முதன் முதலாக காதல் நாவல் எழுதி இருக்கிறேன்!



தமிழ் இலக்கிய உலகில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எப்போதும் தனி ராஜ்ஜியம்தான். மெலிதான கதை சொல்லல், தீவிர தத்துவ விசாரம், பேரன்பு என பற்றுதலை உருவாக்கும் வண்ணங்களை நம்மில் அவர் எப்போதும் தெளித்திருக்கிறார். அகவெளிச்சம் பாய்ச்சியவர் இப்போது படைத்திருப்பது ஒரு காதல் நாவல். செப்டம்பர் 5ம் தேதி நம் இதயம் தொடக் காத்திருக்கிறது அந்த நூல்.

‘‘மனுஷனோட சந்தோஷம், துயரம் இரண்டுமே உறவுகள்தான்! அது ரொம்ப உணர்வுபூர்வமானது. உறவுகளை உணர்வோம். அது எப்படின்னு பேசப்போகிற நாவல்தான், ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை.’ நூறு சதவீதம் காதலை உண்மையாகச் சொல்லிருக்கேன். அதற்குரிய கண்ணியத்தோடும், கவனத்தோடும் செய்திருக்கேன். சொல்லப்படாத காதல் வாழ்க்கையின் நுணுக்கமான சிக்கல்களையும் இதில் அலசியிருக்கேன்.

வேறு திசையில் பயணப்பட்டுப் பார்க்கலாம் என்பதற்கான முன் முயற்சிதான். காதலால்தான் இயங்குகிறது உலகம். அளவு கடந்த சந்தோஷம் வரும். அந்த உற்சாகத்திற்கான காரணம் தெரியாது. தாள முடியாத துயரம் மனதைக் கவ்வும். அது ஏன் எனப் புரியாது.

எங்கேயோ காட்டுக்குள் கிடக்கிற ஒரு கல், திடீரென ஒரு வீட்டுக்கு முதல் கல்லாவதுபோல, கோடிப்பூக்கள் கொட்டிக்கிடக்கிற வனத்தில் ஒரு பூவைத் தேர்ந்தெடுக்கிற மனசு காதலுக்குத்தான் வாய்க்கும். காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... ஒன்றை உணர்தல்...’’ கண்களிலேயே காதல் கனியப் பேசுகிறார் எஸ்.ரா.தலைப்பே வித்தியாசமாய்...கோடை விடுமுறைக்கு சிறு நகரத்திற்கு வரும் பையனும், பெண்ணும் காதலித்துக் கொள்ளும் கதை. ஆண்டிற்கு ஒரு முறைதான் அவர்கள் சந்திக்கிறார்கள். அந்தக்காதல் எப்படி வளர்ந்தது, வாழ்க்கையில் அவர்கள் என்னவானார்கள் என்பதுதான் நாவல்.

எளிமையான, இனிமையான காதல் நினைவுகளின் தொகுப்பு என்பேன். இரண்டு இதயங்களுக்குக் கேட்கிற இன்னிசையை எல்லோருக்கும் கேட்கச் செய்கிற முயற்சி. நீளமான தலைபுதான் இளைஞர்களுக்குப் பிடிக்கிறது. என் நாவல்கள் அநேகம் ஒற்றைச் சொல்லாகவே இருக்கும். இந்தத் தலைப்பு தான் நாவலுக்கு முன்பே எட்டிக்கொண்டு வந்தது. அதுவே நாவலையும் எழுத வைத்தது.

காதல் கதைகளை தீவிர இலக்கியவாதிகள் எழுதுவதில்லை. உபபாண்டவம், யாமம், நெடுங்குருதி, துயில், சஞ்சாரம்... எனத் தீவிரமாக எழுதிவிட்டு ஏன் காதல் கதையில்..?தமிழில் காதல் கவிதைகள் நிறைய. காதல் கதைகள் குறைவே. அதுவும் காதலை மட்டுமே மையமாகக் கொண்டது வெகு குறைவு.

இன்றைய இளைஞன் கேம் ஆஃப் த்ரோன் பார்க்கிறான். அவன் படிக்க காதல் புத்தகம் எதுவுமில்லை. சினிமாவிலும் காதலை மட்டுமே முதன்மைப்படுத்தும் படங்கள் அதிகமில்லை.

இன்று காதலிக்கிற, காதலிக்க விரும்புகிறவர் படிக்கத் தரமான காதல் கதைகள் இல்லையோ என உணர்கிறேன். காதல் திருமணம் புரிந்ததால் காதலின் உணர்வை, வலியை நானறிவேன். இது என் சுய சரிதையில்லை. நான் அறிந்த காதலின் நினைவுகள் கலந்துள்ளன. எவருக்கும் இயல்பாக வரும் காதல் உணர்வுகளே இதன் அடிப்படை. ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவை மறுவாசிப்பு செய்தேன். அற்புதமான காதல் கதைகளை எழுதியிருக்கிறார். அவ்வளவுதான்... இதை எழுத உத்வேகம் பிறந்துவிட்டது.

இளைஞர்களைக் குறிவைத்து விட்டீர்களா?
நிச்சயமாக அவர்கள் தேடித்தேடி நிறையப் படிக்கிறார்கள். என் அனுபவத்தில் வாசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. என் மகன் வயது பையனுடன் தோளில் கைபோட்டுப் பேச நான் ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது! இதுவும் இந்த நாவல் எழுத அடிப்படைக் காரணம்.

கருப்பு, வெள்ளையும் கலரும் இணைந்து ஒரு படம் எப்படியிருக்குமோ அதுவே இந்த நாவல். காதலில் வெற்றியும், தோல்வியும் அடைகிறார்கள். அதுவல்ல இது. புரிந்துகொண்டவர்கள் கடைசி வரைக்கும் ஒன்றுபோல நேசிக்கிறார்கள், காதலில் ஒன்று சேர்ந்து திருமணத்தில் தோற்றுப்போனவர்களும் இதில் ஊடாடி வருகிறார்கள்!

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்