கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?



முனைவர் தி.ஞா.நித்யா
இணைப் பேராசிரியர், உயிரித் தொழில்நுட்பவியல் துறை


வேகமாக அதிகரித்து வரும் கொரோனாவின் கோரதாண்டவத்தில் உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு மந்திரச்சொல், ஒரு பெரும்தேடல் கொரோனாவுக்கான தடுப்பூசிதான். உலகில் ஏற்படும் எல்லா நோய்களுக்கும் தடுப்பூசிதான் மருந்து என்பது கிடையாது. பல நோய்கள் உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியினாலோ அல்லது சில மருத்துவ சிகிச்சைகளாலோ முழுமையாக குணமடைந்து விடுகிறது.

அதனால்தான் லட்சக்கணக்கான நோய்கள் இருந்தும் சில உயிர்கொல்லும் நோய்களுக்கு மட்டுமே தடுப்பூசி தேவைப்படுகிறது.உடலின் எதிர்ப்பு சக்தியும் தடுப்பூசியின் தேவையும் ஒவ்வொரு முறையும் நோய் ஏற்படுத்தும் ஏதேனும் ஒரு கிருமி நம் உடலில் நுழையும்போது -ஆரோக்கிய நிலையில் நமது செல்கள் இருந்தால் -அந்தக் கிருமியால் உடலில் ஏற்படுத்தப்படும் செயல்பாடுகளைத் துரிதமாய் உணர்ந்து ஏதோ எதிரி நாட்டுப் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது போல நம் உடல் தன் சொந்த படையான எதிர்ப்பு செல்களை, குறிப்பாக சில வெள்ளை அணுக்கள் மற்றும் அதன் சகாக்களைத் திரட்டி கட்டளையிட்டு போருக்கு அனுப்புவது போல் அனுப்பி வைக்கும்.

இதில்தான் ஆன்டிஜன் (antigen) மற்றும் ஆன்டிபாடிக்கு (antibody) இடையேயான உச்சகட்ட போர் துவங்குகிறது. தெளிவாகச் சொல்லவேண்டு மானால் நோய் விளைவிக்கக் கூடிய ஆன்டிஜன் ஒரு கள்வன் என்றும்; அதை எதிர்க்கக் கூடிய ஆன்டிபாடி ஒரு காவலன் என்றும் வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு, நமது உடலில் சேதம் ஏற்படுத்தும் நோக்குடன் ஒரு ஆன்டிஜன் கிருமி (பாக்டீரியாவோ அல்லது வைரஸோ) நுழைந்தால் உடனே அதனை சரியான முறையில் கொல்ல நம் உடல் அதற்கு ஏற்றாற்போல் சில ஆன்டிபாடி செல்களை உருவாக்குகிறது.

அது மட்டுமன்றி ‘பி செல்’ (B cell) எனப்படும் ஒரு குறிப்பிட்ட ‘மெமரி செல்’ (memory cell), தான் வீழ்த்திய அந்த ஆன்டிஜனின் ‘எபிடோப்’ (epiotope) எனப்படும் ஒரு சிறிய வீரிய பகுதியைப் பாதுகாத்து வைத்து அதற்கேற்றாற்போல் எதிர்வினை புரியக் கூடிய ஆன்டிபாடிகளை தயார் செய்து உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும்.

சில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் கடந்து அதே கள்வன் மீண்டும் வந்தால் எந்தவித நேர விரயமுமின்றி முன்பைவிட அதிவேகமாக ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் ஆன்டிபாடியால் அந்த ஆன்டிஜன் எளிதாக கொல்லப்படும். இதுபோன்ற உயிர் காக்கும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யக்கூடிய வெள்ளை அணுக்கள்தான் உடலின் நிஜ ஹீரோக்கள்.

இந்த ஹீரோக்களை கிருமிக்கு எதிரான போருக்குத் தயார் படுத்துவதே தடுப்பூசிகளின் முக்கிய வேலை,தடுப்பூசியின் தோற்றம்விஞ்ஞானமும் அறிவியலும் அவ்வளவாக வளராத 18ம் நூற்றாண்டில்தான் உலகின் முதல் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ‘எட்வர்ட் ஜென்னர்’தான் இந்தப் புகழுக்கு சொந்தக்காரர். பெரியம்மை நோய் கண்டு உலகில் லட்சக்கணக்கான மக்கள் மடியத் தொடங்கிய காலமது. உயிர்கொல்லும் பெரியம்மை நோய் பரவி வந்த அதே காலகட்டத்தில்தான் அதிக வீரியமில்லாத பசு அம்மை என்ற நோயும் பரவலாகக் காணபட்டது.
இதனிடையே பசு அம்மை நோய் கண்டோர்க்கு பெரியம்மை நோய் தாக்கவில்லை என்பதும் அதிசயிக்கத்தக்க நம்பிக்கையாக மக்களிடையே பரவி இருந்தது.

பல ஆண்டுகள் தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மருத்துவரான எட்வர்ட் ஜென்னர் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் சோதனை முயற்சியாக 1796ல் சற்று வீரியம் குறைந்த பசு அம்மை சீழ் செல்களை எடுத்து ‘ஜேம்ஸ் பிப்ஸ்’ என்ற சிறுவனின் உடலில் செலுத்தி சோதனை செய்து பார்த்தார். எதிர்பார்த்தது போலவே அந்தச் சிறுவனுக்கு பசு அம்மை நோய் தாக்கி நாளடைவில் குணமும் அடைந்தான்.

அதனால் இயற்கையாகவே அந்தச் சிறுவனுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டதாக நம்பினார். மீண்டும் அதே சிறுவனுக்கு பெரியம்மைக்கான ஆன்டிஜனைச் செலுத்தினார். அவர் சோதனையின் வெற்றியாக அந்தச் சிறுவனுக்கு பெரியம்மை நோய் தாக்கவே இல்லை. காரணம், அந்தச் சிறுவனின் உடலில் அம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி ஏற்கனவே ஏற்பட்டிருந்தது.

இதை அறிந்து, ஆராய்ச்சி செய்து, சோதனையும் செய்து, வெற்றிகரமாக ஒரு தடுப்பூசியைத் தயாரிக்க அவர் எடுத்துக்கொண்ட மொத்த காலம்
எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள்.தடுப்பூசிகளின் செயல்பாடு எந்த நோய் வராமல் தடுக்க வேண்டுமோ அந்த நோய்க்கான மூலப்பொருட்களை அதன் வீரியமற்ற நிலையில் ‘ரெடிமேடாக’ உடலில் தடுப்பூசியாக செலுத்தி விட்டால் உடல் அந்த ஆன்டிஜன் தன்மைக்கு ஏற்றவாறு எதிர்ப்பு செல்களை தயார்படுத்திக் கொள்ளும்.  

இது போன்ற தடுப்பூசிகள் நம் உடலில் நோயை ஏற்படுத்தாமலேயே இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும்.
ஆனாலும் இயற்கையாக ஒரு நோயை உள்வாங்கி அதன் மூலம் ஏற்படும் எதிர்ப்பு சக்தியைவிட செயற்கையாக செலுத்தப்படும் தடுப்பூசிகளின் பலன் குறைவுதான்.

சில தடுப்பூசிகள் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பயனளிக்கும். சில தடுப்பூசிகளுக்கு இரண்டு மூன்று கட்டமாக ‘பூஸ்டர் டோஸ்களும்’ தேவைப்படும். சில நேரங்களில் தடுப்பூசியே கொடுத்தாலும் சில நோய்கள் தாக்கத்தான் செய்யும் என்பதும் முக்கியமான உண்மை.

அம்மை நோய் தொடங்கி, போலியோ, ஹெப்பாடிட்டிஸ், டெட்டன்ஸ், பிசிஜி என பல்வேறு முக்கிய தடுப்பூசிகளை மனிதன் கண்டுபிடித்து விட்டாலும் இப்போது காலத்தின் கட்டாயமாக உலகிற்கு அதி அவசரமாக தேவைப்படுவது கொரோனாவிற்கான தடுப்பூசிதான்.  கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

தடுப்பூசிகளின் செயல்பாடுகள் என்னதான் கேட்க மிக சுலபமாக இருப்பினும் அவைகளை உருவாக்குவது ஒன்றும் அத்தனை சுலபமல்ல.
ஒவ்வொரு தடுப்பூசியும் உருவாக குறைந்தது பதினெட்டு மாதம் முதல் ஐந்து வருடமாகலாம். காரணம், நாம் எந்த தொற்றுக்கிருமிக்கான தடுப்பூசி தயாரிக்க நினைத்தாலும் முதலில் அந்தக் கிருமியின் முழு மரபணு செய்தியையும் தெரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் மேற்கூறியது போல் எந்தப் பகுதி ஆன்டிஜனின் எபிடோப்போ அதைப் பிரித்து அதற்கேற்றாற்போல வீரியமற்ற ‘மாதிரி’ ஆன்டிஜனை உருவாக்க வேண்டும். பின்னர் அதை அப்படியே பயன்பாட்டுக்கெல்லாம் கொண்டு வந்து விடவும் முடியாது. முதலில் குரங்கிலோ அல்லது அதற்கிணையான சோதனை விலங்குகளிலோ சோதித்துப் பார்க்க வேண்டும். பிறகு குறைந்த அளவு மனிதர்களில் சோதிக்க வேண்டும். இதற்கே பல மாதங்கள் ஆகிவிடலாம். ஒருவேளை சோதனை வெற்றி அடைந்தாலும், அரசாலும், உலக சுகாதார அமைப்பாலும் சரியான அங்கீகாரச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகே தேவைக்கேற்ப தடுப்பூசிகள் உற்பத்திக்கு உட்படுத்தப்படும்.

கொரோனா வைரஸைப் பொறுத்தவரை விஞ்ஞானிகள் அதன் மரபணு செய்தியை வெகு விரைவில் படித்து விட்டார்கள் என்பது உண்மை.
ஆனால், அதே சமயம் கொரோனா வைரஸ் தனது  மரபணு படிமங்களில் தொடர்ச்சியாக மரபணு பிறழ்ச்சியை ஏற்படுத்திக்கொண்டே இருப்பது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக மாறிவிட்டது.

இதனால் இன்னதுதான் அதன் மரபணு, இதுதான் அதன் வீரிய பகுதியின் மாதிரி என்று ஒரு முடிவிற்கு வரமுடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் உலகின் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அதிதீவிரமாக இறங்கியுள்ளார்கள். மிக விரைவில் ஏழைகளுக்கும் கிடைக்கும் வகையில் கொரொனாவிற்கான தடுப்பூசி கிடைப்பதே இந்த நூற்றாண்டின் சாதனை வெற்றியாக அமையும்.

எது எப்படியோ... வருமுன் காப்போம் என்ற சொல்லுக்கேற்ப ஆரோக்கியமான உடலைவிட பெரிய தடுப்பு மருந்து ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது உடல் ஆரோக்கியத்தை நல்ல உணவு, உடற்பயிற்சி மூலம் பொன் போல பாதுகாத்தால் சமயத்தில் தடுப்பூசிகளுக்கு மட்டுமல்ல, இது போன்ற உலகளாவிய தொற்று நோய்களுக்கே இடமில்லாமல் செய்துவிடலாம்!