பொன்னியின் செல்வன்!Exclusive



தமிழ் சினிமாவின் பிரமாண்ட காவியமாக உருவாகி வருகிறது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’. லைகா தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அதிதிராவ், லால், சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னுகின்றனர்.
இன்னொருபுறம், ‘‘‘பொன்னியின் செல்வ’னுக்கு இசையமைப்பது ரொம்பவே கடினமானது...’’ என பிரமிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஐஸ்வர்யா ராயோ, படத்தில் நந்தினி, மந்தாகினி கேரக்டர்களில் நடிப்பது பற்றி சிலிர்க்கிறார்.

‘‘So freaking excited...’’ என்கிறார் செம உற்சாகமாக..! இந்நிலையில் ‘‘படத்தில் உங்களது பங்களிப்பு என்ன?’’ என்று சுஹாசினியிடம் கேட்டோம். ‘‘கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ மணம் இதிலும் கமகமனு மணக்குது...’’ என்றபடி தனது டிரேட் மார்க் புன்னகையுடன் பேச ஆரம்பித்தார் சுஹாசினி.‘‘நான் மணி சாரை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி நடந்த சம்பவத்துல இருந்து ஆரம்பிக்கறேன். ஜூன் 2ல அவர்கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணினேன். அவர் ஜூன் 6லதான் பதிலுக்கு ப்ரபோஸ் பண்ணினார்!

அந்த நாள் முதல் எங்க கல்யாணம் நடக்கற வரை அவர் ‘பொன்னியின் செல்வனை' கமலை வச்சு பண்ணப்போறதா சொல்லிட்டிருந்தார். இது அவரோட ட்ரீம் ப்ராஜெக்ட். தனக்கு சினிமா ஆசை வந்தது முதல் கல்கி எழுதிய இந்த நாவலை படமா எடுக்கணும்னு கனவு கண்டுட்டு இருக்கார்.
யூ நோ ஒன் திங்... என்கிட்ட லவ்வை சொன்ன கையோடு, தான் எழுதி வைச்சிருந்த ‘பொன்னியின் செல்வன்’ தொடர்பான ஃபைலை என் கைல கொடுத்து ‘இதைத்தான் படமா பண்ணப் போறேன்... இதை நீ ஸ்கிரிப்ட்டா பண்ணிக் கொடு’னு சொன்னார்.

ஏன்னா, அவரை விட தமிழை நான் ரொம்ப வேகமா படிப்பேன். அதனாலதான் என்கிட்ட அவர் அப்படிக் கேட்டார். பத்து நாட்களுக்குப் பிறகு நான் ரெடி பண்ணின ஸ்கிரிப்ட்டை அவர்கிட்ட கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு, ‘என்ன இது..? உன்கிட்ட ஸ்கிரிப்ட்டைக் கேட்டா, நீ டிஸ்கிரிப்ஷன் பண்ணிக் கொடுத்திருக்கே’ன்னார். உடனே நான், ‘இதைத்தானே நீங்க கேட்டீங்க’னு சொன்னேன். சின்ன புன்னகையுடன் அதை வாங்கி படிச்சுப் பார்த்தார்.

அப்புறம், அதில் நடிக்க வேண்டிய கமல் வேறொரு படத்துல பிசியாகிட்டார். இவரும் (மணிரத்னம்) தெலுங்குல ‘கீதாஞ்சலி’ (தமிழில் இந்தப் படமே ‘இதயத்தை திருடாதே’ என டப் ஆனது) பண்ண வேண்டியிருந்ததால, ‘பொன்னி யின் செல்வனை' அப்படியே விட்டுட்டார்.

சில வருஷங்களுக்குப் பிறகு விஜய், மகேஷ் பாபுவை வச்சு, ஆரம்பிக்கறதா இருந்துச்சு. ஆனா, அப்ப கிராஃபிக்ஸ் டெக்னாலஜி அவ்வளவு பிரமாண்டமா வளர்ச்சியடையல. இவரும் லொகேஷன்ஸ் பார்த்துட்டு ‘நம்மளால மேட்ச்சே பண்ண முடியாது’னு பெருமூச்சுவிட்டார்.

ஏன்னா, ராஜராஜசோழன் காலத்துல இருந்த அரண்மனைகள் எதுவும் இப்ப இல்ல. இப்படி நடைமுறைல ஏகப்பட்ட சிக்கல்கள்...’’ என்ற சுஹாசினி, மூன்றே வருடங்களில் சிஜி தொழில்நுட்பம் பிரமாண்டமாக வளர்ந்துவிட்டதால் இப்போது தன் கணவர் மணிரத்னத்தின் கனவு சாத்தியமாகி இருக்கிறது என்கிறார்.

‘‘இப்ப உடைஞ்ச... சிதிலமடைஞ்ச கோட்டைல இருந்து கூட, முழுக் கோட்டையை உருவாக்க முடியும். அந்தளவுக்கு கிராஃபிக்ஸ் வளர்ந்திருக்கு! எல்லாம் கை கூடி, ‘பொன்னியின் செல்வன்’ டேக் ஆஃப் ஆனதும், ‘கங்கிராட்ஸ்... உங்க கனவு நினைவாகுது’னு வாழ்த்தினேன்.

‘அப்படியெல்லாம் சொல்லாத... இதுவும் ஒரு ப்ராஜெக்ட்... அவ்வளவுதான்’னு எப்பவும் போல தன்னடக்கமா அவர் சொன்னார்.

இப்போதைக்கு ரெண்டு பாகங்களா இந்தப் படத்தை எடுக்கறதா ப்ளான். மிகப்பெரிய பட்ஜெட். ஸோ, எல்லாரும் பயப்படறாங்க. ஆனா, அவர் தன் படைப்பு மேல... ஐ மீன்... அவர் வார்த்தைல ப்ராஜெக்ட் மேல நம்பிக்கையா இருக்கார்!

தெளிவான ஸ்கிரிப்ட் கைல இருக்கறதால எட்டு மாசம் ஷூட்டிங் இருக்கும்னு கணக்கிட்டார். அதுக்கு தகுந்தா மாதிரி தாய்லாந்துல ஒரு பெரிய ஷெட்யூலையும் முடிச்சுட்டார்.எதிர்பாராத விதமா கொரோனா லாக்டவுன் வந்ததால இப்ப அடுத்தடுத்த ஷெட்யூல்ஸ் தள்ளிப் போயிருக்கு.

கிடைச்ச இந்த இடைவெளில ஸ்கிரிப்ட்டை இன்னும் செதுக்கிட்டு இருக்கார். இன்னும் எப்படியெல்லாம் மேம்படுத்தலாம்னு திட்டமிடறார்...’’ மலர்ச்சியுடன் சொல்லும் சுஹாசினி, முதல் பாகம் வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகே இரண்டாம் பாகம் ரிலீசாகும் என்கிறார். காரணம், இரண்டாம் பாகத்தில் ஏகப்பட்ட கிராஃபிக்ஸ் ஒர்க் இருக்கிறதாம்.

‘‘இப்ப எடுத்துட்டு இருக்கற ஸ்கிரிப்ட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது முழுக்க முழுக்க ஃப்ரெஷ் ஸ்கிரிப்ட். குமரேசன் கூட உட்கார்ந்து அவர் செமயா பாலிஷ் செய்திருக்கார்.அமரர் கல்கியோட எழுத்துல ‘பொன்னியின் செல்வன்’ படிக்கறப்ப எப்படி ஃபீல் பண்ணுவீங்களோ... அதே மணம், இந்த திரைக்கதைலயும் வீசும். கல்கியோட எழுத்துக்கு எந்த சேதாரமும் ஏற்படாதபடி ரொம்ப கவனமாதான் அவர் ஸ்கிரிப்ட்டை உருவாக்கி இருக்கார்.

தன் மனசுக்குள்ள எந்தளவுக்கு அவர் ‘பொன்னியின் செல்வனோ’ட பல வருஷங்களா வாழ்ந்துட்டு இருக்கார்னு என்னால பட்டியலிட முடியும். ஏன்... உதாரணங்களும் காட்ட முடியும்!’’ சஸ்பென்ஸ் வைத்து கண்களைச் சிமிட்டிய சுஹாசினி, சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்.

‘‘ரஜினி சார் நடிச்ச ‘தளபதி’ படத்துல ‘சுந்தரி... கண்ணால் ஒரு சேதி...’ சாங்கை ஹிஸ்டாரிக்கலா பிக்சரைஸ் செய்திருப்பார். அதாவது ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு டிரையல் பார்த்தார். அதனோட ப்ளஸ் அண்ட் மைனஸை உள்வாங்கிக்கிட்டார்.

அதேபோலதான் ‘கீதாஞ்சலி’ (‘இதயத்தை திருடாதே’) படத்துல ‘ஓ... ப்ரியா... ப்ரியா...’ சாங். இதுலயும் போர்க்களக் காட்சிகள் பேக்டிராப்பா இருக்கும்.
இப்படி பல வருஷங்களா பரிசோதனை செய்துகிட்டே இருக்கார். எல்லாமே ‘பொன்னியின் செல்வனு’க்காக!

ஒரே வார்த்தைல சொல்லணும்னா, அவர் என்கூட வாழற காலத்தை விட ‘பொன்னியின் செல்வன்’ கூட வாழற காலம்தான் அதிகம்!’’ சிலிர்க்கும் சுஹாசினியிடம் பேச்சை மாற்றும் விதமாக இன்றைய ஒளிப்பதிவுத் துறை எப்படியிருக்கிறது என வினவினோம். ஏனெனில் நடிகையாவதற்கு முன் அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் இவர்!

‘‘என் கேரியரை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வின்சென்ட் மாதிரி ஒருசிலரைத் தவிர மத்தவங்க எல்லாரும் செட் லைட்டிங்கை கன்னாபின்னானு பண்ணிட்டிருந்தாங்க. நான் ஃபீல்டுக்குள்ள வந்த டைம்ல ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்ல இருந்து நிறைய கேமராமேன்ஸ் வர ஆரம்பிச்சாங்க.
நிவாஸ், பாலுமகேந்திரா, அசோக்குமார், பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன்னு பலரும் திரைப்படக் கல்லூரியில படிச்சிட்டு வந்திருந்தாங்க. அதனால ஒரு சயின்டிஃபிக் அப்ரோச்சோடு லைட்டிங் செய்யத் தொடங்கினாங்க.

இதனால ஒளிப்பதிவு புதுசா தெரிஞ்சுது. மக்களும் கொண்டாட ஆரம்பிச்சாங்க. இப்ப டிஜிட்டல் டெக்னாலஜி வந்திருக்கு. ஆனாலும் ஃபிலிம் ரோல்ல செய்த மாயாஜாலங்கள் இப்ப அரங்கேறலை. காரணம், டிஜிட்டலுக்கான விஷயங்களை இன்னமும் நாம தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. இங்குள்ள ஒரு சில ஒளிப்பதிவாளர்களுக்குதான் டிஜிட்டலுக்கான லைட்டிங் பண்ணத் தெரியுது.

உதாரணமா, எல்லாருமே நம்ம செல்போன்ல செல்ஃபி எடுக்கறோம். ஆனா, குறிப்பிட்ட சிலர் எடுக்கற செல்ஃபி மட்டும் தனிச்சு தெரியும். குஷ்பு எடுக்கற செல்ஃபி அப்படி பளீர்னு இருக்கும். என்ன காரணம் னா... செல்ஃபிக்குனு இருக்கற சூட்சுமம் குஷ்புவுக்கு பிடிபட்டிருக்கு! அதான் ரீசன்.

இதேமாதிரி டிஜிட்டல் சூட்சுமம் பிடிபடாம பலர் ஒளிப் பதிவுல தவிக்கறாங்க. ஃபிலிம் இல்லாததால என்ன தோணுதோ அதை எல்லாம் எடுத்துட்டு இருக்காங்க. எது தேவை... எது தேவையில்லைனு தெளிவா இப்ப உள்ளவங்களுக்கு வரையறுக்கத் தெரியலை.

இப்பவும் பி.சி.ராம், சந்தோஷ் சிவன், நீரவ்ஷா, ரவிவர்மன், ரத்னவேலு... இப்படி ஒரு சிலரைத்தானே சொல்லிட்டு இருக்கோம்..? புதுசா ஏன் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியலை..? இதேநிலை டைரக்‌ஷன்லயும் விரைவில் வரலாம். இதையெல்லாம் மீறி தனிச்சு தெரியணும்னா... திறமை இருந்தா மட்டும் போறாது. டெக்னாலஜியோடு அப்டேட் ஆகிகிட்டே இருக்கணும். முக்கியமா கைக்கு கிடைச்ச டெக்னாலஜியை எப்படி பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கணும்!’’ என்கிறார் சுஹாசினி.                            

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்