லைட்டா சரக்கடிச்சேன்... ஆனா, குடிப்பது தப்பு பாஸ்!



மும்பை ஹீரோயின்களில் கோலிவுட் வந்து இன்னமும் தமிழ் கற்றுக்கொள்ளாதவர்களில் ஸ்ரேயாவுக்கு தனி இடம் உண்டு! டோலிவுட் சென்றாலும் அதே, சேம் பிளட். தஸ்புஸ் டாக்கிங்தான்.தமிழில் ‘சண்டக்காரி’, ‘நரகாசூரன்’ படங்களில் நடித்து முடித்துவிட்டவர், இந்த லாக்டவுனில் கணவர் ஆந்த்ரேயின் சொந்த தேசமான பார்சிலோனாவில் படபடக்கிறார்.

‘‘இந்தியாவை ரொம்ப மிஸ் பண்றேன். நான் சாப்பாட்டுப் பிரியை. மும்பையில் அடிக்கடி நிறைய ரெஸ்டாரண்ட்டுக்கு விசிட் அடிப்பேன். அங்கே பரோட்டா, தோசை எல்லாம் ஒரு வெட்டு வெட்டுவேன். அதுவும் சாட் ஃபுட்ஸ்னா இன்னும் ஸ்பெஷல்.என் கணவர் ஆந்த்ரேயி ஆர்கானிக் ரெஸ்டாரண்ட்ஸ் நிறைய நடத்துறார். அப்படிப்பட்டவரே மும்பையில் கிடைக்கற பானி பூரியை சப்புக்கொட்டி சாப்பிடுவார்னா பார்த்துக்குங்க.

இப்ப மும்பை போக முடியாததால, அவரும் பானி பூரியை மிஸ் பண்றார். ‘பானி பூரி’னு புலம்பவே ஆரம்பிச்சிட்டார்! சே... பாவம்னு பரிதாபப்பட்டு டான்ஸ், ஃபிட்னஸ் ஒர்க் அவுட்டுக்கு மத்தில வீட்ல அவருக்கு பானி பூரி பண்ணிக் கொடுத்தேன்...’’ மாறாத அக்மார்க் சிரிப்பில் இப்பொழுதும் அசரடிக்கிறார் ஸ்ரேயா.அப்ப நீங்க கோலிவுட்டை மிஸ் பண்ணலியா..?

என்ன... போட்டு வாங்கறீங்களா?! தமிழ் இண்டஸ்ட்ரி எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு திருப்புமுனை கொடுத்த படமே ‘சிவாஜி’
தானே? ரஜினி சார், ஷங்கர் சார் காம்பினேஷன்ல என்னை பட்டிதொட்டி எல்லாம் அறிமுகப்படுத்தினது தமிழ் ‘சிவாஜி’தானே? ஹோம்லி தமிழ்செல்வியா அதுல க்ளாமர்லயும் ஸ்கோர் செய்திருப்பேன்!

உடனே கமல் சாரை பிடிக்காதானு தலை முடியை பிடிச்சு உலுக்காதீங்க! அவர் கூட படம் பண்ணலைனாலும் அவர் நடிச்ச படங்கள் ரொம்பப் பிடிக்கும்.இப்ப ஷங்கர் சார் அசிஸ்டெண்ட் மாதேஷ் சார் இயக்கத்துல விமலுடன் ‘சண்டக்காரி’, அரவிந்த்சாமி சாரோடு ‘நரகாசூரன்’ நடிச்சு முடிச்சிட்டேன். அதிலும் ‘நரகாசூரன்’ல என் கதாபாத்திரம், என் ரியல் லைப் கேரக்டருக்கு நெருக்கமானது. அந்தப் படம் பார்த்துட்டேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அரவிந்த்சாமி சார், டைரக்டர் கார்த்திக் நரேன்னு பக்காவான டீம். அதோட ரிலீஸுக்கு நானும் காத்திருக்கேன்.

உங்க சக ஹீரோயின்களில் த்ரிஷா, சமந்தா ரெண்டு பேர்ல யாரைப் பிடிக்கும்..?
ரெண்டு பேரையுமே! த்ரிஷாவோட சேர்ந்து நடிச்சிருக்கேன். அவங்கள பத்தி நல்லா தெரியும். ரொம்பவே டேலண்டட் ஹீரோயின். தெலுங்கு ‘மனம்’ல நடிக்கும்போது சமந்தாவோட நெருங்கிப் பழகியிருக்கேன். ரொம்பவும் கலகலனு இருப்பாங்க. சூப்பர் ஃபன் பேபி.

‘இந்தப் படத்துல ஏன்டா நடிச்சோம்’னு எந்தப் படத்தைப் பார்த்து நொந்திருக்கீங்க..?
நிறைய பாஸ்! ஆனா, லிஸ்ட்டை கேட்காதீங்க. அப்புறம் சாமி கண்ணைக் குத்தும்! அப்படி நடிச்சதை வருத்தம்னு சொல்லிட முடியாது. ஜஸ்ட் ஒரு ஃபீல். அவ்ளோதான்.சரி, ஃபாரின்ல சரக்கு ஃபேமஸாச்சே..?

இந்த கேள்வியை ஏன் ஆரம்பிச்சீங்கனு புரியுது. என் கணவரோட பர்த் டேவுக்கு லைட்டா சரக்கு அடிச்சேன். அதையும் லாக் டவுன் அப்ப சோஷியல் மீடியாவுல லைவ்ல பண்ணினேன். அதைப் பார்த்துட்டு இப்படிக் கேட்கறீங்கனு நினைக்கறேன்.

சரக்கு அடிப்பது சரினு சொல்ல மாட்டேன். ஆனா, ஏப்ரல்ல என் கணவருக்கு ஹேப்பி பர்த் டே வந்தப்ப வெளில போக முடியலை. கொரோனா காரணமா ஃப்ரெண்ட்ஸுக்கு பார்ட்டி கொடுக்க வழியில்ல. நாங்க ரெண்டு பேர் மட்டு மே வீட்ல இருந்ததால, பர்த்டேவை சிம்பிளா கொண்டாடினோம். அதுல ஹைலைட்டா சரக்கும் சேர்ந்திடுச்சு!கொஞ்சமாத்தான் சிப் பண்ணினேன்! அதுகூட அவரோட பர்த் டேவுக்காக! மத்தபடி குடிக்கறது தப்பு பாஸ்!                               

மை.பாரதிராஜா