தல! sixers story-10



யாருப்பா கபில்தேவ்?

நம்ம ‘தல’ எப்படி ‘தல’ ஆனார் என்பதை கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம்.இனி, ‘தல’ யார் என்பதையும் ஆதியில் தொடங்கி அலசுவோமா?ராஞ்சி.ஆர்ச்சி என்று அழைக்கப்பட்ட ஊர். நாக்பூரி மொழியில் ‘மூங்கில் காடு’ என்று அர்த்தமாம்.இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரம்.ஆங்கிலேயர்கள்தான் ராஞ்சி என்று பெயர் வைத்ததாக சொல்கிறார்கள்.

ராஜேஷ் சவுகான் என்று 90களில் இந்திய கிரிக்கெட் அணியில் ஆடிய வீரரைத் தவிர்த்து, கிரிக்கெட்டுக்கும் ராஞ்சிக்கும் பெரிய தொடர்பில்லை.
அந்த நகரில் கிரிக்கெட்டை விட ஹாக்கிதான் பிரபலம்.மலைவாழ் மக்கள் அதிகளவில் வாழும் ஊர்.கிறிஸ்தவ மிஷனரிகளால் ஹாக்கி இங்கு பிரபலமாகி, யாரைப் பார்த்தாலும் கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு பந்தை விரட்டிக் கொண்டிருப்பார்கள்.

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்ற பழங்காலத்தில் சில ராஞ்சி வீரர்கள் அதில் இடம்பெற்றதுண்டு.ஹாக்கி தவிர்த்து வில்வித்தையிலும் ராஞ்சிக்காரர்கள் கில்லாடி.வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியெல்லாம் இந்த ஊர்தான்.இங்கிருக்கும் ஹவுசிங் காலனி ஒன்றில் வசிக்கும் பான்சிங் என்கிற பெரியவர், கடைகளுக்கு சைக்கிளில் வரும்போது நகர்வாசிகள் அனைவரும் அவருக்கு வணக்கம் சொல்லுவார்கள்.

காரணம்?
அவருடைய மகன்தான் மகேந்திரசிங் தோனி.தோனி, சாதாரண ஸ்கூல் பையனாக பேட்டை எடுத்துக்கொண்டு பயிற்சிக்கு போகும்போதும் பான்சிங் இப்படித்தான் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்தார்.இன்று அவருடைய மகன் கோடிகளை சம்பாதித்து, உலகளவில் புகழ்பெற்றிருக்கும் நிலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அதேமாதிரிதான் எளிமையாக இருக்கிறார்.

பான்சிங்கின் ஊர் தலசாலம் என்கிற கிராமம். இப்போது உத்தரகாண்டில் இருக்கிறது. நைனிடாலைச் சேர்ந்த தேவகிதேவி என்பவரை மணந்துகொண்டு ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.ஒருகட்டத்தில் விவசாயத்தைத் தொடரமுடியாத அளவுக்கு நெருக்கடி.முறையான கல்வித்தகுதிகள் இல்லாத நிலையில் அவருக்கு வேலைகள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது.முதலில் லக்னோ நகருக்குத்தான் பிழைக்கச் சென்றார்கள். சரியான வேலை இல்லாத நிலையில் மனைவியோடு அங்கே வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டார். பின்னர், பீகாரில் இருக்கும் பொகாரோ நகருக்குச் சென்றார்கள்.

அங்கே இரும்பு ஆலை கட்டப்பட்டுக் கொண்டிருந்ததால் வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு சென்றார். ம்ஹூம். அங்கும் வேலையில்லை.
எனினும் பொகாரோவில் ஒருவர் வழிகாட்டினார். “ராஞ்சிக்கு போ. அங்கே இரும்புக் கம்பெனி யில் நிச்சயம் வேலை கிடைக்கும்…”
இப்படியாகபிழைப்புக்குத்தான் ராஞ்சிக்கு வந்தார் பான்சிங்.

அங்கே இந்துஸ்தான் ஸ்டீல் நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக பணிக்குச் சேர் ந்து கடுமையாக உழைத்தார்.பான்சிங் - தேவகிதேவி தம்பதியினருக்கு ராஞ்சியிலேயே வாழ முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது.மூன்று குழந்தைகள். மூத்தவர் நரேந்திரசிங் தோனி. அடுத்து மகள் ஜெயந்தி. கடைக்குட்டிதான் நம்ம ‘தல’ மகேந்திரசிங் தோனி. செல்லமாக மகி, மகியா என்று அழைப்பார்கள்.சின்னவயது தோனிக்கு பிடித்த ஆட்டம் கால்பந்துதான்.

இன்று உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான ‘தல’, அப்போதெல்லாம் கோல்கீப்பர்.அதற்காக கிரிக்கெட் பிடிக்காது என்றில்லை. தெருப்பிள்ளைகளோடு அவ்வப்போது கிரிக்கெட்டும் ஆடுவதுண்டு.அவர்கள் அப்போது வசித்து வந்தது ஷியாமளி காலனி என்கிற பகுதியில் ஒரு சிறிய வீடு.வீட்டுக்கு சற்றுத் தொலைவிலேயே ஒரு ஸ்டேடியம் இருந்தது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் தோனி, நேரே ஸ்டேடியத்துக்கு ஓடிவிடுவார்.

அப்போதெல்லாம் சீமந்த் லோகானிதான் தோனியின் தோஸ்த். எல்கேஜி தொடங்கி பிளஸ் டூ வரை தோனியோடு படித்தவர்.
அப்போதெல்லாம் தோனியின் கையில் கிரிக்கெட் பேட்டைப் பார்த்தாலே அவரது அப்பா பான்சிங்குக்கு கோபம் வரும்.
தன்னால் படிக்க முடியவில்லை, தன் குழந்தைகளாவது நல்ல கல்வி பெறவேண்டும் என்று தன் சக்திக்கு மீறி நல்ல பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

படிப்பை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்தால் எந்த அப்பாவுக்குமேதான் மனசு பொறுக்காது இல்லையா?
இத்தனைக்கும் தோனி, மோசமான ஸ்டூடண்ட் இல்லை.ஆகா ஓகோவென்று படிக்காவிட்டாலும் முதல் பத்து ரேங்குக்குள் வரும் வகையில் பரவாயில்லை மாதிரிதான் படித்தார்.

எதை செய்தாலும் அதில் கவனத்தை முழுக்க செலுத்துவார்.கிரிக்கெட் விளையாடப் போகக்கூடாது என்று அப்பா தடை போட்டால், வீட்டிலேயே வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருப்பார்.இப்போதும் கூட நேரம் கிடைத்தால் மொபைலில் நேரம் காலம் போவதே தெரியாமல் கேம்ஸ் ஆடிக் கொண்டிருப்பார் நம் ‘தல’.குட்டி தோனிக்கு சாப்பிடப் பிடிக்காது.

அம்மாவும், அக்காவும் பிடித்து வலுக்கட்டாயமாக ஊட்டுவார்கள். ரொட்டி, உருளை மசால் என்றால் ஓகே. வேறெந்த உணவாக இருந்தாலும் தலை
தெறிக்க ஓடிவிடுவார்.கடைசி மகன் சரியாக சாப்பிடாமல் சோனியாக இருந்தது கண்டு பான்சிங்குக்கு வருத்தம். எனவே, லிட்டர் லிட்டராக பால் வாங்கி வந்து கொடுப்பார்.

பாலில் இருக்கும் சத்து, மகனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று எண்ணினார். அவரே பால் கறக்கும் இடத்துக்குப் போய் ஃப்ரெஷ்ஷாக பசுவின் மடியில் இருந்து கறந்த பாலை வாங்கி வருவார்.அப்போது அப்பாவோடு, மகியும் போவதுண்டு.சைக்கிளில் முன்புறமாக மகியை உட்காரவைத்து, தன்னுடைய கிராமத்துக் கதைகளைச் சொல்லிக்கொண்டே வருவார் பான்சிங்.

“நீ பெரியவன் ஆகி, நிறைய படிச்சு பெரிய ஆபீசர் ஆகணும். டை கட்டிக்கிட்டு கோட்சூட் போட்டுக்கிட்டு, ஷூவெல்லாம் மாட்டிக்கிட்டு ஆபீசுக்கு போகணும்….” என்று தன் கனவை சொல்லிக்கொண்டே வருவார்.“அப்பா, நான் ஏன் கபில்தேவ் ஆகக்கூடாதுன்னு நீங்க நினைக்கறீங்க?” என்று தோனி கேட்டபோது, “யாருப்பா கபில்தேவ்? பெரிய பேங்க் மேனேஜரா?” என்று பான்சிங் கேட்டார்!

கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த கேப்டன் கபில்தேவை, அப்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே தெரியும்.
ஓர் அலுவலகத்தில் கடைநிலைப் பணியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த பான்சிங்குக்கு கபில்தேவைத் தெரிந்திருக்கவில்லை. கிரிக்கெட்டுக்கும், அவருக்கும் ஏழாம் பொருத்தம் என்பதும் காரணம்!

(அடித்து ஆடுவோம்)

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்