நியூஸ் சாண்ட்விச்



இயக்குநரின் பயோபிக்! படப்பிடிப்பை தொடங்கி வைத்த தாய்!

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. மூன்று பகுதிகளாக வெளியாகும் இப்படத்தின்  படப்பிடிப்பை அவரது அம்மா சூர்யாவதி தொடங்கி வைத்ததுதான் வைரல்.20 வயதான தொரசாய் தேஜா, படத்தை இயக்குவதோடு, இளம் வயது ராம் கோபால் வர்மாவாகவும் நடிக்கவிருக்கிறர்.
‘பொம்மகு கிரியேஷன்ஸ்’ பேனரின் கீழ் இப்படத்தின் 3 பகுதிகளையும் பொம்மகு முரளி தயாரிக்கிறார். ‘ராமு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

She Says...

“இன்றைக்கு அன்றாட நடைமுறையாக உள்ளது பெண்கள் மீதான வன்முறைத் தாக்கு தல்கள். இப்படிப்பட்ட சமூகத்தின் இயல்புகள் நாளைய தலைமுறைக்கும் போகாமல் இருக்க வேண்டும்.திருமணத்தில் கட்டாய வன்புணர்வு என்பது தவிர்க்க முடியாதது. பெண்தான் பொறுத்துப் போக வேண்டும் என்று அம்மாக்கள் சொல்லாத உலகமும்,  ஆண் - பெண் சமம் என்பதை உணர்ந்து கைகோர்த்து நடக்கும் சமூகமுமே என் கனவு.

அதற்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன்...” என்கிறார் த்ரிஷா ஷெட்டி.  

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் த்ரிஷா ஷெட்டி 2015ம் ஆண்டு ‘ஷீ சேஸ்’ (அவள் சொல்கிறாள்) என்ற பெயரில் நாடு தழுவிய ஒரு இயக்கத்தினை நிறுவினார். பெண்கள் மீதான பல்வேறு வகையான வன்முறைகளைத் தடுப்பதற்காக ஐநா சபை அமைத்திருக்கும் குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார்.   

“பெண்கள் தங்கள் நடை, உடை, பேச்சு, செயல்... என அனைத்திற்குமாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனோடு மதம், சாதி, வர்க்கம் என்ற சமூக காரணிகளும் சேர்கின்றன. இவை எல்லாம் தவறு என்று உரக்க சொல்வதாலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  

இத்தகைய தொடர் வன்முறைகளுக்கு எதிராகத்தான் ஒரே சிந்தனையுள்ள பெண்ணிய போராளிகளுடன் இணைந்து ஓர் இயக்கத்தை தொடங்கினேன். இவ்வியக்கம் இளம் வயது பெண்களை மிகவும் ஈர்த்திருக்கிறது...” என்று கூறும் த்ரிஷா, வழக்கறிஞராக, மனித நேயராக, பெண்ணிய வழக்குகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவராக தன் பயணத்தைத் தொடர்கிறார்.    

இந்தியாவில் புயல் அதிகரிக்குது!

இந்தியாவில் சராசரி அளவைக் காட்டிலும் 2019ம் ஆண்டில் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 5 அதிதீவிர புயல்கள் ஏற்பட்டுள்ளன. இது வழக்கமான அளவைக் காட்டிலும் அதிகம்.

1891 முதல் 2017 வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக வங்காள விரிகுடாவில் 4 புயல்களும்; அரபிக்கடலில் ஒரு புயலும் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் வருடத்திற்கு சராசரியாக ஒரு புயல் ஏற்படும் என்னும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 5 புயல்கள் ஏற்பட்டுள்ளன. அதேசமயம் இவை தீவிரமான புயல்களாகவும் இருந்துள்ளன. அரசுத் தரப்பு தகவலின்படி அரபிக் கடலில் அதிதீவிரமான அளவில் 2017ம் ஆண்டு ஒரு புயலும், 2018ம் ஆண்டு 3 புயல்களும், 2019ஆம் ஆண்டில் 5 புயல்களும் ஏற்பட்டுள்ளன.

அதேபோல் வங்காள விரிகுடாவில் அதிதீவிரமான அளவில் 2017ம் ஆண்டில் 2 புயல்களும், 2018ம் ஆண்டில் 4 புயல்களும், 2019ம் ஆண்டில் 3 புயல்களும் ஏற்பட்டுள்ளன.

ஏழே மாதத்தில் 413 நில அதிர்வுகள்

‘‘நாட்டில் ஏற்படும் நிலஅதிர்வுகளை தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 1 முதல் செப்டம்பா் 8 வரை 413 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதில் சுமார் 135 நில அதிர்வுகள் ரிக்டா் அளவுகோலில் 3.0 - 3.9 அலகுகளாக அல்லது அதற்கும் குறைவாக பதிவாகியிருப்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

114 நில அதிர்வுகள் ரிக்டா் அளவுகோலில் 4.0 - 4.9 அலகுகளாக பதிவாகியுள்ளன. இதனால் சிறு சேதங்கள், பாதிப்புகள் ஏற்பட்டன. இது தவிர, 11 நில அதிர்வுகள் ரிக்டா் அளவுகோலில் 5 முதல் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளன. மிதமான பிரிவில் உள்ள இந்த நில அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள் போன்றவை சேதமடையக் கூடும்...” என மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய புவியியல் துறை விளக்கமளித்துள்ளது.

5 டன் மணலில் தந்தை பெரியார் சிற்பம்!

புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் சிற்பக்கலை பயின்று, பெங்களூர் சித்ரகலா பரிஷத் கல்லூரியில் சிற்பக்கலையில் முதுகலைப்பட்டம் பெற்றவர் ஓவியர் - சிற்பி குபேந்திரன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட மணல் சிற்பங்களை உருவாக்கி பல
விருதுகளை வென்ற இவர், வீராம்பட்டினம் கடற்கரையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் (செப்டம்பர் 17), அவரது உருவத்தை
பிரம்மாண்டமான மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளார்.

48 மணிநேரத்தில் 5 டன் மணல் கொண்டு இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் உயிரிழப்பது விவாதப் பொருளாகியுள்ள நிலையில், Ban NEET, நீட் வேண்டாம் என்றும், சமீபத்தில் ட்ரெண்டான ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகமும் சிலையின் கீழ் பதியப்பட்டுள்ளன.

ஏழே மாதத்தில் 413 நில அதிர்வுகள்

‘‘நாட்டில் ஏற்படும் நிலஅதிர்வுகளை தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 1 முதல் செப்டம்பா் 8 வரை 413 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதில் சுமார் 135 நில அதிர்வுகள் ரிக்டா் அளவுகோலில் 3.0 - 3.9 அலகுகளாக அல்லது அதற்கும் குறைவாக பதிவாகியிருப்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

114 நில அதிர்வுகள் ரிக்டா் அளவுகோலில் 4.0 - 4.9 அலகுகளாக பதிவாகியுள்ளன. இதனால் சிறு சேதங்கள், பாதிப்புகள் ஏற்பட்டன. இது தவிர, 11 நில அதிர்வுகள் ரிக்டா் அளவுகோலில் 5 முதல் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளன. மிதமான பிரிவில் உள்ள இந்த நில அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள் போன்றவை சேதமடையக் கூடும்...” என மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய புவியியல் துறை விளக்கமளித்துள்ளது.

10 விரல்களில் 45 வார்த்தைகள்!

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், மங்களூருவைச் சேர்ந்த கோபட்கர் - சுமா பட்கர் தம்பதியின் மகளான ஆதிஸ்ரூபாவின் வயது 17.   கோபட்கர் - சுமா பட்கர் தம்பதியின் கல்வி பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் அவர்கள் மகள் ஆதிஸ்ரூபாவும்
ஒருவர். இந்த பயிற்சி மையத்தில் கல்வியோடு மாணவர்களின் திறன் அறிந்து அதற்கான பயிற்சிகளும் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தங்கள் மகள் ஆதிஸ்ரூபா, 2 கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி எழுதுவதை கண்டறிந்தனர். அதாவது வலது கையில் எழுதும் வார்த்தையை, இடது கையையும் பயன்படுத்தி எழுதுகிறார்.  

இதை அறிந்த உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனம் மங்களூருக்கு வந்து தேர்வு நடத்தியுள்ளது. அதில் கலந்துகொண்டு ஒரு நிமிடத்தில் இரு கைகளையும் பயன்படுத்தி 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்துள்ளார் ஆதிஸ்ரூபா. இதற்கு முன் 25 வார்த்தைகள் எழுதியதே உலக சாதனையாக இருந்தது.

100 நாள் வேலைத்திட்டத்தின் பிதாமகன்!

கிராமப்புறங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, தேக்கநிலை அடைந்து சீரழிந்துகொண்டிருந்தபோது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய பீகாரைச் சேர்ந்த ரகுவன் பிரசாத் சிங் கடந்த 13ம் தேதி மறைந்தார்.  கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் கொண்டு வந்தபோது, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ் கட்சியைச் சேர்ந்த ரகுவன் பிரசாத்.

100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த அவர் வேகத்துடனும், உறுதியுடனும் பாடுபட்டார். கிராமப்புற மக்களுக்கு வேலையில்லை, அவர்களிடம் பணம் சென்று சேர வேண்டும் என்று அவருக்கு இருந்த அக்கறையும் மெச்சத்தகுந்தது. அத்திட்டத்தை மன்மோகனும், அலுவாலியாவும் நிராகரிக்க முனைந்து, காரணங்கள் சொல்லும்போதெல்லாம், ‘உங்களுக்கு கிராமப்புறங்களைப் பற்றி, வறுமையைப் பற்றி அக்கறை இல்லை.

நீங்கள் திட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ என அவர்களிடம் வாதிட்டு வென்றெடுத்ததோடு, வெற்றிகரமாக அதை செயல்படுத்தியும் காட்டியவர் ரகுவன் பிரசாத். கணிதத் துறையில் பிஹெச்.டி முடித்த ரகுவன் பிரசாத், அபார ஞாபக சக்தி கொண்டிருந்ததால், புள்ளிவிவரங்களை விரல்நுனியில் வைத்துக்கொண்டு பேசுவார். அதனால் அவருடன் விவாதம் புரிய முடியாது.

சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோரை வீட்டிற்கு அழைத்துச் சென்று பேசுவதோடு, அவர்களின் வியாபாரம் உள்ளிட்டவை குறித்தும் விசாரிப்பார். அன்றாட நிகழ்வுகளை மக்களிடமிருந்தே தெரிந்து கொள்வார். இதன் வழியாகத்தான் தனது அனுபவ அறிவைப் பெற்றார் ரகுவன் பிரசாத்.    

தொகுப்பு: அன்னம் அரசு