அக்‌ஷய பாத்ரா சத்துணவில் நுழையும் இந்துத்துவா!



தமிழகத்துக்கு உணவு அரசியல் ஒன்றும் புதிதல்லதான். ஆனால், இப்போதைய உணவு அரசியலில் இந்துத்துவா நெடியும் சேர்ந்து அடிப்பது சத்துணவு ஊழியர்களையும், கல்வியாளர்களையும் கலக்கமடையச் செய்துள்ளது. கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. இதனை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘இஸ்கான்’ அமைப்பின் அக்‌ஷய பாத்ரா பவுண்டேஷனுக்கு அளிக்கப்பட்டது. இப்போது சென்னையில் உள்ள 24 மாநகராட்சி பள்ளிகளில் 5,785 மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி வருகிறார்கள். இது தமிழகம் முழுக்க வரும் ஆண்டுகளில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.  

இந்நிறுவனம் உணவு தயாரிப்பதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் 20 ஆயிரம் சதுர அடியையும், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 35 ஆயிரம் சதுர அடியையும் தமிழக அரசு ஒதுக்கி அடிக்கல் நாட்டியது பலத்த சல சலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலங்களின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் என்கின்றனர். அதுமட்டுமல்ல.

இந்த அக்‌ஷய பாத்ரா நிறுவனம் பூண்டு, வெங்காயம் இல்லாத சாத்வீக உணவை மட்டுமே கொடுப்பதாகக் கூறப்படுகிறது. முட்டையை அறவே தவிர்த்து விடுகிறது. ஏற்கனவே, ஒரிசாவில் உணவுடன் முட்டை வழங்க முடியாது என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் கையில்தான் தமிழக ஏழை மாணவர்களின் பசியைப் போக்குவதற்காக இயங்கி வரும் சத்துணவுத் திட்டத்தை இப்போதைய அதிமுக அரசு கொடுத்துள்ளது. இது சத்துணவுத் திட்டத்தைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.  இதுபற்றி குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினோம்.

‘‘சத்துணவுல நல்ல கட்டமைப்பு உள்ள மாநிலம்னு தமிழகத்தை சொல்லலாம். இங்க நண்பகல் உணவு என்பது நூறாண்டு வரலாறு கொண்டது. நீதிக்கட்சி காலத்துல இருந்தே நாம் சோறு போட்ட ஆட்கள். ஆனா, அப்ப அது அரசின் திட்டமா இல்லாம பெரும் வணிகர்கள், நிலக்கிழார்கள் உதவியுடன் நடந்துச்சு. பின்னாடி காமராஜர் முறைப்படி அரசின் திட்டமா அறிவிச்சார். அதுக்கு மத்திய அரசின் திட்டக்குழு காசு தரல. அப்படியும் ஊர்ல போய் துண்டு ஏந்தி நடத்துவேன்னு நடத்திக் காட்டினார்.

அப்புறம், எம்ஜிஆர், அதை சத்துணவுத் திட்டமா விரிவுபடுத்தினார். அதுக்கு முறைப்படி ஆயாக்கள், ஆசிரியர்கள் போட்டு சமையற்கூடம் கட்டி, அதை ஒரு சிறந்த கட்டமைப்பா மாத்தினார். கலைஞர் முதலமைச்சர் ஆனதும் சத்துணவுடன் முட்டை போட்டார்.  முட்டை  சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கச் சொன்னார். இப்படி இருக்குற கட்டமைப்புக்குள் ஒரு நிறுவனத்தைப் போய் விடுறீங்கன்னா அந்தக் கட்டமைப்பை உடைக்கிறீங்கன்னுதானே அர்த்தம்?

நான் தனியார் அமைப்புகள் பள்ளிக்குள் பணி செய்றதைத் தடுக்கல. ஆனா, இதுக்குப் பின்னாடி இருக்குற பிரச்னைகள் என்னனு பார்க்கணும்.
அக்‌ஷய பாத்ரா நிறுவனத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி, தேவையான இடம்னு எல்லாம் கொடுக்கிறீங்க... இதன் வழியா சைவம் சாப்பிடுகிறவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற மனநிலையைத்தானே ஏற்படுத்தறீங்க..?

எப்படி சைவர்கள் வாயில் அசைவ உணவு திணிப்பது வன்முறையோ அப்படி அசைவர்கள் வாயில் சைவ உணவைத் திணிப்பதும் தவறுதான். அதை இந்த அரசு ஏன் செய்யுது?இந்த சைவத்துல கூட பூண்டு, வெங்காயமும் சேர்க்கிறதில்ல. ஆனா, பூண்டு, வெங்காயத்துல இருக்கிற மருத்துவக்குணம் வேறெதிலும் இல்ல. பூண்டு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டதுனு மருத்துவர்கள் சொல்றாங்க. வெங்காயத்திலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கு.

பள்ளிக்கூடங்கள்ல சத்துணவு சாப்பிட வர்ற பெரும்பாலான குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கறவங்க. ரத்தசோகை உள்ளவங்க. பூண்டு, வெங்காயம் இல்லாம கொடுத்தா அதிகமான ரத்தசோகையும், நோய் எதிர்ப்பு சக்தியில்லா குழந்தைகளாகவும்தான் வளர்வாங்க.  
அடுத்து, இந்தத் திட்டம் ஒருகட்டத்துல மையப்படுத்தப்பட்ட சமையலறைல கொண்டுபோய் விடும். இன்னைக்கு உணவை ஓர் இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு போறது பெரிய விஷயம்.

உணவு உற்பத்தி பண்ற இடம், பயண ேநரம், வாகனம் எல்லாம் முக்கியம். அப்படி போகும்போது தூசிகள், குப்பைகள் உணவுல கலந்தா குழந்தைகள் நிலை என்னாகும்?’’ என்று கேட்கும் தேவநேயன், கல்வித்துறையில் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும் அது குறித்த கலந்தாய்வையோ விவாதத்தையோ இந்த அரசு நடத்துவதில்லை என்கிறார்:

‘‘ஆசிரியர்கள், நிபுணர்கள், மூத்த கல்வியாளர்கள்னு யாருகிட்டயும் பேசறதில்ல. இஷ்டத்துக்கு அரசா எல்லாத்தையும் அமல்படுத்துது.
சுடச்சுட கொடுக்கற உணவுல இருக்குற சத்துகள், ஆறின உணவுல இருக்குற பிரச்னை, ஓர் இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு உணவு கொண்டு போகும்போது எப்படி கொண்டு போகணும்… இப்படி எதையும் விவாதிக்கிறதில்ல.

இது கடைசியில் டப்பாவில் அடைச்ச உணவில் வந்துதான் நிற்கும். அப்புறம், இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஏதாவது டெண்டர் விட்டாங்களானு கேட்டா அதுவுமில்ல. அஞ்சாறு நிறுவனங்களுக்கு வாய்ப்பளிச்சு, தர நிர்ணயம் செய்து, மூணு மாசம் டிரையல் பார்த்து நல்லா பண்றவங்களுக்குக் கொடுக்கிறதை விட்டுட்டு… எடுத்தேன் கவிழ்த்தேன்னு செய்றது லட்சக்கணக்கான குழந்தைகளின் வயித்துல அடிப்பதற்கான விஷயம்தான்.  

பதினைஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி உச்சநீதிமன்றமே தமிழகத்திற்குப் போய் பார்த்துட்டு வந்து செய்யுங்கனு மத்த மாநிலங்களுக்கு சொன்ன திட்டம் இது. ‘ரைட் டூ ஃபுட்’ என்பதை உறுதி செய்ய ஒரு மாடலா இருந்த மாநிலம் தமிழகம்தான். அப்படிப்பட்ட சிறந்த கட்டமைப்பு ஒன்றை ஏன் தகர்க்கணும்?என்னுடைய கருத்ெதல்லாம், எந்த நிறுவனமா இருந்தாலும் முறையா முன்கதவு வழியா சரியான முறைல வரணும் என்பது தான்...’’ அழுத்தமாகச் சொல் கிறார் தேவநேயன்.  

இந்தக் காலை உணவுத் திட்டத்தை முதல்முதலாக அரசின் செவிகளுக்குக் கொண்டு சென்றது தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்தான். அதன் மாநிலப் பொருளாளர் பேயத்தேவனிடம் பேசினோம். ‘‘இந்தத்திட்டம் ஆரம்பிச்சு 38 வருஷங்களாச்சு. ஆனா, இன்னமும் நாங்க பகுதிநேர ஊழியராவே பணி செய்றோம். எங்களை முழுநேர ஊழியரா மாத்துவதற்கான கோரிக்கையாவே காலைல டிபன் கொடுக்கக் கேட்டிருந்ேதாம்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காலை உணவுத் திட்டத்தை அரசு ஏற்று நடத்தும்னு சட்டசபையில் அறிவிச்சார். ஆனா, அது நடக்காம போயிடுச்சு. இப்ப இவங்க காலை டிபனை தனியார் வசம் கொடுக்கறாங்க. பாத்திரங்கள், சமையலறைனு கட்டமைப்பு முழுவதும் நம்மகிட்டதான் பலமா இருக்கு.

அப்படியிருக்கறப்ப அரசு தனியாருக்கு இடம் ஒதுக்கி, பணமும் கொடுத்து அவங்கள செய்யச் சொல்றது என்ன நியாயம்?

அந்தத் தனியார் நிறுவனமும் ஒரு மதத்தை - குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தே இருக்குது. பூண்டு, வெங்காயம், முட்டை சேர்க்கக் கூடாதுனு சொல்லுது. இந்த முட்டையை எவ்வளவு கஷ்டப்பட்டு கலைஞர் கொண்டு வந்தார்னு எங்களுக்குத்தான் தெரியும். அதனால, இந்த முயற்சியே சத்துணவுத் திட்டத்தை ஒழிப்பதற்கானதுதான்.   

கடந்தாண்டு பட்ஜெட்ல உணவு தயாரிப்புச் செலவுக்கு 98 கோடி ரூபாய் ஒதுக்கினாங்க. ஆனா, 48 கோடி ரூபாய்தான் கொடுத்தாங்க. மீதிப் பணம் வரல. அப்புறம், 750 குழந்தைகளுக்கு ஒரு சிலிண்டர்னு வைச்சிருக்காங்க. ஆனா, 450 ரூபாய்தான் தர்றாங்க. மீதிப் பணத்தை எங்க கைல இருந்துதான் போடறோம்.

இப்ப அந்தத் தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய இடத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய்னு செய்திகள் வருது. இந்தப் பணம் இருந்தா எங்க எல்லாரையும் முழுநேர அரசு ஊழியரா ஆக்கிடலாமே! எங்கள வச்சே இந்தத் திட்டத்தைச் சிறப்பா கொண்டு வரலாமே!

இதெல்லாம் செய்யாம இப்படி தனியாருக்கு தாரை வார்க்கறது சரிதானா? நாளைக்கு அந்தநிறுவனம் போடும் உணவுல ஏதாவது ஃபுட் பாய்சன் ஆகிட்டா நாங்கதான் பொறுப்பாவோம். சத்துணவு சரியில்லனு எங்களைத்தான் மக்கள் பழிப்பாங்க. 

அதனால, இந்தக் காலை உணவுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்தணும்... முன்பு மாதிரியே அது எல்லா மத சமூகத்துக்கும் ஏற்றதா இருக்கணும்...’’ என்கிறார் பேயத்தேவன்.  அதிமுக அரசு இதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.  

பேராச்சி கண்ணன்