண்ணன்

ராஜா