ரத்த மகுடம்-109



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘நீங்கள் விழிக்கும்படியோ திணறும்படியோ எதையும் நான் கேட்டுவிடவில்லையே சுங்கத் தலைவரே..? பதினைந்து பேரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றுதானே வினவினேன்...’’ அமர்ந்திருந்த நிலையில் தன் கால்களை நீட்டினார் சாளுக்கிய மன்னர்.
‘‘எந்தப் பதினைந்து பேர் மன்னா..?’’ எழுந்து நின்றபடி சுங்கத் தலைவர் மென்று விழுங்கினார். அவர் இடுப்பில் இருந்த சுவடிக்கட்டு கனத்தது!
‘‘அப்படியானால் உங்களுக்குத் தெரிந்து எண்ணற்ற பதினைந்து பேர் கொண்ட குழுக்கள் இருக்கின்றன... அப்படித்தானே..?’’
‘‘மன்னா...’’

‘‘என்ன மன்னா..?‘‘ சாளுக்கிய மன்னரின் நயனங்கள் சிவந்தன. ‘‘‘எந்தப் பதினைந்து பேர்’ என்று நீங்கள் கேட்டதற்கான அர்த்தம் என்ன..?’’
குளுமையாக கடல் காற்று வீசியபோதும் சுங்கத் தலைவருக்கு வியர்த்தது. தீப்பந்தத்தின் ஒளியில் ஜொலித்த சாளுக்கிய மன்னரின் முகத்தை எதிர்கொள்ள இயலாமல் தவித்தார்.‘‘நான் புத்தியில் மட்டு மன்னா...’’ ‘‘மட்டுப்பட்டவர்களை சுங்க அதிகாரியாக பரமேஸ்வர வர்மர் நியமிக்க மாட்டாரே..?’’‘‘பேசத் தெரியாதவனையும் புத்தியில் மட்டு என்று சொல்வதுண்டு மன்னா...’’‘‘பேச்சில் வல்லமை இல்லையென்றால் மல்லைக் கடல் வணிகத்தை பழுதின்றி நடத்த இயலாதே..?’’

சரமாரியாக அம்புகள் பாய்வதுபோல் விக்கிரமாதித்தரின் உதடு களில் இருந்து பிறந்த கணைகளால் சுங்கத் தலைவர் நிலைகுலைந்தார். அங்கிருந்த அலுவலர்களின் கண்களில் அச்சத்தின் ரேகைகள் படர்ந்தன.‘‘மன்னா...’’ தழுதழுத்தார். ‘‘யார் அந்தப் பதினைந்து பேர்...’’ கேட்டு முடிப்பதற்குள் ஒரு யுகமே கடந்ததுபோல் சுங்கத் தலைவர் உணர்ந்தார்.

‘‘ம்... இப்பொழுதுதான் உங்கள் வார்த்தைகள் என் கேள்வியை நோக்கி வந்திருக்கின்றன...’’ நீட்டிய காலை மடக்கினார் சாளுக்கிய மன்னர். ‘‘மல்லை துறைமுகம் வழியே மொத்தம் எத்தனை வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்கிறார்கள்..?’’‘‘நாள் ஒன்றுக்கு சிறியதும் பெரியதுமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வணிகர்கள் இத்துறைமுகத்தை பயன்படுத்துகிறார்கள் மன்னா...’’
‘‘நான் கேட்டது சரியான எண்ணிக்கை...’’‘‘ஐம்பத்து ஏழு வணிகர்கள் மன்னா...’’
‘‘இங்கு எத்தனை வணிக சாத்துகள் இருக்கின்றன..?’’‘‘பதினாறு மன்னா...’’

‘‘அதாவது மரக்கலங்களில் இருந்து வந்திறங்கும் பொருட்களை அடுக்கி வைத்து தேவைக்கு ஏற்ப உள்நாட்டில் விநியோகிக்கவும்... உள்நாட்டிலிருந்து பொருட்களை சேகரித்து பாரத தேசம் முழுக்கவும், கடல் கடந்திருக்கும் மற்ற நாடுகளுக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தக் கடற்கரைப் பகுதியில் தங்களுக்கென சொந்தமான இடத்தை இவர்கள் வைத்திருக்கிறார்கள்... அப்படித்தானே..?’’
‘‘ஆம் மன்னா...’’

‘‘இதையே வணிக சாத்துகள் என அழைக்கிறீர்கள்... சரியா..?’’சாளுக்கிய மன்னர் எதற்காக இப்படிக் கேட்கிறார் என சுங்கத் தலைவருக்குப் புரியவில்லை. ஆனால், தன்னைச் சுற்றிலும் வலை விரிக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. சிக்காமல் இருக்க வேண்டுமே என மனதுக்குள் பிரார்த்தித்தார். அவரையும் அறியாமல் அவர் கரங்கள் இடுப்பு வேட்டியைச் சரி செய்தது.

கணத்துக்கும் குறைவான நேரத்தில் விக்கிரமாதித்தரின் பார்வை அவரது இடுப்புக்குச் சென்று மீண்டது. ‘‘கேள்வி ஒன்று கேட்டேன்...’’
‘‘ஆம் மன்னா... அவரவருக்கான இடத்தின் வாசலில் சில்லறை விற்பனையை மேற்கொண்டாலும் அதன் உட்புறத்தில் ஏற்றுமதிக்கான பொருட்களும் இறக்குமதிக்கான பொருட்களும் சுங்க முத்திரையுடன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன... பொதுவாக வணிக சாத்துகள் என்றால் அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்யும் இடம் என்று பொருள்... என்றாலும் நம் வசதிக்காக கடற்கரையில் வணிகர்கள் தங்களுக்கென சொந்தமாக அமைத்திருக்கும் இடத்தையும்... இடங்களையும் கூட வணிக சாத்து என்றே அழைக்கிறோம்...’’

‘‘நம் வசதிக்காக... நம் வசதிக்காக... இந்த சொற்பிரயோகம் எனக்கு பிடித்திருக்கிறது சுங்கத் தலைவரே...’’ விக்கிரமாதித்தர் வாய்விட்டுச் சிரித்தார். ‘‘இந்த பதினாறு வணிக சாத்துகளை அமைத்திருப்பவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா..?’’‘‘இல்லை மன்னா... அரபு தேசத்தவர்கள்... யவனர்கள்... சீனர்கள்... என எல்லா நாட்டினரும் இதில் அடக்கம்...’’‘‘அதாவது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இங்கு வணிக சாத்துகள் இருக்கின்றன... அப்படித்தானே..?’’‘‘ஆம் மன்னா...’’

‘‘இதில் ஹிரண்ய வர்மருக்கு சொந்தமான வணிக சாத்தும் அடக்கமா..?’’
‘‘மன்னா...’’‘‘எதற்காக இப்படி அலறுகிறீர்கள்?! பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் தாயாதியான ஹிரண்ய வர்மருக்கும் இங்கு... இந்த மல்லைக் கடற்கரையில்... வணிக சாத்து இருக்கிறதா என்றுதானே கேட்டேன்...’’‘‘இருக்கிறது மன்னா...’’ சுங்கத் தலைவருக்கு உதறல் எடுத்தது. நடுக்கத்தைக் கட்டுப்படுத்த தன் கால் பெருவிரலை தரையில் அழுத்தினார்.

‘‘வாரிசுரிமைப் போர் வரவேண்டாம் என்பதற்காக கடல் கடந்த பகுதியில் பல்லவ மன்னர்களின் தாயாதிகள் தங்களுக்கென ராஜ்ஜியம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள் அல்லவா..? அந்தத் தாயாதி வம்சத்தில் இப்போது அங்கு அரசராக இருப்பவர் ஹிரண்ய வர்மர் அல்லவா..?’’
‘‘ஆ...ம்... மன்னா...’’

‘‘சங்க கால சோழர்களின் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவினரும் பல்லவ தாயாதிகளுடன் இரண்டறக் கலந்து எங்கோ இருக்கும் அத்தேசத்தை ஆள்கிறார்கள் அல்லவா..?’’சுங்கத் தலைவரின் உதடுகளில் இருந்து காற்று மட்டுமே வெளியேறியது. எனவே ‘ஆம்’ என தலையசைத்தார்.
‘‘ஒருவேளை பல்லவ அரசருக்கு வாரிசு இல்லாமல் போனால் ஹிரண்யவர்மரின் வம்சத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு பாலகனை இங்கு அழைத்து வந்து மன்னராக அமர வைப்பார்கள் அல்லவா..?’’‘‘தெரியவி...ல்...லை... ம...ன்...னா...’’

‘‘தெரியவில்லை... நல்ல பதில் சுங்கத் தலைவரே! சாளுக்கியர்களின் ஆளுகைக்குக் கீழ் பல்லவ நாடு வந்துவிட்டது... இனி என் வினாவுக்கு எந்தப் பொருளும் இல்லை என்பதால் தெரியவில்லை என்று நீங்கள் சொன்னதே சரி... ஆனால், பல்லவ நாட்டை மீட்க பரமேஸ்வர வர்மர் ரகசியமாக படை திரட்டி வருகையில்... ஹிரண்ய வர்மர் அவருக்கு உதவாமல் இருப்பாரா..? அவருக்கு சொந்தமான வணிக சாத்தில் என்னென்ன பொருட்கள் வந்து இறங்கியிருக்கின்றன..?’’‘‘வைரங்களும்... வைடூரியங்களும் மன்னா...’’

‘‘அப்படியா..? எங்கே உங்கள் இடுப்பில் இருக்கும் சுவடியை எடுங்கள்... நான் பார்க்கிறேன்!’’  
சப்த நாடிகளும் ஒடுங்க சாளுக்கிய மன்னரை வெறித்தார் சுங்கத் தலைவர்.‘‘ம்...’’ கர்ஜித்தார் விக்கிரமாதித்தர்.
கரங்கள் நடுங்க தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடிக் கட்டை எடுத்து அவரிடம் கொடுத்தார் சுங்கத் தலைவர்.
நிதானமாக அதை வாங்கிப் பிரித்தார் சாளுக்கிய மன்னர்.

முதல் ஓலையில் -மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய புலவர் தண்டி அவர்களுக்கு...
காபாலிகன் எழுதுவது... - என்று இருந்தது!காஞ்சியில் இருந்த தன் மாளிகையின் பூஜை அறையில் அமர்ந்தபடி சாக்த உபாசகரான புலவர் தண்டி வழக்கம்போல் பிரம்ம முகூர்த்தத்தில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்துகொண்டிருந்தார்.பால், தயிர், தேன், சந்தனம்... என பூரணமாக அபிஷேகம் செய்து முடித்ததும் வஸ்திரத்தால் அம்பாளை நன்கு துடைத்தார். பட்டு வஸ்திரத்தை புடவையாகக் கட்டினார். அம்பாளின் நெற்றியில் சந்தனம் இட்டு அதன் மீது குங்குமத்தை வைத்தார்.

பாரிஜாத மலர்கள் அடங்கிய தட்டை எடுத்து அர்ச்சனை செய்தவர், இறுதியில் மலர்களுக்கு அடியில் அத்தட்டில் இருந்த ஓலையை எடுத்தார். அம்பாளை கைகூப்பி வணங்கிவிட்டு பஞ்சமுக விளக்கின் ஒளியில் அதைப் படித்தார்.மதுரை பாதாளச் சிறையில் தன்னைக் காணவந்த ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் எந்த வாசகங்கள் அடங்கிய பட்டுத் துணியை சிவகாமி கொடுத்தாளோ -ஒன்றே போல் எந்த வாசகங்கள் அடங்கிய பதினைந்து பட்டுத் துணிகளை சாளுக்கிய வீரர்கள் கடிகை பாலகனிடம் இருந்து கைப்பற்றி ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் கொடுத்தார்களோ -அதே வாசகங்கள்தான் அந்த ஓலையிலும் எழுதப்பட்டிருந்தது!   

‘இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும்... அதுதான் மதுரையில் பயிற்சி பெற்று வரும் பல்லவ வீரர்களுக்கான சமிக்ஞை. இதனைத் தொடர்ந்து கருக்கலில் மதுரைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டதும் வணிகர்களோடு அந்த வீரர்கள் வெளியேறுவார்கள். வடக்கு நோக்கிச் செல்லும் அவர்களை மதுரைக் கோட்டைக்கு மூன்று கல் தொலைவில் வளைத்துப் பிடிக்கவும்...’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்

ஆடியில் வாங்குவோம் கொரோனாவை தள்ளுபடி செய்வோம்!

ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட பிரபல வேட்டி-சட்டை நிறுவனமான உதயம் பிரீமியம் காட்டன் தற்போது கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் வெள்ளை மற்றும் கலர் மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.  தனது நிறுவன சட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச மாஸ்க் வழங்குகிறது. இந்த நிறுவன தயாரிப்புகள் அனைத்து  ஜவுளிக் கடைகளில் மட்டுமின்றி www.uathayam.in என்ற வலைத்தளத்திலும் கிடைக்கிறது.