ரத்த மகுடம்-117



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘இதை எதற்கு இங்கு வந்து உயர்த்திக் காட்டுகிறாய்..?’’ சாளுக்கிய இளவரசனின் நயனங்கள் அனலைக் கக்கின. ‘‘என்ன தைரியமும் நெஞ்சழுத்தமும் இருந்தால் ‘நான் அணிந்திருந்த கச்சை இது...’ என எங்களிடமே சொல்வாய்..? எங்களைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது..?’’ கர்ஜித்தான்.சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ஸ்ரீராமபுண்ய வல்லபரை ஏறிட்டாள். ‘‘என்ன குருநாதரே இளவரசர் இப்படி பச்சைக் குழந்தையாக இருக்கிறார்..?’’விநயாதித்தன் ஆத்திரத்துடன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவனது கைகளை இறுகப் பற்றி, கண்களால் ‘பொறு’ என்றார். உண்மையில் அவருக்கும் எதுவும் புரியவில்லை. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. ஆனாலும், தான், அணிந்திருந்த கச்சை என்று சொல்லி சிவகாமி தங்களிடம் காட்டுகிறாள் என்றால் அதில் ஏதோ இருக்கிறது. இல்லையெனில் எந்தப் பெண்ணும் இப்படி நடந்து கொள்ள மாட்டாள்...

தொண்டையைக் கனைத்தார். ‘‘இது நீ அணிந்திருந்த கச்சையா..?’’
‘‘ஆம் குருநாதரே...’’‘‘எங்கு அணிந்திருந்தாய்... இல்லை இல்லை... எந்த இடத்தில் அணிந்திருந்தாய்... இல்லை இல்லை... எப்பொழுது அணிந்திருந்தாய்..?’’

சாளுக்கிய போர் அமைச்சரின் பதற்றத்தையும் அதனால் சொற்கள் குழறுவதையும் கண்டு சிவகாமி வாய்விட்டுச் சிரித்தாள்.

சாளுக்கிய இளவரசனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. ‘‘வாயை மூடு!’’ எரிந்து விழுந்தான். ‘‘குருநாதர் கேட்டதற்கு பதில் சொல்...’’
‘‘மன்னிக்கவும் குருவே...’’ நகைப்பதை அடக்கினாள் சிவகாமி.ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் அவளை கண்களால் எரித்தார்கள்.

சிவகாமி அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து, தான் விளையாடுவது நல்லதற்கல்ல என அவளுக்குத் தோன்றியது. இமைகளை மூடித் திறந்தாள். கணத்தில் அவள் வதனம் கம்பீரமாக மலர்ந்தது. ‘‘மதுரை பாதாளச் சிறையில் நான் அணிந்த கச்சை இது குருநாதரே...’’
நாணைப் போல் ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் நிமிர்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அமைதியாக அவர்கள் இருவரையும் நோக்கிவிட்டு அந்த அறையை சிவகாமி தன் பார்வையால் அலசினாள். ஈசான்ய மூலையில் தென்பட்ட அறையையும் அக்கதவு தாழிடப்படாமல் மூடியிருந்ததையும் கணத்துக்கும் குறைவான நேரத்தில் பார்த்தாள்.பெருமூச்சுடன் மேற்கொண்டு, தான் பேசப் போவதைக் கேட்பதற்காக மவுனமாகக் காத்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் விநயாதித்தனையும் நோக்கினாள்.

‘‘குருநாதா... இந்தக் கச்சைக்காகத்தான் ஒரு திங்களுக்கும் மேலாக கரிகாலனுடன் நடமாடினேன்; சுற்றினேன்; இழைந்தேன்; குழைந்தேன். எனது நடவடிக்கைகள் உங்களுக்குக் கூட சந்தேகத்தை எழுப்பியிருக்கும் என்பதை அறிவேன் இளவரசே... ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. நமது இலக்கு பல்லவர்களை வீழ்த்துவது.

அதுவும் வேரோடு... மண்ணோடு... இதற்காகத்தான் நம் சாளுக்கிய மாமன்னர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தவமிருக்கிறார். அந்தத் தவம் பூர்த்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் என்னையே நீங்கள் உருவாக்கினீர்கள் குருநாதரே... இதை எக்காலத்திலும் நான் மறக்கவில்லை...’’இரு உள்ளங்கைகளையும் தேய்த்து தன்னிரு கன்னங்களிலும் பதிய வைத்த சிவகாமி தொடர்ந்தாள்.

‘‘காஞ்சி கடிகையில் இருந்து சில சுவடிக் கட்டுகளை கரிகாலன் களவாடிச் சென்றதை நீங்கள் இருவருமே அறிவீர்கள். அந்தச் சுவடிகளில் தமிழக சிறைச்சாலைகள் குறித்த விவரங்கள் இருந்தன. அதை ஏன் கரிகாலன் களவாடினான் என்ற வினா உங்களுக்குள் எழுந்திருக்கும். அதற்கான விடைதான் இந்தக் கச்சை... மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டபோது நான் அணிந்திருந்த கச்சை...’’பேசியபடியே மெல்ல சிவகாமி நடக்கத் தொடங்கினாள்.

‘‘குருநாதரே... சாளுக்கிய பேரரசின் விடிவெள்ளியும், எக்காலத் திலும் சாளுக்கியர்களுக்கு வழிகாட்டி வருபவரும், பாரதத்தின் தக்காண சக்கரவர்த்திகளில் முதன்மையானவரும், எதிர்கால சந்ததியினரும் வியக்கும் மாவீரருமான நமது மாமன்னர் இரண்டாம் புலிகேசி எப்படி மறைந்தார் என்பது நினைவில் இருக்கிறதா..?’’‘‘இருக்கிறது...’’ விநயாதித்தன் சீறினான்.

‘‘ஆம்... இளவரசரால் மட்டுமல்ல... ஒவ்வொரு சாளுக்கிய குடிமகனாலும் அதை ஒருபோதும் மறக்க முடியாது...’’ நடந்தபடியே சொன்ன சிவகாமி, ஈசான்ய மூலையில் தாழிடப்படாமல் மூடியிருந்த அறையின் முன்னால் வந்து நின்றாள். கதவை ஒட்டி இருந்த சுவரில் தன் வலது கையை ஊன்றினாள். இடது கையில் இருந்த கச்சை காற்றில் நர்த்தனமாடியதை அவளும் சரி, அறையில் இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் சரி பொருட்
படுத்தவில்லை.

சிவகாமியே தொடர்ந்தாள். ‘‘போரில் நம் மாமன்னரின் தலை சீவப்பட்டது. சீவியவர்... மரியாதை என்ன வேண்டிக்கிடக்கிறது... சீவியவன் பல்லவ தளபதியான பரஞ்சோதி...’’ தழுதழுத்தபடி இமைகளை மூடியவள் சில கணங்களுக்குப் பின் கண்களைத் திறந்தாள். அவளது கருவிழிகள் இரண்டும் தீ ஜ்வாலைகளாக எரிந்தன. ‘‘அதற்கு பழிவாங்க வேண்டும்... பழிவாங்கியே தீர வேண்டும்...’’‘‘அதற்குத்தான் உன் கச்சையை எங்கள் முன் நீட்டுகிறாயா..?’’ விநயாதித்தனின் உதடுகளில் இருந்து அம்பென சொற்கள் பாய்ந்தன.

‘‘ஆம் இளவரசே...’’
‘‘சே...’’ சாளுக்கிய இளவரசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.‘‘பொறு விநயாதித்தா... இவள் என்ன சொல்கிறாள் என முழுமையாகக் கேட்போம்... சிவகாமி... ம்...’’ தனது வலது உள்ளங்கையை நீட்டி மேலே தொடரும்படி அவளுக்கு சைகை செய்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சியில் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுத்தார்.

தர்மப்படி நடைபெற்ற அப்போரில் சாளுக்கியர்கள் மகத்தான வெற்றியை அடைந்தார்கள். பல்லவ நாட்டின் பரப்பளவு பெருமளவு சுருங்கியது. இதற்குப் பழிவாங்க மகேந்திரவர்மரின் மகன் நரசிம்மவர்ம பல்லவன் அரியணை ஏறியதும் புறப்பட்டான். இதற்குள் பல்லவ சேனாதிபதியான பரஞ்சோதி படைகளைத் திரட்டியிருந்தான்.

பல்லவப் படைகள் சாளுக்கிய நாட்டுக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடின. சாளுக்கிய ஊர்கள் அனைத்தும் பல்லவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏனெனில் தர்மப்படி பல்லவர்கள் யுத்தம் செய்யவில்லை. அசுரப் போரைக் கையாண்டார்கள். சாளுக்கிய தலைநகரான வாதாபியைக் கொளுத்தினார்கள்.

இந்தப் போரில்தான் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி வீரமரணம் அடைந்தார். உண்மையில் அது படுகொலை. ஆம். படுகொலைதான் அது. பல்லவ சேனாதிபதியான பரஞ்சோதி அதர்மமான முறையில் நம் மாமன்னரின் சிரசை தன் வாளால் வெட்டி எறிந்தான்...

இந்த அநியாயத்தை அந்தணர்கள் நியாயப்படுத்தினார்கள். எப்படி..? ஜோதிடத்தைக் கையில் எடுத்து. நினைக்க நினைக்க கோபத்தில் வெந்து தணிகிறேன் குருநாதரே... நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி கிரகணத்து அன்று சாளுக்கிய அரசராக முடிசூட்டிக் கொண்டாராம்... அதனால்தான் கிரக சேர்க்கைப்படி யுத்தத்தில் அவரது சிரசு வெட்டப்பட்டதாம்...

பிராமணர்களும் அந்தணர்களும் இருக்கும் இடத்தில் அயோக்கியத்தனம்தானே ஆட்சி செய்யும்..? அதர்மம்தானே கோலோச்சும்..? அதுதான் அரங்கேறி வருகிறது.அந்தர்ணர்களின் தொடர் பிரசாரத்தால் தர்மப்படி போர் புரிந்த நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் மரணம்... படுகொலை என்ற உண்மை நிலைக்கு அருகில் கூட செல்லவேயில்லை. மாறாக, நவகிரகங்களால்... ராசிக் கட்டங்களில் சேர்ந்த கோள்களின் கூட்டணியால்... அவரது சிரசு வெட்டப்பட்டதாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

வேதம் படித்தவன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கைதான் மக்கள் மனதில் நிலவுகிறதே... எனவே அவர்களும் இதை அப்படியே நம்பினார்கள். விளைவு... பரஞ்சோதி நல்லவனாகி விட்டான்... ஆம்... அதர்மமான முறையில் யுத்தம் செய்த... சாளுக்கிய தேசத்தை கொள்ளையனைப் போல் சூறையாடிய... அசுரப் போரைக் கையாண்ட... பல்லவ சேனாதிபதி பரஞ்சோதியின் நடவடிக்கை முற்றிலுமாக வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டது.

காரணம் என்ன தெரியுமா..? பரஞ்சோதி என்னும் அயோக்கியன், யுத்த வெறியன், சிறு தொண்டராகிவிட்டான். சிவப் பழமாக மாறிவிட்டான். சைவம் வளர... சைவத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி அந்தணர்கள் வளர... அந்த சிறு தொண்டன் தேவை. எனவே வாதாபியைக் கொள்ளையடித்த அந்தக் கொள்ளையனின் செயலை... சிறுமைப்படுத்தி இகழ வேண்டிய அவனது நடவடிக்கையை... வீரம் என்ற பெயரில் சரித்திரத்தில் பதித்துவிட்டார்கள்...’’
‘‘இதை ஏன் இப்பொழுது சொல்கிறாய் சிவகாமி...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் நிதானமாகக் கேட்டார்.

‘‘இக்கணத்தில் அதைச் சொல்வதே சரி என்று தோன்றியதால் குருநாதரே...’’ என்றபடி இடது கையில் இருந்த கச்சையை வலது கைக்கு மாற்றினாள்.
‘‘எக்கணத்தில் சொன்னாலும் அது கடந்த காலம்தானே..?’’ விநயாதித்தன் புருவத்தை உயர்த்தினான்.‘‘எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக இருக்கப் போவதும் அதுதானே இளவரசே..?’’‘‘ஆனால், நாம் இருப்பது நிகழ்காலத்தில் அல்லவா..?’’ சாளுக்கிய இளவரசன் நகைத்தான்.‘‘அது கடந்த காலத்தின் தொடர்ச்சி அல்லவா..? தொடரப் போகும் நிகழ்ச்சி நிரல் அல்லவா..?’’  ‘‘அதற்கு வாய்ப்பில்லை சிவகாமி...’’ நெஞ்சை நிமிர்த்தினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘அசுரர்களால் கூட அவ்வளவு சுலபத்தில் அசுர வியூகத்தை அமைக்க முடியாது.

அதற்கு கசடற போர்க் கலைகளைக் கற்றிருக்க வேண்டும். இப்போதைய பல்லவ மன்னனான பரமேஸ்வரவர்மனும் சரி... அவனது மகன் ராஜசிம்மனும் சரி... ஏன், சோழ இளவரசனான கரிகாலனும் சரி... இந்த விஷயத்தில் சூன்யம்தான்... ஒருவேளை... தப்பித்தவறி அவர்கள் அசுர வியூகத்தை அமைத்தாலும்...’’ நிறுத்தியவர் தன் நெஞ்சில் கை வைத்தார். ‘‘அதை இந்த சாளுக்கிய போர் அமைச்சனால் தகர்க்க முடியும்...’’

‘‘பரஞ்சோதியின் அசுர வியூகங்களையா..?’’‘‘அவன்தான் இப்பொழுது இல்லையே..?’’‘‘நான் சொல்ல வருவது உங்களுக்கும் இளவரசருக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன் குருநாதரே...’’ என்றபடியே தாழிடப்படாமல் இருந்த ஈசான்ய மூலைக் கதவை சிவகாமி திறந்தாள். ‘‘மன்னா... தங்களுக்குப் புரிந்ததல்லவா..?’’


அவர் அப்படிப் பார்ப்பதை இன்னொரு மனிதனும் மற்றவர்கள் பார்வையில் படாமல் மறைந்திருந்து பார்த்தான். அவன் உதட்டில் புன்னகை பூத்தது. அதுவரை அந்த ஈசான்ய மூலை அறையில் விக்கிரமாதித்தருடன்தான் அவன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். சிவகாமி சொன்னதை எல்லாம் மன்னருடன் சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.அவன் -கரிகாலன்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்