கலைஞர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்... ஜெயலலிதா அதை தொடர்ந்தார்...இப்போதைய அதிமுக அரசு அதை ரத்து செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது!

கொரோனா காலத்தில் எல்லா தொழிலும் முடங்கிய நிலையில் விவசாயம் மட்டுமே தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கும் முடிவு கட்டுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது மத்திய அரசு.

மத்திய அரசு கொண்டு வரும் மின்சாரச் சட்டத்திருத்த வரைவில் இலவச மின்சாரம், சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கக் கூடாது… என்ற புதிய விதி இடம்பெற்றுள்ளது.அவ்வாறு இச்சட்டம் திருத்தப்பட்டால் தமிழகத்தில் 24 லட்சம் பம்ப் செட்டுகளுக்கும், 11 லட்சம் குடிசைகளுக்கும், 2.1 கோடி ஏழை, எளிய மக்கள் பயன்படுத்துகிற முதல் 100 யூனிட்டுகளுக்கு வழங்கப்படுகிற கட்டணச் சலுகையும், 78 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிற இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்.

தமிழகத்தில் இப்போது விவசாயத்துக்கு 21 லட்சத்துக்கும் அதிகமான இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இலவச மின்சாரம் ரத்தானால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்புடன் சாகுபடிப் பரப்பளவும் குறையக்கூடிய அபாயம் ஏற்படும் என பதறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
எனவேதான் “இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வது என்பது விவசாயிகள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கருணையற்ற பேரிடர் தாக்குதல்...” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவிலேயே முதன்முறையாக, அனைத்து விவசாயி களுக்கும் இலவச மின்சாரம் வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முன்னோடித் திட்டத்தை, கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி, ‘நல்ல சமயம் இது; நழுவ விடக்கூடாது’ என்றெண்ணி, அதைத் தவறாகப் பயன்படுத்தி, ரத்து செய்ய அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய பாஜக அரசுக்கு திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்...” என்று கூறியுள்ள அவர், “1989ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, 1990 முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் இந்த இலவச மின்சாரத் திட்டம் விவசாயிகளுக்கு ஒப்பற்ற திட்டமாக இன்றளவும் இருந்து வருகிறது...” என்று தெரிவித்துள்ளார்.

“ஏற்கெனவே, தாங்க முடியாத கடன், விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தவிப்பு, வாழ்வாதாரம் இழந்ததால் தற்கொலை எனப் பல துயரங்களையும், இன்னல்களையும் தொடர்ந்து அனுபவித்து வரும் விவசாயிகள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கருணையற்ற பேரிடர் தாக்குதல் இது!

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மட்டுமின்றி, நெசவாளர்கள் மற்றும் வீட்டுப் பயனாளிகள் உள்ளிட்ட இலவச மின்சாரத்தை அனுபவித்து வரும் பல தரப்பட்ட நுகர்வோருக்கும் மிகப்பெரிய ஆபத்தாக இது மாறியிருக்கிறது. ஆகவே, இந்த மானியம் ரத்து செய்யும் நிபந்தனையை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்...” என்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் “கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பிரச்னை தொடர்கிறது...” என்கிறார், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளரான பி.ஆர்.பாண்டியன்.“2014, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக முயன்றது. 2014ம் ஆண்டு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்று நடவடிக்கை வந்தபோது முதற்கட்டமாக ஜெயலலிதா அதற்காக மீட்டர் பொருத்த முன்வந்தார். பின் விவசாயிகளுக்கு இது பொருத்தமில்லை என்று கைவிட்டார். அதே நேரத்தில் தனியாருக்குச் சாதகமான ‘உதய்’ மின் திட்டத்திலும் கையெழுத்திட மறுத்தார். ஆனால், இன்று எடப்பாடி பழனிச்சாமி அரசு கையெழுத்து போட்டு இதற்குத் துணை போயுள்ளது.

தமிழ்நாடு முழுமைக்கும் இப்போது தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக மின்சாரத்தை விநியோகிக்கிறது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், மாவட்ட வாரியாக தனியார் நிறுவனங்களை நியமித்து அவர்கள் மூலமாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதை மாநில அரசு தடுக்க முடியாது.

ஒருவேளை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று மாநில அரசு நினைத்தால், மின்சாரத்துக்கான மானியத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்...” என்று கூறும் பி.ஆர்.பாண்டியன், இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினார்.
“தமிழகத்தின் சபாக்கேடு என்னவென்றால், தாமிரபரணி தவிர்த்து மற்ற நீர் ஆதாரங்கள் எல்லாம் அண்டை மாநிலத்தை நம்பி இருப்பதுதான். அவர்கள் உபரியை மட்டுமே திறந்து விடுகின்றனர். இதனால் தொடர்ந்து ஏற்படும் வறட்சியால் உற்பத்தி பாதிக்கிறது. உணவு உற்பத்தி பாதிப்பிலிருந்து மீட்க, இலவச மின்சாரம் கொடுத்து அதை முந்தைய அரசுகள் மேம்படுத்தினார்கள்.

இலவச மின்சாரத் திட்டம் விவசாயிகளுக்கு சாதகமானது. அதனால்தான் தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் எவ்வளவு நிதி நெருக்கடி வந்தபோதும் அதை தொடர்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 35% தென் மாநிலங்களில் இருந்துதான் வருகிறது. இதிலும் தமிழகமே முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தின் பல திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

இந்த வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்திற்கு எதிராக சதி செய்தனர். முல்லைப் பெரியாரிலும் மூக்கை நுழைத்தனர். இப்போது இலவச மின்சாரத்தில் கை வைக்கின்றனர். இதன் வழியாக தமிழகத்தை அடக்கிவிடலாம் என நினைக்கின்றனர்.     
எளிய கேள்வி ஒன்றை கேட்க விரும்புகிறோம். கொரோனா நல மீட்புக்கும் நிலக்கரி விற்பதற்கும் என்ன சம்பந்தம்? காவிரி படுகையில் ஏற்கனவே மீத்தேன், நிலக்கரி எடுக்க முனைப்பு காட்டிக் கொண்டிருக்கின்றன சில தனியார் நிறுவனங்கள்.

இந்நிலையில் இலவச மின்சாரத்தை ரத்து செய்து ஒட்டுமொத்த தமிழக விவசாய நிலங்களையும் பாலைவனமாக்க அரசு முயற்சிக்கிறதோ என்ற அச்சம் எங்கள் மத்தியில் நிலவுகிறது...’’ என பி.ஆர்.பாண்டியன் முடிக்க, கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, காட்டமாகவே இதுகுறித்து தன் தரப்பை முன்வைக்கிறார்.

“மத்தியிலிருக்கும் மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரான போக்கினையே ஆரம்பத்திலிருந்து கடைப்பிடித்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோது ரூ.75,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது அவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு தள்ளுபடி செய்ய அலட்சியம் காட்டுகிறது இந்த அரசு. விவசாயக் கடனால் பலர் தற்கொலை செய்வதை நினைவில் கொள்வோம்.  

விவசாயிகளுக்கு நகைக்கடன் என்பது ஒரு லைஃப்லைன் மாதிரி. மஞ்சக் கயிறு அணிந்து தாலியை அடமானம் வைத்து வருகின்றனர். எதற்கு விவசாயம் செய்ய. இந்நிலையில் 4% ஆக இருந்ததை ஏழரை சதவீதமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் நகைக்கடனே கிடையாது என்று சொல்லத் தொடங்கினர். இந்த நிலையும் மாற வேண்டும்.  

மற்றவர்களைவிட களத்தில் அதிகம் உழைக்கும் விவசாயிகளுக்கு அரசு தருவது மானியமோ, சலுகையோ கிடையாது. அவர்களுக்காக உருவாக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் இழப்பீடுதான்.இந்த தேசத்துக்காக இழந்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஏதும் நடப்பதில்லை. ஈவு இரக்கமில்லாத அரசால்தான் இப்படி நடந்து கொள்ள முடியும்.

பொருளாதாரம் சிதிலமடைந்திருக்கும் இந்த நேரத்தில் விவசாயிகளின் உயிர் மூச்சாக இருக்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வது மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட வழிவகுக்கும்.காங்கிரஸ் ஆட்சியின்போதும் மின்சார சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனாலும் இலவச மின்சாரம் ரத்து செய்வதை காங்கிரஸ் ஒருபோதும் செய்யவில்லை. அதனால்தான் நாங்கள் இந்த ரத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறோம்.   

பத்தே பத்து கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.5 லட்சம் கோடி வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா நேரத்தில் ரூ.67,000 கோடி கடன் மோடியின் நண்பர்களுக்கு தரப்பட்டுள்ளது. வங்கிகள் அனைத்தையும் நான்கே நான்கு நபர்கள் சுருட்டிவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடியுள்ளனர். ரூ.25,000 கோடிக்கு ஆடம்பர பாராளுமன்றம், விளம்பரங்களுக்கு பல லட்சம் கோடி செலவுகள், ரூ.3,000 கோடிக்கு சிலை… என வாரி இறைத்துள்ளனர். இவற்றால் ஏற்படாத இழப்புகள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதால் மட்டும் ஏற்படுகிறதா?    
   

தமிழகத்தில் இலவச மின்சாரம் கலைஞர் ஆட்சியில் கொடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அது எடுக்கக் கூடிய சூழல் வந்திருக்கிறது. உண்மையிலேயே விவசாயிகள் பக்கம் அதிமுக நிற்கிறதென்றால், போர்க்கோலத்தில் இப்போதைய மத்திய அரசை எதிர்த்திருக்க வேண்டாமா?

ஆறு ஆண்டுக்கால மோடி அரசாங்கம் விவசாய நலனுக்கென்று ஏதும் செய்யாமல், இருக்கும் நலனில் கை வைக்கிறது. செயற்கை பஞ்சத்தை உருவாக்க முயலும் அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்கும்...’’ என்கிறார் ஜோதிமணி.

காங்கிரஸ் ஆட்சியும் பாஜக ஆட்சியும்

இந்திய விவசாயச் சமூகத்துக்குப் பல்வேறு வழிகளில் பிரச்னைகள் உருவாகின்றன. அவற்றில் 13% விவசாயிகளின் முக்கியப் பிரச்னையாக வெள்ளமும், வறட்சியும் உள்ளன. 11% விவசாயிகளுக்குக் குறைந்த உற்பத்தியும், 9% விவசாயிகளுக்குப் பாசன வசதியும், 8% விவசாயிகளுக்குக் குறைந்த வருமானமும், 8% விவசாயிகளுக்கு நிறுவனங்களும், 8% விவசாயிகளுக்கு உற்பத்தி விலைச் சரிவும், 5% விவசாயிகளுக்குத் தொழிலாளர்கள் பிரச்னையும், 5% விவசாயிகளுக்குப் பணவீக்கமும், 4% விவசாயிகளுக்குப் பொருளாதார அழுத்தங்களும் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன. 29% விவசாயிகளுக்கு மற்ற பிரச்னைகளும் சேர்ந்துள்ளன.

இப்படி தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்துக்கும் இப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று 58% விவசாயிகள் கருதுகின்றனர். 22% விவசாயிகள் மத்திய அரசு மட்டும்தான் தங்களது பிரச்னைகளுக்குக் காரணமென்றும், 20% விவசாயிகள் மாநில அரசுகள்தான் காரணமென்றும் கூறுகின்றனர்.

மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்த 2004 - 05ம் நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி மதிப்பு 3.6 பில்லியன் டாலராக இருந்தது. மன்மோகன் சிங் ஆட்சிக்காலம் நிறைவுற்ற 2013 - 14ம் நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி மதிப்பு 25.5 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதாவது பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வேளாண் சார்ந்த ஏற்றுமதி மதிப்பு 7 மடங்கு உயர்ந்தது.

மோடி ஆட்சியில் மன்மோகன் ஆட்சியில் உயர்த்தப்பட்ட ஏற்றுமதி மதிப்பைக் கூட காக்க இயவில்லை என்பதுதான் யதார்த்தம்.2016 - 17ம் நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி வர்த்தகத்தின் மதிப்பு 8.2 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது. அதாவது மூன்றே ஆண்டுகளில் இதன் மதிப்பு 2 முதல் 3 மடங்கு வரை சுருங்கியுள்ளது.

அன்னம் அரசு