வலைப்பேச்சு



@Abdul Vahab: என் தாத்தா பேர்ல (அப்பாவுடைய அப்பா) வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சாங்கன்னு சேர்ந்தேன்.எங்க அம்மாவுடைய அப்பா பேர்ல குரூப் ஆரம்பிச்சாங்கனு சேர்ந்தேன்.என் சம்சாரம் அவங்க தாத்தா பேர்ல குரூப் ஆரம்பிச்சானு சேர்ந்தேன்.என் கொழுந்தியா அவ மாமனார் பரம்பரை பேர போட்டு குரூப் ஆரம்பிச்சி ருக்கானு சேர்ந்தேன்.என் பொண்ணு எங்க அப்பா பேர்ல வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிக்கவானு கேக்கறா...

வாட்ஸ்அப்லயாச்சும் குடும்பம் ஒற்றுமையா இருக்கும்னு பார்த்தா அங்கயும் ஒரே வீடியோவையும் ஒரே மெசேஜையும் ஃபார்வர்ட் பண்றாங்க... வெளிய வரலாம்னு பார்த்தா குடும்பத்தை உன் புருசன் உடைக்கறான்னு பொண்டாட்டியை ஏவி விடறாங்க...
விடிவே இல்லையா தாத்தா...

@கோழியின் கிறுக்கல் - வழக்கமாக குழந்தைகளிடம் அப்பா கதை கேட்க மாட்டார். ஆனால், அம்மா ‘ஏன் லேட்டு’ என்று கேட்டால் அவரைப் போன்ற கதை சொல்லியை பார்க்கவே முடியாது!

@selvaraghavan - சமீபத்தில் கேட்டது:
‘உங்களை வீட்டில் மனைவி எப்படி நடத்துகிறாரோ அப்படித்தான் வெளியுலகம் நடத்தும்...’
- உண்மையா இருக்குமோ?!

எமி ஜாக்சன்: கேக்
பார்த்தது போதும்...
என் பையனையும் பாருங்க... இன்னிக்கு அவனுக்கு ஃபர்ஸ்ட்
பர்த் டே!

@Bogan Sankar - அதிகாலை ஆறு மணிக்கே டீ கடைக்கு வந்து வடையை வாங்கி அதை நியூஸ் பேப்பரில் உள்ளங்கை நடுவே வைத்து நன்றாக நசுக்கி பிறகு தின்பவர் என்ன செய்கிறார் என்று புரியவில்லை.
‘இருதயத்தைக் காப்பாத்தறாராமா!’

@Ramanujam Govindan - மூட வேண்டிய சிலவற்றை ஒழுங்காக மூடாததால்முன்பு ஜனத் தொகை கூடியது.
இப்போது குறைகிறது!

@மாயோன் - ஒருநாள் பசி எவனையும் பிச்சைக்காரனாக்கி விடாது. ஆனால், ஒரு நாள் பகை ஒருவனை கொலைகாரனாக்கி விடும்!

@அ. பாரி - புது பனியன், ஜட்டிகளில் இருக்கும் ஸ்டிக்கர்களைப் பிய்த்து, கதவு, ஜன்னலில் நேர்த்தியாக ஒட்டி அழகு பார்க்கும் அற்புதக்கலை எத்தனை வயசானாலும் மாறாது போல.

மோகன்லால்: ‘த்ரிஷ்யம் 2’வுக்கு ரெடி!

@Kaalachakram Narasimmaa - ஜோதிடம் என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம். ஊட்டி மலைப்பாதைகளில், கொண்டை ஊசி வளைவுகள் குறித்த எச்சரிக்கை பலகைகள் போலத்தான், ஜோதிட கணிப்புகளும். இப்படி நடக்கப் போகிறது என்று சொல்லும்போது நம்பிக்கை வராதுதான். ஆனால், நாம் கடந்து வந்த பாதையை கவனித்தால், ஜோதிடத்தின் கூற்றுப்படி ஒரு pattern அமைவதை பார்க்கலாம்.

சீனாவிலிருந்து படையெடுத்து வந்த கிருமிக்கு கட்டுப்பட்டு நாம் இப்போது ஒடுங்கி நிற்கிறோம். அதற்கு காரணமாக ஜோதிடம் கூறுவது என்ன? சனியும், கேதுவும், குருவும் ஒன்றாக இருந்து, குரு வலு இல்லாமல் இருந்ததால் நாடு கிருமியால் ஸ்தம்பித்தது என்றார்கள். 28 வருடங்களுக்கு ஒரு முறை சனி, கேதுவுடன் கூடுகிறது.

ஜோதிடம் கூறுவது பொய்யோ, மெய்யோ! ஆனால், 28 வருடங்களுக்கு ஒரு முறை, மக்களை முடங்க வைக்கும் இம்மாதிரி பிரச்னைகள் தாக்குகின்றன.
 
2019 - 20 கொரோனா கிருமி மரணங்கள். ஊரடங்கு.

1991 - 92 இலங்கைப் பிரச்னை, திமுக ஆட்சி கலைப்பு, சந்திரசேகர் ஆட்சி கவிழ்ப்பு, ராஜீவ் கொலை, பாபர் மசூதி இடிப்பு. கலவரம், ஊரடங்கு.

1962 - 64 சீன ஆக்ரமிப்பு, அருணாச்சல பிரதேஷ் பகுதி இழப்பு, ஊரடங்கு, நேரு மரணம், பாம்பன் புயலில் சிக்கி போட் மெயில் ரயில் கடலில் மூழ்கியது.

1932 - 33 உலக ரீதியில் பொருளாதார சரிவு (Great  Depression of 1932), பம்பாய், வங்கத்தில் மதக் கலவரங்கள், ஊரடங்கு, காந்தி கைது.

1903 - 1904 ஜப்பான்-ரஷியா போர் மூண்டது. ஊரடங்கு. நியூயார்க் நகரின் கிழக்கு ஆற்றில், பயணிகள் உல்லாசக் கப்பல் தீப்பற்றி எரிந்து 1200 பேர் மாண்டனர். சூறாவளி புயலில் சிக்கி ரஷ்யாவில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர்.

முன்னோக்கிப் பார்த்தால் நம்பிக்கை வராது. ஜோதிடத்தைக் கொண்டு பின்னோக்கிப் பார்க்கவும். பின்னோக்கி உள்ள சரித்திரப் பதிவுகளை ஆதாரங்களாகக் கொண்டு, எதிர்காலத்தில் இப்படி ஒரு pattern  உருவாகக்கூடும் என்று உலக அரசுகள் 28 வருடங்களுக்கு ஒரு முறை முன்கூட்டியே எச்சரிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அதன்படி 2048 மற்றும் 2076ம் ஆண்டுகளுக்கு இப்போதே எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

@Ram Vasanth - நான் ஒரு குஜராத்தி கம்பெனில சேர்ந்தப்ப( 1999)
பாஸ் - உனக்கு இந்தி தெரியுமா?
மீ - தெரியாது...
பாஸ் - சுத்தமா தெரியாதா..?
மீ - கெட்ட வார்த்தைங்க தெரியும்...
பாஸ்- ஓகே. லெட்ஸ் டாக்
இன் இங்க்லிஷ்!

@செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன் - ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லோரும் சேர்ந்து பூஜை செய்ய கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்தனர்.
அதில் ஒருவன் கையில் மட்டும் குடையோடு வந்தான்.
அதற்கு பெயர்தான் FAITH.
நம்பிக்கையே வாழ்க்கை!

@நாகராஜசோழன் MA.MLA - காலைல எந்திரிச்சதும் எப்ப போன் பார்க்காம பொழப்பை பார்க்கறியோ அப்பதான் உனக்கு லைஃப் ஸ்டார்ட் ஆகும்.

@நட்சத்திரா - எத்தனை தெளிவோடு இருந்தாலும் ‘ரைட்டா... லெஃப்ட்டா’ என்று கேட்கும்போது லைட்டா டவுட் வருது... எது ரைட்... எது லெஃப்ட்..?

@Pa Raghavan - மரணத்தை மிகவும் சாதாரணமான ஒன்றாக்கு வதற்கு மெனக்கெடுகிறது காலம்.

கியாரா அத்வானி (இந்தி ‘லட்சுமிபாம்’ ஹீரோயின்):  ஒரே வீட்டுல ரெண்டு ஸ்டார்ஸ்!

@Gokul Prasad - “யோவ், நான் பேசிட்டு இருக்கும் போது என் மூஞ்சிய பார்க்காம வேற எங்கய்யா பார்த்துட்டு இருக்க?”
“சாரி மேடம். சப் டைட்டில்ஸ கீழே பார்த்துப் பார்த்து பார்வை அப்படியே பழகிடுச்சு!”

@Meenamma Kayal -
ஹீரோ போலீசா நடிக்கிற மூவிலல்லாம் ஹீரோயின் உயிர் பிழைச்சுட்டா அடுத்து எவனாவது வந்து மறுபடியும் இவளைத் தூக்கிட்டு போயி ஹீரோவை ப்ளாக்மெயில் செய்வாங்களே... பாவம்னு தோணுது..!

@Saravanakarthikeyan Chinnadurai - ஏதாவது ஒரு பெண்ணின் அழகை நாம் சிலாகித்தால் அங்கே வந்து ‘இவரை நீங்கள் ஒப்பனையில்லாமல் பார்க்க வேண்டும்’, ‘காலையில் எழுந்ததும் பார்க்க வேண்டும்...’ என்றெல்லாம் சொல்வோரின் உளவியல் என்ன?

அவர்கள் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவர் ஊத்தை வாயில் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்து பார்த்து அழகை ரசிப்பதைத் தவிர்த்து விடுவார்களா?!

@ Jeeva Nanthan - சிலருக்கு டீ, காபி, புகை போல மைக் ஒரு பெரிய addiction. இவர்களுக்கு ஜூம் செயலி ஒரு பெரிய வரம். அங்கேயும் பேச இன்னொரு கோஷ்டி காத்திருக்கும்போது ஒரு மணி நேரம் அறுப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் ஒரு சோகம்.

@Vinayaga Murugan - நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி பற்றி ஒரு செய்தி பார்த்தேன். எனக்கு அந்தப் பெண்ணைவிட அவரோட அப்பா மனநிலை பற்றி வருத்தமாக உள்ளது. அவர் ஒரு காவலதிகாரி. அவர் சற்று நிதானமாக திடமாக பேட்டி கொடுத்தாலும் அவரால் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

எனக்கும் ஒரு மகள் இருப்பதால் அவரின் நிலையை உணரமுடிகிறது. அந்தப் பெண் இறந்துவிட்டார். இனி எவ்வளவு முயன்றாலும் அவரால் திரும்ப முடியாது. ஆனால், அந்த தந்தை ஒவ்வொரு நாளும் வலியோடு வாழ்ந்துகொண்டி ருப்பார். உங்களை நேசிப்பவர்களுக்கு வலியைத் தந்துவிட்டு போகாதீங்க.

இது அயோக்கிய அரசு. இவர்களிடமிருந்து எந்த சமூக நீதியையும் நாம் எதிர்பார்க்கமுடியாது. நாம்தான் கொஞ்சம் சுதாரிப்பாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் மீது கல்வி அழுத்தத்தை திணிக்காமல் இருந்தாலே போதும். எனது மகளின் கல்வி விவகாரத்தில் நான் பெரிதாக தலையிடுவதில்லை. இது பொறுப்பற்றதனம் என்று பலநேரங்களில் மனைவியுடன் சண்டை வந்துள்ளது.

அறிவு, அனுபவம், செல்வம் இதெல்லாம் அவரவர் தேடிக் கண்டடைய வேண்டியது. எப்போதாவது எனது மகள் பிராக்ரஸ் ரிப்போர்ட் கொண்டு வரும்போது கையெழுத்து போடுவேன். முதல் ரேங்க் என்று சொன்னால் ‘ஓஹோ’ என்று சொல்வேன்.

ஆனால், அவர் கராத்தே, சண்டைப் போட்டி, ஓவியம், கதை எழுதிக் கொண்டு வந்தால் மட்டும் சற்றுநேரம் செலவழித்து பாராட்டுவேன். கருத்து சொல்வேன். என்னைப் பொறுத்தவரை அறிவு என்பது நான்சென்ஸ். அறிவு எப்போதும் வெற்றியை நோக்கி போகச் சொல்லும். என்னைப் பொறுத்தவரை அனுபவம்தான் முக்கியம். அனுபவம் என்றால் அதில் வெற்றி, தோல்வி, ஏமாற்றங்கள், கசப்பு, விரக்தி, துரோகம், வலி, சந்தோசம் எல்லாம் வரும்.

நீட் என்றில்லை. இந்த கல்வியே வேண்டாம். அது அயோக்கியத்தனமானது. இந்த வாழ்க்கையின் ஆகச்சிறந்த சாபம் எது தெரியுமா? யாருக்காவது நம்மை நிரூபித்துக் கொண்டிருப்பது.

@Paadhasaari Vishwanathan - ஒரு நாட்டுப் பப்பாளியில்தான் எத்தனை விதைகள்! இயற்கையின் உயிரினப் பெருக்கத்திற்குத்தான் எவ்வளவு பேராசை!
மனிதனுக்கு இனிய கனி உணவானபின், அதன் ஏராளமான விதைகள் எல்லாம் மீண்டும் கனியாகணும் எனும் தனிப்பெருங்கருணை.
ஒரு விதை கூட மருந்துக்கும் உள்ளே இல்லாத ஹைபிரிட் பப்பாளியை மனிதன் சந்தையில் இறக்கி விட்டான் - பேராசைகளைத் தன் தேவைகளாக மாற்றிவிட்டான்.

உயிர்ப்பின் பேராசை இயற்கைக்கு. துய்ப்பின் பேராசை மனிதனுக்கு!
இயற்கை பொறுத்தாள்கிறது பூமியை!

@Viji Ram - இந்நேரம் ஆடித்தள்ளுபடி முடிஞ்சிருக்கும். கொலு பர்ச்சேஸும் தீவாளிக்கு ப்ளானும் ஆரம்பிச்சிருக்கும். எவ்ளோ தண்டச்செலவு பண்ணிருக்கேன்னு புரிய வைச்சிருக்கு. அடேய் கொரோனா... கெட்டதிலும் ஒரு ஸ்மால் நல்லது.