த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கும் நடிகர்!



‘குற்றம் கடிதல்’, ‘மெட்ராஸ்’, ‘பேரன்பு’, ‘வடசென்னை’ என ரசனையில் மிரட்டும் படங்களில் அசத்தல் கேரக்டர்களில் நடித்தவர் பாவெல் நவகீதன். இப்போது இயக்குநராக புரொமோஷன் ஆகியிருக்கிறார். புதுமுகங்களை வைத்து அவர் இயக்கி முடித்துள்ள படத்திற்கு ‘வி 1’ என்று டைட்டில் வைத்துள்ளார்.‘‘இந்தப் படம் ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்.
தமிழ் சினிமாவில் த்ரில்லருக்கு நல்ல மார்க்கெட் இருக்கு. என் இயக்குநர் அண்ணன்கள் பிரம்மா, பா.ரஞ்சித், வெற்றிமாறன் இவங்க எல்லாருமே என்னோட ‘வி 1’ படத்தை பார்த்துட்டாங்க. எல்லாருக்குமே படம் ரொம்ப பிடிச்சிருந்தது.

அதுவும் பிரம்மா சாருக்கு இதோட ஸ்கிரிப்ட் ஒர்க் நடக்கும்போதே தெரியும். ஏன்னா, அவரோட படங்களின் எடிட்டர் சி.எஸ்.பிரேம்குமாராலதான் இப்படி ஒரு படத்தை நான் இயக்குற வாய்ப்பு கிடைச்சது. கிட்டத்தட்ட பிரேம் சார்தான் இதோட புரொடக்‌ஷன் டிசைனர்னே சொல்லலாம். படத்தை பிரம்மா சார் பார்த்துட்டு, ஒரு பத்து நிமிஷம் எதுவும் பேசாமல் சைலண்ட் ஆகிட்டார். அதன்பிறகு, என்னை அவ்ளோ என்கரேஜ் பண்ணினார்.

வெற்றிமாறன் சார் படம் பார்க்கறதுக்கு முன்னாடி, ‘பாவெல்... எனக்கு படம் பிடிக்கலைனா பாதியில எழுந்து போயிடுவேன். நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது’னு சொல்லிட்டுத்தான் படத்தையே பார்க்க ஆரம்பிச்சார். ஆனா, அவர் முழுப்படமும் பார்த்துட்டு சந்தோஷப்பட்டார். கனி சார், சசிகுமார் சார்னு பலர்கிட்டேயும் என்னைப் பத்தி பாராட்டியிருக்கார். அதைப் போல ரஞ்சித் சாருக்கு இந்த கதை முதல்லேயே தெரியும். ‘மெட்ராஸ்’ல என்னை நடிகரா அறிமுகப்படுத்தினவர் அவர். அவருக்கும் இதுல ரொம்ப சந்தோஷம்...’’ ரிலீஸ் பரபரப்பிலும் நிதானமாக பேசுகிறார் பாவெல் நவகீதன்.  
அதென்ன இப்படி ஒரு டைட்டில்?

கதைக்கு ரொம்ப பொருத்தமான டைட்டில். ‘வி 1’ என்பது ஒரு வீட்டின் டோர் நம்பர். அங்கே ஒரு கொலை நடந்திருக்கு. புதுமுக ஹீரோ ராம் அருண் காஸ்ட்ரோ, தடயவியல் துறையில் வேலை பார்க்கறவர். ஆனா, அவருக்கு நிட்டோ ஃபோபியா. இருட்டைக் கண்டால் பயப்படுவார்.
அதனாலேயே ஒரு ஆபீஸ்ல நைன் டு ஃபைவ் வேலையில் இருக்கார். அப்படி நிலைமையில் இருக்கறவர்... கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கறார் என்பதை த்ரில்லரா சொல்லியிருக்கோம்.

புதுமுகம் காஸ்ட்ரோ, நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு பர்ஃபாமென்ஸ்ல பிச்சு உதறியிருக்கார். இந்தப் படத்துக்கு அப்புறம், நிச்சயம் அவர் ஒரு ரவுண்ட் வருவார். இன்னொரு ஹீரோவா லிஜேஷ் நடிச்சிருக்கார். ‘கபாலி’யில் நடிச்சவர். ஹீரோயின்களா விஷ்ணுப்ரியா, காயத்ரி நடிச்சிருக்காங்க.
எடிட்டர் பிரேம்குமார் என் மீது ரொம்பவும் பிரியமுள்ளவர். இந்தப் படத்தின் புரொட்யூசர்கள் அரவிந்த் தர்மராஜ், ராமு, சரவணன் பொன்ராஜ், ஹீரோ, ஹீரோயின், டெக்னீஷியன்கள்னு அத்தனை பேரையும் ஒருங்கிணைச்சவர் அவர்.

‘ஹவுஸ் ஓனர்’ கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘நிமிர்’ இசையமைப்பாளர் ரோனி ரப்ஹெல் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கார். ‘கைதி’ மாதிரி இதிலும் பாடல்களே இல்லை. படத்தின் முதல் எட்டு நிமிஷங்களுக்கு டயலாக்கே கிடையாது. சென்ஸார்ல கூட அதைச் சொல்லி பாராட்டியிருக்காங்க.

ஒரு த்ரில்லர் படத்துக்கு சவுண்ட் எஃபெக்ட்ஸ் ரொம்பவே முக்கியமான ஒண்ணு. ஸோ, ‘ரங்கஸ்தலம்’ ராஜகிருஷ்ணன் சாரை அணுகினோம். அவரும் மிக்ஸிங்ல மிரட்டியிருக்கார். உங்களப் பத்தி சொல்லுங்க..?நிச்சயமா! எங்க அம்மா ‘தாய்’ நாவல் படிச்சிட்டு எனக்கு பாவெல்னு பெயர் வச்சாங்க. நவகீதன், அப்பா வச்ச பெயர். நான் நடிகரா ஆனது எனக்கே பெரிய ஆச்சரியம். உண்மையிலேயே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். நான் ஒரு நடிகரா வருவேன்... இயக்குநராவேன்... சினிமாதான் என் கேரியர்னு எப்பவும் நான் நினைச்சதில்ல. எல்லாமே எதிர்பாராமல் கிடைச்ச வாய்ப்புகள். பயன்படுத்திக்கிட்டேன்.

பூர்வீகம் செங்கல்பட்டு. இங்கே லயோலா காலேஜ்ல சோஷியாலஜி, விஸ்காம், அப்புறம் பச்சையப்பாஸ்ல தத்துவம்னு மூணு டிகிரிகள் முடிச்சிருக்கேன். படிச்சதும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துல வேலை கிடைச்சது. அங்கே குழந்தைகளை மையமா வச்சு குறும்படங்கள் நிறைய இயக்கியிருக்கேன்.
வெறும் இருநூறு ரூபாய் செலவில் நான் இயக்கின ‘காற்றோடு’ஷார்ட் ஃபிலிம் ஐம்பதாயிரம்ரூபாய் பரிசை வாங்கிக் கொடுத்துச்சு. அங்கேதான் இயக்குநர் பிரம்மாவின் அறிமுகம் கிடைச்சது.

நான் குறும்படங்கள் இயக்குறதுல கவனம் செலுத்தினேன். அண்ணன் (பிரம்மா) தியேட்டர் டிரெயினிங்ல ஆர்வம் காட்டினார். ரெண்டு பேருமே ஒரு கட்டத்துல என்ஜிஓ வேலையை உதறினோம். இப்ப சினிமாவில் ட்ராவல் ஆகிட்டிருக்கோம். ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க ரெடியானோம். சில குறும்படங்கள்ல நடிச்சிருக்கேன். இயக்கியிருக்கேன். அந்த அனுபவத்தை வச்சு அஞ்சு ஸ்கிரிப்ட்ஸ் ரெடி பண்ணினேன்.

சினிமா புரிதல் இல்லாத காலகட்டம் அது. கிட்டத்தட்ட 110 கம்பெனிகள் ஏறி இறங்கி கதைகள் சொல்லியிருப்பேன். யாருமே என் கதைகளை தயாரிக்க முன்வரல. அந்த டைம்ல பா.இரஞ்சித் அண்ணன் என்னை ‘மெட்ராஸ்’லநடிகராக்கிட்டார். படம் ரிலீஸ் ஆனதும், என்னோட கேரக்டர் பேசப்பட்டுச்சு. ரோட்டோர தள்ளுவண்டி கடைகள்ல மக்களோடு மக்களாக சாப்பிட்டுக்கிட்டிருந்த என்னை மக்கள் அடையாளம் கண்டுக்க ஆரம்பிச்சாங்க. என்னோட செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க.

நடிகரானதும் ஜனங்ககிட்ட இருந்து விலக ஆரம்பிச்சிடுவோமோனு பயந்தேன். மக்களோடு மக்களாக பழகும்போதுதான் நமக்கு கதைகள், கேரக்டர்கள் நிறைய கிடைக்கும். பிரம்மாஅண்ணன் கூப்பிட்டு ‘குற்றம் கடிதல்’ல எனக்கொரு நல்ல கேரக்டர் கொடுத்தார். இயக்குநராக முயற்சிக்கணுமா இல்ல தொடர்ந்து நடிக்கணுமா என்கிற என்னோட குழப்ப மனநிலையை பிரம்மா சார்தான் தெளிவுபடுத்தினார்.

‘இயக்குநர்கள் ராம், வெற்றிமாறன் இவங்க கண்ணுக்கு நீ தனியா தெரிவே... அவங்க படங்கள்ல உன்னை கண்டிப்பா நடிக்க கூப்பிடுவாங்க’னு தீர்க்க
தரிசனமா சொன்னார். பின்னாளில் ‘பேரன்பு’, ‘வடசென்னை’, ‘மகளிர் மட்டும்’னு பல படங்கள்ல நடிச்சிட்டேன். இப்பவும் மூணு படங்கள் நடிச்சு முடிச்சிட்டேன். சமீபத்துல ஒரு இயக்குநர்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டேன். ‘நீங்களே டைரக்டர். நாலு பேரை அறிமுகப்படுத்துற இடத்துக்கு போயிருக்கீங்க.. உங்களுக்கு வாய்ப்பா’னு ஜாலியா கேட்டு கலாய்ச்சார்.

தொடர்ந்து நடிப்பிலும் பெயர் வாங்க விரும்புறேன். நடிப்பை விட்டுட்டா அப்புறம் சர்வைவல் பிரச்னையாகிடும். இந்தப் படத்துல தயாரிப்பாளர் என்மீது நம்பிக்கை வச்சு, கதையே கேட்காமல் என்னை கமிட் பண்ணினார். எனக்கு முழுசுதந்திரமும் கிடைக்கற டைரக்‌ஷன் சான்ஸ் வரும்போது, படமும் இயக்குவேன். ஆனால், நடிப்புக்குத்தான் எப்பவும் முன்னுரிமை குடுக்க நினைக்கறேன்.

மை.பாரதிராஜா