2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த இவர்தான் 2019ம் ஆண்டின் செல்வாக்கு மிக்க பெண்மணி!



சமீபத்தில் ‘பிபிசி’ நிறுவனம் 2019ம் வருடத்தின் செல்வாக்குமிக்க, மற்றவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கக்கூடிய 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் பெரும்பாலானவர்கள் பரவலாக அறிமுகம் இல்லாதவர்கள். தவிர, இளம் பெண்கள். அவர்களின் செயல் மற்றும் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து இந்த அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது பிபிசி.

அந்த 100 பெண்களில் அதிக கவனம் ஈர்த்தவர் மார்வா அல் - சபூனி.குண்டு மழைக்கு சிரியா பலியாகிக்கொண்டிருந்த காலம். எல்லோரும் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நாட்டைவிட்டு கிளம்பி, அகதிகளாக வெவ்வேறு இடங்களில் அடைக்கலமாகினர். ஆனால், மார்வா அல்- சபூனியோ பிறந்த ஊரான ஹோம்ஸை விட்டு வெளியேறவில்லை. தனது இரண்டு குழந்தைகள், கணவருடன் வீட்டிலேயே இருந்தார்.

அவரது உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் ‘‘வேறு இடத்துக்குச் சென்றுவிடு, நீ என்ன பைத்தியமா..?’’ என்று சபூனியிடம் மன்றாடினார்கள்.
அவர் யார் பேச்சையும் கேட்கவில்லை. சிரியாவிலேயே இருந்தார். போர்க் காலத்தின் போது மறைவான இடத்தில் ஒளிந்திருந்த அவர், இரண்டு வருடம் நிலாவையே பார்க்கவில்லை!

கட்டடக்கலை படித்த சபூனி தனது கல்வி ஆற்றலை போரில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பயன்படுத்த ஆரம்பித்தார்.
வீட்டில்தான் நகரத்தின் அமைதி இருக்கிறது என்பது அவரது அசராத நம்பிக்கை. போர்க் காலத்தில் கிடைத்த அனுபவங்கள், சிரியாவில் வீடு இல்லாமல் வாழ்பவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி குறித்து ‘The Battle for Home’ என்ற புத்தகத்தை எழுதினார்.

2016ல் கட்டடக்கலை சார்ந்து வெளியான சிறந்த புத்தகங்களில் ஒன்றாக இப்புத்தகத்தைக் கொண்டாடுகிறது ‘த கார்டியன்’ பத்திரிகை.
குண்டுகளுக்குப் பலியான பாபா நகரை மறுபடியும் எப்படி கட்டமைக்கலாம் என்பதற்கான ஒரு அருமையான திட்டத்தையும் வடிவமைத்திருக்கிறார்.
இதுபோக முதல் முறையாக அரபு மொழியில் கட்டடக்கலை சார்ந்து இயங்கும் இணையதளத்தையும் நடத்தி வருகிறார் சபூனி!

த.சக்திவேல்