நியூஸ் நூடுல்ஸ்



8 வயது செஃப்!

மோமையின்ட் என்ற எட்டு வயது சிறுமி மியான்மரையே கலக்கிக் கொண்டிருக்கிறார். விதவிதமான சைவ, அசைவ உணவை சமைத்து வீடியோ பதிவாக்கி யூ டியூப்பில் லைக்குகளை அள்ளுகிறார். ‘லிட்டில் செஃப்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மோ, 15 விதமான அசைவ உணவைத் தயாரிப்பதில் மாஸ்டர்.

இவருக்கு வழிகாட்டியாகவும் வீடியோகிராபராகவும் இருப்பவர் அம்மா. மோ சமைக்கின்ற உணவை வேண்டுபவர்களுக்குக் குறைந்த விலையில் டெலிவரி செய்கின்றனர். இதனால் கொஞ்சம் வருமானத்தையும் ஈட்டுகிறார் லிட்டில் செஃப்.

அழித்து எழுதும் டேப்லெட்!

இது குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டேப்லெட் பேட். குழந்தைகள் இதில் வரையலாம், எழுதலாம். கண்களைப் பாதிக்காத வகையில் ஸ்க்ரீனை டிசைன் செய்திருக்கின்றனர். எழுதியதை அழித்து மறுபடியும் மறுபடியும் எழுதலாம் என்பதால் நோட் புக் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. விலை ரூ. 500லிருந்து ஆரம்பிக்கிறது.

இராணுவம் இல்லாத நாடு!

உலகின் மூன்றாவது சிறிய நாடு நௌரு. பசிபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் இந்தக் குட்டித்தீவின் பரப்பளவு வெறும் 21 சதுர
கிலோமீட்டர். இங்கே சுமார் 11 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இனிமையான தீவு என்றும் நௌருவை அழைக்கின்றனர்.

பாஸ்பேட்டால் நிறைந்திருக்கும் இந்தத் தீவு பணக்கார நாடாகவும் மிளிர்கிறது. இங்கிருக்கும் பாஸ்பேட் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. அத்துடன் இராணுவம் இல்லாத பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலும் நௌரு இடம்பிடித்துள்ளது.

டைனோசர் நாணயங்கள்!

இங்கிலாந்தில் ஐநூறு வருடங்களுக்கு மேலாக நாணயங்களைத் தயாரித்து வரும் அரசு நிறுவனம் ‘த ராயல் மின்ட்’.

சமீபத்தில் இந்நிறுவனம் முதல் முறையாக டைனோசரின் உருவப்படம் மற்றும் எலும்புக்கூடுகள் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டுள்ளது. அந்த எலும்புக்கூடுகள் எங்கே எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்ற விவரமும் நாணயத்தில் அச்சாகியுள்ளன.நாணயங்களைச் சேகரிப்பவர்களுக்கு பெரிய பொக்கிஷமாக இருக்கப்போகிறது இந்த டைனோசர் நாணயங்கள்.

‘அவதார் 2’ ரிலீஸ்!

டிசம்பர் 17, 2021ல் ‘அவதார் 2’ ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரோன். இதற்காக படப்படிப்பு வேலைகள் துரிதமாக நடந்து வந்தன. கொரோனா காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்திவைத்திருந்தனர். கடந்த வாரம் படப்பிடிப்பைத் தொடர்வதற்காக நியூசிலாந்திற்குச் சென்றுள்ளார் ஜேம்ஸ் கேமரோன்.

அங்கே லாக்டவுன் முடிந்து இயல்பு வாழ்க்கை ஓரளவுக்குத் திரும்பினாலும் 14 நாட்கள் குவாரண்டைனில் அவர் இருக்க வேண்டும். அதனால் படப்பிடிப்பு இரண்டு வாரம் கழித்து ஆரம்பிக்கிறது. இருந்தாலும் சொன்ன தேதியில் ‘அவதார் 2’ ரிலீஸாகும் என்று உறுதியளித்துள்ளார் ஜேம்ஸ் கேமரோன்.

கொரோனாவுக்குப் பின் அம்மா, மகள்கள்!

இங்கிலாந்தில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சுசிதான் இப்போது ஹாட் வைரல். சுசிக்கு ஏழு வயதில் ஹெட்டி, ஒன்பது வயதில் பெல்லா என்ற இரு மகள்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு மகள்களை உறவினரின் வீட்டில் விட்டுவிட்டு மருத்துவப் பணிக்குச் சென்றுவிட்டார் சுசி.

ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க உதவியாக இருந்துவிட்டு கடந்த வாரம் வீடு திரும்பினார். அறுபது நாட்களுக்குப் பிறகு அம்மாவும் மகள்களும் சந்தித்த காட்சி வீடியோவாக்கப்பட்டு 20 லட்சம் பேரை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்திவிட்டது.

ரோபோ சர்வர்களை தேடும் மக்கள்!

ஹோட்டல்களில் சர்வர்களாக ரோபோக்களைப் பணியில் அமர்த்துவது புதிதல்ல. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ரோபோ சர்வர்களின் சேவை லாக்டவுனுக்குப் பிறகு பெரும் அளவில் பரவலாகியிருக்கிறது.

கொரியாவில் உள்ள காபி ஷாப்கள், நெதர்லாந்தில் உள்ள உணவகங்களில் ரோபோக்களின் ராஜ்ஜியம்தான். கொரோனா பீதியின் காரணமாக ரோபோக்கள் இருக்கும் உணவகங்களையே மக்கள் அதிகமாக நாடிச் செல்கின்றனர்.

செயற்கை கையில் வயலின்!

ஜப்பானில் செயற்கை கையுடன் செயல்படும் முதல் செவிலியர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் பங்குபெற்ற நீச்சல் வீராங்கனை என பன்முகங்களைக் கொண்டவர் மனாமி இடோ. இப்போது வயலினிஸ்ட்டாகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு கார் விபத்தில் தனது வலது கையை இழந்துவிட்ட மனாமி செயற்கை கையால் வயலின் வாசிக்கும் வீடியோ பதிவு ஆயிரக்கணக்கானவர்களுக்கு உந்துதலை அளித்துள்ளது.

வெட்டுக்கிளிகளை விரட்ட புது டெக்னிக்!

பயிர்களை வேட்டையாடும் வெட்டுக்கிளிகளைத் துரத்தியடிக்க புதுப்புது திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். அதில் இரண்டு திட்டங்கள் செம வைரலாகிவிட்டன. அதிக சத்தத்தைக் கேட்டால் வெட்டுக்கிளி ஓடிவிடும் என்பதற்காக பயிர்களுக்கு நடுவில் அதிக சத்தத்தை எழுப்பும் ஸ்பீக்கர்களை வைத்து பாடல்களை ஒலிக்க விடுவது ஒரு திட்டம்.

அடுத்து, ஒரு கம்பத்தில் டிரம்ஸைக் கட்டி வைத்து அதை காற்றில் இயங்கும் ஃபேன் மூலம் அடிக்க விட்டு சத்தத்தை எழுப்புவது.
இந்த இரண்டுமே நல்ல பலன்களைத் தருகிறது என்கிறார்கள்.

போராட்டக் களத்தில் நாய்!

அமெரிக்காவே போராட்டக் களமாக மாறிவிட்டது. ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நீதி வேண்டி கறுப்பினத்தவர்களுடன் வெள்ளையர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றர்.இந்நிலையில் தனது எஜமானுடன் வாயில் பதாகையை ஏந்தி போராட்டக்களத்துக்கு வந்த நாய் ஒன்று லட்சக்கணக்கானவர்களின் இதயத்தைக் கொள்ளையடித்து விட்டது.

‘கோல்டன் போராளி’ என்று நாயைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். பதாகையை ஏந்திச் செல்லும் நாயின் வீடியோ இணையத்தில் வெளியாகி 85 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு ஹிட்டாகிவிட்டது.

த.சக்திவேல்