ஊரடங்கில் பட்டையைக் கிளப்புது யூத்ஃபுல் மியூசிக் டீம்!



தனித்தனியே வீட்டில் பாட... தனித்தனியே இசை சேர்க்கை நடக்க...

இது லாக் டவுன் மியூசிக் கன்சர்ட் போல... ஊரடங்கினால் ஹோம் ஸ்டேயில் இருக்கும் பலரும் கிச்சன் குயின்களாக, டான்ஸ் மயில்களாக இன்ஸ்டாவில் துள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘மரியான்’ படப் பாடலான ‘நெஞ்சே எழு’வை பாடி கொரோனாவில் சோர்ந்து போன உள்ளங்களுக்கு தன்னம்பிக்கை விதையை விதைத்திருக்கிறது ஒரு யூத்ஃபுல் டீம்.

திரைப்படப் பாடல்கள், இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பங்களில் ஸ்கோர் செய்து வரும் பாடகர்களான நம்ரதா, கிருஷ்ணா, சுபாஷினி, பூர்வா தன, ஆர்.கே.ஆதித்யா, ஜெஃப்ரி டேனியல், ஜெரின், ஹிராக் தோஷி ஆகியோர் ‘நெஞ்சே எழு’வைப் பாடி புத்துணர்வு பொக்கேவை நீட்டியிருக்கிறார்கள்.
இதில் பாடகர்களும் டெக்னீஷியன்களும் தனித்தனியே தங்கள் வீட்டில் பாட... அதை அழகாகத் தொகுத்து அம்சமான வீடியோ ஆல்பமாக்கி உள்ளனர் ‘இந்தியன் ஆர்ட் ஸீன்’ என்ற மேனேஜ்மென்ட் நிறுவனம்.

இந்த ‘நெஞ்சே எழு’வின் ஐடியாவுக்கு சொந்தக்காரர் பாடகி நம்ரதா. இப்போது இளையராஜாவின் கன்சர்ட் டீமில் கலக்கி வரும் இவர், இப்படி ஒரு மியூசிக் வீடியோ உருவானதன் பின்னணியை விவரிக்கிறார். ‘‘ரஹ்மான் சாரின் இசையில் வந்த ‘நெஞ்சே எழு...’ பாடல் ஒரு மோட்டிவேஷன் ஸாங். நமக்குள் ஒரு வெளிச்சத்தையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுக்கும் வகையில் வரிகளை எழுதியிருப்பாங்க குட்டிரேவதி மேம்.

அந்தப் பாட்டுல இடம்பெறும் ‘அஞ்சாதே, துஞ்சாதே... இனி என்றும் இல்லை வேதனை... புதிதாய் பிறப்பாய் வழியெங்கும்...’ வரிகள் எல்லாம் இப்ப உள்ள குவாரன்டைன் சூழலுக்கு உத்வேகம் பாய்ச்சக் கூடியதாக உணர்ந்தேன்.

ஏன்னா, இந்த லாக் டவுன்ல எல்லாருமே வீட்டுல அடைபட்டு கிடக்கறோம். வெளியே இசைக் கச்சேரிகள், மேடை நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கல. எல்லா டேலன்டட்  ஆர்ட்டிஸ்ட்டுமே முடங்கிக் கிடக்கறோம். அத்தனை பேருக்கும் ஒரு நம்பிக்கை அளிக்கும் முயற்சியா ‘நெஞ்சே எழு’வை பலரும் சேர்ந்து பாடலாம்னு தோணுச்சு. இதில் பாடியிருக்கும் அத்தனை பேருமே என்னோட நட்பு வட்டத்துல உள்ளவங்கதான்.

இதை யூ டியூப்பில் கொண்டு வரலாம்னு ‘இந்தியன் ஆர்ட் ஸீன்’ பாலா சுரேஷ்கிட்ட பேசின அடுத்த செகண்ட்ல, இதற்கு செயல் வடிவம் கிடைச்சிடுச்சு. ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க வீட்ல இருந்தே மளமளனு வேலையை ஆரம்பிச்சிட்டோம். நாலே நாள்ல எல்லாருலே பாடலைப் பாடி, இசையமைச்சிட்டாங்க.பாடலை யூ டியூப்பில் பதிவேற்றின உடனேயே பலரும் போன் செய்து ‘அமேஸிங் மேஜிக்’னு பாராட்டினாங்க. மிக்ஸிங், எடிட்டிங், ஆடியோ மாஸ்டரிங்கை ஜெஃப்ரியும், ஜெரினும் பண்ணினாங்க.

சினிமாவிலும் என் பயணம் தொடருது. ‘அதே கண்கள்’, ‘விவேகம்’ தவிர இப்ப இளையராஜா சாரோட கன்சர்ட் டீமிலும் பாடிட்டு இருக்கேன். அவங்களோட நிறைய ஊர்களுக்கு போய் பாடுறேன். ராஜா சார், கல்லூரிகளுக்கு விசிட் அடிச்சு நிறைய திறமைசாலிகளைக் கண்டு
பிடிச்சு அவரோட இசையில் பாட வாய்ப்பு கொடுத்தார் இல்லீங்களா... அந்த டைம்ல நானும் செலக்ட் ஆனேன்.

வெஸ்டர்ன் கிளாசிக்கல்லயும் இப்ப நல்லா டிரெயின் ஆகிட்டேன். பாடல்கள் எழுதவும் செய்யறேன். பியானோ, கிடார்னு பல இசைக்கருவிகள் இசைக்கவும் தெரியும். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே கரம் பற்றினதாலதான் இப்படி ஒரு விஷயம் சாத்தியமாச்சு. தேங்க் யூ ஃப்ரெண்ட்ஸ்...’’ என புன்னகைக்கிறார் நம்ரதா.

‘‘நம்ரதாவாலதான் இப்படி ஒரு வாய்ப்பு அமைஞ்சது...’’ என சிலிர்த்தபடி பேசுகிறார் கிருஷ்ணா. ‘‘என்னோட ஆறு வயசுலேயே நான் கர்னாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்புறம், சில வருஷம் ரேடியோவில் பாடல்கள் கேட்பதோடு சரி. வேற மியூசிக் கனெக்‌ஷன் எதுவும் இல்லாமல் இருந்துட்டேன். கடந்த அஞ்சு வருஷங்களாத்தான் வெஸ்டர்ன் மியூசிக் கத்துக்கிட்டிருக்கேன். தவிர, ஆங்கிலம், தமிழ், இந்தில பாடல்கள் எழுதி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங்லயும் வெளியிட்டு லைக்ஸை அள்ளிட்டிருக்கேன்.  

இப்ப ‘நெஞ்சே எழு’வில் பாடினதுக்கு நம்ரதாதான் காரணம். இதுல நான் ரெண்டே ரெண்டு லைன்தான் பாடியிருக்கேன். லாக்டவுனால முடங்கிக்கிடக்கும், சோர்ந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு ஒரு பாசிட்டிவிட்டியான பாடலா ‘நெஞ்சே எழு’ இருக்கறது சந்தோஷமா இருக்கு...’’ என்கிறார் கிருஷ்ணா.

பாடகி சுபாஷினி, கிடார் இசைக் கலைஞியாகவும் மிளிர்கிறார். ‘‘காலேஜ் ஃபைனல் இயர் படிக்கறேன். சின்ன வயசுல இருந்தே மியூசிக்ல ஆர்வம். கண்களை மூடி ஒரு தடவை பாடலைக் கேட்டால் போதும். அடுத்த விநாடி அந்தப் பாடலை பாடி அசத்திடுவேன். சோஷியல் மீடியாவுல நிறைய மியூசிக் வீடியோஸ் இப்பவும் பதியறேன். ‘நெஞ்சே எழு’ வாய்ப்பு வந்ததும், ரொம்பவே ஹேப்பியாகிட்டேன்...’’ என்கிறார் சுபாஷினி.

இசைக்குயில் பூர்வா தன, இப்போது ஜெர்னலிசம் படிக்கிறார். ‘‘கடந்த பத்து வருஷங்களா கர்னாடிக் வாய் பாட்டு கத்துக்கறேன். பாலிவுட், கோலிவுட்னு எல்லா இண்டஸ்ட்ரீயிலும் பாடகராக கலக்குற ஐடியா இருக்கு. அதுக்கான தகுதியையும் வளர்த்திட்டிருக்கேன். ஜாஸ், பாப் மியூசிக்ஸ் ரொம்பவும் பிடிக்கும்.

தவிர, நான் ஒரு நல்ல சினிமா ரசிகரும் கூட! குட் மூவீஸ் அத்தனையும் தேடிப்பிடிச்சு பார்த்துடுவேன்...’’ என்கிறார் பூர்வா.
ஆர்.கே.ஆதித்யாவும் ஹேப்பியாகிறார். ‘‘என்னோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல எல்லாருமே இந்தப் பாடலைக் கேட்டுட்டு ‘எல்லாரும் செமையா பாடியிருக்கீங்க’னு சொன்னாங்க. லாக்டவுன்ல மத்தவங்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் விதைக்கற பாடலை பாட சந்தர்ப்பம் கிடைச்சதுக்கு நம்ரதாவுக்கும் இந்தியன் ஆர்ட்டுக்கும் நன்றி சொல்லிக்கறேன்...’’ என்கிறார் ஆதித்யா.

இந்த வீடியோவை தயாரித்த பாலா - சுரேஷ் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். ‘‘நானும் என்னோட நண்பர் குஷ்பவிஷியும் காலேஜ் படிக்கறப்ப எங்களோட ‘இந்தியன் ஆர்ட் ஸீன்’ தொடங்குறது பத்தி பேசி உடனடியாக செயலுக்கும் கொண்டு வந்துட்டோம். அதாவது உள்ளூரில் திறமைகள் இருந்தும் இன்னமும் வெளிச்சம் படாமல் இருக்கும் பாடகர்கள், ஓவியர்கள், இசையமைப்பாளர்கள்னு பல திறமைசாலிகளைத் தேடிப்பிடிச்சு அவங்கள லைம் லைட்டுக்கு கொண்டு வர்றதுதான் எங்க வேலை.

நாங்க அமைச்சுக் கொடுக்கற பிளாட்ஃபார்ம் பல திறமைசாலிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம். சிம்பிளா சொல்றதா இருந்தா டேலன்ட் மேனேஜ்மென்ட் அண்ட் ஆர்ட் எஸ்டாபிளிஷ் மூவ்மென்ட். நான் நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். நான் நடிச்ச ஒரு டிராமாவுல நம்ரதாவும் நடிச்சிருந்தாங்க. அப்ப இருந்தே அவங்களத் தெரியும். நம்ரதா, இப்படி ஒரு ஸ்பார்க் சொன்னதும், எங்க எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. உடனே ஆரம்பிச்சோம். இப்ப கச்சேரி களைகட்டுது...’’ என்கிறார்கள் பாலா - சுரேஷ்.

இந்த ஆல்பத்தில் சவுண்ட் மிக்ஸிங், ஆடியோ மாஸ்டரிங் செய்த ஜெஃப்ரி டேனியல், யுவன் ஷங்கர் ராஜாவின் குழுவில் இருக்கிறார். ‘‘லாக்டவுன் இல்லாத காலகட்டங்களில் ஒவ்வொரு வீக் எண்டிலும் பாண்டிச்சேரியில் ஒலிசார்ந்த நிகழ்ச்சிகள் பண்ணி கலக்குவோம்.

இப்ப அதெல்லாம் மிஸ் ஆகிடுச்சு. அப்படி ஒரு டைம்லதான் ‘நெஞ்சே எழு’வை சொன்னார் நம்ரதா. அப்புறமென்ன? ஏகப்பட்ட எனர்ஜியோடு நானும் என் நண்பர் ஜெரினும் இணந்து கலக்கியிருக்கோம். இவ்ளோ ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு நாங்க யாரும் எதிர்பார்க்கல...’’ என மகிழ்ச்சியில் பூரிக்கிறார் ஜெஃப்ரி.இப்போது மகிழ்ச்சியில் துள்ளுது இசையால் இணைந்த இந்த இதயங்களின் கூட்டணி!

மை.பாரதிராஜா