நம்ம ஊரு சிங்காரி... டிக்டாக்குக்கு போட்டியாக வந்தாளாம்..!



கூகுள் ப்ளேஸ்டோரில் நவம்பர் 2018ல் டிக்டாக்கிற்குப் போட்டியாக ஒரு app களமிறங்கியது. அப்போது யாருமே அதை கண்டுகொள்ளவில்லை. இப்படியொரு ஆப் ப்ளேஸ்டோரில் இருப்பது கூட பலருக்குத் தெரியாது.
ஜூன் 10, 2020 வரை ஒரு லட்சம் தடவை மட்டுமே அந்த ஆப் டவுன்லோடு செய்யப்பட்டது. இதற்குப் பிறகு நடந்தவை எல்லாமே மேஜிக். ஆம்; இந்திய அரசு 59 சீன ஆப்களைத் தடை செய்தது. அதில் டிக்டாக்கும் அடக்கம். அவ்வளவுதான். டிக்டாக்கிறகுப் போட்டியாக இருந்த அந்த ஆப் அதற்கு மாற்றாகவே மாறிவிட்டது.

டிக்டாக் பயனாளிகள் எல்லாருமே அதை டவுன்லோடு செய்ய ஆரம்பித்தார்கள். அடுத்த இருபது நாட்களில் ஒரு கோடி டவுன்லோடை எட்டிவிட்டது. இப்போது இரண்டு கோடியைத் தாண்டிச் சென்று இந்தியாவின் முதன்மையான பொழுதுபோக்கு app ஆக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
அதன் பெயர் சிங்காரி.

குறிப்பாக ஜூன் 30ம் தேதியன்று மட்டும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இந்த app டவுன்லோடு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் டாப் லிஸ்ட்டில் இடம்பிடித்த இந்தியன் app என்ற பெருமையையும் தன்வசமாக்கி விட்டது.

சோஷியல் மீடியா வரலாற்றில் ஃபேஸ்புக் மொபைல் app கூட ஒரு மணி நேரத்தில் 6 லட்சம் முறை டவுன்லோடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு சுமார் 2.6 கோடி வீடியோக்கள் இந்த ஆப்பின் வழியாகப் பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 30 லட்சம் வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன மற்றும் பார்க்கப்படுகின்றன. தவிர, 20 சதவீத பயனாளிகள் தினந்தோறும் சராசரியாக ஒன்றரை மணி நேரம் இதில் செலவிடுகிறார்கள். மொத்த பயனாளிகள் செலவிடும் நேரம் 7.5 நிமிடங்கள்.

டிக்டாக்கில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் இருக்கின்றன. வீடியோவை அப்லோடு செய்யலாம். நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம். புதிய நபர்களுடன் அறிமுகமாகி கலந்துரையாடலாம். அத்துடன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், வீடியோ மற்றும் ஆடியோ க்ளிப்ஸ், ஸ்டிக்கர்களை கிரியேட்டிவ்வாக உருவாக்கி அசத்தலாம். அன்றாட செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம். கேம்ஸ் ஜோன் கூட உண்டு.

இந்தி, பெங்காலி, தமிழ், குஜராத்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, ஒடியா, ஆங்கிலம், மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் app ஸ்டோரில் டவுன் லோடு செய்ய முடியும்.சிங்காரியில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் எத்தனை முறை பார்க்கப்படுகிறது என்று கணக்கிடப்பட்டு பாயிண்ட்ஸ் வழங்கப்படும்.

வீடியோவைப் பதிவிட்டவர் அந்த பாயிண்ட்ஸை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இது சிங்காரியின் சிறப்பு. லட்சக்கணக்கில் டவுன்லோடு எகிறிய நாட்களில் இதன் சர்வர் தாங்கவில்லை. சர்வரைக் காப்பாற்ற இதன் நிறுவனர்கள் தினமும் இரண்டு மணி நேரம் வரையே தூங்கியிருக்கின்றனர்.

புரோகிராமில் கில்லாடியான பிஸ்வாத்மா நாயக் மற்றும் சித்தார்த் கௌதம் இணைந்து சிங்காரியை வடிவமைத்திருக்கிறார்கள். இப்போது சிங்காரியின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி நாயக்தான். இதன் இன்னொரு இணை நிறுவனர் சுமித் கோஷ். நாயக்கிற்கு ஆண்ட்ராய்டில் எட்டு வருட அனுபவங்கள் இருக்கின்றன. இதுபோக டேட்டிங் app, சமூக வலைத்தள ஆட்டோமேஷன் டூல்களையும் உருவாக்கியிருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும்போதே கோடிங்கில் ஆர்வமுடைய நாயக், ஐடி துறையில் வேலைக்குச் சேர்ந்த முதல் வருடத்திலேயே சோஷியல் appபை உருவாக்கிவிட்டார். டிக்டாக்கைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அது மாதிரியான ஒரு appபை உருவாக்க வேண்டும் என்று அவரது மனதில் தோன்றியிருக்கிறது. சத்தமே இல்லாமல் இரண்டு வருடங்கள் உழைத்து சிங்காரியின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார் நாயக்.

சிங்காரியின் செயல்பாடு மெதுவாக இருப்பதாகவும், எரர் வருவதாகவும் பயனாளிகள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். இதை நிவர்த்தி செய்தால் உலகளவில் டிக்டாக்கின் போட்டியாளராக சிங்காரியால் உருவெடுக்க முடியும்!

த.சக்திவேல்