நியூஸ் சாண்ட்விச்



தெருக்களில் குப்பையை அகற்றும் ஸ்பைடர்மேன்

இந்தோனேசியாவில் வசிக்கிறார் ரூடி ஹார்டோனோ. அவர் குடியிருந்த பகுதியைச் சுற்றியும், அருகிலிருந்த கடற்கரையிலும் அதிகமான குப்பைகள் தினமும் மலைபோல குவிய ஆரம்பித்தன. இவற்றை அகற்ற முடியாமல் அரசும் தத்தளித்தது.இதனைக் கண்ட ரூடி, தானே அப்பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். ஆனால், அவருக்கு உதவி தேவைப்பட்டது. அருகில் வசிப்பவர்களை அணுகியபோது யாருமே இவரைப் பொருட்
படுத்தவில்லை.

எனவே மக்கள் ப்ளஸ் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, ஸ்பைடர் மேன் போல் உடையணிந்து குப்பைகளை அகற்றத் தொடங்கினார்.
போதாதா..? இப்போது நிதியும் குவிந்து வருகிறது. ஊரும் சுத்தமாகி வருகிறது!

மாதவிடாயின் போது, 300 பேருக்கு சமையல் செய்த பெண்கள்

மாதவிடாய் சமயத்தில் பெண்கள் சமையலறைக்குள் செல்லக் கூடாது என்ற நம்பிக்கை, இப்போது நகரங்களில் மட்டுமல்ல... கிராமங்களிலும் இல்லை.இந்நிலையில் ஆன்மிகத் தலைவர் ஒருவர் சமீபத்தில், ‘மாதவிடாய் காலத்தில் சமையல் செய்யும் பெண்கள் அடுத்த பிறவியில் நாயாகப் பிறப்பார்கள்...’ என்று சொல்லப் போக... அது பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து, தில்லியில் 28 பெண்கள், ‘மாதவிடாய் விருந்து’ என்ற பெயரில் 300 பேருக்கு, தங்கள் மாதவிடாயின்போது சமையல் செய்து உணவு அளித்தனர். இந்நிகழ்ச்சியை ஆதரிக்கும் விதத்தில், தில்லியின் துணை முதல்வர் இதில் கலந்துகொண்டு உணவருந்தினார்.

மத்திய சுகாதார அமைச்சகம், சட்டப்படி புகைபிடிக்கும் வயதை 18ல் இருந்து, 21 ஆக மாற்றியமைக்கும் திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது.

பெரும்பாலான இளைஞர்கள் திரைப்படங்களைப் பார்த்தும், நண்பர்களின் அழுத்தம் காரணமாகவும்தான் புகைபிடிக்க ஆரம்பிக்கின்றனர். எனவே புகை பிடிப்பதற்கான வயது வரம்பை நிர்ணயித்தால்... சினிமாவைப் பார்த்து புகைக்க விரும்பினாலும் சட்டத்துக்கு பயந்து புகைக்க அஞ்சுவார்கள்... பிறகு உரிய வயது வந்ததும் அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டுவிடுவார்கள்... புகைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார்கள்... என்று நினைக்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்