டாக்டர் + தயாரிப்பாளர் + இலக்கியப் பத்திரிகை ஆசிரியர் = பிரபு திலக்



கல்லூரி மாணவர்களின் நலனில் அக்கறை காட்டிய ‘அடுத்த சாட்டை’ படத்தைத் தயாரித்தவர் பிரபு திலக். தனது ‘11:11 புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பே திருப்தியானதில், அடுத்தடுத்து சிக்ஸரடிக்க ரெடியாகிவிட்டார் அவர்.

இப்போது சிபிராஜின் ‘வால்டர்’ படத்தை தயாரித்து வரும் பிரபு திலக், ஒரு Anaesthesiology டாக்டர். அதுவும் அவர் ஒரு Pain Management, Spine And Pain ஸ்பெஷலிஸ்ட். தவிர, இலக்கியப் பத்திரிகையுலகில் கவனம் ஈர்த்த ‘அம்ருதா’வின் ஆசிரியராகவும் பன்முகம் காட்டுகிறார். நவீன கலை இலக்கிய சமூக மாத இதழான ‘அம்ருதா’ 16ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது!

‘‘என்னை இந்த ‘அம்ருதா’தான் சினிமாவுக்குள் கொண்டு வந்தது. இதுல இயங்குறதால தொடர்ந்து புத்தகங்கள் படிக்கறேன். என்னை புதுப்பிக்கறது புத்தகங்கள்தான். எங்க அம்மா (திலகவதி ஐ.பி.எஸ்.) ப்ளஸ் பாலுமகேந்திரா அங்கிள்கிட்ட இருந்து இந்தப் பழக்கம் எனக்கு வந்தது. எங்க வீட்டுல இப்ப இருக்கற புத்தகங்களை எண்ணினா ஒரு லட்சம் வரைக்கும் வரும். எத்தனையோ லைப்ரரிக்கு நாங்க டொனேட் பண்ணினது போக மீதமிருக்கும் நூல்கள் இவை!

அத்தனையும் எங்கம்மா படித்தவை. அதுல குறிப்புகளையும் தன் கையால எழுதியிருக்காங்க. காவல்துறை அதிகாரியா இருந்தவர் என்பதைத் தாண்டி எங்கம்மா, தன்னை எழுத்தாளர்... புத்தகங்களின் காதலர்னு சொல்லிக்கறதுலதான் எப்பவும் பெருமைப்படுவாங்க.

அம்மா எழுதின ‘கல் மரம்’ நூலுக்கு சாகித்ய அகடமி கிடைச்சப்ப நாங்க அவ்வளவு சந்தோஷப்பட்டோம்... எங்கம்மானு சொல்லலை... அவங்க உண்மையிலேயே ஞானச்சுடர்...’’ நெகிழும் பிரபுதிலக், ‘அம்ருதா’வுக்குள் வந்தார்:

‘‘டீன் ஏஜுல காலடி வைக்கறதுக்குள்ளயே மிகப்பெரிய எழுத்தாளர்களான ஜெயகாந்தன் ஐயாவில் தொடங்கி பிரபஞ்சன், பாலகுமாரன், அசோகமித்ரன்னு பலரோடவும் பழகியிருக்கேன். புத்தகங்களுக்கு மத்தியில வளர்ந்ததால, எனக்குள்ளயும் இலக்கிய தாகம் சுரக்க ஆரம்பிச்சது.

தமிழ் இலக்கியத்தை திசை திருப்பின மிகப்பெரிய மேதாவி களுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்..? எனக்கு கிடைச்சது நிச்சயம் வரம்தான்.

இன்னொரு பக்கம் பாலுமகேந்திரா அங்கிள், அறிவுமதி அண்ணன்னு திரைக்கலைஞர்களுடனும் பழகினேன். பிரபஞ்சன் அங்கிள் எனக்கு தாய்மாமா மாதிரி. அவருடைய பையன் கௌதமும் நானும் ஒண்ணா படிச்சவங்க. பக்கத்து பக்கத்து வீட்ல குடியிருந்தோம். அதனால பெரும்பாலும் நான் பிரபஞ்சன் அங்கிள் வீட்லதான் இருப்பேன்; இருந்திருக்கேன்.

15 வருஷங்களுக்கு முன்னாடி ஒருநாள் நான், அம்மா, அக்கா, பிரபஞ்சன் அங்கிள்னு எல்லாரும் வீட்ல ஒண்ணா உட்கார்ந்து பேசிட்டிருந்தோம். அப்ப டாபிக், பத்திரிகை தொடங்கறது பத்தி வந்தது. தரமான, தீவிர மான, சமூக அக்கறையுள்ள ஒரு பத்திரிகை ஆரம்பிச்சு உலக இலக்கியத்தை இங்க கொண்டு சேர்க்க நம்மாலான முயற்சியை ஏன் மேற்கொள்ளக் கூடாதுனு பேசினோம்; முடிவு செஞ்சோம். எழுத்தாளர் இமையம் அண்ணா தைரியம் கொடுக்க, ‘அம்ருதா’வை ஆரம்பிச்சோம். இப்ப வரை இமையம் அண்ணா பக்கபலமா இருக்கார்.  

ஆரம்பிச்ச புதுசுல, ‘அதென்ன ‘அம்ருதா’னு ஒரு பேரு’னு பலரும் கேட்டிருக்காங்க. ஏன்னா, அது சமஸ்கிருதச் சொல். அதை ஒரு தமிழ் இலக்கியப் பத்திரிகைக்கு பெயரா வைக்கலாமானு கேட்டாங்க. ஆக்சுவலா பெரியம்மா பேரு அமிர்தம்மாள். எங்கம்மாவை வளர்த்து ஆளாக்கினதுல அவங்களுக்கு முக்கியப் பங்குண்டு. தர்மபுரில இருந்து சென்னைக்கு வந்து அம்மா ஸ்டெல்லா மேரீஸ்ல படிக்க அவங்கதான் காரணம்.

எங்கம்மா, ‘இந்த நிலைக்கு நான் வர அவங்கதான் காரணம் பிரபு’னு அடிக்கடி சொல்வாங்க. அதனால பெரியம்மாவுக்கு சமர்ப்பிக்கும் விதமாதான், ‘அம்ருதா’னு பெயரிட்டோம். அம்ருதானா, மரணமற்றதுனு அர்த்தம். நல்ல எழுத்துக்கு மரணமில்லையே!

ஆரம்பிச்ச சில மாதங்கள்லயே பத்திரிகை நல்லா ரீச் ஆச்சு. எழுத்தாளர் அசோகமித்ரன் அங்கிள், பத்திரிகை வெளியானதுமே அதைப் படிச்சுட்டு நிறை குறைகளைச் சொல்வார். எழுத்தாளர் இமையம், ஓவியர் சந்துரு சார், கவிஞர் ரவிசுப்ரமணியம்னு பலரும் பங்களிப்பு செய்து உற்சாகப்படுத்தியிருக்காங்க.

தொடக்கம் போலவே இப்ப இருக்கற ‘அம்ருதா’ டீமும் வலுவானதுதான். அதனாலதான் தரம் மாறாம தொடர்ந்து உரிய நேரத்துல பத்திரிகையைக் கொண்டு வந்துட்டு இருக்கோம்.நான் மருத்துவத்துலயும் சினிமாலயும் கவனம் செலுத்தினாலும் பத்திரிகை வேலைலயும் தொடர்ந்து செய்யறேன். அச்சுக்கு போறதுக்கு முன்னாடி என்னென்ன மேட்டர்ஸ் வருதுனு பார்த்துடுவேன். ஆனா, என் டீம்தான் தேர்வு, பக்க வடிவமைப்புனு எல்லாத்தையும் பார்த்துக்கறாங்க. இந்த நேரத்துல என் நன்றியையும் பாராட்டையும் என் டீமுக்கு சொல்லிக்கறேன்...’’ மனதின் அடி ஆழத்திலிருந்து இதைச் சொல்லிவிட்டு டாபிக்கை சினிமா பக்கம் மாற்றினார்:

‘‘சினிமா என் passion. சினிமாவை நேசிச்சு, நேர்த்தியா, சிஸ்டமெடிக்கா சரியா பண்ணினோம்னா அது நமக்கு வரம் கொடுக்கும் தேவதை. சின்ன வயசுல இருந்தே உள்ளூர் சினிமால இருந்து உலக சினிமா வரைக்கும் பார்த்து விவாதிக்கும் வாய்ப்பு எனக்கு அமைஞ்சது. ஒவ்வொரு படத்தையும் பார்த்துட்டு நான் விமர்சனம் பண்ணுவேன். வீட்ல அதை என்கரேஜ் பண்ணினாங்க.

எனக்கு டாக்டர் நண்பர்கள் எத்தனை பேர் இருக்காங்களோ அதுக்கு சமமா சினிமாலயும் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. நான் பார்த்து, ரசிச்சு, பிரமிச்ச படங்கள் பத்தி ‘அம்ருதா’ல எழுதுவேன். என் மனைவி ஸ்ருதியும் சினிமா நாலெட்ஜ் உள்ளவங்க. அதனால வீட்ல சினிமா பத்திதான் பெரும்பாலும் பேசுவோம்!’’ என்று சொல்லும் பிரபு திலக், திரைப்படக் கல்லூரியிலும் படித்திருக்கிறார்; எம்பிபிஎஸ்ஸும் படித்திருக்கிறார்:

‘‘இப்படி சொன்னா அர்த்தம் மாறிடும்! ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல எனக்கு சீட்டு கிடைச்சது. சேர்ந்துட்டேன். அப்ப எம்பிபிஎஸ் சீட்டும் கிடைச்சது. ‘ப்ரொஃபஷனலா ஒரு டிகிரி முக்கியம்’னு எங்க தாத்தா விரும்பினார். எனக்கும் மருத்துவம் படிக்கணும்னு தோணிச்சு. ஸோ, எம்பிபிஎஸ் படிச்சேன், அதுவும் சின்சியரா நேசிச்சு படிச்சேன்.

ஸ்பெஷலிஸ்ட்டா ஆக எதை செலக்ட் பண்ணலாம்கிற நிலை வந்தப்ப நான் வலிகள்... அதுவும் தீராத வலிகளை டிக் செஞ்சேன். ஏன்னா, தீராத வலிகளை குணப்படுத்துவது மருத்துவருக்கு சவாலான விஷயம். எதை வேணும்னாலும் பகிர்ந்துக்கலாம்... ஆனா, வலியை? அவங்கவங்கதான் அனுபவிக்கணும்.

அதனாலயே எம்டி கோர்ஸ் சேர்ந்ததுமே அனஸ்தீஸியாலஜியை செலக்ட் பண்ணி படிச்சேன். அப்புறம் அதுக்கு மேலயும் ஸ்பெஷலைஸ்டு படிப்பு படிச்சு, பலருக்கு மூட்டுவலி, முதுகுவலி, முழங்கால் வலி எல்லாம் குணப்படுத்தியிருக்கேன்; 18 வருஷங்களா குணப்படுத்திட்டும் வர்றேன்...’’ என்ற பிரபு திலக், தயாரிப்பு அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்:  

‘‘எந்தப் படத்தையும் குறை சொல்லக் கூடாது என்பது என் பாலிசி. நல்ல படம் கொடுக்கணும்னுதானே எல்லாரும் உழைக்கறாங்க? சினிமா டீம் ஒர்க். ஒவ்வொரு படத்துக்கு பின்னாடியும் முந்நூறு பேராவது இருக்காங்க. ஒரு படத்தை எடுத்து முடிக்க குறைஞ்சது 30 - 40 நாட்களாகும். அப்ப அந்த முந்நூறு பேரும் பசி, தூக்கம், குடும்பத்தை எல்லாம் மறந்து அந்தப் படத்துக்காகத்தான் உழைக்கிறாங்க.

சினிமால என்னை பிரமிக்க வைக்கற விஷயம் இது. ஒரு லைட்மேன்கூட வெறும் சம்பளத்துக்காக மட்டும் உழைக்கறதில்ல. அதையும் தாண்டின ஒரு டெடிகேஷன் உண்டு.1996ல சினிமாவுக்கு வந்தேன். ஒரு படத்தை இயக்க ஆரம்பிச்சேன். எங்கம்மா எழுதிய ‘அவசரம்’ சிறுகதையை ஸ்கிரிப்ட்டா பண்ணியிருந்தேன். அதே பெயர்ல படம் பண்றதுக்கான வேலைகளைத் தொடங்கினேன்.

இதுக்கான வேலைகள்ல இறங்கினப்பதான் சமுத்திரக்கனியின் அறிமுகமும் நட்பும் கிடைச்சது. சில காரணங்களால அந்தப் படம் டேக் ஆஃப் ஆகலை.
23 வருஷங்களுக்குப் பிறகு ஒருநாள் ‘படத் தயாரிப்புல இறங்கலாம்னு இருக்கேன்’னு வீட்ல சொன்னேன். கிரீன் சிக்னல் காட்டினாங்க. உடனே சமுத்திரக்கனிகிட்ட பேசினேன். அடுத்தநாளே ஆரம்பிச்ச படம்தான், ‘அடுத்த சாட்டை’.
 
நான் தயாரிக்கற படத்துல முதல் நாள் பூஜைல இருந்து படம் முடிஞ்சு பூசணிக்காய் உடைக்கற நாள் வரை கூடவே இருந்து, ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டராவே மாறி உழைப்பேன். பிடிச்ச வேலை... அதனால ரசிச்சு பண்றேன். இந்த கண்டிஷனுக்கு சம்மதிக்கற இயக்குநர்களை வைச்சுதான் நான் படமே தயாரிப்பேன்.

‘அடுத்த சாட்டை’ எனக்கு நிறைவளித்த படம். இப்படம் ரிலீசானப்ப சென்னைல தொடங்கி கன்னியாகுமரி வரை நான்கு நாட்களுக்கு விடாம மழை. வசூல் பாதிச்சது. ஆனா, ஒரு நல்ல படத்தை தயாரிச்சிருக்கேன்னு திருப்தி இருக்கு.இப்ப 250 கதைகள் கேட்டு, ஸ்கிரிப்ட்டுகள் படிச்சு ஒரு கதையை தேர்வு செஞ்சு சிபி சத்யராஜ் நடிக்க ‘வால்டர்’ படமா தயாரிச்சிருக்கேன். தொடர்ந்து படங்களைத் தயாரிக்கவும் போறேன்.

என்னைப் புதுப்பிக்க தொடர்ந்து புத்தகங்கள் படிக்கறேன். சினிமால நான் கவனம் செலுத்தவே என் மனைவி ஸ்ருதி தான் காரணம். எந்தவொரு அழகான கோலமும் ஒரு புள்ளில இருந்துதான் தொடங்குது. அது மாதிரி ஒரு படத்துக்கான புள்ளி, ஸ்கிரிப்ட்தான்.

எழுத்து அழகா இருந்தா, படமும் அழகா வரும். ‘நல்ல சினிமா என்பது நல்ல எழுத்தில் இருந்து உருவாகும்’னு முழுமையா நம்புறேன். அறிமுக இயக்குநர்கள்கிட்டயும் இதையே எதிர்பார்க்கறேன்...’’ புன்னக்கும் பிரபு திலக்குக்கு அதுல்யா என்ற மகளும் மகோர்ஜித் என்ற மகனும் இருக்கிறார்கள்.
‘‘எங்க காதல் பரிசு!’’ கண்சிமிட்டுகிறார் பிரபுதிலக்.

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்